வாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 49 Second

ஆங்கிலோ இந்திய உணவுக் கலை நிபுணர் செஃப் பிரிகெட் ஒயிட் குமார்

இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்திய நாட்டு பெண்களுக்கும், திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்கள் தான் ஆங்கிலோ இந்தியர்கள். இவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள். மைனாரிட்டியான சமூகம் என்றாலும், தற்போது உலகளவில் இவர்கள் பரவியுள்ளனர். பொதுவாக கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கொல்கத்தா என அந்தந்த மாநிலத்தின் உணவுகள் குறித்து நாம் அறிந்திருப்போம். ஆனால் ஆங்கிலோ இந்தியர்கள் என்ன சாப்பிடுவார்கள்? அவர்களின் உணவு முறைகள் என்ன? என பல கேள்விகள் நம்மில் பலருக்கு இருக்கும். நம்முடைய பல கேள்விகளுக்கான விடையினை அளிக்கிறார் ஆங்கிலோ இந்திய உணவுக் கலை நிபுணர் செஃப் பிரிகெட் ஒயிட் குமார்.

பெங்களூர் வாசியான இவர் கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்தார். இங்கு மீனம்பாக்கம் அருகேயுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான ஜி.ஆர்.டி ராடிசனில் பத்து நாட்கள் ஆங்கிலோ இந்திய உணவுத் திருவிழா நடைப்பெற்றது. பத்து நாட்களும் இவரின் கைப்பக்குவத்தில் பாரம்பரிய ஆங்கிலோ இந்திய உணவுகள் இங்கு பரிமாறப்பட்டது. ஒவ்வொரு உணவையும் இந்திய சுவையில் அவர்களின் பாரம்பரிய முறையில் சமைத்திருந்தார் பிரிகெட் ஒயிட் குமார். அது மட்டும் இல்லாமல் அங்குள்ள மாஸ்டர் செஃப்களுக்கும் இந்த உணவுகளை முறைப்படி பயிற்சி அளித்துள்ள இவர் ஆங்கிலோ இந்திய உணவுகளின் சமையல் குறிப்பினை ஏழு புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.

‘‘ஆங்கிலோ இந்திய உணவு ரொம்ப சிம்பிளானது’’ என்று பேச துவங்கினார் செஃப் பிரிகெட் ஒயிட் குமார். ‘‘நான் அடிப்படையில் செஃப் கிடையாது. சாதாரண வங்கி ஊழியர். 1975ம் ஆண்டு பி.எட் படிப்பை முடிச்சிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்த்து வந்தேன். அந்த சமயத்தில் வங்கியில் வேலைக்காக ஆட்கள் எடுத்தாங்க. அங்க ரூ.50 அதிகமாக கொடுத்ததால், ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்திட்டு வங்கியில் வேலைக்கு சேர்ந்தேன். 2000ம் வருஷம் வங்கியில் 20 வருஷத்திற்கு மேல் வேலை செய்பவர்கள் என்றால், அவர்கள் வி.ஆர்.எஸ் கொடுத்திடலாம்ன்னு சொன்னாங்க. கையில் ஒரு நல்ல தொகையும் வந்ததால், எனக்கும் அது சரின்னு பட்டது. 25 வருஷம் வேலை செய்தாயிற்று, இனி ஓய்வு எடுத்துக்கலாம்ன்னு முடிவு செய்தேன்’’ என்றவர் அவரின் மகளுக்காக ஒரு மினி ரெசிபி புத்தகம் தயாரித்துள்ளார்.

‘‘என்னுடைய மகள் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க போன போது, அவளுக்காக ஒரு ரெசிபி புத்தகம் எழுதினேன். அதில் பெரிய அளவு ஸ்பெஷல் ரெசிபி எல்லாம் கிடையாது. நாம் அன்றாடம் சமைக்க கூடிய உணவுகளான புலாவ், கறி வகைகள், வறுவல்ன்னு தான் எழுதிக் கொடுத்தேன். அவளுக்கு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கலைன்னா, அவ ரூம்ல அவளே சமைச்சு சாப்பிடுவா. அவளுக்கு நான் கொடுத்த அந்த ரெசிபி புத்தகம், அவ ஃபிரண்ட்ஸ் மத்தியில் ரொம்பவே ஃபேமசாயிடுச்சு. அதே போல் அவ ஃபிரண்ட்ஸ் எல்லாரும் விடுமுறைக்கு பெங்களூர் வந்திருந்த போது, என்னோட சமையல சாப்பிடணும்ன்னு வந்து சாப்பிட்டு போனாங்க. மேலும் ஒவ்வொருவருக்கும் அவங்க விரும்பிய ரெசிபி புத்தகமும் எழுதிக் கொடுத்தேன்.

