ஆரோக்கிய அற்புதம் நூல்கோல்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 57 Second

ஆங்கிலக் காய்களில் ஒன்றாக அறியப்படுகிற நூல்கோல் பல குடும்பங்களிலும் இன்னும் அந்நியக் காயாகவே இருப்பதுதான் ஆச்சரியம். சிலருக்கு அதன் வாசனை பிடிப்பதில்லை. சிலருக்கோ அதன் சுவை பிடிப்பதில்லை. பலருக்கும் இந்தக் காயை எப்படி சமைப்பது என்பது தெரிவதில்லை!

நூல்கோலின் மகத்துவங்கள் பற்றி அறிந்தால், தினசரி அதைத் தவிர வேறு காயைத் திரும்பிக்கூடப் பார்க்கத் தோன்றாது. ஆஸ்டியோபொரோசிஸ் முதல் ஆளைக் கொல்லும் புற்றுநோய் வரை சர்வரோக நிவாரணியாக வேலை செய்கிற நூல்கோலை இனிமேலாவது உங்கள் உணவில் அவசியமாக்குங்கள்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ.

பிஞ்சு நூல்கோல் சுவையானது மட்டுமின்றி பச்சையாக உண்ணவும் உகந்தது. கூடிய வரை நூல்கோலை இளசாக உணவில் சேர்த்துக் கொள்வதே நல்லது. முற்றிய காயில் சுவை குறைவாகவும், வாசனை அதிகமாகவும் இருக்கும்’’ என்கிற நித்யஸ்ரீ, நூல்கோலின் மருத்துவ குணங்களைப் பட்டியலிடுகிறார். அத்துடன் அந்த அற்புதக் காயை வைத்து மூன்று சுவையான ஆரோக்கிய உணவுகளையும் சமைத்துக் காட்டியிருக்கிறார்.

1. புற்றுநோயை விரட்டும்

நூல்கோலில் அதிக அளவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும் பைட்டோகெமிக்கல்களும் உள்ளன. இவையும், நூல்கோலில் உள்ள Glucosinolatesம் சேர்ந்து புற்றுநோய் ஆபத்துகளைத் தவிர்க்கின்றன. இயற்கையான தாவர ரசாயனங்களான இவை, செரிமானத்தின் போது இரண்டு பகுதிகளாகப் பிரியக்கூடியவை. அப்படிப் பிரிகிறவை, கல்லீரலில் உள்ள நச்சை அகற்றி, புற்றுநோய் கட்டிகளாக வளரக்கூடிய கார்சினோஜென்களுக்கு எதிராகப் போராடக்கூடியவை. தினமுமே உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.

2. இதயம் காக்கும்

நூல்கோலில் உள்ள அதீத வைட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.

3. எலும்புகளை பலப்படுத்தும்

நூல்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. அடிக்கடி உணவில் நூல்கோல் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மூட்டு வலி, ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் நைந்து போகிற பிரச்னை, முடக்குவாதம் போன்றவை தவிர்க்கப்படும்.

4. நுரையீரலுக்கு பலம் தரும்

சிகரெட் பழக்கமுள்ளவர்களுக்கு சிகரெட்டில் உள்ள புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென்கள், வைட்டமின் ஏ பற்றாக்குறையை உருவாக்கும். அதன் விளைவாக நுரையீரல் வீக்கம் உள்ளிட்ட நுரையீரல் கோளாறுகள் உண்டாகும். நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.

5. செரிமானத்தை சீராக்கும்

நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, இதில் உள்ள Glucosinolates வயிற்றுஉபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான Helicobacter Pylori என்கிற பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.

6. எடைக் குறைப்புக்கு உதவும்

நூல்கோலில் கலோரிகள் குறைவு. இதிலுள்ள அதிக நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, பெருங்குடல் இயக்கத்தை செம்மையாக்கி, எடைக்குறைப்புக்கு உதவுகிறது.

