By 20 June 2020 0 Comments

எரிய வைப்பார்களா, அணைய வைப்பார்களா? (கட்டுரை)

இலங்கை அரசியலில், தேர்தல் நடத்துவது தொடர்பான கருத்தாடல்கள், மோதுகைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம், கிழக்கில் தம்சொந்த நலன்களுக்காக, இன ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பச்சோந்தித்தனமான செயற்பாடுகளும் முன்நகர்த்தப்பட்டு வருகின்றன.

தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மூலம், ஏதுமறியா பாமர மக்களினதும் அவர்களின் குழந்தைகளினதும் எதிர்கால வாழ்வில், பாரதுரமான பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உருவாகி வருகிறது.

கிழக்கைப் பொறுத்தவரையில், மட்டக்களப்பில் பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிடுபவர்களது பட்டியல்களானவை, தமிழர்களாகவே இருக்க வேண்டும் என்ற முயற்சி தோற்றுத்தான் போனது. ஆனால், பொதுஜன பெரமுன மாத்திரம் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. அவர்களின் தொடர்ச்சியான காய்நகர்த்தல் முயற்சிகளின் பலனாகவே, இந்தச் சாத்தியப்படுத்தல் நிகழ்ந்தது.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவை இம்முறையும் தம்முடைய பட்டியலில், இரு தரப்புக்கும் இடம் கொடுத்துத்தான் இருக்கின்றன.

கடந்த பல தேர்தல்களில், தேசியக் கட்சிகளின் பட்டியல்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தே போட்டியிட்டனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள், தமிழர்களுடைய வாக்குகளுமாகச் சேர்ந்து, முஸ்லிம் தரப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.

அதேநேரத்தில், கடந்த தடவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தனுடன் இணைந்து போட்டியிட்ட கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்எல்.ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராவதற்குரிய வாய்ப்பும் கிடைத்திருந்தது. அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி போட்டியிட்டதன் மூலம், எம்.எஸ்.எஸ். அமீர்அலி வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டது.

அதன் காரணமாகத்தான், கடந்த நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பில் 25 சதவீதமான வாக்காளர்களைக் கொண்ட முஸ்லிம் தரப்பு, மூன்று பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. அண்ணளவாக, 75 சதவீதமான தமிழர்கள் மூன்று தமிழ்ப் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தனர்.

அவ்வாறானதொருநிலை, இனிவரும் காலத்தில் ஏற்பட்டவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியின் காரணமாகத் தமிழ்ப் பிரதிநிதிகள் மாத்திரமே போட்டியிடுகின்ற நிலையை உருவாக்குவதற்காக, ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்து போட்டியிட்டவர்கள் என, அனைவரும் தமிழ்க் கட்சிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் களத்தில் நிற்கின்றனர். இது ஒருவகையில், இன ஒற்றுமையை ஏற்காத்தனமாக இருந்தாலும், தமிழ்ப் பிரதிநிதிகளுக்கான வெற்றி வாய்ப்புக்கான யுக்தியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், தமிழ் மக்களிடம் காணப்படும் முஸ்லிம்கள் மீதான, எதிர்ப்புணர்வைத் தூண்டுவதன் மூலம், இன ஒற்றுமையை அழித்தொழிக்கும் நச்சு விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம், கிழக்கில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையைக் காண்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள், இதன் மூலம் தவிர்க்கப்படுகின்றன என்பதே உண்மை. ஆனாலும், இந்த ஒற்றுமையான நடைமுறையானது, எதிர்காலத்திலேனும் ஏற்படுமா என்ற கவலையும் கிழக்கில் உள்ளதாகவே உணரமுடிகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அரசியல்வாதிகளின் அரசியல் நோக்கங்களும் குறிக்கோள்களும், தமிழ் மக்களின் தேசிய இலக்குகளின் அடிப்படையில் அமைந்திருப்பதையே விரும்புகின்றனர். ஆனால், மக்களை அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற கருத்துகளின் மூலமாகத் தவறுதலான பாதைகளுக்கு நகர்த்த முனைகின்ற அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும், தங்களது நலன் சார்ந்த போக்குகளின் ஊடாக, அவற்றைச் சாதித்துவிட எண்ணம் கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையானதே.

எப்போதுமே, இந்த அடிப்படையில் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பிரதேசத்தின் மக்களின் விருத்திக்காக முன்னெடுத்துவரும் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ளும் கோசமாக ‘கிழக்கை மீட்போம்’ என்பதாகும்.

ஆனால், சிறைப்பட்டிருக்கும் மக்களை மீட்கின்ற மீட்பர்களாகவே, தங்களைக் காண்பிக்க முனையும் யாரும், அதற்காகத் தங்களிடம் காணப்படும் முறைமைகளைக் காண்பிப்பதோ வெளிப்படுத்துவதோ இல்லை.

நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இலங்கையின் தமிழ் அரசியல், ஏன் இன்னமும் தம்முடைய சுயநிர்ணய நோக்கத்தை அடைந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது? இந்த முக்கியமான கேள்விக்கு பதிலாக, காலத்துக்குக் காலம் உருவாகும் பிரிந்து நிற்றலும் பிளவுகளுமே காரணமாக இருந்திருக்கின்றன. இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கப் போவதில்லை. தொடர்ச்சியாகவும் அவை நடந்த வண்ணமே இருக்கின்றன.

இதற்கு, கடந்த வருடத்தில் ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்றிருந்த வியாழேந்திரனின் பாய்ச்சல், ஓர் நல்ல உதாரணமாகும். இருந்தாலும், குறுகிய நலன்களுக்காக இனக்குழும வாதத்தை வளர்த்து விடுவது என்பது, இந்த நாட்டுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பது மாத்திரம் நிச்சயமாகும்.

