By 25 July 2020 0 Comments

காயமே இது பொய்யடா!! (மருத்துவம்)

என்ன இருக்கிறது?

சமையல் வாசம் மூக்கைத் துளைக்கிறதே!’ என்று வீட்டில் நுழையும்போதே வாசனை பிடிப்போம். அந்த வாசனைக்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பெருங்காயமே. நம் நாட்டின் பாரம்பரிய சமையலில் கட்டாயம் இடம் பெறுவது பெருங்காயம். நறுமண மூட்டியாகவும் சுவையூட்டியாகவும் பயன்படுத்தும் பெருங்காயத்தை சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த பெருமைமிகு பெருங்காயத்தில் பசையும், மைதாவும் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள் என்கிறார்களே! இது உண்மையா? பெருங்காயத்தில் எந்த பொருட்களை, என்ன விகிதத்தில் சேர்க்க வேண்டும்? அதன் மருத்துவ பயன்கள் என்ன? கலப்படம் செய்த பெருங்காயத்தை எப்படி கண்டுபிடிப்பது? கேள்விக்கணைகளை சித்த மருத்துவர் அபிராமியின் முன் வைத்தோம்…

பெருங்காயத்தின் தாவரவியல் பெயர் பெருலா அசபொட்டிடா’.

ஆங்கிலத்தில் அசபொட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டையாக மரம் போல வளரும் தாவரம். ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும்தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. இந்த நாடுகளில் இருந்தே உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. இத்தாவரம் பூக்கள் பூக்கும் பருவத்தில் தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்த பிசினிலிருந்துதான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.

முதலில் கட்டி பெருங்காயமாக தயாரித்தார்கள். அதுவே பொடித்து கருவேல பிசின், கோதுமை இரண்டும் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்தக் கலவையே கூட்டுப் பெருங்காயம் என்று சொல்கிறார்கள். கலவையில் சேர்க்கப்படும் கருவேல பிசினை கம் அராபிக் (Gum Arabic) என டப்பாவில் குறிப்பிட்டிருப்பார்கள். இதைத்தான் பசை என சிலர் நினைத்து கொள்கிறார்கள். அது தவறு. பெருங்காயத்தை அதன் ஒரிஜினல் வடிவத்தில் சமையலில் சேர்க்க முடியாது. காரம் மிக அதிகமாக இருக்கும்.

ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். அவ்வளவு விலை கொடுத்து வாங்கி உபயோகிக்க முடியாது. இதனால் பெருங்காய தயாரிப்பு நிறுவனங்கள் அதோடு கொஞ்சம் கருவேல பிசின் மற்றும் கோதுமையை கலந்து பவுடராக்கி விற்பனை செய்கின்றன.சில நிறுவனங்கள் கோதுமைக்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் மைதாவை பெருங்காயத்தில் கலக்கின்றன. மைதா சேர்த்தால் பெருங்காயத்தின் மருத்துவத் தன்மை குறைந்துவிடும்.

இன்னும் சில நிறுவனங்கள் லாபநோக்கோடு பெருங்காய எசன்ஸை கலக்கிறார்கள். இதில் வெறும் வாசனைதான் இருக்கும். இப்படி கலப்பட முறையில் தயாரிக்கும் பெருங்காயம் எந்த விதத்திலும் பயனைத் தராது. பெருங்காயத்தின் கழிவுகள், குப்பைகள், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றைக் கலந்து பெருங்காயம் என்ற பெயரில் தயாரித்து விற்கிறார்கள். இந்தக் கழிவுகளுடன் வாசனைக்காக சிறிது எசன்ஸை மட்டும் கலந்து விடுவார்கள். தரமற்ற இந்த விற்பனை தொடராமல், உணவுக்கட்டுப்பாட்டு நிறுவனம் கட்டுப்படுத்த வேண்டும்.

பெருங்காய பலன்கள்

குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது பண்டைய வழக்கம். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கக்கூடியது அங்காயப் பொடி. சுண்டைக்காய் வற்றலும், பால் பெருங்காயமும் முக்கிய மூலப்பொருட்களாக அங்காயப்பொடியில் பயன்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறால் வயிற்றுவலி ஏற்பட்டாலும், வாயுப்பிடித்து வயிறு முறுக்கி அழும் குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் சரியாகிவிடும்.

மாதவிலக்கு சரியாக வராமலும், மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்களும் பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரிலோ, மோரிலோ கலந்து குடித்தால் நல்ல பலன் தரும். சளி தீராதவர்களுக்கு மிளகு, சீரகத்துடன் சரியான அளவு பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து குடிக்கலாம்.

பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாயுப்பிடிப்புக்கு சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் வலி குறையும். தினந்தோறும் உணவில் கடுகு, மஞ்சள் பொடி, பெருங்காயம் இந்த மூன்றையும் சிறிதளவு சேர்த்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு. மலச்சிக்கலை சரியாக்கும். நிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எது ஒரிஜினல்?

இத்தனை மருத்துவ பயன்கள் உள்ள பெருங்காயத்தை கலப்படம் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் தவிர்க்க வேண்டியதில்லை. நீங்கள் வாங்கும் பெருங்காயம் உண்மையானதுதானா என்று கண்டறிய, அதை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைக்க வேண்டும். ஒரிஜினல் எனில் நீரில் நன்கு கரைந்து பால் போல காட்சியளிக்கும். கலப்படம் இருந்தால் கரையாமல் குப்பை போல நீரின் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அதோடு சிறு கட்டிகளாக மிதக்கும்.

இந்த சோதனையை நீங்களே வீட்டில் செய்து பார்க்கலாம். சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்க நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் பால் பெருங்காயத்தை மட்டுமே பயன்படுத்துவோம். பால் பெருங்காயத்தில் கோதுமை, கருவேல பிசினின் கலப்பு குறைவாகவே இருக்கும். சில லேகியங்கள், சூரணங்கள் தயாரிப்பில் பால் பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம். எனவே, தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயத்தை வாங்கிப் பயன்படுத்தினால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.Post a Comment

Protected by WP Anti Spam