7. ஆஸ்துமாவை குணப்படுத்தும்

நூல்கோலில் உள்ள வைட்டமின் சி, பொதுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவதுடன், சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இது ஆஸ்துமா நோயையும், அதன் அறிகுறிகளையும் விரட்டக் கூடியது. வீசிங் எனப் படுகிற மூச்சுத்திணறலால் அவதிப்படுகிற நோயாளிகளுக்கு நூல்கோல் நல்ல மருந்தாவதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

8. உடல் நாற்றம் விரட்டும்

கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.

9. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.

10. பார்வைக் குறைபாடுகள் தீரும்.

நூல்கோலில் அதிக அளவில் உள்ள Lutein என்கிற கரோட்டினாயிடு பார்வைத் திறனை மேம்படுத்தும். தவிர, Macular Degeneration என்கிற படர்ந்த நசிவுப்பிரச்னையையும், கண்புரை பிரச்னையையும் வராமல் தவிர்க்கும்.

எப்படி சமைப்பது?

நூல்கோலை அதில் படிந்துள்ள மண், அழுக்கு போக முதலில் குழாயடித் தண்ணீரில் நன்கு கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். அரை இன்ச் அளவுத் துண்டுகளாக வெட்டி, 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து விட்டுப் பிறகு சமைக்கலாம். நறுக்கியதும் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து 5 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு சமைப்பதன் மூலம் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் தூண்டப்பட உதவியாக அமையும்.

எப்படித் தேர்வு செய்வது?

கீரையுடன் கூடிய நூல்கோலாக வாங்கவும். தோல் நல்ல பச்சை நிறத்தில் கெட்டியாக இருக்க வேண்டும். 4 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்)

ஆற்றல் – 34 கிலோ கலோரிகள்
வைட்டமின் சி – 21 மி.கி.
கால்சியம் – 30 மி.கி.
இரும்பு – 0.3 மி.கி.
மாங்கனீசு – 0.134 மி.கி.

நூல்கோல் சூப்

என்னென்ன தேவை?

நூல்கோல் – 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 25 கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள்- கால் டீஸ்பூன், உப்பு, வெண்ணெய் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிது.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகத்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய நூல்கோல் துண்டுகள் சேர்த்து வதக்கி, 8 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக விடவும். நூல்கோல் வெந்ததும் அதை கொஞ்சம் ஆறவிட்டு, பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதை மறுபடி இன்னொரு நான் ஸ்டிக் பாத்திரத்துக்கு மாற்றி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லித்தழையும், வெண்ணெயும் சேர்த்துப் பரிமாறவும்.

நூல்கோல் அடை

என்னென்ன தேவை?

நூல்கோல் – 100 கிராம், பச்சை மிளகாய் – 3, கொள்ளு – 100 கிராம், வெங்காயம் – 25 கிராம், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். நூல்கோலை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நூல்கோல் துருவலும் சேர்த்து வதக்கவும். பிறகு அடுப்பை அணைத்து அதில் கொள்ளுப்பொடி, தேவையான உப்பு சேர்த்து, அளவான தண்ணீர் விட்டுக் கெட்டியான மாவாகக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, தயாராக உள்ள மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் கரகரப்பாக வெந்ததும் எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

நூல்கோல் ஃபிங்கர்ஸ்

என்னென்ன தேவை?

நூல்கோல் – 100 கிராம்,
உருளைக்கிழங்கு – 50 கிராம்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 3,
பிரெட் தூள் – 30 கிராம்,
எண்ணெய் – பொரிப்பதற்கு,
கறிவேப்பிலை- சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

நூல்கோலையும் உருளைக்கிழங்கையும் வேக வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை மிகப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். கடைசியாக வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நூல்கோல் கலவையைச் சேர்த்து வதக்கவும். கலவையை ஆறியதும் விரல் வடிவங்களில் உருட்டி, பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யூடியூப் டீச்சர்!! (மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கிய பெட்டகம்: கொத்தவரங்காய்! (மருத்துவம்)