By 19 July 2020 0 Comments

புறக்கணிப்பின் வலி!! (அவ்வப்போது கிளாமர்)

மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! – சுப்ரபாரதி மணியன்

கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல பெயர். வீட்டிலோ, தனக்காக அவன் நேரமே ஒதுக்குவதில்லை என்று மனைவி ராகவிக்குக் குறை. பக்கத்து வீட்டு இளம் தம்பதி சினிமா, ஷாப்பிங், ஹோட்டல் என எங்கெல்லாமோ போய் வருவார்கள். ராகவிக்கும் அப்படிப் போக வேண்டும் என்று மனது கிடந்து துடிக்கும். கார்த்திக்கோ அவளைக் கண்டு கொள்வதும் இல்லை… எங்கும் அழைத்துச் செல்வதுமில்லை.

அவனையும் குறை சொல்ல முடியாது. வேலைத் தன்மை அப்படி! டூவீலரில் பல மைல்கள் அலைகிற வேலை… அதனால் ஏற்படும் சோர்வு விடுமுறை நாட்களில் அவனை முடக்கிப் போட்டுவிடும். சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது என்று நாளைக் கழிப்பான். உடல் இச்சை எழும் போது ராகவியை அழைப்பான். அவள் உடன்பட மறுப்பாள். ‘மற்ற நாட்கள்ல ஆசையா கூப்பிட்டா ‘ரொம்ப டயர்டா இருக்கு, பேசாம படு’ன்னுட்டு தூங்கிடுறாரு. அவரு கூப்பிடும் போது மட்டும் போகணுமாக்கும்!’

இந்தப் பனிப்போர் ஒருநாள் சண்டையாக வெடித்தது. ‘‘எனக்கும் உணர்ச்சிகள் இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? இதுவரைக்கும் சந்தோஷமா சினிமா, ஷாப்பிங்னு கூட்டிட்டுப் போயிருக்கீங்களா? ஆனா, ‘அது’க்கு மட்டும் நான் வேணும். இல்லை?’’ என்று கத்தினாள். ‘‘வாரம் முழுக்க நாயா சுத்துறேன்… லீவ் நாள்லதான் ரெஸ்ட் எடுக்க முடியுது. அன்னிக்கும் உன்னோட வெளியில சுத்தணுமா?’’ – கார்த்திக் பதிலுக்கு சத்தமிட வீடு கலவர பூமியானது.

செக்ஸ் விருப்பம் ஒருவரின் மனநிலை சார்ந்தது. அது நிறைவேறவில்லை என்றால் இணை மீது வெறுப்பும் கோபமும்தான் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஆர்வம் இல்லையென்றால் அதற்கான காரணத்தைப் பக்குவமாகச் சொல்லிப் புரிய வைப்பது அவசியம். சிலருக்கு உடல் சோர்வாக இருக்கும். அலுவலக வேலையின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறையலாம். காரணம் எதுவாகவும் இருக்கட்டும்… தம்பதியிடையே நெருக்கத்தை குறைத்து, இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கக் கூடிய சக்தி செக்ஸ் மறுப்புக்கு உண்டு.

தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, கோபம், மன உளைச்சல், ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடித்தல் இப்படி பிரச்னைகள் வளர்ந்து கொண்டே போகும். தாம்பத்திய உறவில் ஏற்படும் இப்பிரச்னை காலப்போக்கில் இருவரையும் பிரித்துவிடும். திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கிவிடும். உடலுறவு ஆசையை வெளிப்படையாக சொல்லத் தயங்குவதால் கூட இது போன்ற சிக்கல்கள் ஏற்படும். வீட்டில் சண்டையிடும் பெற்றோரைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு திருமண உறவின் மீதே வெறுப்பு உண்டாகிவிடும்.

இதை ‘Sexual adjustment problem’ என்கிறோம். பல பிரச்னைகள் சேர்ந்துதான் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தம்பதி யர் மனம்விட்டுப் பேசி, விட்டுக் கொடுத்து, ஒருவரையொருவர் புரிந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஆண்கள் உடல் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதித்து, சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள் கோபம், மனக்குறைகளுக்கு செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. உடலுறவுக்கு மறுப்புச் சொல்லி, ஆணின் தன்னம்பிக்கையை மனைவி குலைத்துவிடக் கூடாது.

எவ்வளவு வேலை இருந்தாலும் செக்ஸுக்கான நேரத்தை தம்பதியர் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவனிடம் பிடிக்காத விஷயங்கள் இருந்தால் அன்பாகச் சொல்லி திருத்த வேண்டும். கணவனும் மனைவிக்குப் பிடிக்காத பழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வது… பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிக் களைவது… சுமுகமாக நடந்து கொள்வது என தம்பதியர் இருந்தால் இது போன்ற பிரச்னைகள் எப்பொழுதும் எட்டிக்கூடப் பார்க்காது.Post a Comment

Protected by WP Anti Spam