கருப்பு தங்கம்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 16 Second

உணவே மருந்து

வெள்ளை சர்க்கரையின் ஆபத்து பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கெனவே, குங்குமம் டாக்டர் இதழில் சர்க்கரை தயாராகும் முறையிலிருந்து அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் வரை விரிவாகக் கூறியிருந்தோம்.அந்த செயற்கை இனிப்புக்கு சரியான மாற்று இயற்கையான முறையில் தயாராகும் வெல்லமும், கருப்பட்டியும்தான். ‘அதிலும் வெல்லத்தைக் காட்டிலும் அதிக சுவையும், மருத்துவ சிறப்பும் உடையது கருப்பட்டி.இதனால்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் ‘கருப்பு தங்கம்’ என்று கருப்பட்டியை அழைக்கிறார்கள்’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன்.கருப்பட்டியின் பெருமைகளை அவர் கூறியதிலிருந்து…

நீரிழிவு நோயாளிகளுக்கும் நண்பன் நாம் அன்றாடம் இனிப்பு சுவைக்காகப் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்ட உடனே செரிமானம் ஆகிவிடுவதால் ரத்தத்தி–்ல் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கிறது. இதனால்தான் சர்க்கரையைக் கண்டாலே நீரிழிவு நோயாளிகள் அலறுகிறார்கள். மேலும், உடலில் வெப்பத்தையும் சர்க்கரை அதிகரிக்கிறது. ஆனால், கருப்பட்டி இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.கருப்பட்டியில் இருக்கும் இனிப்பு சுக்ரோஸ் வகையைச் சேர்ந்தது. இந்த சுக்ரோஸ் ரத்தத்தில் படிப்படியாகவே சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே காபி, டீக்கு சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி சேர்த்து குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். மேலும், அவர்கள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதோடு அடிக்கடி சிறுநீர் போகிற அவஸ்தையும் குறையும்.நஞ்சு முறிப்பான்இனிப்பு, துவர்ப்பு, கொஞ்சம் கசப்பு என்று கலவையான சுவை கொண்ட கருப்பட்டி சிறந்த நஞ்சு முறிப்பான் என்று சொல்லலாம். பிற உணவு பதார்த்தங்களோடு சேர்த்து கருப்பட்டியை சாப்பிடும்போது மற்ற உணவுகளிலிருக்கும் நஞ்சையும் கருப்பட்டி முறித்துவிடுகிறது. சர்க்கரைக்கு எதிர்மாறாக உடலின் வெப்பத்தைத் தணித்து, உடல் உறுதிபெறவும் கருப்பட்டி உதவுகிறது.

சில ஆராய்ச்சிகள்

லேகியம் செய்வதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் கருப்பட்டியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். காரணம், அதில் இருக்கும் மருத்துவ குணம். உதாரணத்துக்கு வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கருப்பட்டிக்கு அதிகம் உண்டு.இது ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் தொண்டை மற்றும் நுரையீரலில் அசுத்த காற்று மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவைத் தடுக்கும் குணமும் கருப்பட்டிக்கு உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பட்டியின் சத்துக்கள்

கருப்பட்டியில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் மிகுந்து காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது. 100 கிராம் கருப்பட்டியில் ஈரப்பதம்- 3.9 கிராம், புரதம்- 0.4 கிராம், கொழுப்பு- 0.1 கிராம், தாதுக்கள்- 0.6 கிராம், கார்போஹைட்ரேட்- 95 கிராம், கால்சியம்- 80 மில்லி கிராம், பாஸ்பரஸ்- 40 மில்லி கிராம், இரும்புச்சத்து- 2.64 மில்லி கிராம் உட்பட பல சத்துக்கள் உள்ளன. மேலும், அதில் 383 கலோரிகள் அளவு சக்தி உள்ளது.

கருப்பட்டியால் வாதம், பித்தம் நீங்கும். பசி தூண்டப்படும். நல்லெண்ணெயில் கருப்பட்டியைப் போட்டு வைத்தால் அதனுடைய சுவையும், மணமும் அதிகரிக்கும். அந்த நல்லெண்ணெயை தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
நோய்களை விரட்டும்உடல் வெப்பம், நீர் சுருக்கு, சிறுநீர் கடுப்பு, டைபாய்டு காய்ச்சல், நீர்க்கட்டு, காய்ச்சலால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் ரத்தசோகைக்கு கருப்பட்டி நல்ல நிவாரணியாக உள்ளது. ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுப்பதோடு உடல் பளபளப்பாக இருக்கவும் கருப்பட்டி உதவுகிறது.இதில் அதிகமாக உள்ள இரும்புச்சத்து பித்தத்தைக் குறைக்கவும், கண் நோய்களைக் குணப்படுத்தவும், ஜலதோஷம் மற்றும் காசநோய்களுக்கு அருமருந்தாகவும் உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைக் குறைத்து, பற்களை உறுதியாக்குவதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள், உடல் எலும்புகள் உறுதியாக இருக்க உதவுகிறது.