அண்மைக் காலமாக, கிழக்கில் அரச நியமனங்களில் பதவி உயர்வுகள் இடம்பெறும்போது, தமிழ்-முஸ்லிம் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. புட்டும் தேங்காய்ப் பூவும் போன்ற பண்டைய உறவுமுறை 90களின் பின், மிக மோசமாகப் பாதிப்படைந்து, அண்மைக் காலமாக சுமுக நிலைக்கு வந்து கொண்டிருக்கும் சூழலில், அரசியல் மட்டத்தில் தங்கள் அரசியல் வங்குரோத்துத் தனத்தை மறைப்பதற்கு, முஸ்லிம்-தமிழ் இன உணர்வைப் பகடைக்காயாக முன்னெடுக்கும் முயற்சிகள், தேர்தல் காலத்தை இலக்கு வைப்பதாகவே கருத முடிகிறது.

குறிப்பாக, ‘தமிழ்ப் பிரதிநிதித்துவம் பறிபோய் விடும் அபாயம்’ என்ற கோஷத்துடன் இது முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது. ஆனால், எதற்கெடுத்தாலும், ‘வேண்டாப் பெண்டாட்டி, கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்’ என்பது போல், தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர்குலைக்க எடுக்கும் அற்பத்தனமான முயற்சிகள், இரு சமூகங்களையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்பதை, அனைவரும் புரிந்து கொள்வது சிறப்பாகும்.

இந்தப் போக்கானது, அண்மைக் காலமாக பாடசாலை அதிபர், ஆசிரியர் நியமனம், வைத்தியத்துறையில் நியமனங்கள், தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி நியமனம் என்பவற்றில், மட்டக்களப்பில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிப்பது, ஆரோக்கியமான நகர்வல்ல என்பதைத் தமிழ்-முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஒரு சிலரது சுயலாப நிகழ்ச்சித் திட்டத்துக்கு அடிபணிந்தால், கிழக்கு எவ்வித அபிவிருத்தியையும் இனஒற்றுமையையும் காணாது சுடுகாடாகும்.

மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி இருந்தும், ஆசிரிய கலாசாலையின் பீடாதிபதி நியமனம் குறித்து, எதிர்ப்புக் காண்பிக்கப்பட்டமை, இவ்வாறான ஒரு முன்னெடுப்பாகவே கொள்ளப்படுகிறது.

சிலர் அதிகாரிகளை பிழையாக, சட்டத்துக்கு முரணாக வழிநடத்த முற்படுகின்றனர். இவர்கள் இதனால், சாதிக்கப்போவது எதை, சமூக நலத்தையா, சுயநலத்தையா என்பதை, இதைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். விளைவுகள் பற்றிச் சிறிதும் சிந்திக்காது முன்னெடுக்கப்படும் இத்தகைய சமூக விரோத நடவடிக்கைகள், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதைச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கில் மட்டக்களப்பில், பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். முஸ்லிம்கள் சிறுபான்மையினர்; அவர்களது அரசியல் பிரதிநிதிகளாக, நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவரையோ அல்லது, மிக அரும்பாடுபட்டு இருவரையோதான் வெற்றி பெறச் செய்ய முடியும்.

ஆனால், மட்டக்களப்பில் தமிழ் மக்கள் சாதாரணமாக வாக்களித்தால் குறைந்தது மூன்று, கூடியது நான்கு பிரதிநிதிகளை வெற்றி பெறச் செய்ய முடியும்.

ஆயினும், தமிழ் அரசியல்வாதிகளும் அதன் பின்னால் இருப்பவர்களும் தங்கள் இயலாமையையும் அரசியல் வங்குரோத்துத் தனத்தையும் தமது ஒற்றுமையின்மையையும் கட்சிக் குத்து வெட்டுகளையும் கட்சிக்கும் கட்சிக்கும் இடையிலான குழப்பங்களையும் மறைப்பதற்கு, வெற்று அரசியல் செய்வதற்கு, தமிழ்-முஸ்லிம் நட்புறவைச் சீர்குலைக்க முனைவது என்பது, மிகமிக அபத்தமானது.

முஸ்லிம் பிரதிநிதிகளது கடமை, அவர்களது மக்களுக்கு உதவுவது. அதை அவர்கள் செய்யவேண்டும்; செய்கிறார்கள். ஆனால், அவர்கள் அளவு, தமிழ்ப் பிரதிநிதிகள் செய்யாமல் இருப்பதற்கு யார் காரணம், யாரிடம் பலவீனம் உள்ளது? எனவே, முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைக்க முடியாது.

இனவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, தொடர்ந்தும் அரசியல் நடத்த முடியாது. அதேபோல், இந்த அரசியல் அரங்கில், விளிம்பில் விடாப்பிடியாக இயலாமையில் உள்ளவர்கள் சுயநலவாதிகள். அவர்கள், மக்களையும் இழுத்துச் செல்வது என்பது, தாம் ஏற்றுக்கொண்ட பொது நலப் பணிக்கு பொருத்தப்பாடற்றது.

எனவே, மக்கள் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதத்தீயைப் பற்றி எரிய வைப்பவர்கள் யார்? இம்முறை, யார் எரிய வைப்பார்கள், யார் அணைப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காத்திரமான அரசியலை விரும்பும், பொது நலப்பணியை நோக்கி நகர்கின்ற ஒவ்வொருவரும், இவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தேயாக வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam