By 15 July 2020 0 Comments

மாதுளை ஒன்றே போதுமே!! (மருத்துவம்)

உணவே மருந்து

‘மாதுளையில் இருக்குது முத்துக்கள்…அத்தனையும் ஆஹா சத்துக்கள்’ என்று டி.ஆர் பாணியில் கவிதையே எழுதலாம். அந்த அளவுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது மாதுளை.மாதுளையின் மகத்துவம் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை.

*ஆசிய கண்டத்தில் பெருமளவில் உணவாகவும், மருந்தாகவும் பயன்பாட்டில் இருக்கும்பழம் மாதுளை என்பது அதன் பெருமைகளில் ஒன்று.

*வைட்டமின்கள் A,B,D,E ஆகியவை மாதுளையில் அபரிமிதமாக நிறைந்துள்ளது. உடலுக்குத் தேவையான பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள்
மாதுளையில் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் ரத்தசோகை வராமல் மாதுளை பார்த்துக்கொள்கிறது.

*உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்வதோடு, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்வதிலும் மாதுளைக்கு முக்கியப் பங்கு உண்டு.

*எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களையும் போக்கும் வல்லமை மாதுளைக்கு உண்டு. எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்னைகளை வராமல் தடுக்கும் திறனும் மாதுளைக்கு உண்டு.

*மாதுளை சாப்பிடும் பழக்கமுடையவர்களுக்கு மூட்டுத்தேய்மானம், முதுகெலும்பு வலி, கழுத்துவலி போன்றவை ஏற்படுவதில்லை என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

*மாதுளையில் அமினோ அமிலங்கள், செரிமானத்துக்கு உதவக்கூடிய நார்ச்சத்துகள் அதிகளவில் காணப்படுகிறது. அமிலத்தன்மை(Acidity) பிரச்னை உள்ளவர்கள் மாதுளையைத் தொடர்ந்து எடுத்து வந்தால் நல்ல மாற்றம் காணலாம்.

*உடலில் அனைத்து உறுப்புகளின் இயக்கத்துக்கும் மாதுளை துணை நிற்கிறது. உடலில் சீரான தட்ப வெட்ப நிலைக்கு காரணமாக இருக்கக்கூடிய ஈரல்களை காக்கும் ஆற்றலும் கொண்டது.

*மூலநோய் மற்றும் அதனால் ஏற்படுகிற ரத்தக்கசிவுக்கு மாதுளை நல்ல மருந்தாகும்.

*தலைசுற்றல், பித்தம் போன்றவற்றால் அவதிப்படுகிறவர்கள் மாதுளையை அடிக்கடி சாப்பிடலாம். அதேபோல், பெப்டிக் அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளையைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நோய் தானாகவே குணமடையும்.

*பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்துவதோடு மாதவிடாய் இயக்கத்தையும் சீராக்குகிறது மாதுளை. கர்ப்பப்பைத் தொற்றுகள் வராமல் பாதுகாப்பதிலும் மாதுளைக்கு நிகர் மாதுளைதான்.

*கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கவும், கால்சியம், தாது உப்புக்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் மாதுளை நல்ல மருந்து.

*கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பிடுவதில் விருப்பமின்மையும், சிரமமும் இருக்கும். அதனால் மாதுளையை அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது. வைட்டமின்கள் ஏ,பி.டி,இ அதிகளவில் இருப்பதால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சியும் இதனால் மேம்படும்.

*சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும் குணம் மாதுளைக்கு உண்டு. இதன்மூலம் அழகாக, பொலிவுடன் இருப்பதற்கும் மாதுளை உதவுகிறது என்பது புரியும். நரை, பிணி மூப்பு போன்றவற்றை அகற்றி நீண்ட
இளமைக்கும் மாதுளை வழிசெய்கிறது.

*முடி உதிரும் பிரச்னை உள்ளவர்களும், ஆரோக்கியமாக தலைமுடி வளர வேண்டும் என்று விரும்புகிறவர்களும் மாதுளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வயிற்றுப்புண், வாய்ப்புண்களை ஆற்றவும் மாதுளை நம் ஊரில் நீண்ட நாட்களாகவே பயன்படுத்தி வருவது கண்கூடு.

*மாதுளையை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே மென்று சாப்பிடுவது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் ஐஸ்கட்டி, சர்க்கரை சேர்க்காமல் மாதுளை ஜூஸ் சாப்பிடலாம்.

*மாதுளையின் விதைகளால் ஆண்களுக்கு விந்துநீர் கெட்டியடைவதோடு ஆண்மை சம்பந்தமான பிரச்னைகளும் நீங்கும்.

*நம் நாட்டில் விளையக்கூடிய மாதுளை பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும் அவைகளை வாங்கி பயன்படுத்துவது
நல்லது.

*வாய்ப்பு இருந்தால் தினமும் ஒரு மாதுளை எடுத்துக் கொள்ளலாம்.

*சிறு வயதிலிருந்து மாதுளை சாப்பிடும் பழக்கமுடையவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் உ்ள்ளிட்ட
நோய்கள் நெருங்குவதில்லை.

*மாதுளை தோலை காயவைத்துப் பொடியாக்கி அதோடு முருங்கைப்பொடி, கறிவேப்பிலைபொடி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம். இதனால் எலும்பு தேய்மான நோய்கள் குணமடையும்.

*மாதுளை பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் போன்றவை மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. மாதுளை தோலைக் காயவைத்து அரைத்து பல்பொடியாகவும் பயன்படுத்தலாம்.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாதுளை நல்ல வழி. உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும், சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பளிக்கவும் மாதுளை அருமருந்து.Post a Comment

Protected by WP Anti Spam