உடல்நலக் குறைவின் போது என்ன சாப்பிடலாம்? (மருத்துவம்)

Read Time:10 Minute, 14 Second

உடல் நலமில்லாத நேரங்களில் மருத்துவரை பார்த்து மருந்துகள் எழுதி வாங்கிய உடன் மக்கள்கேட்கும் அடுத்த கேள்வி, என்ன சாப்பிடணும் டாக்டர்?’ என்பதாகத்தான் இருக்கும். மருந்துகளோடு நாம் உட்கொள்ளும் உணவும் நம் உடல் நலத்துக்கு மிகவும் முக்கியம். ஒவ்வொரு நோய்க்கும் ஏற்றபடி உணவுகள் சாப்பிடச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். பொதுவாக எல்லாரையும் பாதிக்கும் சில நோய்களுக்கு அந்த நேரத்தில் என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்? சொல்கிறார் டயட்டீஷியன் ரமோலா.

காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலிபோன்றவை எந்தக் காரணத்தினாலும்வரலாம். உடலின் வேறு பிரச்னைகளின் பிரதிபலிப்பாக, அறிகுறியாகவும் வரலாம். அந்த நேரங்களில் மருத்துவரைப் பார்த்து மருந்துகள் உட்கொள்வதோடு சரியான உணவு முறையையும் மேற்கொள்ளவேண்டும்.

காய்ச்சல்

காய்ச்சல் நேரத்தில் சரியாக சாப்பிட முடியாது. உடல் சோர்வாக இருக்கும். நாக்கில் கசப்புத்தன்மை இருக்கும். ஆனால், அதற்காக சாப்பிடாமல் இருந்தால் உடல் இன்னும் சோர்வடையும். அதனால் இட்லி, இடியாப்பம் போன்ற மென்மையான திட உணவுகள் சாப்பிடலாம். திட உணவுகள் சாப்பிட முடியாத போது திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். நொய்க்கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பார்லி வாட்டர், சூப், ஜூஸ், மோர், இளநீர் போன்ற நீராகாரங்கள் நல்லது. சாதாரண காய்ச்சலாக இருந்து வாய்க்குப் பிடித்தமாக இருந்தால் அசைவ வகை சூப்புகளும் சாப்பிடலாம். நீராகாரங்கள் உடலின் சூட்டைக் குறைத்து காய்ச்சல் குறைய உதவும். காய்ச்சல் நேரத்தில் நீர்ச்சத்து குறைந்தால் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்து கால் நரம்புகள் இழுத்துக்கொள்ளும். ஆகவே காய்ச்சலின் போது கட்டாயம் நீராகாரங்களாவது சாப்பிட வேண்டும். காரம் குறைவாக சாப்பிட வேண்டும்.

வாந்தி

வாந்தி அதிகமாக இருக்கும் போது எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாது.முதலில் மருத்துவரைப் பார்த்து வாந்திக்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வாந்தி குறைந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீராகாரங்கள் சாப்பிடுவது தான் நல்லது. நீர்ச்சத்துக் குறைபாட்டை தவிர்க்க நீராகாரங்கள் கொடுக்க வேண்டும்.வாந்தி ஓரளவு கட்டுப்பட்ட பின்னர் இட்லி, இடியாப்பம் போன்றமென்மையான உணவுகளை சாப்பிடலாம். பிஸ்கெட், பழங்கள் சாப்பிடலாம்.

வயிற்றுப்போக்கு

மருத்துவரை பார்த்து வயிற்றுப்போக்கை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். வயிற்றுப்போக்கின் போது உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து, உடலின் சக்தி குறைந்து உடல் சோர்ந்து போகும். எனவே ORS (Oral Rehydration Solution) பவுடரை நீரில் கலந்து வயிற்றுப்போக்கு இருப்பவருக்குக் கொடுக்க வேண்டும். மருந்துக் கடைகளில் இது கிடைக்கும் அல்லது வீட்டிலேயே ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு உப்பு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கின் போது அரோட்டி மாவுக்கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி போன்ற கஞ்சி வகைகளை சாப்பிடலாம். நீராகாரங்கள் சாப்பிட வேண்டும். மோர், இளநீர், ஜூஸ் சாப்பிடலாம். இந்த நேரத்தில் பாலை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி நேரத்தில் காரமில்லாத, எண்ணெய் இல்லாத உணவுகள் தான் சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டும். பழைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சூட்டினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மோர் சாப்பிட வேண்டும். தயிர் சாதம், பிரெட் டோஸ்ட் சாப்பிடலாம்.

