By 25 July 2020 0 Comments

வெற்றித் திமிர் குப்புறக் கவிழ்க்குமா? (கட்டுரை)

ராஜபக்‌ஷ சகோதரர்கள் தலைமை தாங்கும் அரசாங்கம், தோல்விகள் அல்லது அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது, பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் உச்சக்கட்ட வெற்றியைப் பெற்றிருந்தது.

இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தப் பயன்படுத்தும், ‘விடுதலைப் புலிகளை’ தோற்கடித்து பெறப்பட்ட வெற்றி அது. அந்த வெற்றியைக் கொண்டாடாத சிங்களவர்கள் யாருமே இல்லை எனலாம்.

அந்தளவுக்கு, உச்ச வெற்றியைத் தொட்ட மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் சரிந்து வீழ்ந்தது.

ஓர் இரும்புக் கோட்டையைக் கட்டுவதற்குச் சாதகமான போர் வெற்றியை, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தவறாகக் கையாண்டதால், அது வெறும் மணல்கோட்டையாக மாறிப்போனது.

அந்தத் தவறுகளால், மிகக்குறுகிய காலத்துக்குள்ளாகவே சிங்கள மக்களால் அந்த உச்சக்கட்ட போர் வெற்றியில், ராஜபக்‌ஷவினருக்கு இருந்த பங்கு மறக்கப்பட்டது. அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உச்ச வெற்றியின் விளிம்பில் நின்று ஆட்டம் போட்ட ராஜபக்‌ஷவினரை, கீழே வீழ்த்தியது 2015 ஜனாதிபதித் தேர்தல்.

அதற்குப் பின்னர், தமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாகக் கூறிக் கொண்டனர். அதற்காக பசில் ராஜபக்‌ஷ போன்றவர்கள் மன்னிப்பும் கோரினார்கள்.

எனினும், பாடம் கற்றுக் கொண்டதாகக் கூறியதை அவர்கள் நிரூபிக்கவில்லை.
மிகப்பெரிய ஒரு போர் வெற்றிக்குப் பின்னர் கூட, ராஜபக்‌ஷ அரசாங்கம், தள்ளி வீழ்த்தப்பட்ட வரலாறு கடந்து போய், அதிக காலம் ஆகவில்லை. வெறும் ஐந்து ஆண்டுகள் தான் சென்றிருக்கின்றன.

மீண்டும் அவ்வாறானதொரு வீழ்ச்சியை, அவர்கள் சந்திக்கப் போகிறார்களா என்ற கேள்வி, அண்மைய நாள்களில் எழுந்திருக்கிறது. காரணம், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், அவர்களின் வெற்றி கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று, சீனாவில் பரவத் தொடங்கிய போது, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தன.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்று வாசல்படிக்கு வந்த பின்னர் தான், அரசாங்கம் விழித்துக் கொண்டது; ஊரடங்கை அமல்படுத்தி, நாட்டை முடக்கியது.

கிட்டத்தட்ட மூன்று மாதகங்களாக நடைமுறையில் இருந்து ஊரடங்கின் மூலம், தொற்றுப் பரவல் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

கடும் விமர்சனங்கள, எதிர்ப்புகளுக்கு மத்தியில் இராணுவத்தினரைப் பணியில் ஈடுபடுத்தி, கொரோனா வைரஸை வென்று விட்டதாக அரசாங்கம் வெற்றிப் பிரகடனமும் செய்தது.
சமூகத்தில் இருந்து தொற்று முற்றுமுழுதாகவே அகற்றப்பட்டு விட்டதாகக் கருதப்பட்ட சூழ்நிலையில் தான், மீண்டும் ஓர் அலை தோன்றியிருக்கிறது.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில், இருந்து தொற்றாளர் ஒருவர், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னர் தான், அது அடையாளம் காணப்பட்டது.

அதற்குப் பின்னர், எங்கிருந்து தொற்றியது என்று அதன் வேரைத் தேடியபோது தான், இந்தத் தொற்று புனர்வாழ்வு முகாமுக்குள் மட்டுமல்லாது, வெளியேயும் பரவியிருக்கிறது என்று தெரியவந்தது.

கொரோனா வைரஸின் முதலாவது அலையில், அதிகம் சிக்கிக் கொண்டது கடற்படை தான்.
கடற்படையினருக்குக் கூட, இந்தத் தொற்று ஜா -எல, சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையாளர்களைச் சுற்றிவளைத்த போது தான், பரவ ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட 1,000 வரையான கடற்படையினர் தொற்றுக்குள்ளாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்து விட்டாலும், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து இன்னமும் முழுமையாகக் கடற்படையினரின் தொற்று அகற்றப்படவில்லை.

வெலிசர கடற்படை முகாமில் பரவிய தொற்று, சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைப் படாதபாடு படுத்தி விட்டது.

மீண்டும், அதே போதைப்பொருள் பயன்பாட்டாளர்களில் இருந்து தொற்றுக் கிளம்பியிருக்கிறது.
போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தோன்றியிருக்கின்ற தொற்று, அந்த மய்யத்தை நிர்வகிக்கும் இராணுவ அதிகாரிகள் மூலமாக வெளியிலும் பரவியிருக்கிறது.

