அற்புத மூலிகை பிரண்டை!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 43 Second

வேலிகளின் ஓரங்களிலும், புதர்களின் நடுவிலும் சாட்டை சாட்டையாக பரந்து வளர்ந்து விரிந்திருக்கிற பிரண்டையை எல்லோருமே பார்த்திருப்போம். அது பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கிய அற்புதமான மூலிகைச் செடி என்பதுதான் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

நம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று பிரண்டை. அதை அருக விடாமல் காத்துக் கொள்வதும், அடிக்கடி சமையலில் பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதும் அவசியம்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்.

பிரண்டையின் வரலாற்றுடன், அதன் அரிய மருத்துவக் குணங்களையும் விளக்கி, அதை வைத்துச் செய்யக்கூடிய அருமையான 3 உணவுகளையும் சமைத்துக் காட்டுகிறார் அவர்.பங்களாதேஷ், இந்தியா, இலங்கை நாடுகளில் பிறந்து வளர்ந்த பிரண்டைச் செடி அதன் மருத்துவ பயன் கருதி பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. Cissusquadrangularis என்பது பிரண்டையின் தாவரப் பெயர். வெப்பமான இடங்களில் வளரக்கூடியது.

கொடி வகையைச் சேர்ந்தது. சதைப் பற்றான, நாற்கோண வடிவத் தண்டுகளை உடையது. தண்டுகளின் இடையில் சிறுசிறு இலைகளும், சிவப்பு நிறத்தில் உருண்டையான சிறுசிறு பழங்களையும் கொண்டது. இந்தச் செடியின் சாறு உடலில் பட்டால் கடுமையான அரிப்பு இருக்கும். பெத்த வயித்துல பிரண்டையை வச்சுக் கட்டியிருக்கலாம்’ என்பது அந்தக் காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிற பிரபலமான வசவு வாசகம்!

இயற்கை உணவே மருந்து, மருந்தே உணவு என்ற முறையில் பிரண்டை, தூதுவளை, முடக்கத்தான் கீரை மற்றும் பலவற்றை பயன்படுத்தி நம் முன்னோர் மருத்துவர் உதவியின்றி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தார்கள்.

பயன்கள்

நமது தென்னிந்திய உணவில் மிக முக்கிய மருத்துவ உணவாக பயன்படுகிறது. பிரண்டை அப்பளம் செய்வதில் மிக முக்கிய பங்களிக்கிறது. பிரண்டையை துவையல், குழம்பு, தோசை என்று பலவிதத்தில் பயன்படுத்தி நமது முன்னோர் மருத்துவரிடம் போவதையே தவிர்த்து வந்தார்கள். கலோரி குறைந்த எளிதில் ஜீரணிக்கக்கூடிய, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் நிறைந்த பிரண்டையின் மருத்துவப் பயன்களை பார்ப்போம்.

உடைந்த எலும்புகளுக்கு பிரண்டை கொண்டு தயாரித்த எண்ணெய், சாறு பயன்படுகிறது. வாரம் 2 முறை பிரண்டையை பயன்படுத்தினால் 40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற நோயை முழுவதும் குணப்படுத்தி விடலாம் என்கிறது சித்த மருத்துவம்.

எடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பராமரித்து அதிக கொழுப்பைக் கரைக்கிறது. இதனால் பருமன் மற்றும் ஊளைச்சதை குறைகிறது. நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை. இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதய நோய் உள்ளவர்களுக்கு பிரண்டை நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு அபாயம் தவிர்க்கப்படுகிறது.

அஜீரணத்தை குணப்படுத்தி பைல்ஸ் எனும் குடல் நோயையும் குணப்படுத்துகிறது. பெண்களுக்குரிய மாதவிடாய் பிரச்னை – குறிப்பாக அதிக ரத்தம் போவதையும் குணப்படுத்துகிறது. பிரண்டை ஜூஸ் மூக்கில் ரத்தம் வடிவதைக் கட்டுப்படுத்துகிறது.
சித்த மருத்துவத்திலும் நாடி வைத்தியத்திலும் பிரண்டை மிக முக்கியமான மருந்தாக பயன்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற தண்ணீரை வெளியேற்றக்கூடியது.

