வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 54 Second

பறவை இனங்களில் மிகப் பலம் வாய்ந்த கழுகை நீண்ட காலமாக ஒரு கூண்டில் அடைத்து வைத்தனர். அதன் பிறகு ஒருநாள் கூட்டை திறந்துவிட்டனர். அது பறப்பதற்காகச் சிறகுகளை விரித்தது. ஆனால் பறக்க முடியவில்லை. சிறகுகளை விசிறியது, ஆனாலும் முடியவில்லை, காரணம் தனக்குள் இருந்த மிகப் பலம் வாய்ந்த திறமையைப் பற்றி அது மறந்துவிட்டது.

சுற்றி நின்ற கூட்டத்தினர் அந்தப் பறவைக்கு அதன் திறமையைச் சொல்லி உற்சாகமான வார்த்தைகளால் ஊக்கப்படுத்தினர். கழுகு மீண்டும் முயன்றது, விடாமுயற்சி செய்த பலன், சிறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயரமாகப் பறந்து சென்றது. அதுபோன்று தான் நம் திறமைகளை மறந்திருக்கும்போது உங்களாலும் முடியும் என ஆலோசனை சொல்ல ஒருவர் தேவைப்படுகிறார். பி.கே.சி. கன்சல்டிங் (PKC CONSULTING) நிறுவனம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக தொழில்முனைவோருக்கு நிதி சார்ந்து ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கும் ரத்தன்தீப் உமேஷ் தன்னுடைய வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

‘‘ஏப்ரல் மாதம் பிறந்தேன் என்பதாலோ என்னவோ எனக்குக் கோடைக்காலம் மிகவும் பிடிக்கும். அதுபோல, வசதியான குடும்பம் என்பதால் சிறு வயதில் சேமிப்பு என்பது சிந்தனையில் என் மனதில் ஊறவில்லை. காலம் அதன் போக்கில் பணத்தின் மதிப்பைக் கற்பித்து, வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆக்கி உள்ளது என்றால் அது மிகையாகாது. சிறந்த வர்த்தக மதிப்பீட்டாளர் என்பதில் எனக்குத் தற்பெருமை சிறிதளவும் இல்லை’’ என்றவர் தன் ஆரம்ப காலம் முதல் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

‘‘படிப்புக்கு வித்திட்ட இடம் வேளாங்கண்ணி. 8ம் வகுப்பு வரை படிப்பில் சுமார் ரகம். ஏனோதானோ என்றிருந்த படிப்பு, 10ம் வகுப்பில் வாழ்வின் திருப்பமானது. எதுவுமே விளங்காமலிருந்த என்னைத் தெளிவாக்கிய பெருமை தந்தையைச் சேரும். அதிக மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்ததற்கு அவரே காரணம். பின்னர் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவாவில் வணிகவியல் பி.காம் பட்டம் படித்தேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அங்கு தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதை நினைத்தால் இன்றும் பெருமையாக உள்ளது.

கல்லூரி வளாகத்தில் மாணவிகள் கடைகள் அமைத்து விற்பனை செய்யும் ‘பஜார் குழு’ அப்போது தான் முதன்முறையாக வைஷ்ணவாவில் அறிமுகம் ஆனது. அந்த பஜார் இன்றளவும் சிறப்பாக நடைபெறுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவள் என்று நினைக்கும் போது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது’’ என்றவருக்கு தொழில்முனைவோர் பலருக்கும், அவர்களது வளர்ச்சிப் பாதையில் ஏற்றம் காண்பதற்கான வர்த்தக ஆலோசகர் எனப் பெயரெடுக்க வேண்டும் என்பது தான் கனவாம்.

‘‘கல்லூரி பஜாரில் என்னுடைய பங்களிப்பு அதற்கான அருமையான அனுபவத்தை ஏற்படுத்தித் தந்தது. அதையடுத்து தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தேன். இதனிடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உமேஷ் என்பவருடன் கல்யாணமும் முடிந்தது. என்னதான் நம்மில் பல கனவுகள் இருந்தாலும், திருமணம், குடும்பம் என்று வந்தவுடன் நாம் எல்லாரும் அதில் முழுமையாக மூழ்கி விடுகிறோம். நானும் அப்படித்தான் நான்கு ஆண்டு காலம் அதில் மூழ்கியே போனேன்னு சொல்லலாம். ஒரு கட்டத்தில் திருமணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய வாழ்க்கை முறையில் பொருந்தாத விஷயங்கள் நிறையவே இருந்ததால் சலிப்பும், எரிச்சலும் ஏற்பட்டது.