இதைப் பார்த்த என் மகள், ‘நீ தான் நல்லா சமைக்கிற. ஏன் உன்னோட சமையலை எல்லாம் ஒரு புத்தகமா தொகுக்க கூடாதுன்னு கேட்டா. நாம பொதுவா எந்த புத்தகமும் பார்த்து சமைக்க மாட்டோம். அது பழக பழக எவ்வளவு அளவுன்னு நமக்கு தெரியும். ஆனால் சமைக்கவே தெரியாதவங்களுக்கு நாம சரியான அளவு கொடுக்கணும். மேலும் எங்களின் பாரம்பரிய உணவுகளை கொடுக்கும் போதும் அதில் சின்ன பிழை
வந்தாலும் உணவின் சுவை மாறிடும். அதனால் ரொம்ப கவனமா எழுதணும்ன்னு முடிவு செய்தேன்’’ என்றவர் முதலில் அவருக்கு தெரிந்த உணவுகளை எல்லாம் எழுத ஆரம்பித்துள்ளார். ‘‘நாங்க கூட்டுக்குடும்பமா தான் வாழ்ந்து வந்தோம்.

தாத்தா பாட்டி காலத்திற்கு பிறகு அந்த பரம்பரை வீட்டில் இருந்து எல்லாரும் வந்துட்டோம். அப்போது பாட்டி படித்த புத்தகங்களை எல்லாம் அம்மா ஒரு டிரங்க் பெட்டியில் போட்டு வச்சிருந்தாங்க. அது அப்படியே என்னிடம் இருந்தது. ஒரு நாள் எதேச்சையாக அந்த பெட்டியை திறந்து பார்த்தேன். அதில் பாட்டி ஆங்கிலோ இந்தியர்களின் பாரம்பரிய உணவுகள் குறித்து குறிப்பு எழுதி வைத்திருந்தார். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ரெசிபிக்கள் இருந்தது. அவர் எழுதி வைத்தது மட்டும் இல்லாமல் 1802ம் ஆண்டு அச்சிடப்பட்ட புத்தகங்களில் இருந்து குறிப்புகளை கத்தரித்து வைத்திருந்தார். ஒவ்ெவான்றும் நாங்க சின்ன வயசில் பாட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கோம். ரொம்பவே பழமையான ரெசிபிக்கள்.

இந்த ரெசிப்பிக்கள் இப்போதும் யாருமே செய்வதில்லை. ஏன் நாங்க கூட செய்ய மறந்துட்டோம். ஒவ்வொரு ரெசிபிகளுக்கு பின் ஒரு கதை உண்டு, உதாரணத்திற்கு ‘கிராண்ட்மாஸ் கன்டிரி கேப்டன்’ என்பது நாட்டுக் கோழியில் செய்யப்படும் ஒரு வகை உணவு. ஒரு பாட்டியின் பேரன் ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார். அவர் விடுமுறைக்காக வீட்டுக்கு வரும் போது அவருக்கு பிடித்த கோழி உணவினை செய்கிறார். அந்தக் காலத்தில் வீட்டில் தான் ஆடு, மாடு, கோழி எல்லாம் வளர்ப்பார்கள். அப்படி வீட்டில் வளர்த்த கோழியால் செய்யப்பட்ட உணவு தான் இது’’ என்றவர் ஒவ்வொரு உணவினையும் சமைத்து பார்த்து அதன் பிறகு தான் அதை முறையாக எழுதியுள்ளார்.

