இன முறுகலை தவிர்க்கலாம்!! (கட்டுரை)

Read Time:21 Minute, 0 Second

“தமிழ் மக்களின் தேவைகள் அதிகமதிகம் உள்ளன. ஆகவே அதனைப் புறக்கணித்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்புகளையும் நன்மைகளையும் தடுக்க எவரும் முற்படக் கூடாது. பாதிக்கப்பட்டுள்ள எவருக்கும் அநீதி இழைக்கப்பட்டு விடக் கூடாது. இவ்வாறான தெளிவான கொள்கைளைக் கடைப்பிடித்தால், இன முறுகல் வருவதை எந்த மட்டத்திலும் தவிர்த்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் மூன்றாம் தரப்பு உள்நுழைந்து, பிரச்சினைகளை ஊதிப் பெருப்பித்து அரசியல் தேவைக்குப் பயன்படுத்த சிறுபான்மை இனங்கள் இடமளித்து விடக்கூடாது. சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை, தாங்களே தீர்த்துக் கொள்ளும் வகையில் வழிப்படுத்த வேண்டும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளரும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

தற்போது அரசியலுக்குள் பிரவேசித்துள்ள அவர், ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.

செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கேள்வி – மட்டக்களப்பு மாவட்டச் செயலாளராக 2019ஆம் ஆண்டு வரை கடமையாற்றிய மூத்த நிர்வாக அதிகாரியான நீங்கள், ஓய்வுபெற்றதன் பின்னர், தாமதிக்காமல் உடனடியாகவே அரசியலுக்குள் நுழைந்ததன் காரணம் என்ன?

நான் எனது பதவிக்காலம் பூரணமாகிய, மூப்பு ஓய்வைப் பெறவில்லை. ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர்தான், அரசியலுக்குள் நுழைந்து, மக்கள் பணிக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன்.

“நாம் அரசியலைத் தவிர்ப்போமானால், எம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் எம்மை ஆள நேரிடும்” என்று அறிஞர் பிளாட்டோ கூறிய பொன்மொழியின் அடிப்படையிலே தான், மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், என்னைப் பழிவாங்குகின்ற வகையிலே, நான் இயல்பாகவே மூப்பின் அடிப்படையில் இன்னும் 9 மாதங்கள் இருக்கின்ற வேளையில், எனக்கு இடமாற்றம் வழங்கி என்னைக் கொழும்பிலுள்ள அமைச்சிலே பணியாற்றுவதற்கு வழிவகை மேற்கொண்டிருந்தார்கள்.

எனவே, அதனை நான் ஏற்றுக்கொள்ளாமல், முன்கூட்டியே எனது ஓய்வைப் பெற்றுக் கொண்டேன். அதனைத் தொடர்ந்து, என்னை அரசியலுக்குள் நுழையுமாறு சமூகத்திலுள்ள அநேகரும் கேட்டுக் கொண்டார்கள். எனவே, மக்களின் வேண்டுகோளை என்னால் புறந்தள்ள முடியாமல், அரசியல் களத்தில் இறங்கினேன்.

எனது அரசியல் நுழைவு, முன்கூட்டியே ஆலோசிக்கப்பட்டு எடுத்த முடிவல்ல.
கேள்வி – பல கட்சிகள் இருக்கும் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நீங்கள் தேர்வு செய்ததன் காரணமென்ன?

பல கட்சிக்காரர்களும் என்னை அவர்களது கட்சிகளிலே இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையிலே, தமிழ் சமூகத்தினுடைய கடந்தகால வரலாறு, தமிழினம் எவ்வாறான பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றது, தமிழர்களின் உணர்வு, அவர்களது உரிமை தொடர்பான போராட்டங்கள், எதிர்பார்ப்புகள் தற்போதும் மக்கள் வாழ்வதற்காக எதிர்நோக்கும் பல்வேறு அழுத்தங்கள் நிறைந்த இந்தச் சூழ்நிலையிலே, குறிப்பாக தற்போதைய புதிய அரசாங்க ஆளுகையில் இடம்பெற்று வருகின்ற தமிழருக்கெதிரான அநீதிகள் தொடர்பாகப் பார்க்கின்றபோது, எதிர்காலத்திலே எங்களுடைய மக்களின் இருப்பு கேள்விக்குறியான ஒரு நிலை இருப்பதை உணர்ந்து தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுக் கொண்டவனாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிட நான் முன்வந்தேன்,

மேலும், எனது குடும்பப் பின்னணியும் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்டது. அதன் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது.