பெண்களின் பிரச்னைக்குத் தீர்வுகருப்பட்டி மலமிளக்கியாக செயல்படுவதோடு வயிற்றுவலி, கர்ப்பப்பை நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது. பருவம் அடைந்த இளம்பெண்களின் கர்ப்பப்பையை உறுதியாக வைத்திருப்பதற்கும், மாதவிடாய் சீராக வருவதற்கும் உதவுகிறது. பெண்களுக்கு கருவுற்ற காலம் மற்றும் மகப்பேறு காலத்தில் ஏற்படுகின்ற மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவதோடு ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.

முந்தைய காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் மிருகங்களுக்கும் பிரசவம் நடந்த பின்பு, களைப்பை நீக்க கருப்பட்டியை பயன்படுத்தியுள்ளார்கள். பருவம் அடைந்த பெண்கள் கருப்பட்டி, உளுந்து சேர்த்து உளுந்தங்களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலுப்பெருவதோடு கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். வீட்டிலேயே சில எளிய சிகிச்சைகள்கருப்பட்டியிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்த உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி புஷ்டியாக இருக்க உதவுகிறது. சீரகத்தை வறுத்து சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். கருப்பட்டியோடு ஓமத்தைச் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். 25 கிராம் குப்பைமேனி கீரையுடன், 25 கிராம் கருப்பட்டி எடுத்து சிறிய துண்டுகளாக்கி வாணலியில் வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளி குணமாகும். இதை இஞ்சி டீயிலும் கலந்து குடிக்கலாம். இதை அருந்துவதால் இதயம் வலுவடைவதோடு இதய பாதிப்பு
களும் குறைகிறது.

பானகம் பயன்கள்

கருப்பட்டி என்றவுடனே ஞாபகத்துக்கு வருவது பானகம். இதை ராம நவமியன்று செய்து, நைவேத்தியம் செய்வார்கள். அது வெறுமனே மதம் சார்ந்த நம்பிக்கை மட்டுமே அல்ல. வெயில் காலத்தில் தாகம் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் ஆற்றல் பானகத்துக்கு உண்டு. இதை செய்வதும் மிகவும் சுலபம். புளி – 2 எலுமிச்சம்பழ அளவு எடுத்து நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தூசி இல்லாமல் வடிகட்டி எடுக்க வேண்டும். அரை கப் கருப்பட்டியைத் தூளாக்கி அதில் கரைக்க வேண்டும். அதோடு கால் ஸ்பூன் சுக்குப் பொடி, ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கினால் பானகம் தயாராகிவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் நீர்க் கடுப்பு, நீர் சுருக்கு பிரச்னைகள் சரியாக பானகத்தைப் பயன்படுத்தலாம்.

கட்டடம் கட்ட கருப்பட்டி

முந்தைய காலத்தில் கட்டிடங்கள் கட்டும்போது கருப்பட்டியை ஒரு சேர்மான பொருளாக சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கருப்பட்டியில் உள்ள அதிக அளவு சுக்ரோஸ், சுண்ணாம்பு நீர் மற்றும் களிமண்ணுடன் சேரும்போது விரைவில் இறுகி கான்கிரீட்டைப் போன்ற கடினத்தன்மையுடைய பொருளாக மாறிவிடும்.அதனால்தான் சுண்ணாம்பு, மண், கடுக்காய் இவற்றுடன் கருப்பட்டியை கலந்து பயன்படுத்தினார்கள். கருப்பட்டியின் பெருமையை இதன்மூலமும் நாம் உணர்ந்து கொள்ளலாம். கருப்பட்டி எப்படி தயாராகிறது?

கருப்பட்டி பனை மரத்தின் பதநீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரை பெரிய பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைத்து பாகு போன்று வரும்வரை காய்ச்ச வேண்டும்.பின்பு அதை கீழிறக்கி லேசாக ஆறிய பின்பு அச்சுப் பலகையில்(முன்பு கொட்டாங்கச்சியில்) ஊற்றினால் அரை மணி நேரத்தில் கெட்டியாகும். அச்சுக்குழியில் உள்ளதை குச்சியால் வெளியே எடுத்து வைத்தால், நன்கு ஆறிய பின்பு கிடைக்கும் கெட்டியான பொருளே கருப்பட்டி.இது பனை மரங்கள் அதிகமுள்ள கிராமப்புறங்களில் குடிசைத் தொழில் மூலமாக தயாரிக்கப்படுகிறது. ஆலைகளில்கூட தயாரிக்க முடியாதவாறு, இயற்கை நமக்கு அளித்திருக்கும் மருத்துவ சிறப்புமிக்க மகத்தான பொருள் கருப்பட்டி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடி அமீன்னின் கதை!! (வீடியோ)
Next post உடல் வேறு… உணர்வுகள் வேறு! (அவ்வப்போது கிளாமர்)