By 2 July 2020 0 Comments

’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ !! (கட்டுரை)

இராணுவ ரீதியாக, சர்வதேசச் சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தன. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரவதற்கு உதவிய சர்வதேசச் சமூகத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தரும் கடமையும் இருக்கிறது. அதற்கு, சர்வதேச சமூகம் முயற்சிக்க வேண்டும்” என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இராணுவ ரீதியாக சர்வதேசச் சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தது. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரவதற்கு முயற்சித்த சர்வதேச சமூகத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் கடமை இருக்கிறது. அதற்கு, சர்வதேச சமூகம் முயற்சிக்க வேண்டுமென, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சக்தி ​தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் ​அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

கே: கடந்து வந்த பாதையில் தமிழ்பேசும் சமூகம் இழந்தவை என்ன, பெற்றவை என்ன?

துரதிர்ஷ்டவசமாக நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படவில்லை. நாடு சுதந்திரமடைந்த போது, தமிழர்களின் அரசியல் அந்தஸ்தை உள்ளடக்கி, அரசமைப்பு ரீதியாக இனங்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு வரைபு, தீர்வு ஏற்பட்டிருந்தால், தமிழர்களின் பிரச்சினை இந்தளவுக்கு வளர்ந்திருக்காது.
நாடு சுதந்திரமடைந்த பின்னர், தந்தை செல்வா மக்களால் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பிரஜாவுரிமை பறிப்பு, பெரும்பான்மை இனத்தை வடக்கு, கிழக்கில் குடிப்பெயர்த்துவது உள்ளிட்ட பல விடயங்களில், எமக்கு திருப்தியற்றவகையில் கருமங்கள் இடம்பெற்றன. இதனை அவதானித்த செல்வா, ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலேயே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமென ஏற்று, அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, மக்களின் ஆதரவைப் பெற்றார். இதனால், மக்களின் உரிமைக்கான போராட்டம் ஏற்பட்டது.

சமஷ்டி ஆட்சிமுறை, அதிகாரப்பகிர்வு வரவேண்டும். தமிழர்களின் பாராம்பரிய பிரதேசங்களில் அதிகாரப்பகிர்வு ஏற்பட்டு, தங்களது தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என்பதே தந்தை செல்வாவின் கொள்கை.

கே: விமர்சனங்கள் இருந்தாலும், உங்களை மக்களே தெரிவு செய்கிறார்கள். மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு உண்டா?

நான் ஒரு சட்டத்தரணி. அரசியலுக்கு வருதை நான் மறுத்தேன். தந்தை செல்வாவின் கட்டாய முயற்சியாலேயே நான் அரசியலுக்கு வந்தேன். உங்களிடமிருந்து இல்லை என்ற சொல்லை ஏற்க மாட்டேன் என்று அவர் கட்டாயப்படுத்திக் கேட்டுக்கொண்டதாலேயே நான் அரசியலுக்கு வந்தேன். ஆயிரக்கணக்கான வழக்குகளை நான் பேசியிருக்கிறேன்.

ஆனால், அரசியலுக்கு வந்ததன் பின்னர் நான் வழக்குகள் பேசுவதை நிறுத்திவிட்டேன். மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, நான் வழக்குகள் பேசுவதை நிறுத்தியிருக்கிறேன்.

2015ஆம் ஆண்டு ஒரு கூட்டு முயற்சியாகவே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், அக்கருமத்தை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அவர்களும் அதற்கான வேலைகளைச் செய்தார்கள்.

ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள், தனிப்பட்ட குழப்பத்தால், அதனைச் செய்யவில்லை. எனவே, நாம் ஏமாந்துவிட்டோம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மட்டோம்.

சர்வதேச சமூகம், எமக்குப் பின்னாடி இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசந்திரன் இலங்கைக்கு வந்தார்.

சமத்துவம், கௌரவத்தின் அடிப்படையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்கிற செய்தி​யை, அவர் ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு, சர்வதேசத்தின் உதவி தேவை. குறிப்பாக, இந்தியாவின் உதவி தேவை. 1983ஆம் ஆண்டு முதல் இந்தியா இந்தக் கருமத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகள் அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு உதவின. இந்த நாடுகளின் உதவிகள் இல்லாது யுத்தத்தை வெற்றிக்கொண்டிருக்க முடியாது. என​வே, தீர்வைப் பெற்றுத்தருவதும் சர்வதேசத்தின் கடமை.

எனினும், இராணுவ ரீதியாகச் சர்வதேச சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவு தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தது. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது.