எனது தந்தையார் ‘ஸ்ரீ’ எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். அவர் தனது காருக்கு தமிழ் ‘ஸ்ரீ’ பதித்து தமிழுணர்வை வெளிப்படுத்தியிருந்தார். தமிழரசுக் கட்சியின் சத்தியாக் கிரகத்திலும் எனது பெற்றோர் பங்கெடுத்திருந்தனர்.

ஆகவே, எங்கள் குடும்பத்தின் பங்களிப்பு தமிழ்த் தேசியத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட பின்பும் நாங்கள் தமிழ்த் தேசிய கொள்கையில்தான் இருந்து வந்துள்ளோம்.

நான் மாணவப் பருவத்திலிருக்கும்போதே, தமிழ்த் தேசிய உணர்வால் ஈர்க்கப்பட்டு பல அஹிம்சை வழிப் போராட்ங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்திருக்கின்றேன்.

தமிழ் மக்களின் மீது நான் வைத்திருக்கின்ற அன்பு காரணமாக, இப்பொழுது அரசியல் மூலம் காத்திரமான சேவைகளைத் தொடரலாம் என எண்ணுகின்றேன்.

கேள்வி – தமிழர் அரசியலிலே மாற்றுத் தலைமைத்துவத்துக்கான தீவிரமான கருத்துகளுடன் சில முன்னெடுப்புக்கள் நடந்துள்ளன. அவ்வாறானதொருச் சூழ்நிலையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

தஙகளுக்கான பதவிகள், வாய்ப்புகள் கிடைக்காதபோது அவர்கள் மாற்றுத்தலைமை அவசியம் என்ற கோசத்தை முன்வைக்கிறார்கள்.

தமிழ்த் தேசியத்திலிருந்தும் தமிழர்களின் கொள்கைகளிலிருந்தும் விலகி இன்னுமொரு கட்சியை ஆரம்பித்து அதற்கான தலைவராகத்தான் அவர்கள் இருக்கிறார்களே தவிர, எங்களுடைய கட்சிக்கான ஒரு மாற்றுத் தலைமையாக அவர்களை நாங்கள் பார்க்கவுமில்லை, அவர்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை.

எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா, மிக உறுதியாக மிக தீர்க்க தரிசனத்துடன் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தத் தலைமை சம்பந்தமான மாற்றம் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் வேண்டுமாக இருந்தால், எங்களுடைய கூட்டமைப்பிலே இருக்கின்ற சகோதரக் கட்சிகள் இணைந்து அது தொடர்பாக முடிவெடுப்பார்கள். எங்களுடைய கட்சியிலே இருந்து விலகிச் சென்று தங்களது நலனுக்காக தாங்களாகவே தலைமைப் பதவியை உருவாக்கிக் கொண்டவர்களின் விமர்சனத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.

கேள்வி – பல்லின சமூகங்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே காணிப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு நெருக்கடிகள் முரண்பாடுகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கின்றன.

நீங்கள் மாவட்டச் செயலாளராக இருந்த காலகட்டத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் நிலவி வந்திருக்கின்றன. இவ்வாறான சிக்கல்களை எவ்வாறு நோக்குகின்றீர்கள், எவ்வாறு கையாளலாம்?

மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் இரு சமூகங்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் இடம்பெற்றுத்தான் வந்திருக்கின்றன.

இவற்றை நோக்கும்போது, இனங்களுக்கிடையில் இருக்கின்ற பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படுவதற்கு சமூகங்களிலுள்ள அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். இன்னமும் அந்த விடயங்களில் காத்திரமாகப் பணியாற்ற வேண்டியிருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்திலே சிறுபான்மையினராகிய நாங்கள் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

ஏனென்றால் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துக் கொள்வதற்காக, பெருந்தேசிய கட்சிகள் சிறுபான்மையினரிடையே உள்ள முரண்பாடுகளை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை.