‘‘அந்த புத்தகத்தில் பாட்டி எல்லாம் ஒரு கைப்பிடி அளவு, அரை அணாவிற்கு தேங்காய்ன்னு குறிப்பிட்டு இருந்தாங்க. அதை அப்படியே இன்றைய காலக்கட்டத்தில் எப்படி குறிப்பிட முடியும். அதனால், நான் ஒவ்வொன்றையும் சமைத்து பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு ரெசிபியை மட்டுமே ஆறேழு முறை சமைத்திருப்பேன். எனக்கு மனதிருப்தி வந்த பிறகு தான் அந்த ரெசிபியினை புத்தகத்தில் குறிப்பிடுவேன். இந்த ரெசிபிக்களை எல்லாம் சரியாக நான் அமைக்கவே எனக்கு நாலு வருஷமாச்சு. அடுத்து பிரின்ட் எடுக்க முற்பட்ட போது, பலர் நிராகரிச்சிட்டாங்க. அந்த சமயத்தில் எங்க ஆங்கிலோ அமைப்பின் தலைவரின் அறிவுறுத்தல் மூலம் நானே அச்சிட முடிவு செய்ேதன். ஒரு அச்சகத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் பிரின்ட்
செய்ய சம்மதம் சொன்னாங்க.

நான் குறிப்பிட்ட 50 ரெசிபிக்களை சூப், சைட் டிஷ், டீ டைம் ஸ்னாக்ஸ், டிபன் உணவுகள், சாத உணவுகள், இனிப்பு வகைகள்ன்னு….ஏழு பாகமாக பிரித்து அதன் பிறகு அச்சிட்டேன். பிறகு நானே புத்தக கடைகளுக்கு நேரடியாக சென்று என்னுடைய புத்தகங்களை எல்லாம் விற்பனை செய்தேன். இதற்கிடையில் என்னுடைய ரெசிபிகளை பிளாக் ஆகவும் வெளியிட்டேன். இப்போது 50 லட்சத்துக்கும் மேலானவர்கள் என்னுடைய ரெசிபி பிளாக்கினை பின்பற்றி வராங்க. இது என்னுடைய 19 வருட உழைப்பு’’ என்றவர் அவர்களின் உணவு குறித்து விவரித்தார்.

‘‘நாங்களும் உங்களை போல இப்ப இட்லி, தோசை, வடை, சாதம் பருப்புன்னு சாப்பிட பழகிட்டோம். பொதுவா காலையில் பிரஞ்ச் டோஸ்ட், கஞ்சி, புல்ஸ் ஐ இருக்கும். மதிய உணவு சாதம், அசைவ குழம்பு, அதில் நிறைய காய்கறி சேர்த்து இருப்போம். உடன் ஏதாவது ஒரு பொரியல். இரவும் பெரும்பாலும் சாதம் தான் இருக்கும். சில சமயம் பிரட், டோஸ்ட் கொண்டு முடித்திடுவோம். எங்க உணவில் அதிக அளவு மிளகு தான்
பிரதானமா இருக்கும். அதே போல் மசாலாக்கள் எல்லாம் வீட்டி லேயே அரைத்துக் கொள்வோம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கேக், புட்டிங் மற்றும் ரோஸ் குக்கீஸ் தான் பிரதானமா இருக்கும்’’ என்றவரிடம் ஹோட்டல் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது என்று கேட்ட போது,… ‘‘தொழில்நுட்பம்தான் காரணம்’’ என்றார். ‘‘நான் பிளாக்கில் எழுத ஆரம்பித்த பிறகு தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது. ராடிசன் முன்பு தாஜ் ஹோட்டலின் நிர்வாகி என்னுடைய குடும்ப நண்பர் என்பதால் அவர்களின் அனைத்து கிளைகளிலும் ஆங்கிலோ இந்திய உணவு திருவிழா நடத்தி இருக்கேன். அங்கு தான் எனக்கு கிளாரின்ஸ் அறிமுகம் கிடைச்சது.

அவர் தற்போது ராடிசனில் இருப்பதால், இவர்கள் ஆங்கிலோ இந்திய உணவு திருவிழா நடத்த விரும்பிய போது என்னை பரிந்துரைத்தார். எங்களின் பாரம்பரிய உணவினை இங்குள்ள செஃப்களுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். இந்த பத்து நாட்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. வாழ்க்கை முழுதும் சர்பிரைஸ்கள் நிறைந்தவை. அதனால் அதன் போக்கில் வாழுங்கள். உங்களை எப்போதும் பிசியாக வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் பிரிகெட் ஒயிட் குமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமா எனக்கான தளம் கிடையாது!! (மகளிர் பக்கம்)
Next post இந்த வீடியோவ பாக்காதீங்க ! (வீடியோ)