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரவதற்கு முயற்சித்த சர்வதேச சமூகத்துக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் கடமை இருக்கிறது. அதற்கு, சர்வதேச சமூகம் முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் தொடரக்கூடாதென, சிங்களத் தலைவர்களுக்கு சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. எல்லோரது உதவிகளையும் பெற்று இந்தக் கருமத்தைக் குழப்பாது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அதனைச் செய்ய வேண்டும்.

கே: அரசியலில் இருந்து விலகுவதாக முன்னர் அறிவித்திருந்தீர்களே?

1983ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், தற்போது வரையில் சகல கருமங்களிலும் ஈடுபட்ட ஒரே தலைவர் நான் என்பதால், தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் நான் அரசியலில் இருக்க வேண்டுமென கட்சியின், மாவட்டத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.

சர்வதேச சமூகத்துடனும் இலங்கையில் உள்ள பெரும்பான்மைச் சமூகத்துடனும், நானே அதிகம் பேசியிருக்கிறேன். அவர்கள் வழங்கியிருந்த வாக்குறுதிகள் எனக்குத் தெரியும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் எனது பங்களிப்பு இல்லாததால் தவறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நான் இம்முறையும் அரசியலில் போட்டியிடுகிறேன்.

எமது மக்களுக்கு நாம் ஒருபோதும் நம்பிக்கை துரோகம் செய்யப்போவதில்லை. சுயநலத்துக்காக அல்லது வேறு காரணங்களுக்காக நாம் துரோகம் இழைக்கமாட்டோம். தமிழ் மக்களைக் கைவிட மாட்டோம்.

கே: கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியில் ஒரு சிறுபான்மையினர் கூட இல்லையே?

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி தொடர்பில், ஜனாதிபதிக்கு நான் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறேன். 1981ஆம் ஆண்டு முதன்முறையாகப் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டபோது, சிங்கள மக்களின் விகிதாசாரம் வெறும் 4 சதவீதமாக இருந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் அது 9 சதவீதமாகவும் தற்போது 24 சதவீதமாகவும் இருக்கிறது.

சிங்களக் குடியேற்றங்களே இதற்குக் காரணம். நாடு முழுவதிலும் 1947 – 1981ஆம் ஆண்டுவரையில் 238 சதவீதமாகச் சிங்களக் குடியேற்றம் அதிகரித்துள்ளது.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் 1947 – 1981ஆம் ஆண்டுவரையில் 281 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தை இழக்க மாட்டோம். திருகோணமலையை நாங்கள் இழக்கமாட்டோம். திருகோணமலையில் நாம் பலமாக​வே இருக்கிறோம்.

சரித்திர ரீதியாக இந்த நிலம் எமக்குச் சொந்தமானது. நான் சொன்ன விவரங்களே அதற்கு அத்தாட்சி.

கே: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் என்பதும் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் ஸ்ரீதரனம் என்பதும் உண்மையா?

இது தொடர்பில் நான் ஒரு கருத்தையும் கூற விரும்பவில்லை. தமிழரசுக் கட்சி மக்களுக்குத் தேவை. அடுத்த தலைவரைத் தீர்மானிக்க வேண்டியது கட்சியும் மக்களுமே. மக்கள் நம்பிக்கையைப் பெற்றவர்கள் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்படுவார்கள்.

நான் ஒருவரை தலைவராக உருவாக்க விரும்பவில்லை. உருவாக்கவும் மாட்டேன். அது, மக்களின் கட்சியின் உரிமை. நானாக ஒரு தலைவரை தமிழரசுக் கட்சிக்கோ கூட்டமைப்புக்கோ உருவாக்கப்போவதில்லை.

ஜனநாயக ரீதியாக நாம் சிந்திக்கும்போது, ஒரு காலத்தில் மக்கள் வாக்களிப்பதற்கு தடை செய்யப்பட்டார்கள். அது ஜனநாயகமல்ல. ஒரு காலத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மாத்திரம் வாக்களிக்க வற்புறுத்தப்பட்டார்கள். அதுவும் ஜனநாயகமல்ல. அமோகமாக வெற்றிபெற்றவர்கள் வற்புறுத்தி வாக்குகளைப் பெற்றார்கள்.

தலைவரை உருவாக்குது எனது கடமையல்ல. நான் எமது சமூகத்துக்குப் பிழை செய்யமாட்டேன்.

