குளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 52 Second

‘‘மழை, பனி போன்ற குளிர்காலத்தில் சுற்றுப்புறச் சூழலின் வெப்பம் குறைவாக இருப்பதால் உடலில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் நாம் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

குறிப்பாக, மழைக் காலங்களில் வைரஸ் காய்ச்சல்கள் வருவதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து வீட்டிலேயே சமைத்து உண்ண வேண்டும்’’ என்கிறார் உணவியல் நிபுணரான வினிதா கிருஷ்ணன்.

அத்தோடு மழைக்காலத்துக்கு இதமான, எளிமையான உணவுகளையும் நமக்குப் பரிந்துரை செய்கிறார்.‘‘மழைக்காலத்தில் மண்ணுக்கு அடியில் பயிரிடப்பட்ட உணவுகளையோ அல்லது மண்ணுக்கு மிக நெருக்கத்தில் உள்ள காய்களையோ கிழங்கு வகைகளையோ பயன்படுத்த வேண்டாம். தொற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அதேபோல மண்ணிலிருந்து உயரத்தில் வளர்ந்து இருக்கக்கூடிய கீரைகளையோ காய்கனிகளையோ பயன்படுத்தலாம். முக்கியமாக நீங்கள் தேர்ந்தெடுக்கிற உணவுகளில் ஆன்டிபயாட்டிக் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள பொருட்களை பயன்படுத்தி சமைத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக பூண்டு, மிளகு, மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களை உணவில் சேர்த்து சமைக்க வேண்டும்.

முக்கியமாக, கசப்புச்சுவை உடைய உணவுகளையும், துவர்ப்புச்சுவை உடைய உணவுகளையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில்தான் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு உதவும். அந்த அடிப்படையில் மழைக்காலத்தில் ஆரோக்கியமான உணவாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிற உணவாகவும் உள்ள இரண்டு உணவுகளை அதன் செய்முறையோடு பார்ப்போம்.

முருங்கைக் கீரை சூப்

தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 10 கிராம்
கடுகு, சீரகம் – தேவையான அளவு
தவிட்டு எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – தேவையான அளவு
மிளகுப் பொடி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை : 50 கிராம் முருங்கைக் கீரையை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு அது இரண்டு டம்ளர் அளவு கொதிக்கவைத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெயை விட்டு கடுகு, வெங்காயம், சீரகம் கறிவேப்பிலை, மஞ்சள் போட்டு தாளித்து 50 கிராம் முருங்கைக் கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.

கீரை நன்றாக வதங்கியவுடன் அதில் கொதித்த முருங்கைக் கீரை சாறினை அதில் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி அதில் தேவையான அளவு மிளகுப் பொடியை தூவினால் முருங்கைக்கீரை சூப் ரெடி.

ஒரு டம்ளர் முருங்கைக் கீரை சூப்பில் அடங்கியிருக்கும் சத்துக்கள்

கலோரி- 92 சதவீதம், புரதம் – 6.7%, கொழுப்பு- 1.7%, தாதுக்கள்- 2.3%, கார்போஹைட்ரேட்கள் – 12.5%, தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம் – 440 மி.கி., பாஸ்பரஸ்- 70 மி.கி, அயன் (Iron)- 7 மி.கி, வைட்டமின் – சி-220 மி.கி., வைட்டமின் பி – காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கி உள்ளது.

பயன்கள்: முருங்கைக் கீரையை சூப்பாக வைத்து சாப்பிடும்போது எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆன்டி ஆக்ஸிடென்டாகவும் ஆன்டிபயாட்டிக்காகவும் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ரத்தத்தை சுத்திகரித்து ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது.

ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறச் செய்கிறது. இது உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தந்து மழை மற்றும் குளிருக்கேற்ற உணவாக இருக்கிறது. இது பெரியவர் சிறியவர் என அனைவரும் பருகலாம்.

உடலுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 சதவீதம் முருங்கைக் கீரையில் உள்ளது. ஹீமோகுளோபின் அளவு இதனால் பல மடங்கு அதிகரிக்கும். வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது.

பாலக்கீரை பாகற்காய் பக்கோடா

தேவையான பொருட்கள்
பாகற்காய் – 50 கிராம்
பாலக்கீரை – 50 கிராம்
கடலை மாவு – 100 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 10 கிராம்
நசுக்கப்பட்ட பூண்டு – 10
சோம்பு – 5 கிராம்
இஞ்சி – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
எண்ணெய் – தேவை்ககு
மஞ்சள் பொடி – தேவையான அளவு.

செய்முறை: பாலக்கீரையை தனிதனியாக எடுத்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பாகற்காயையும் வட்ட வடிவில் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடலை மாவையும், அரிசி மாவையும் நன்றாக நீர்விட்டு வடை சுடும் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, நசுக்கப்பட்ட பூண்டு, மஞ்சள், சீரகம் தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்த்து பிசைய வேண்டும். பாகற்காய் சின்னதாக ரவுண்டு சேப்பில் வெட்டி வைத்து கொள்ள வேண்டும்.

இப்போது கடாயில் தவிட்டு எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து, கடலைமாவில் பாலக்கீரையையும், பாகற்காயையும் ஒவ்வொன்றாக மாவில் நனைத்து போட வேண்டும். பொன்னிறமாக மாறும்போது அதை எடுத்துவிட வேண்டும். குறிப்பாக, எண்ணெயில் பொரிக்கும்போது பாலக்கீரை, பாகற்காயின் கசப்பு, துவர்ப்பு சுவை நீங்கிவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாலக்கீரை: ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அடங்கியுள்ளன.

பார்வை குறைபாட்டை சரி செய்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதில் மிக அதிகமாக உள்ள பச்சயம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

பாகற்காய்: உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் பாகற்காயில் ஏராளமாக நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.

இதன் கசப்புச்சுவை உடலில் உள்ள நச்சுக்களை போக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மழைக்காலத்தில் தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. மேலே குறிப்பிட்ட அனைத்து உணவுகளும் ஜீரணத்திற்கு எளிதானது, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது மழை மற்றும் குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது’’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேங்காய்ப்பாலில் இத்தனை சத்துக்களா?! (மருத்துவம்)
Next post India ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்!! (வீடியோ)