முதல் அலையில் சிக்கியது கடற்படை. இரண்டாவது அலைக்குள் மாட்டிக் கொண்டிருப்பது இராணுவம்.

இந்த இரண்டாவது அலை தொடர்பான செய்திகளை அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மறைக்கிறார்கள் என்பது எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு ஆகும்.

அவ்வாறு எதையும் மறைக்கவில்லை என்று சுகாதார அதிகாரிகளும் அரசாங்கமும் கூறுகின்ற போதும், அதனை முழுமையாக நம்புகின்ற நிலையில் நாட்டு மக்கள் இல்லை.

முதலாவது அலை பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டதாக அதிகளவில் நம்பிய மக்கள், இப்போதைய சூழ்நிலையில் இன்னும் கூடுதலாக நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
ஏனென்றால், இன்னும் சுமார் இரண்டு வாரங்களில் தேர்தல் நடக்கப் போகிறது.

தேர்தலில் குழப்பம் வராதபடி பார்த்துக் கொள்வதற்காக, கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பற்றிய தகவல்களை அரசாங்கம் மறைக்கிறது என்று சாதாரண மக்கள் நம்புகிறார்கள.

சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தலை உடனடியாகப் பிற்போட வேண்டும் என்று கோரினாலும், அதனை அரசாங்கம் ஏற்கத் தயாராக இல்லை.

ஏனென்றால், எப்படியாவது தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, ஆட்சியைப் பலப்படுத்தி விட வேண்டும் என்பதிலேயே, அரசாங்கம் குறியாக இருக்கிறது,
எனவே, தேர்தல் பிற்போடப்படும் நிலை ஏற்பட்டால், அது அரசாங்கத்துக்குப் பாதகமானதாக மாறும் என்ற அச்சம் இருக்கிறது.

அதைவிட கடந்த 7 மாதகால ஆட்சியே ஆளும்கட்சிக்குப் பாதிப்பைத் தான் தந்திருக்கிறது. மக்கள் மத்தியில் அதன் கவர்ச்சி குறைந்து விட்டது; சலிப்பும் வந்து விட்டது. எனவே, தேர்தல் மேலும் தள்ளிப் போனால், அரசாங்கம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காமல் போகலாம். எனவே தான், தேர்தலுக்கு அவசரப்படுகிறது ஆளும்கட்சி.

இந்த அவசரமும், தேர்தல் வெற்றிக்காக அரசாங்கம் கையாளும் அணுகுமுறைகளும் தான், ராஜபக்‌ஷவினரின், அடுத்த சரிவுக்குக் காரணமாகி விடுமோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.

இரண்டாவது அலை தோன்றினால், அதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் மாத்திரம் குற்றம்சாட்டவில்லை.

சுகாதார அமைச்சு முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்று, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் கூறுகிறது.

தேர்தலுக்கு அவசரப்படும் அரசாங்கம், தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது.

இதனால் பிரசாரங்களின் போது வேட்பாளர்களும் வாக்காளர்களும் தொற்றுக்குள்ளாகும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியை வெளியிடுமாறு 5, 6 தடவைகள் கடிதம் எழுதி விட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருக்கிறார்.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால் தான், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அதில் தமக்கு அதிகாரங்கள் தர வேண்டும் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கோருகிறார்கள்.

ஆனால் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, வழிகாட்டு முறைகள் அதற்குத் தடையாக இருக்கலாம் என்பதால், சுகாதார அமைச்சர் அதனை இழுத்தடித்து வருகிறார்.

சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துப் பல வாரங்களாகியும் அரசாங்கம் வர்த்தமானியை வெளியிடாமல் இழுத்தடிப்பது சுகாதாரத் துறையினரையும், தேர்தல் ஆணைக்குழுவையும் விசனமடையச் செய்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், கந்தகாடு தொற்று மய்யத்தில் இருந்து தேர்தல் பிரசாரங்களுக்குப் பரவினாலும் சரி, இரண்டாவது அலை தோன்றினாலும் சரி, அது அரசாங்கத்துக்கே சரிவை ஏற்படுத்தும்.

எனவே தான், அரசாங்கம் தற்போதைய தொற்றுச் சூழலை மறைக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தோன்றினாலும் அதனை அரசாங்கம் இப்போதைக்கு அறிவிக்காது; ஆபத்தை மறைக்கவே முனையும்.

தொற்றுத் தொடர்பான தகவல்களை அரசாங்கம் மறைக்க மறைக்க, அது, எதிர்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அதுபோலத் தான், கொரோனா வைரஸ் பரவல் பற்றிய தகவல்களை மறைத்து, தேர்தலை நடத்தி விட முயன்றாலும், அது அரசாங்கத்துக்கு ஆபத்தாகவே அமையும்.

புலிகளை வெற்றி கொண்ட திமிர், எவ்வாறு 2015 தோல்விக்கு காரணமாகியதோ, அதுபோலவே, கொரோனா வைரஸின் முதல் அலையை வெற்றி கொண்ட திமிரும், குப்புறக் கவிழ்த்து விடும்.Post a Comment

Protected by WP Anti Spam