அவ்வாறான சூழ்ச்சிகளில், சிறுபான்மை இனங்கள் ஒருபோதும் சிக்கி விடக் கூடாது.

இந்த விடயத்தில் இரு சிறுபான்மைச் சமூகங்களும் அவற்றின் அரசியல் தலைமைகளும் தெளிவையும் புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியல் நடவடிக்கைகள் கூட நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

மக்களுடைய உண்மையான பிரச்சினைகளை உணர்ந்தவர்களாக நாங்கள் செய்றபடுகின்றபோது, அதற்குள் மூன்றாவது தரப்பினர் உள் நுழைந்து இன முறுகலை ஏற்படுத்துவதற்கான வாயப்புகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

சிலர் சமூகங்களின் பாதிப்புகளை கருத்திற் கொள்ளாது தமது அரசியல் இலாபங்களுக்காக விஷ‪மத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. இவ்வாறானவர்களை அந்தந்த சமூகங்களிலுள்ள மக்களே அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.

கேள்வி – நீங்கள் ஒரு தீர்மானமெடுக்கக் கூடிய அந்தஸ்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்கின்ற வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில், இன ஐக்கியத்தை சகவாழ்வை உருவாக்கக் கூடிய வழிவகைகள், பொறிமுறைகள் எவை எனக் கருதுகின்றீர்கள்?

முதலில் சமூகங்களிடையே விழிப்புணர்வும் புரிந்துணர்வும் ஏற்படுத்தக் கூடிய வகையில பரஸ்பர கருத்தாடல்கள் இடம்பெற வேண்டும்.

பாதிக்கப்பட்ட சமூகத்தைப் புறந்தள்ளிவிட்டு கருமமாற்றக் கூடாது. தமிழ் சமூகம் கடந்த காலங்களிலே பல்வேறு வகைப் பாதிப்புகளுக்கு முகம்கொடுத்து வந்திருக்கின்றார்கள். அதன் காரணமாக தமிழ் மக்களின் தேவைகள் அதிகமதிகம் உள்ளன. ஆகவே அதனைப் புறக்கணித்து விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்புகளையும் நன்மைகளையும் தடுக்க எவரும் முற்படக் கூடாது.

பாதிக்கப்பட்டுள்ள எவருக்காவது அநீதி இழைக்கப்பட்டு விடக் கூடாது. இவ்வாறான தெளிவான கொள்கைளைக் கடைபிடித்தால், இன முறுகல் வருவதை எந்த மட்டத்திலும் தவிர்த்துக் கொள்ளலாம். இந்த இடத்தில், மூன்றாம் தரப்பு உள் நுழைந்து பிரச்சினைகளை ஊதிப் பெருப்பித்து அரசியல் தேவைக்குப் பயன்படுத்த சிறுபான்மை இனங்கள் இடமளித்து விடக் கூடாது. சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை தாங்களே தீர்த்துக் கொள்ளும் வகையில் வழிப்படுத்த வேண்டும்.

கேள்வி – மட்டக்களப்பு மாவட்டத்திலே நுண்கடன் பிரச்சினை, அதன் விளைவாக தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. நீங்கள் உயர் அதிகாரியாகக் கடமையாற்றியவர் என்கின்ற வகையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக உங்களது கருத்து என்ன?

நுண் கடன் விடயம் என்பது, மக்களைப் பாதிக்கின்ற ஒரு பிரச்சினைதான்.

பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினையில், வறிய மக்களிடம் போதியளவு விழிப்புணர்வு இல்லாததும் மக்கள் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றார்கள்.

எனவே, வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேற்படுத்துவதற்கான வழிவகைகளை நாம் செய்ய வேண்டும்.

நுண்கடன் விடயத்தில் மத்திய வங்கியும் அரசாங்கமும் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

அதனால் வறிய மக்கள் பாதிக்கப்படாத வகையில், அரசும் மத்திய வங்கியும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்கு அரசியல்வாதிகளும் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

கேள்வி – போரால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசத்தில், பல்வேறு தரப்பினர் இன்னமும் நிர்க்கதியான நிலையில் உள்ளார்கள். குறிப்பாக தமது பிரதான உழைப்பாளிகளை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைக் குறிப்பிடலாம். இத்தகைய பாதிப்புக்கு உள்ளானோருக்கான விமோசனமளிக்கும் திட்டங்கள் எவை எனக் கருதுகின்றீர்கள்?

இது மிக முக்கியமானதொரு விடயம். மட்டக்களப்பு மாவட்டம், இயற்கை இடர்களாலும் மனிதனால் ஏற்படுத்தக் கூடிய வன்முறைகளாலும் அடிக்கடி பாதிக்கப்படுகின்ற பிரதேசம்.

இங்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளும் வலிகளையும் வடுக்களையும் சுமந்தவர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

இவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதற்கான பல்வேறு திட்டங்களைப் பற்றி நாங்கள் விவாதிப்பதற்காக மாவட்டமட்ட ஆலோசனைக் குழுவொன்றை உருவாக்குவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

பிரதேச மட்டத்திலும் கிராம மட்ட ரீதியாகவும் இவ்வாறானக் குழுக்களை ஆரம்பித்து, திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

கல்வி, பொருளாதாரம் வேலைவாய்ப்புப் போன்ற இன்னோரன்ன அபிவிருத்திகளைக் கொண்டமைந்ததாக இந்த வேலைத் திட்டம் இருக்கும்.

கேள்வி – மட்டக்களப்பு மாவட்டம் அகில இலங்கை ரீதியில் கல்வியில் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இதனைச் சீர் செய்ய என்ன அணுகு முறைகளை வைத்துள்ளீர்கள்.

இது மிக முக்கியமான விடயம் என்னைப் பொறுத்தளவிலே எனது முதல் முன்னுரிமையும் கடைசி முன்னுரிமையும் கல்வி அபிவிருத்திக்குத்தான்.

இது இந்நாட்டின் கல்விக் கொள்கையோடு சம்பந்தப்பட்ட விடயம். வெறும் பௌதீக வளங்களை மாத்திரம் கல்விக்காக வழங்கிவிட்டால் கல்வியில் அபிவிருத்தி கிட்டும் என்பதல்ல.

வாழ்க்கைக்கேற்ற கல்வி முறையாக நமது கல்வித் திட்டம் மாற வேண்டும். தொழில்நுட்பம் இரண்டாம் மொழிகள் சம்பந்தப்பட்ட அறிவு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இளைஞர், யுவதிகளின் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் அக்கறை காட்ட வேண்டும்.

சாதாரண தரத்தின் பின்னர் தொழில்நுட்பக் கல்வி முக்கியமானது. துறைசார்ந்த கல்வியும் மிக முக்கியம். இலங்கையில் சமுத்திரப் பல்கலைக் கழகம் இருக்கின்றது. ஆனால் அதுபற்றி நம்மில் பலரும் அக்கறை எடுப்பது குறைவு.

கேள்வி – உங்களைப்பற்றிய விமர்சனப் பார்வை எவ்வாறுள்ளது?

நான் அதிகாரியாகப் பணியாற்றும்போது எழுந்திராத விமர்சனம் நான் அரசியலுக்கு வந்ததன் பின்னர் எழுகின்றன.

நான் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், நிதி முகாமைத்துவம் சிறப்பாக இருந்தது என்பதற்கு ஆதாரமாக, அரசாங்கத்தால் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வின் மூலம், இந்த விருது பெறும் தகுதி எனது நிர்வாகக் காலப்பகுதிக்குள் கிடைத்தது.

ஆனால் சில மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், மக்களை மடையர்கள் என்று நினைத்து, என்னை விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் எனது நிர்வாகக் காலத்தில் திறைசேரிக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நித்யா நந்தா கடந்து வந்த பாதை!! (வீடியோ)
Next post சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)