நீரிழிவு

‘விரதமும் வேண்டாம் விருந்தும் வேண்டாம்’ என்பது நீரிழிவு நோயாளிகளுக்கான ஸ்பெஷல் பழமொழி. சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கண்டபடி சாப்பிடுதலும் கூடாது. இனிப்பை தவிர்க்க வேண்டும். கிழங்கு வகைகள் வேண்டாம். எப்போதாவது அரிதாக கொஞ்சமாக சாப்பிடலாம். மாவுச்சத்துள்ள காய்கறிகளை அளவாக சாப்பிடவேண்டும். நாட்டுக்காய்கறிகள், நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். தானியங்களை (அரிசி, கோதுமை, ராகி) அளவாக சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை விடுத்து பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை மாலை வேளைகளில் சாப்பிடலாம். ஆனால், 30 கிராம் என்ற அளவை தாண்டக்கூடாது.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள்உணவில் உப்பின் அளவை குறைத்தாலே போதும். மற்றவர்கள் சாப்பிடும் அளவில் பாதியளவு உப்புதான் உணவில் சேர்க்க வேண்டும். அதாவது, தினசரி5 கிராம் என்ற அளவிற்கு உப்பு எடுத்துக்கொண்டால் போதும். மோர், தயிர் போன்றவற்றில் உப்பை தவிர்க்க வேண்டும். இயல்பாகவே உப்பு நிறைந்த ஊறுகாய், மோர் மிளகாய், வற்றல், அப்பளம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. உணவில் எண்ணெயையும் குறைக்க வேண்டும். அசைவ உணவுகளில் மீன், கோழி மட்டும் சாப்பிடலாம், அதுவும் குழம்பாக செய்தே சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்தது வேண்டாம். மாதம் முழுவதிற்கும் சேர்த்து அரை லிட்டர் எண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை வேண்டாம். Mono Unsaturated Oil எனப்படும் நல்ல எண்ணெய்களே சிறந்தவை.

ரத்தசோகை

உடலில் தேவையான இரும்புச்சத்து இல்லாவிட்டால் ரத்த அணுக்கள் உற்பத்தி குறையும். இதனால் பலவீனமாக, சோர்வாக உணர்வார்கள். தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். அதனால் இவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சைவ உணவுக்காரர்கள் கீரை வகைகள், கேழ்வரகு, வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, எள், உருளைக்கிழங்கு, பீன்ஸ், அத்திப்பழம் போன்றவற்றில் இருந்து உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தினை பெற முடியும். நாம் சாப்பிடும்

உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் நன்கு உறிஞ்சிக் கொள்ள சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். கஃபைன் நிறைந்த காபி, டீ போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். இவை உடலின் இரும்புச்சத்து உறிஞ்சப்படும் செயல்பாட்டில் ஊறுவிளைவிக்கும். அசைவ உணவுக்காரர்கள் உணவில் கல்லீரல், மண்ணீரல், முட்டை, மீன், கோழி, ஆடு என அனைத்தும் சாப்பிடலாம். அசைவ உணவுகளிலுள்ள இரும்புச்சத்தினை உடம்பு எளிதில் கிரகிக்கும். பால் நிறைய சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து பானங்கள் அருந்தலாம்.

இவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளோடு மருத்துவர்கள் அளிக்கும் சப்ளிமென்ட்டை கட்டாயம் சாப்பிட வேண்டும். பொதுவாக அனைவருமே பொரித்த உணவுகள், கெட்டுப்போன உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழைய கெட்டுப்போன உணவுகளால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலம் கெடும். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என சரிவிகித உணவுகள்அவசியம். எண்ணெயை குறைவாகபயன்படுத்த வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கிய பெட்டகம்: கொத்தவரங்காய்! (மருத்துவம்)
Next post ஆண்களும் கோலம் போடலாம்! (மகளிர் பக்கம்)