புற்றுநோய்க்குக் கொடுக்கப்படுகிற மருந்துகளிலும் பிரண்டையின் பங்கு இருக்கிறது. குடல் புழுக்களைக் கொல்கிறது. பசியைத் தூண்டுகிறது. நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. குழந்தையின்மையை குணப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் பிரண்டை பயன்படுத்தப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?

இலையையும் தண்டையும் அரைத்து எடுத்த ஜூஸை தேனுடன் கலந்து சாப்பிட மாதவிடாய் சுழற்சி முறைப்படும். உலர வைத்துப் பொடித்த பிரண்டை இலைப் பொடியுடன் சுக்கு, மிளகு பொடி சேர்த்து, தேனுடன் குழைத்து சாப்பிட ஜீரணக் கோளாறு நீங்கும். பிரண்டையின் அடிவேரை தண்ணீர் விட்டுக் கழுவி, அதை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து, தினம் 10 குன்றிமணி எடை அளவு சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவு சரியாகும். பிரண்டையுடன் சிறிது மிளகைச் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினம் இருவேளைகள் சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்னை கட்டுப்படும்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல் 37 கிலோ கலோரிகள்
மாவுச்சத்து 7.3 கிராம்
நார்ச்சத்து 1.8 கிராம்
கொழுப்புச்சத்து 1.1 கிராம்
புரதச்சத்து 1.2 கிராம்
கால்சியம் 650 மி.கி.
பாஸ்பரஸ் 51 மி.கி.
இரும்புச்சத்து 2.1 மி.கி.

பிரண்டைக் குழம்பு

என்னென்ன தேவை?

இளம் பிரண்டை- 1 கப், புளி- 20 கிராம், சாம்பார் பொடி- 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்- 4, பச்சை மிளகாய்- 2, கறிவேப்பிலை- சிறிது, மிளகு, தனியா – தலா 1 டீஸ்பூன், சீரகம், வெந்தயம்- தலா அரை டீஸ்பூன், வெல்லம்- சிறிது, உப்பு- தேவைக்கேற்ப, நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் காய வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிரண்டையை சுத்தம் செய்து, சின்னத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தாளித்த பொருட்களுடன் சேர்த்து பிரண்டையையும் நன்கு வதக்கவும். சில துளிகள் எண்ணெய் விட்டு மிளகு, தனியா, சீரகம், வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பிரண்டை வதங்கியதும் புளிக்கரைசல் விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு வறுத்துப் பொடித்ததைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து குழம்புப் பதத்துக்கு வந்ததும், கடைசியாக வெல்லம் சேர்த்து, மீதி நல்லெண்ணெயை விட்டு இறக்கவும்.

பிரண்டை துவையல்

என்னென்ன தேவை?

பிரண்டை – 1 கப், தேங்காய் – அரை கப், உளுந்து- 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய்-3, கொத்தமல்லித் தழை- சிறிது, கறிவேப்பிலை- சிறிது, புளி- தேவைக்கு, எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் காய வைத்து உப்பு தவிர்த்து, பிரண்டை உள்ளிட்ட எல்லா பொருட்களையும் நன்கு வதக்கவும். ஆறியதும் உப்புச் சேர்த்து அரைக்கவும். வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.

பிரண்டை தோசை

என்னென்ன தேவை?

புழுங்கலரிசி – 1 கப், உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், பிரண்டை- 100 கிராம், கறிவேப்பிலை- சிறிது, கொத்தமல்லித் தழை – 1 கைப்பிடி, உப்பு-தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயத்தை தோசைக்கு ஊற வைத்து அரைப்பது போல அரைத்துக் கொள்ளவும். அரைத்து முடிக்கிற போது, பிரண்டை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து தோசைகளாக ஊற்றவும். இந்த மாவு புளிக்க வேண்டும் என அவசியமில்லை. அரைத்த உடனேயே செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல கோடி வருமானத்தை கெடுத்த ஜெயலலிதா!! (வீடியோ)
Next post ஆக்ரோஷம் பித்தம் தணிக்கும் பழையசோறு!! (மருத்துவம்)