ஆரோக்கியப் பெட்டகம் நார்த்தங்காய்!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 2 Second

கிராமத்து வீடுகளில் வேப்பமரம், மாமரம், எலுமிச்சை மரம், கறிவேப்பிலை மரம் போன்றவற்றுடன் நார்த்தை மரமும் நிச்சயம் இருக்கும். உணவே மருந்து என்கிற உண்மையை உணர்ந்த போன தலைமுறை மக்களுக்கு நார்த்தையின் மருத்துவ மகத்துவம் தெரிந்திருந்தது. இன்று நார்த்தை என்றால் எத்தனை பேருக்குத் தெரியும் என்பதே சந்தேகம்தான்.

நகரத்து மக்களுக்கு எப்போதாவது அரிதாகக் கிடைக்கிற நார்த்தையை தயவு செய்து மிஸ் பண்ண வேண்டாம்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர். ஏகப்பட்ட மருத்துவ குணங்களை உள்ளடக்கிய நார்த்தையின் சிறப்புகளை விளக்கி, அதை வைத்து செய்யக்கூடிய ஆரோக்கிய உணவுகள் மூன்றையும் செய்து காட்டுகிறார் அவர்.

நார்த்தம்பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழங்களில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. நார்த்தையின் தோலுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்தும் குணம் உண்டு. தோற்றத்திலும் சுவையிலும் சாத்துக்குடியைப் போலவே இருந்தாலும், நார்த்தை புளிப்புச்சுவை அதிகம் கொண்டது. ஆனாலும், நன்கு பழுத்த நார்த்தையில் புளிப்பு அதிகம் இருக்காது.

வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்துவர ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப்புண், வயிற்றுப்புழு நீங்கும். பசியைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும்.

நார்த்தங்காயின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப்பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதபேதி உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும். கர்ப்பிணிகள் காலையும் மாலையும் நார்த்தம்பழச்சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.

சிலருக்குக் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக ஊதிக் காணப்படும். வாயுத்தொல்லையும் அதிகரிக்கும். நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்ெதால்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்புசமும் குறையும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தங்காய் சாறு கலந்து குடித்தால் குணமடைவார்கள். இதிலுள்ள பொட்டாசியம், இதய ஆரோக்கியத்துக்கு உகந்தது. இதன் சாறு ரத்தத்தையும் கல்லீரலையும் சுத்திகரிக்கக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடிய குணம் கொண்டது நார்த்தை என்கிறது ஆயுர்வேதம். வாந்தி, மயக்கத்துக்கும்
மருந்தாகிறது.

பிரசவ கால மசக்கைக்கும், மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டவர்களும், கல்லீரல் கோளாறு உள்ளவர்களும் தினமும் 2 வேளைகள் நார்த்தங்காய் சாறு குடிப்பதன் மூலம் குணம் தெரியும். இது உடலைக் குளிர்ச்சியாக்கவும் வல்லது.

சரும அழகு காக்கும் தன்மையும் இதில் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தை சாறு கலந்து குடித்தால் சருமம் மாசு மருவின்றி மாறும். இதன் சாற்றை தலையில் தடவிக் குளிப்பதன் மூலம் பொடுகையும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கையும் போக்கலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைச்சாறும் தேனும் கலந்து குடித்தால் எடை குறையும் என்பதைப் போலவே நார்த்தை சாற்றுக்கும் பருமனைக் குறைக்கும் தன்மை உண்டு. காரணமே இல்லாமல் திடீரென வருகிற தலைவலிக்கு நார்த்தை சாறு கலந்த தண்ணீர் உடனடி நிவாரணம் தருகிறது.

வைட்டமின் சி மிகுதியாக உள்ள காரணத்தினால் ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகளை சரி செய்யும். டீ தயாரிக்கும் போது அதில் சில துளிகள் நார்த்தை சாறு கலந்து குடிக்கலாம். ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமுள்ளதால் புற்றுநோய்க்கு எதிராகப்
போராடும் சக்தியும் இதற்கு உண்டு.

வாய் துர்நாற்றத்துக்கும் இதன் சாறும் சதைப்பற்றும் மருந்தாகிறது. நார்த்தையின் தோலுக்கு கடுமையான மணம் உண்டு. அந்த மணம் கொசு மற்றும் சின்னச் சின்ன பூச்சிகளை விரட்டக்கூடியது. கொசுக்கடியின் மேல் நார்த்தை சாறு விட்டுத் தேய்த்தால் அரிப்பைத் தவிர்க்கலாம். ரத்தக் காயங்களின் மேல் அந்த சாற்றை விட்டால் ரத்தம் வெளியேறுவது உடனடியாக நிற்கும்.

நார்த்த இலை பொடி

என்னென்ன தேவை?

நார்த்த இலை -10, உளுந்து – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மிளகாய், உளுந்து இரண்டையும் வெறும் கடாயில் வறுத்துபின் நார்த்த இலை நரம்புகளை கிள்ளி விட்டு லேசாக வதக்கி பின் நன்கு பொடி செய்து ஈரமில்லாமல் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். இட்லிப் பொடி போலவும், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். சிறிய வில்லைகளாகவோ உருண்டைகளாகவோ உலர்வாக செய்து வைத்தும் பயன்படுத்தலாம். இதை ‘வேப்பிலை கட்டி’ என்று சொல்வதுண்டு.

நார்த்தங்காய் சாதம்

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் – 2 கப், நார்த்தை சாறு – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க…

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், எண்ணெய்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்க்கவும். உதிராக வடித்துள்ள சாதத்தில் நார்த்தை சாறும், உப்பும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

நார்த்தங்காய் ஊறுகாய்/துவையல்

எலுமிச்சை ஊறுகாய் போலவே, அதே முறையில் நார்த்தங்காய் ஊறுகாய் போடலாம். நார்த்தங்காய் இலைகளை நரம்பு நீக்கி, நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

நார்த்தங்காய் ரசம்

என்னென்ன தேவை?

இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் கீறியது – 2, நார்த்தங்காய் சாறு – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பெருங்காயம், மிளகு, சீரகப் பொடி – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லி – சிறிது, உப்பு – தேவையான அளவு, பருப்பு தண்ணீர் – 1 கப், கடுகு,
வெந்தயம் – தாளிப்பதற்கு.

எப்படிச் செய்வது?

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து, பின் இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகு, சீரகப்பொடி, பருப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது மல்லி, நார்த்தங்காய் சாறு, உப்பு சேர்த்து இறக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம காமெடியான7 கைதிகள்! (வீடியோ)
Next post கொழுப்பு சத்தை குறைக்கும் சோம்பு !! (மருத்துவம்)