By 7 July 2020 0 Comments

அம்மாச்சி கழிவறைகள்! (மகளிர் பக்கம்)

யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், திறந்தவெளி கழிப்பிடம் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இன்றும் இந்தியாவில் பல கோடி குடும்பங்களுக்கு கழிவறை கிடையாது. திறந்த வெளிகளில் எந்தவொரு பாதுகாப்புமின்றி, ஒவ்வொரு காலையும் வெறும் கால்களில் குழந்தைகளைத் தூக்கி கொண்டு மனித கழிவுகளுக்கு நடுவே நடந்து செல்லும் பல பெண்கள், இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். இதனால் ஏற்படும் நோய்களால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் வருடத்திற்கு இரண்டு லட்சம். நோய் தொற்றில் ஆரம்பித்து பாலியல் வன்முறை வரை, இது பெண்களுக்கும் குழந்தைகளுக்குமே பெரும் ஆபத்தாக இருந்து வருகிறது.

பொதுவாக இப்படி அடிப்படை வசதிகள் இல்லாத பல இடங்களில் பாதிக்கப்படுவது பெண்களாகவே இருக்கின்றனர். தண்ணீர் இல்லாமல் பல மைல் தூரம் நடந்து செல்வதாக இருக்கட்டும், அருகில் பள்ளியில்லாததால் கல்வியை தொடர முடியாத பெண் குழந்தைகளாகட்டும் இப்படி இதில் அதிகம் பாதிக்கப்படும் பெண்களைக் கொண்டே அதற்கு தீர்வையும் கண்டிருக்கிறது ‘அம்மாச்சி லேப்ஸ்’ என்னும் அமைப்பு. கேரளாவில் அமிர்தா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூடாரம்தான் அம்மாச்சி லேப்ஸ். இவர்கள், அச்சு அடிப்படையிலான தொழில் நுட்பத்தைக்கொண்டு (Mould-Based Technique), கழிவறைகள் கட்டும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.

3D மாடலிங் முறையில் உருவான இந்த தொழில்நுட்பத்தால் எளிமையாக, குறைந்த நேரத்தில் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு வலுவான கழிவறைகளை கட்டிமுடிக்க முடியும். பொருளாதார ரீதியாகவும் குறைந்த செலவே ஆகும் என்கிறார்கள் இந்த அமைப்பினர். இது போன்ற கழிவறைகளை அந்த கிராமத்து பெண்களைக் கொண்டே ஏன் உருவாக்க கூடாது என்று எண்ணிய அம்மாச்சி லேப்ஸ், உடனே கிராமபுறங்களுக்குச் சென்று இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் தாமாகவே தங்கள் இல்லங்களில் கழிப்பறைகள் அமைப்பது மட்டுமல்லாமல், தங்கள் கிராமங்களில் தேவையான இடங்களில் கழிப்பறைகள் அமைத்துக்கொடுக்கலாம், இதனால் அவர்களது வாழ்வாதாரமும் முன்னேறும் என்று முடிவுசெய்து பெண்களுக்கான அடிப்படை வசதியை அவர்களாகவே உருவாக்கிக்கொள்ள பயிற்சி அளிக்க முன்வந்தனர். பயிற்சி முறையும் சுலபம்தான்.

சாதாரணமாக ஒரு கழிவறை கட்ட தேவையான நுட்பான திறமையும் அனுபவமும் இதற்கு தேவையில்லை. குறைந்த நேர பயிற்சியிலேயே, இந்த அச்சு அடிப்படையிலான கழிப்பறையை கட்டி முடித்திட முடியும். ஒரு கழிவறையைக் கட்டிமுடிக்க சுமார் 76 மணி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த புது தொழில்நுட்பம் மூலம், வெறும் நான்கு பெண்களைக்கொண்டு, 40 மணி நேரத்தில் கழிவறையை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் உடனடியாக கட்டித்தருகின்றனர் நம் கிராமத்து பெண்கள். அச்சுமுறை தொழில்நுட்பத்தில், ஒவ்வொரு அச்சுக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எண்களைக் கொண்டு முறையாக அச்சுகளை வரிசைப்படுத்த வேண்டும். சரியாக பொறுத்திய அச்சுக்களை ஆணியும் திருகாணிகளைக் கொண்டும் பொருத்த வேண்டும். மேலும் ஒரு கழிவறையை கட்டி முடிக்க அடித்தளத்திற்கும், சுவர்களுக்கும் என இரண்டு அச்சுகளே இருக்கின்றன.

அச்சுகளை பொருத்துவது எளிமையோ அதே போல் அதனை பிரிப்பதும் சுலபம். பெண்கள் இதை வடிவமைக்க கடினமான விதிமுறைகளை கற்றுக்கொண்டு பின்பற்ற தேவையில்லை. எளிமையான காணொளி மூலமே இந்த முழு செயல்முறையை விளக்கிவிட முடியும். இது கிராமங்களில் பொருத்தப்படுவதால், இரும்பு தாள்கள் கொண்டு சிமெண்ட், மணல், கற்களும் சேர்த்து நீண்ட வருடங்கள் நீடித்து நிற்கும் தரத்துடன் உருவாக்கப்படுகிறது. அதே சமயம், தேவையென்றால் பிரித்தெடுத்து கொள்ளும் வசதியும் இதிலுள்ளது. அம்மாச்சி லேப்ஸ், 2015ஆம் ஆண்டில் அச்சு முறையில் கழிப்பறை செய்து, ஒரு வருடம் சோதனை செய்துள்ளனர். சோதனை வெற்றியில் முடிய உடனே இந்த மாதிரியைக் கொண்டு தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய எட்டு மாநிலங்களில் கிராமபுரங்களுக்குச் சென்று, பெண்களுக்கு பயிற்சியளித்து கழிப்பறைகள் அமைக்க உதவியுள்ளனர்.

பெண்களுக்கு கழிப்பறை அமைக்க மட்டும் பயிற்சி கொடுக்காமல், சுகாதாரத்தின் முக்கியத்துவம், பிற அரசாங்க திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் செய்கின்றனர். இதுவரை 200 பெண்களுக்கு பயிற்சி அளித்து, 21 மாநிலங்களில் 400 கழிப்பறைகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர். எதிர்காலத்தில், 5000 பெண்களுக்கு இந்த பயிற்சியளித்து அதன் மூலம் 30,000 மக்கள் பயனடைய வேண்டும் என்பதே இவர்களது இலக்காக இருக்கிறது. பெண்களே தங்கள் குடும்பத்திற்காகவும், கிராமத்திற்காகவும் கழிப்பறைகள் கட்டும் போது, அவர்கள் அதில் தங்கள் உரிமையை செலுத்த முடியும். இவற்றை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும் முன்வருவார்கள். திறந்தவெளி கழிவறையின்றி, பாதுகாப்பான கழிப்பறைகள் மூலம் பல ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றப்படுவார்கள்’’ என்கிறார்கள் இந்த அமைப்பினர்.Post a Comment

Protected by WP Anti Spam