By 17 June 2020 0 Comments

கொரோனா காலத்து காடழிப்பு; மனிதனைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து!! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமாகவே முடங்கிக்கிடக்கிறது. மக்களின் வழமையான செயற்பாடுகள் அனைத்துமே முடங்கியுள்ளன. தொழிற்றுறைகள், சுற்றுலாத்துறை, உற்பத்தித்துறை, போக்குவரத்து, வணிகம் என அனைத்தும் இயக்கத்தில் இல்லை.

இவ்வாறு உலகம் முழுவதும் முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உலகில் பல சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றிருந்தன. இக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சட்டவிரோத செயற்பாடு கொரோனாவை விடவும் மேலும் ஆபத்தான விளைவை உலகுக்கு ஏற்படுத்தப் போகின்றது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், கொரோனா காலத்தில் உலகமே முடங்கியிருந்த நிலையில் அல்லது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கங்கள் கவனம் செலுத்தியதை பயன்படுத்தி உலகில் பல காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. காடுகளில் உள்ள பல மரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. காடுகளில் பல சட்டவிரோத சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக காடழிப்பானது சாதாரண காலத்தில் இடம்பெறுவதை விடவும் கொரோனா காலத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சூழலியலாளர்களும், அரசுகளும் அறிவித்துள்ளன. ஆனால் இவையனைத்தும் மீண்டும் ஒரு பேரழிவை பூமிக்கு கொடுக்கப் போகின்றது என்பதை நாம் உணராதவர்களாக இருக்கின்றோம்.

காடுகள் என்பது வெறுமனே மரங்களால் சூழந்த பகுதி மாத்திரமல்ல. அவை ‘நாடொன்றின் அரண்’ காடுகள் என்பது பசுமைப்பொன் எனவும் சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர். இக் காடுகளே உலகுக்கு இன்றுவரை உயிர்கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

மனிதனால் வெளியிடப்படுகின்ற கரியமிலவாயுவை உறிஞ்சி மனிதனுக்கு தேவையான ஒட்சிசனை தருவது காடுகளேயாகும். இவை மழையைத் தருவது மட்டுமல்லாமல் மண் அரிப்பையும், நிலச்சரிவையும் கட்டுப்படுத்துகின்றன. புவியின் தட்ப வெப்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் அமைந்துள்ளன.

உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு உள்ள காடுகள் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து துருவப் பகுதிகள் வரை பரவியுள்ளன. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பில் 9.4சதவீதம் அல்லது மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 30சதவீதம் காடுகளினால் மூடப்பட்டுள்ளது. காடுகளின் பரப்பளவில் ரஷ்யா (78லட்சம் சதுர கி.மீ.) முதலிடத்தில் உள்ளது. பிரேசில் (31லட்சம் சதுர கி.மீ.) இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகளவில் காடழிப்பானது அதிகரித்து வருகின்றது. உலகில் நிமிடத்துக்கு, 60கால்பந்து மைதானம் அளவிற்கான காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகளை பாதுகாக்கும் வகையில் உலக வனத்துறையின் சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும் போது அதற்கு பதிலாக 10மரங்கள் நடப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த 20ஆண்டுகளில் ஒரு சதவீதம் மட்டுமே புதிதாக மரங்கள் நடப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகில் 160கோடி பேர், அன்றாட வாழ்க்கைக்கு காடுகளை நம்பியுள்ளனர். இவ்வாறு உள்ள நிலையில் காடுகள் அழிக்கப்படுவதானது உலகின் ஆயுளை மிக வேகமாகவே குறைவடைச் செய்கின்றது.

இந்நிலையில் உலகத்தின் நுரையீரல் என அழைக்கப்படுகின்ற பிரேசில் அமேசன் காடு அதிகளவில் இக் கொரோனா காலத்தில் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு காட்டுத் தீயினால் அமேசன் காட்டின் பல பகுதி அழிவடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது சட்டவிரோத செயற்பாட்டாளர்களால் மீண்டும் அதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்பிரல் மாத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமேசன் காடுகள் அழிக்கப்பட்டமையானது 64சத வீதம் அதிகரித்துள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று இந்த ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் 1200சதுர கிலோ மீற்றர் பரப்பளவு அமேசன் மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அவ் அமைப்பு கூறுகின்றது.

அமேசன் காடுகளானது தென் அமெரிக்காவுக்கு தேவையான மழையினை உற்பத்தி செய்வதுடன் பல இலட்சக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. உலகிலுள்ள அரியவகை விலங்குகளும், தாவரங்களும் இங்கு உள்ளன.

இந்நிலையில் அமேசன் காடுகள் முழுவதும் அழிக்கப்படும் நாளே உலகின் இறுதி நாளாக இருக்கும் என சுற்றுச் சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அதேநேரம் தெற்காசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் கொரோனா காலத்தில் காடழிப்பு அதிகரித்துள்ளதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுதவிர கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பல மழைக்காடுகளில் சட்டவிரோத சுரங்கத் தொழில்களும் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்சில் வனவிலங்கு கடத்தல்களும் அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

காடுகள் அழிக்கப்படுவதனுடாக மழை வீழ்ச்சி குறைவடைந்து செல்லும் அதேநேரம்; நிலத்தடி நீரின் சேமிப்பும் அற்றுப் போகும். ஏனெனில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக அவை செயல்படுகின்றன.

மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும் போது மழை நீரில் மூன்று சதவீதமே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97சதவீதம் நீர் உடனடியாக ஓடி விடுகின்றது. ஆனால் காடுகளில் பெய்யும் மழை நீரில் 33சதவீதம் உள்ளிழுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

காடுகளினால் மண்ணரிப்பு தடுக்கப்படுவதுடன் புயல், சூறாவளி போன்ற நேரங்களில் அவற்றின் தாக்கம் குறைவாக காணப்படுகின்றன. மண் அரிப்பு, மண்படிதல், நிலநடுக்கம், நிலச்சரிவு, புழுதிப் புயல் போன்றவை ஏற்படாதிருக்க காடுகள் பெரிதும் பயன்படுகின்றன.

காடுகளில்லாத‌ பகுதியில் ஒருமுறை அடிக்கும் புயலால் ஒரு ஹெக்ெடயரிலிருந்து 150டன்கள் மேற்புற மண் அடித்துச் செல்லப்பட்டு விடும். காடுகளதிகமுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

இது தவிர காடழிப்பானது தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸை விடவும் ஆபத்தான வைரஸ்களை வெளிக்கொண்டுவரும். அதனால் தற்போது ஏற்பட்டதை விடவும் ஆபத்தான நிலைமையை உலகம் எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சரும், சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

‘கொரோனா வைரஸ் ஏற்பட்டமை கூட காடுகளிலுள்ள விலங்குகளை நாட்டுக்குள் கொண்டு வந்தமையால் ஏற்பட்டதொன்றாகும். வெளவாலிலும் இடைத்தங்கலாக எறும்பு தின்னி என்பவற்றிலுமிருந்தே கொவிட்-19என்ற இந்த வைரஸ் பரவியுள்ளது.

ஏனெனில் சீனர்கள் அதிகளவாக இவ் எறும்பு தின்னியையும் உட்கொள்கின்றனர். காட்டு விலங்குகளை காட்டுக்குள்ளேயே விட்டால் எமக்கு இவ்வாறான வைரஸ்கள் பரவாது. ஆகவே அடிப்படை காரணம் மனிதனது செயற்பாடேயாகும்.

இப் பூமி இயற்கை சமநிலையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றது. மனிதனது முறையற்ற செயற்பாடுகளால் சமநிலை குழப்பமடைந்து உயிர் பல்வகைமையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உயிர் பல்வகைமை என்பது உலகில் இருக்கக்கூடிய எத்தனையோ ஆயிரம் கோடி விலக்கு, தாவர உயிரினங்களது தொடர்பாகும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்புபட்டிருக்கும். இந்த வலைப்பின்னலில் ஒரு சங்கிலி அறுத்தாலுமே சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

காடழிப்பும் மனிதன் இயற்கை சமநிலையில் ஏற்படுத்துகின்ற சீர்குலைப்பேயாகும். காட்டுக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளி பேணப்பட வேண்டும். இயற்கையில் அவ்வாறு தான் உள்ளது. ஆனால் தற்போது அபிவிருத்தி மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளால் காடுகள் அழிக்கப்பட்டு மக்களுக்கும் காடுகளுக்கும் இடையிலான இடைவெளி இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் காட்டு விலங்குகள் நேரடியாகவே மக்களிடம் வருகின்றன. அதன் காரணமாக காட்டு விலங்குகளிடம் இருக்கும் வைரஸ்கள் நேரடியாகவே மனிதர்களிடம் தொற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக விலங்குகளிடம் இருக்கும் வைரஸ்கள் மனிதர்களிடத்தில் பரவும் போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதேநேரம் காடுகள் அழிக்கப்படுவதனால் புவி வெப்பமடைவது அதிகரிக்கின்றது. இதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரிக்கின்றது. இதில் மற்றுமொரு ஆபத்தும் உள்ளது. அதாவது பனிப்பாறைகளின் கீழ் மனித இனம் தோன்றுவதற்கு முன்னர் தோன்றிய பல வைரஸ்கள் உறங்கு நிலையில் உள்ளன.

தற்போது பனிப்பாறைகள் உருகுவதால் அவ் வைரஸ்கள் மீண்டும் செயற்படு நிலைக்கு வரும் போது அது மனிதர்களிடம் பரவி கொரோனாவை விட பல மடங்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

எனவே அனைத்து அழிவுக்கும் எமது செயற்பாடுகளே காரணம். இவற்றை நாம் பாடமாக எடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக எதிர்காலத்தில் பொருளாதார திட்டமிடல்களை மேற்கொள்ளும் போது சுற்றுச்சூழலை பிரதானப்படுத்தி திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

காடழிப்பை கட்டுப்படுத்துவதில் காடுகளை அண்டிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களும், காடுகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக அமேசன் காட்டினை பொறுத்தவரையிலும் அக் காட்டில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள் அக் காட்டினை பாதுகாத்து வருகின்றனர். அவர்களை தாண்டி அக் காட்டுக்குள் வெளியாட்கள் நூழைவது அவ்வளவு சுலபமல்ல.

ஆனால் தூரதிஷ்டவசமாக கொரோனா வைரஸ் அந்த பழங்குடியின மக்களிடையே தொற்றியதால் அவர்கள் வீடுகளுக்குள் முடங்கியதை பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாட்டாளர்கள் அமேசன் மழைக்காட்டினை அழித்துள்ளார்கள்.

எனவே காடுகளை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் காடுகளை நம்பி வாழ்கின்ற, அக் காட்டை பாதுகாக்கின்ற பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும், இருப்பையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போதே அவர்கள் காடழிப்புக்கு துணை போக மாட்டார்கள். அத்துடன் காடழிப்பின் ஆபத்தையும் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அழிக்கப்படும் காடுகளில் மரங்கள் மீளவும் முன்னர் போன்று வளர்வதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப்படும் என சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே தற்போதுள்ள காடுகளை பாதுக்காக்க ஒவ்வொரு அரசாங்கங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இதன் மூலமே எதிர்கால மனித இருப்பை உறுதிப்படுத்த முடியும்.

தொகுப்பு ரி.விரூஷன்Post a Comment

Protected by WP Anti Spam