கோடையில் குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்!! (மருத்துவம்)
மிகவும் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்கு அதற்கென தனிச்சுவையும் உண்டு. நன்கு ஜீரணம் ஆகக்கூடியது. சிறுநீர் பிரிவதை தூண்டச் செய்வது. இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக் கூடியது. வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகின்றது. அண்மைக்கால ஆய்வுகள் வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளன. பல்வேறு வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைத் தீர்க்கும் வல்லமை மிக்க உணவு என்று நிரூபித்துள்ளார்கள்.
பொதுவாகவே காரம் மிகுந்த உணவை உட்கொண்டால் வெள்ளரிக்காய் சாப்பிடுவது மிக நல்லது. 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவீதம் தண்ணீர் உண்டு. மிகுதி 4 சதவீதத்தில் தான் உயர் தரமான புரதம், கொழுப்புச் சத்து, மாப்பொருள், கனியுப்புகள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் பி ஆகியவை உள்ளன. விட்டமின் சியும் சிறிதளவு உள்ளது.சாதாரணமாக, வெள்ளரிக்காயை பச்சையாக கடித்துச் சாப்பிடுவது வழக்கம். சிலர் பச்சையாக உணவோடு சேர்த்து உண்பதும் உண்டு. ஆனால், வெள்ளரிக்காயை அரைத்துத் தூளாக்கும் உபகரணத்தை பயன்படுத்தி அதாவது மிக்ஸியை பயன்படுத்தி சாறாக்கியும் அருந்தலாம்.
இளநீரைப் போன்ற ஆரோக்கிய ரசமாக வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது. வெள்ளரிக்காயை சமைத்துச் சாப்பிடும் பொழுது அதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ், கனிம உப்புக்கள் அழிந்து போய் விடுகின்றன. எனவே வெள்ளரிச் சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வயிற்றுப் புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாற்றை அருந்தினால் வயிற்றுப்புண் குணமடையும்.
வறண்ட தோல் மற்றும் காய்ந்து போன முகம் உள்ளவர்கள், தோல் மிருதுவாக மாற வெள்ளரிக்காய்ச் சாற்றை அருந்தி வர வறட்சித்தன்மையைப் போக்கலாம். மிகச் சிறந்த சத்துணவைப் போல் உண்ண தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் கேரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும் போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறினால் உங்களுக்கு மாத்திரமல்ல வீட்டில் அனைவருக்கும் நல்லதொரு சத்துணவு கிடைக்கிறது. அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது.
Average Rating