அந்தக் கட்டத்தில் அம்மாவின் அரவணைப்புக் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். அதேசமயம் கணக்கு தணிக்கையாளரான (சி.ஏ) என் கணவர் என்னையும் சி.ஏ. படிக்கச் சொல்லி தூண்டினார். என் மாமனாரும் என்னை ஊக்குவிக்க, மனதிற்குள் புதைந்திருந்த எனது கனவு மெல்ல எட்டிப் பார்த்தது. தேவதை போன்ற என் மகளுக்கு இரண்டு வயதான நிலையில், சர்வ வல்லமை படைத்த கடவுளே சரணம் என்ற முழுமையான நம்பிக்கையுடன் எனது கனவை நிறைவேற்றும் புதிய பயணத்தை நான் என் கணவரின் துணையுடன் தொடங்கினேன்.

எனது லட்சிய எதிர்பார்ப்பு நிறைவேற முடியாமல், நான்கு ஆண்டு ஓடிவிட்டதை நினைத்த போது, அவ்வளவுதான் இனி வாழ்க்கை இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அப்படி சுணங்கிவிடாமல், எனக்கான வெற்றிக்கான படிக்கட்டுகளை நானே அமைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அதில் உற்சாகத் துள்ளலுடன் மேலேறி சிகரம் பிடித்து, கடந்த கால எண்ண ஓட்டங்களைத் திரும்பிப் பார்க்கும் போது, எனக்கே பிரமிப்பாக இருந்தது.

உறுதியுடனும், வைராக்கியத்துடனும் சி.ஏ.-க்கான முதல் கட்ட படிப்பைத் தேசிய அளவில் 10ம் இடம் பிடித்து முடித்தேன். ஆனால் சி.ஏ.- வை முதல் கட்ட படிப்போடு நிறுத்திவிட்டு, கொல்கத்தா ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் செயல் அதிகாரிக்கான ‘அப்ளைடு ஃபைனான்ஸ் கோர்ஸ்’ சேர்ந்ததுதான் எனது வாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. வாழ்க்கையில் எனக்கு தூணாக இருந்த என் கணவரின் ஆதரவு இல்லை என்றால் இது சாத்தியமிருந்திருக்காது. இந்தப் படிப்பில் தான் நிதித்துறையின் பல விஷயங்களை என்னால் கற்றுக் கொள்ள முடிந்தது. அதன்படியே எனது வளர்ச்சிப் பாதையில் இன்றளவும் அமல்படுத்தி வருகிறேன்.

அதனால் தான் வாடிக்கையாளர்கள் என்னைப் பெரிதும் மதிப்பதாகக் கருதுகிறேன். எனது திறமைகளை மேன்மேலும் வளர்த்துக்கொள்வதற்காக, மதிப்பிடுதல் கல்வி பயின்றேன். இந்தப் பயிற்சி எனது திறமையை மேலும் மெருகேற்றியது. அதைத் தொடர்ந்து நிதித் துறையில் எனது புதிய பயணத்தை அடியெடுத்து வைத்துத் தொழிலில் நிதி ஆலோசகராக முற்றிலும் மாறினேன். இந்நிலைக்கு நான் உயர்ந்த பிறகு, கற்றதைச் சமுதாயத்திற்குக் கற்பிக்காவிட்டால் வாழ்க்கை நிறைவடையாது என்பதை என்னுள் உணர்த்திய ஆன்மிகக் குரு மஹாத்ரியாவை மறக்காமல் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.

பெண்கள் தான் வீட்டின் நிதி அமைச்சர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனால் சேமிப்பது எப்படி, முதலீடு செய்வது எப்படி, நிதி ஆதாரங்களைக் கையாளும் விதம் போன்றவற்றில் பெண்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்பதற்காகவே, நிதித்துறையில் தீராத பற்றுக் கொண்டேன். எனக்குக் கிடைத்துள்ள இந்தத் தொழில் வாய்ப்பு மூலமாக, சிக்கல்களைச் சந்தித்து வரும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிதி வசதிகளை அதிகரிக்கும் வழிமுறைகள், கடன் சிரமத்தைக் கட்டுப்படுத்தும் விதம், பணம் வரத்துக்கான ஆலோசனைகளை வழங்குகிறேன்.

கல்வியில் எனக்கு ஏற்பட்ட அதிரடி திருப்புமுனை பயணங்களால் இந்த மந்திரம் நிகழ்ந்துள்ளதாகக் கருதுகிறேன். நிதி ஆதாரங்களுக்கு இனி கவலை இல்லை என என்னை நம்பி பொறுப்பை அளித்துள்ள இந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த நேரத்தில் மனமார நன்றி தெரிவிக்கிறேன். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். பெண் என்பவள் பணத்துக்காக யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. பொறுமை, அன்பு, நேசத்துடன் வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் துணிச்சலுடன் கையாளும் தகுதியும், திறமையும் பெண்களிடம் உள்ளது. பெண்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் (Inspiration) எனது அப்பாவிடம் இருந்து வந்தது. முயற்சி திருவினையாக்கும் எனும் குறிக்கோளுடனும், கடவுள் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும்” என்றார் ரத்தன்தீப் உமேஷ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம்!! (மகளிர் பக்கம்)
Next post வீரப்பனின் மர்ம மரணம் ?எப்படி வீழ்ந்தார் வீரப்பன்? (வீடியோ)