கே: கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் கூட்டமைப்பில் இருந்தபோது, மக்கள் அவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள். கூட்டமைப்பிலிருந்து அவர்கள் விலகிப்போயிருக்கிறார்கள். இதனால், கூட்டமைப்பும் தமிழ்ச் சமூகமும் பலவீனமடைகிறதே, இதை எப்படி நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யாரையும் விலக்கவில்லை. சிலர் விலகினார்கள். காரணத்தை அவர்கள் இதுவரையில் கூறவில்லை. சி.வி.விக்னேஷ்வரனை நானே அரசியலுக்குக் கொண்டுவந்தேன். அவருக்கு வாக்களிக்க வேண்டுமென நானே கூறியிருந்தேன்.

ஆனால் தற்போது, சி.வி என்ன செய்கிறார்? கூட்டமைப்பை விமர்சிக்கலாம்; அதைவிடுத்து அவரால் என்ன செய்யமுடியும்?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பவர்களால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. இதேவேளை, ஏன் அவர்கள் விலகினார்கள் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். நாம் யாரையும் விலக்கவில்லை. அவர்களை விலகவும் சொல்லவில்லை. விலகியமைக்கான காரணம் ஒருவரும் கூறவில்லை.

கே: தமிழ் – முஸ்லிம் தலைவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டியது முக்கியம் என்று நீங்கள் கருதவில்லையா?

தமிழ் – முஸ்லிம் மக்கள், தமிழ் பேசும் மக்கள் என்றவகையில் வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதனை மாற்றியமைக்க அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. குடியேற்றம், குடிபெயர், நிர்வாக முறைகள் இப்படியான பல விடயங்களைச் செய்தார்கள்.

இப்படியான பல சம்பவங்கள் இடம்பெற்றாலும், அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, வன்னி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாம் பெரும்பான்மையாக இருக்கிறோம். இதனைப் பாதுகாக்க வேண்டும். பலமடைய வேண்டும். பொருளாதார, சமூக, கலாசார ரீதியாக முன்னேற வேண்டும். இதனைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.

கே: சிங்கள மக்களுக்கு நீங்கள் கூறும் முக்கியமான விடயம் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு இருமுறை மாத்தறைக்குச் சென்றிருக்கிறேன். புத்திக பத்திரணவுடன் சென்றிருந்தேன். அவரின் அழைப்பில் நாம் அங்கு சென்றிருந்தோம். பாடசாலைப் பிள்ளைகளை, பௌத்த பிக்குமார்களையும் நான் சந்தித்திருந்தேன்.
அவர்கள் எவரும் தமிழ்த் தலைவர்களை எதிரியாகப் பார்க்கவில்லை. நேசக்கரத்தை நீட்டினார்கள். பௌத்த பிக்குமார்க​ளைப் பார்கக, பிரிவினாககளுக்குச் சென்றேன். அன்பாக நடந்துகொண்டார்கள்.

மங்கள சமரவீரவின் அழைப்பிலும் மாத்தறைக்குச் சென்றேன். அதிதியாக நான் அங்கு கலந்துக்கொண்டிருந்த கூட்டத்தில் அமர்ந்தப்படியே பேசினேன். ஒரு மணித்தயாலம் பேசினேன். அங்கு நேசக்கரம் நீட்டிப் பேசினேன்.

தமிழ், சிங்கள மக்கள் இருவரும் சுபீட்சமாக வாழ வேண்டும். சமத்துவம், நீதியின் அடிப்படையில் வாழ வேண்டுமெனவும் நான் கூறியிருந்தேன். எனது உரை முடிவடைந்தப் பின்னர், அங்கு மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோசம் செய்தார்கள்.

கே: மக்களுக்கு இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தமிழ் மக்கள் நாங்கள், எமது ஒற்றுமையை பிரதிபலிக்க வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் பிரிபடாத நாட்டுக்குள், பிரிபட முடியாத நாட்டுக்குள், சமத்துவம், நீதி, கெளரவத்துடன் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் சமவுரிமையுடன் வாழ விரும்புகிறோம். இதுவே, தமிழ் மக்களின் கோரிக்கை. இதனால், நாட்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தச் செய்தியைச் சொல்வதற்கான சந்தர்ப்பம். முழுமையாக யாழ்ப்பாணத்தில் திருகோணமலையில், வன்னியில், மட்டக்களப்பில், அம்பாறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்துச் சொல்லவேண்டும். அச்செய்தியினூடாக, நாட்டிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகள், தலைவர்கள். சர்வதேச சமூகம், தமிழ் மக்களின் அபிலாஷைகள் பிரச்சினைகளுக்கு ஒருமித்து வந்து தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam