By 21 July 2020 0 Comments

வெற்றிலைக்கு வெரிகுட்? (மருத்துவம்)

பாரம்பரியம்

வயிறார உணவருந்திய பின் வெற்றிலை பாக்கு போட்டால்தான் விருந்தே திருப்திகரமாக முடிந்த உணர்வு பலருக்கும் இருக்கும். தாத்தாக்களும் பாட்டிகளும் பல் போன காலத்தில் கூட வெற்றிலை இடிப்பானில் இடித்தேனும் போட்டுக் கொள்வதைக் கண்டிருப்போம். இப்படியாக வசீகரிக்கும் தன்மையுள்ள வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நல்லதுதானா? முதலாக இயற்கை வாழ்வியல் மருத்துவர் காசிப்பிச்சையிடம் கேட்டோம்…

‘‘காய் மற்றும் பூ இல்லாமல் வெறும் இலை மட்டுமே இருப்பதால்தான் அது வெற்றிலை என்று அழைக்கப்படுகிறது. திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு ஒருவரை அழைக்கும்போது வெற்றிலை பாக்கு வைத்துதான் அழைப்பார்கள். வெற்றிலை பாக்கு இல்லாமல் தாம்பூலம் இல்லை. வெற்றிலை பாக்கின் மகத்துவம் அறிந்ததனால்தான், அதனை நமது சடங்குகளில் முக்கியப் பொருளாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வாதம், கபம் என இரு வகைப் பிரச்னைகளையும் தீர்க்கவல்லது.

செரிமானத்துக்கு உதவி புரிகிறது என்பதோடு, நல்ல பசியையும் தூண்டும். வெற்றிலையின் காரத்தன்மை சளித்தொந்தரவுகளுக்கு உகந்தது. பாக்கு ஹார்மோன் சுரப்பிகளை ஒழுங்கு செய்வதால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். மேலும் சிறுநீரகத்தை நன்றாக இயக்கி சிறுநீரில் இருக்கும் உப்புத் தன்மையைக் குறைக்கிறது. சுண்ணாம்பு சேர்த்துக்கொள்வதால் அதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.

வெற்றிலை தாம்பத்திய வாழ்க்கைக்கு நன்மை புரியும் மூலிகையாகும். நாம் சராசரியான நிறமும் உயரமும் கொண்டவர்கள் என்பதால் வெற்றிலை போடும்போது மிதமான தாம்பத்திய உத்வேகம் கிடைக்கும். இந்த ஆற்றலைக் கொடுப்பதால்தான் சிறிய குழந்தைகள் முதலே வெற்றிலைக் காம்பை சாப்பிடக் கொடுக்கிறோம்” என்று, இதன் நன்மைகள் பற்றி விளக்குகிறார் காசிப்பிச்சை.வெற்றிலை பாக்கு போடுவதால் நன்மைகள் ஏற்பட்டாலும் அது எந்த முறையில் போட வேண்டும்? முறை தவறிப் போடும்போது ஏற்படும் தீங்குகள் குறித்துப் பேசுகிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் பழனியப்பன்…

‘‘வெற்றிலை – பாக்கு வாயிலிருந்து வரக்கூடிய துர்நாற்றத்தைப் போக்கி, இருமல், சளி தொந்தரவுகளை சீர் செய்து, மலச்சிக்கலை சீராக்கி, வாயிலுள்ள நுண்கிருமிகளை அழிக்கிறது. இது போன்றநன்மைகளை தருவதால் வெற்றிலை பாக்கு போடுவதை வாடிக்கையாக்கிக் கொள்வதில் தவறொன்றுமில்லை. ஆனால், அதை சரியான கலவையில் போட வேண்டும். ஒரு வெற்றிலை அதற்கு ஒரு அரிக்கா பாக்கு அதனுள் லைன் சுண்ணாம்பு கொஞ்சம் தடவிப் போட்டுக்கொள்வதுதான் சரியாக இருக்கும். இந்தக் கலவையில் ஏதோ ஒன்று கூடினாலும் பிரச்னைதான்.

வெற்றிலை அதிகமானால் ஈறையும் பல்லையும் இணைத்திருக்கும் இணைப்பைத் தளர்த்தி விடும். பல்லை அரித்து நிறத்தை மாற்றி விடும். பாக்கு அதிகமாகும்போது பல் சொத்தை ஏற்படும். மயக்கம், நெஞ்சு படபடப்பு, வாய்க்குள் இருக்கும் தசைகளில் புற்றுநோய் மற்றும் அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. சுண்ணாம்பு அதிகமாகும்போது வாய் மற்றும் வயிற்றில் புற்றுநோய் வரலாம். ஆக, சரியான கலவையில் சாப்பிடும்போது அதன் முழுப்பயனை அடைய முடியும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாக்குகளை பயன்படுத்தக்கூடாது.

அரிக்கா பாக்கு என்று சொல்லக்கூடிய ஒரிஜினல் கொட்டைப்பாக்குதான் போட வேண்டும். சுண்ணாம்பில் ரோஸ் நிறம் சேர்க்கப்பட்ட சுண்ணாம்பை தடவக்கூடாது. லைன் சுண்ணாம்புதான் பயன்படுத்த வேண்டும். ஸ்வீட் பீடாவில் இனிப்புக்காக சேர்க்கப்படும் குல்கந்து போன்றவற்றை தனியாக சாப்பிடலாம். வெற்றிலையோடு சேர்த்து சாப்பிடுவது சரியான கலவையாக இருக்காது.சாப்பிட்டு முடித்தபின் வெற்றிலைஉடன் மிளகை சேர்த்துப் போடும்போது பருமன் குறையும்.

பிரசவித்த பெண்கள் வெற்றிலையில் சமையல் எண்ணெய் மற்றும் பால் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். வெற்றிலையில் தேன் சேர்த்து சாப்பிடும்போது இருமல், சளிப் பிரச்னைகள் விரைவில் குணமடையும். காயம்பட்ட இடங்களில் வெற்றிலையை அரைத்தும் பூசலாம். தென்னிந்திய உணவுகளில் அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அதை சமன் செய்வதற்கு வெற்றிலை பாக்கு கலவையில் ஆல்கலின் எனப்படும் காரத்தன்மை இருக்கிறது. அதனால்தான் தென்னிந்திய உணவுக் கலாசாரத்தில் வெற்றிலை பாக்கு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது’’ என்கிறார் ராஜ்குமார் பழனியப்பன்.Post a Comment

Protected by WP Anti Spam