By 3 July 2020 0 Comments

வெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…!! (மருத்துவம்)

உணவே மருந்து

‘‘உணவு சமைக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பெரும்பாலான பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. ஆனால், நமக்கு அதைப் பற்றிய முழு விபரமும் தெரியாது. நம்முடைய இந்த அறியாமையால் இத்தகைய மருந்துப் பொருட்கள் கால வெள்ளத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அழிவுக்கு உள்ளாகின்றன. அப்படி நாம் தெரிந்துகொள்ளாத ஒன்றுதான் வெங்காயத்தாள்’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் அழகர்சாமி, அதன் மருத்துவப் பயன்கள் குறித்து இங்கே விளக்கம் தருகிறார்.

‘‘பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் பெரிய வெங்காயத்தின் தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதிலும் சிறப்பான இடம் வகிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது பலாண்டு(Palandu) எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்தாள் சாறு பலவிதமான பிரச்னைகளைக் குணப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது. ரத்தம் இறுகிப் போவதைத் தடுத்து அதனை நீர்த்துப் போக செய்கிறது.

எனவே, மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் சரி செய்யப்படுகின்றன. பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதில், கந்தகச் சத்து ஏராளமாக இருப்பதால் சருமம் தொடர்பான நோய்கள் வராது. ஜீரண சக்தியை அதிகரித்து நரம்பு செல்களைப் பலப்படுத்தும். நினைவாற்றலை அதிகரித்து அறிவுத்திறன் வளர்க்க உதவும்.

வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு90% குறையும். காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பச்சரிசி தவிட்டுடன் வெங்காயத்தாள் சாறு கலந்து மூக்கில் ஒரு சொட்டு விட்டால், உடனே குறையும். (இதை விபரம் அறிந்தவர் செய்ய வேண்டும்.) காய்ச்சலைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

இவ்வாறு பல மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இச்சாறைக் குடிப்பதில் மருத்துவர் சொல்லும் அளவு முறையை பின்பற்ற வேண்டும். கை குழந்தைகளுக்கு 5 முதல் 10 சொட்டு வரை தரலாம். இரண்டரை வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என்றால், 2.5 மில்லி லிட்டரும், 5-லிருந்து 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு ஐந்து மில்லி லிட்டரும், 18 வயதைக் கடந்தவர்களுக்கு 15 மில்லி லிட்டரும் கொடுக்கலாம்.

காலை, மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்ட பிறகு குடிப்பது அவசியம். வயிற்று எரிச்சல் மற்றும் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் ஒரு மடங்கு சாறில் 2 மடங்கு தண்ணீர் கலந்து அருந்தலாம்.

காரத்தன்மை உள்ள இந்த சாறை அருந்த சிரமப்படுபவர்கள், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வெங்காயத்தாள் சாற்றினை இனிப்பு கலந்து பருகக் கூடாது. சமையலில் வெங்காயத் தாளினை கூட்டாகவோ, சூப்பாகவோ, சட்னியாகவோ பல விதங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.’’

பலாண்டு மருந்து நாமே தயாரிக்கலாம்!

வெங்காயத் தாளை நன்றாக நசுக்கி கொள்ளவும். பின்னர், அதனை சுத்தமான மண் பானையில் போட்டு, வெள்ளை நிறத்துணியால் 3 நாட்கள் மூடி வைக்கவும். இவ்வாறு வைக்கப்படும் தாள் மெல்லமெல்ல புளிப்புத்தன்மை உள்ள காடி நீராக மாறும். இந்தப் பானைக்குள் கண்ணாடி டியூப் வழியாக குளிர்ந்த நீர் செலுத்தப்படும். பிறகு இதை சூடுபடுத்துவதால் சுடுநீராக வெளியேறும்.

கடைசியாக, இந்த நீரில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு ஆனியன் எஸன்ஸ் சேகரிக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் வெங்காயத் தாளின் 10 முதல் 15 மில்லி லிட்டர் சாறு, 20, 30 வெங்காயத்துக்குச் சமமானதாகும். அந்த அளவுக்கு, குறைந்த அளவு சாறிலேயே நிறைய பயன்கள் கிடைக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam