By 11 July 2020 0 Comments

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

உடலில் உறுதி கொண்ட ஆணைவிட மனதில் உறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். இவ்வாறு பாலின சமத்துவம் பேசி வந்தாலும் இன்றும் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பெண் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள். பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறாள். ஒரு ஆண் இன்னொரு ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு பெண் அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறாள்.

நவீன உலகத்தில் பல துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான அச்சுறுத்தலும் அதிகமாகியிருக்கின்றன என்றே சொல்லலாம். ஆனாலும், தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிகண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவர்தான் கோயம்புத்தூரில் ஜி‘எஸ் ஹெல்த் கிளினிக் (Dr. G`s Health Clinic) நடத்திவரும் டாக்டர் கங்கா தேவி. அவர் தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…

‘‘மலை ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் மடியில் பிறந்தவள் நான். விநோத சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் ஊறிப்போன படுகர் இனத்தில் தான் நான் பிறந்தேன். பருவம் எய்தினால் கல்யாணம், இதுதான் எங்கள் குல வழக்கம். அப்போது பெண்களின் பருவ வயது பதினைந்து அல்லது பதினாறு ஆக இருந்தது. அடுத்து பெண்கள் படிக்க ஆரம்பித்த நேரத்தில் பத்தாம் வகுப்பு முடித்தால் கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதுதான். அதையும் தாண்டி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டால் அவள் பாஸானாலும் சரி, ஃபெயிலானாலும் சரி கண்டிப்பாக திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அதற்குமேல் பெண்கள் படிக்க அனுமதியில்லை, அந்த வயதில் கண்டிப்பாக கல்யாணம் முடிந்துவிடும். அதுகூட ஏன், சிறுமிகள் பிள்ளை கூட பெற்றுவிடுவார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் கல்லூரியில் சேர்ந்து படித்துவிட்டு கலெக்டர் ஆக வேண்டும் அல்லது எஞ்சினியர் ஆக வேண்டும் என்ற கனவு எங்க இன எல்லாப் பெண் பிள்ளைகளுக்கும் இருக்கிறது. அதைத் தெரிவித்தால் அம்மா, அத்தை, பாட்டி என பெண்கள் எல்லோரும் பெண் குழந்தைக்கு படிப்பு எதற்கு, சீக்கிரத்தில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்துவைத்துவிட வேண்டியதுதான் என எதிர்ப்பு தெரிவிப்பார்கள். என் தந்தை அந்த சமுதாயத்திலிருந்து வந்த முதல் போலீஸ் அதிகாரி என்பதால் மகளும் நன்றாகப் படிக்க வேண்டும். நல்லதொரு வேலையில் சேர வேண்டும் என்பது அவரின் எண்ணமாக இருந்தது. நான் பிளஸ்2-வில் நல்லதொரு மதிப்பெண் பெற்றிருந்ததால் எனக்குத் தெரியாமலே கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் அப்பா விண்ணப்பித்துள்ளார்.

மருத்துவம் படிக்க பதினெட்டு லட்சம் ரூபாய் கட்டச் சொன்னார்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கேபோவது? ஆனாலும், அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் மருத்துவம் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற அக்கறையிருந்ததால் குறைந்த செலவில் என்னை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்தனர். ஒட்டு மொத்த குடும்பமே அப்பாவின் இந்த முடிவுக்கு போர் கொடி தூக்கியது. வயசுக்கு வந்த பெண்ணை கல்யாணம் கழிக்காம வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப வேண்டுமா? அங்கே போனால் இவ சுத்தமா வருவாளா என்று காரி உமிழ்ந்தனர். அதை எல்லாம் கடந்து பல எதிர்ப்புடன் தான் எனது பயணம் தொடங்கியது’’ என்றவர் அதன் பிறகு பல தடைகளை தகர்த்து உடைத்தெரிந்துள்ளார்.

‘‘ஏழு ஆண்டு மருத்துவ படிப்புக்கு பிறகு பூர்வீகம் திரும்பினேன். என்னதான் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் படித்து இருந்தாலும் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) நான் டாக்டர் தொழில் புரிய அனுமதிக்காது. எனவே, ஐ.எம்.ஏ. சான்று பெறுவதற்காக பரீட்சை எழுதினேன். ஆனால் அதில் என்னால் தேர்ச்சிப் பெற முடியவில்லை. இந்த நேரத்தில் எனக்கு திருமணம் முடிந்திருந்தது. கணவர் வீட்டினர் இன்னும் டாக்டர் டிகிரி வாங்கவில்லையா என ஏளனம் செய்தனர். வயிற்றில் 7 மாதக் குழந்தையுடன் இரண்டாவது முறை முயன்று தேர்வில் வெற்றிபெற்றேன். அதைத் தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனையில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் எனது டாக்டர் தொழிலைத் தொடங்கினேன். ஆனாலும், குடும்பத்தினரின் அவதூறு பேச்சுக்கு குறைவேயில்லை.

வெளிநாட்டில் இவள் எப்படியெல்லாம் சீரழிந்து வந்தாலோ என்று அதே வசை தொடர்ந்தது. கணவர் வீட்டினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புகுந்த வீடு வந்து சேர்ந்தேன். பெற்றோர் வீட்டிலும் அவ்வளவு திருப்திகரமாக வாழ்க்கை செல்லவில்லை. ஆனாலும், மருத்துவத்தில் உயர் படிப்பான எம்.டி. படிக்கலாம் என வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் அப்ைள செய்தேன். அனுமதிக்கான எழுத்துத் தேர்வில் இரண்டாமிடம். விதி அங்கும் சதி செய்தது. ரஷ்யா எம்.பி.பி.எஸ்-க்கு இங்கு அனுமதியில்லை என கைவிரித்தனர். வழக்கு தொடர்ந்தேன், அதில் எனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் சி.எம்.சி.யில் எம்.டி. படித்து முடித்தேன். இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும், எனது கணவர் வீட்டினர் போலவே பெற்றோரும் என் மீது நம்பிக்கையில்லாமல் பேசவே, எனது இரண்டு வயதுக் குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுதான் உயர்கல்வியான எம்.டி. படித்தேன்’’ என்றவர் பெண்கள் எவ்வளவு தான் உயர்ந்தாலும் அவர்கள் மேல் ஆண்களின் பார்வை தவறாக விழுவதை தடுக்க முடியாதாம்.

‘‘எம்.டி படிப்பு முடித்துவிட்டு, கோயம்புத்தூரில் டாக்டர் தொழிலைத் தொடங்கினேன். இந்த ஏழாண்டு காலத்தில் ஒரு டாக்டராகிய நான் தனியாக இருந்தபோது பல சங்கடங்களை சந்தித்தேன். ஒரு பெண் தனியாக இருந்தால் அவளை வேட்டைக் கழுகுகள் வெறியுடன்தான் பார்க்கின்றன. என் நிலைமை எனக்குத் தெரியும். எனது அவலம் எனது மகளுக்கும் தொடரக்கூடாது என்ற வைராக்கியத்தால் மன உறுதியுடன் தவறாக என்னை அணுகியவர்களை சாமர்த்தியமாக தவிர்த்து, மருத்துவத்துறையில் தனிக்கவனம் செலுத்தினேன். எனது தொழில் திறமையும் நேர்த்தியும் படிப்படியாக என்னை உயர்த்தியது. இதில் என்ன ஒரு வருத்தம் என்றால், டாக்டர் தொழில் என்பது நேரம் காலம் பார்க்காத தொழில். டாக்டர்களுக்கு என சாதாரணமாக ஒரு மீட்டிங் நடத்தினால் அதில் பல விஷயங்கள் விவாதிக்கப்படும்.

வீட்டிற்கு வருவதில் நேரம் காலதாமதமாகும். கட்டியவன் நம்பாவிட்டாலும் பரவாயில்லை, தன் பிள்ளையை பெற்றவர்கள் நம்பாதது என்னை பெருமளவில் பாதித்தது. தனிமைப்படுத்தப்பட்டேன். தனிமையிலும் ஒரு பெருமை வரவேண்டுமென்றால் சிங்கப் பெண்ணாக எதையாவது நாம் சாதிக்க வேண்டும் என கனவுகள் கண்டேன். இன்று என் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவாக சாதித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு இந்த சமூகம் இன்றைக்கு பெரிய அளவில் அங்கீகாரம் வழங்கி உள்ளது. உதாரண மாக பல விருதுகளை கொடுத்து என்னை கவுரவித்துள்ளது. அதன் ஒரு நிலையாகத்தான் சமுதாயத்தில் தனித்துவிடப்பட்ட பெண்களை நல்ல அந்தஸ்துக்கு உயர்த்துவது என தீர்மானித்தேன். அதைத் தொடர்ந்து தனித்துவிடப்பட்ட பெண்களை என் சொந்த செலவில் ஒரு தொழில்முனைவோராக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். செல்லும் வழியெல்லாம் செழிப்பூட்டும் கங்கையைப்போல இந்த கங்காதான் எங்களுக்கு கண்கூடான தெய்வம் என்று என்னால் உருவாக்கப்பட்ட பெண்கள் பேசும்போது மனசுக்கு நிறைவாக இருக்கிறது’’ என்றவர் மருந்து நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

‘‘என்னுடைய மருந்து நிறுவனத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலைப் பார்த்து வருகிறார்கள். அவர்கள் அனைவருமே தனித்துவிடப்பட்டவர்களும் ஆதரவற்றவர்களும்தான். இன்று கோவையில் நான் ஒரு பிரபலமான டாக்டர். பெரும்பாலானவர்களுக்கு தெரியக்கூடிய அளவில் வளர்ந்திருக்கிறேன். சாதனை புரிந்ததற்காக பல விருதுகள் வாங்கிக் குவித்துள்ளேன். குறிப்பாக அப்துல் கலாம் அய்யா அவர்களிடமும் விருது பெற்றது பெருமைக்குரியது. தற்போது கடந்த மூன்று வருடங்களாக மருத்துவத்துறையில் ஒரு சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக சர்க்கரை நோய்க்கு புதுவித சிகிச்சை அளித்து வருகிறேன். ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை ஊறியிருந்தாலும் எத்தனை ஆண்டுகள் நோய் பாதித்திருந்தாலும் நான் சொல்லும் வழிகாட்டல், உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு வந்தால் மூன்றிலிருந்து ஆறு மாதத்தில் சர்க்கரை நோயிலிருந்து நூறு சதவிகித விடுதலை பெறலாம்.

இந்த மூன்றாண்டு காலத்தில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் பலனடைந்துள்ளனர். இந்நிலையில், காசநோய் விழிப்புணர்வு பரப்புரையாளர் எனும் பதவியை ஐக்கிய நாடுகள் சபை வழங்கி கவுரவித்துள்ளது. இதுவரை நான் கூறியதெல்லாம் எனக்கு ஏற்பட்ட சோதனையில் ஒரு புள்ளிதான். ஒரு டாக்டராக இருந்ததால் இந்த சமுதாயத்தில் என்னால் சமாளிக்க முடிந்தது. என் போன்ற பெண்கள் பாதிக்கக்கூடாது என்பதால் முடிந்தவரை அவர்களைத் தொழிலதிபர்களாக்கி வருகிறேன். இந்த சமுதாயத்துக்கு நான் விடுக்கும் ஒரே கோரிக்கை, தனிமையிலிருக்கும் பெண்ணை கரைசேர்க்க உதவுங்கள். கறையாக்கிவிடாதீர்கள் என்பதுதான். சமூகம் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தனித்துவிடப்பட்ட பெண்களை பாதுகாப்பாக அரவணைத்தால் அது பெண் சக்திக்கு மேலும் பெருமை சேர்க்கும். பெண்ணே நீ தான் சக்தி. உன்னைவிட பெரிய சக்தி ஒன்றும் இல்லை. உலகம் உன் காலடியில், நீ தலைநிமிர்ந்தால்…’’ என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார் டாக்டர் கங்கா தேவி.Post a Comment

Protected by WP Anti Spam