சார் சுண்டல்!! (மருத்துவம்)
‘‘சுண்டல் என்றால் கொண்டைக்கடலையில் செய்யும் ஒரு தின்பண்டம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருப்பு உளுந்து, காராமணி,பச்சைப்பயறு, கொள்ளு, சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, உலர் பட்டாணி, தட்டைப்பயறு, வேர்க்கடலை என்று பல்வேறு தானியங்களில் செய்யும் எல்லாமே சுண்டல்தான். இந்த அனைத்து தானிய வகைகளிலும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது மட்டுமின்றி கொழுப்புச்சத்து, தாதுக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 போன்றவையும் அபரிமிதமாக நிறைந்துள்ளன.
நாள் ஒன்றுக்கு சுண்டலைப் போல 25 கிராம் நார்ச்சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும்போது புற்றுநோய் வராமலும் தற்காத்துக் கொள்ள முடியும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.
அவர்கள் சுண்டல் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நீங்குவதோடு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். அதேபோல் உடல் வலுவாக வேண்டும் என்று உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களும் சுண்டல் சாப்பிட்டு வரலாம்.
உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள், எடை குறைக்க விரும்புகிறவர்கள் இரண்டு தரப்புக்குமே சுண்டல் பயனளிக்கக் கூடியது என்பது ஆச்சரியமான ஒரு செய்தி. எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் மதிய உணவுக்கு பிறகும், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மூன்று வேலை உணவில் நான்கில் ஒரு பங்காகவும் சுண்டல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்’’ என்பவர், சுண்டல் தயார் செய்யும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களைக் கூறுகிறார்.
‘‘சுண்டல் தயார் செய்யும்போது தானியங்களைத் தோலோடு சேர்த்தே சமைக்க வேண்டும். தோலுடனே சாப்பிட வேண்டும். ஏனெனில், செரிமானத்துக்கு உதவக்கூடிய நார்ச்சத்து தோல் பகுதியில்தான் நிறைந்துள்ளது. அதேபோல ஒவ்வொரு தானிய வகைகளுக்கு ஏற்ப அதை ஊற வைக்கும் நேரமும் மாறுபடும். சிறுதானிய வகைகளை 2 முதல் 4 மணி நேரமும், பெரு தானிய வகைகளை 4 முதல் 12 மணி நேரம் வரையிலும் ஊற வைக்க வேண்டும்.
சுண்டல் தயாரிக்கும்போது சுவைக்காக சேர்க்கப்படும் எண்ணெய், காரம் போன்றவைகளை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக சேர்க்கும்போது சுண்டலில் கொழுப்புச்சத்து அதிகரித்துவிடும். வாயு பிரச்னை கொண்டவர்களுக்கு சில தானிய வகைகள் சேராது. அவர்கள் மட்டும் குறிப்பிட்ட தானியங்களை தவிர்த்துவிடலாம்.
சுண்டல் தயாரிக்கும்போது பூண்டு, பெருங்காயம், சீரகம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளும்போது வாயுத்தொல்லை நீங்கும்’’ என்பவர் சுண்டல் சாப்பிடும்போது நன்றாக மென்று எச்சில் ஊறி ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்கிறார்.
Average Rating