By 1 August 2020 0 Comments

யோகாவில் அசத்தும் ஐந்து வயது சிறுமி!!! (மகளிர் பக்கம்)

இந்த வயதில் இதுபோன்ற சாதனை எல்லாம் செய்யவே முடியாது என்பவர்களின் வாயை அடைத்து சாதனை படைத்திருக்கிறாள் 6 வயது நிரம்பிய ரவீணா. இந்த பக்கம் நடந்தால் 2 நிமிடத்தில் வந்துவிடும் என கோவில்பட்டியில் யாரை கேட்டாலும் ரவீணாவின் வீட்டை கை காட்டுகிறார்கள். ஐந்து வயதில்
5 கண்ணாடி உருளைகள் மீது அமர்ந்து யோகாசனத்தில் ஈடுபட்டு விருது பெற்ற ரவீணா, தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் ஃபேமசாகி இருக்கிறாள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட ரவீணா, பள்ளியில் படிக்கும் போதே யோகா மேல் ஈடுபாடு ஏற்பட, அதற்கான பயிற்சியினை எடுத்து வந்துள்ளார். ‘‘அப்ப நான் யு.கே.ஜி படிச்சிட்டு இருந்தேன். எங்க ஸ்கூல்ல என்னை விட பெரிய கிளாஸ் படிக்கும் அக்கா, அண்ணாக்கள் எல்லாரும் யோகா பயிற்சி எடுத்து வந்தாங்க. வீட்டுக்கு வந்த பிறகும் எனக்கும் அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அம்மாவிடம் சொன்னேன். ஆனா, அம்மாக்கு அந்த வயசில் எனக்கு யோகா பயிற்சி அளிக்கலாமான்னு கொஞ்சம் தயக்கம் இருந்தது.

அதனால் என்னுடைய டாக்டரிடம் இது குறித்து ஆலோசனை கேட்டார். அவரும் உடல் ஆரோக்கியத்துக்கு மருந்து, மாத்திரை நாட வேண்டிய அவசியமே இருக்காது, யோகா பயிற்சி நல்லதுன்னு சொல்லிட்டார். இப்ப இரண்டு வருஷமா பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார் மழலை குரல் மாறாமல் ரவீணா.
பெரியவங்களே செய்வதற்கு கஷ்டப்படும் இந்த பயிற்சியினை மிகவும் அசால்ட்டா செய்றதை பார்த்த கோவில்பட்டியின் பிரபல யோகா மாஸ்டர் சுரேஷ் தான் ரவீணாவை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். ‘‘சுரேஷ் சார் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் அவர் எனக்கு பயிற்சி அளிக்கவில்லை. அவரிடம் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொண்ட கயல் அக்கா தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

அக்கா சொல்லி தான் சுரேஷ் சாருக்கு என்னைப் பற்றி தெரிய வந்தது. அவர் தான் கடந்த வருஷம் செப்டம்பர் மாதம் எனக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் 5 கண்ணாடி குப்பிகள் மீது 20 வகை யோகா பயிற்சியை செய்தேன். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட அமைச்சர் அப்போது தான், ‘5 வயது குழந்தையின் அற்புத சாதனை’ என்று பாராட்டினார். அடுத்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு கண்ணாடி குப்பி மீது யோகாசனம் செய்து அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தேன். இந்த சாதனைக்காக எனக்கு ‘யூனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ல் இருந்து விருது கிடைச்சது. அந்த விருது மிகவும் பிரஸ்டீஜியஸ் விருது.

அதுக்கப்புறம் இன்னொரு மேடைல தலை, கை, கால், பாதம், தொடை என உடலில் பல அங்கங்களிலும் மெழுகுவர்த்தியுடன், பஜ்ராசனம் எனும் யோகாவை 20 நிமிடங்கள் அரங்கேற்றினேன். அதற்கும் நிறைய பாராட்டுகள் குவிந்தது. இதையும் சாதனைக்கு அனுப்புங்கன்னு நிறைய பேர் அம்மாவிடம் சொன்னாங்க. ஆனா அம்மா அனுப்பல. அதே சமயம் என்னுடைய புகைப்படம் எல்லா பத்திரிகைகளிலும் வந்ததை பார்த்துட்டு, நாகர்கோவில்ல இருக்கற பாரதியார் கலை மன்ற நிர்வாகிகள் ஒரு விழா எடுத்தாங்க. அதில், யோகா கலைமணி விருது கொடுத்தாங்க’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் தாயார் ரம்யா. ‘‘ரவீணாவ பத்தி யூனிசெப் நிறுவனத்தோட கவனத்திற்கு சுரேஷ் மாஸ்டர் தகவல் தெரிவித்தார்.

அனேகமா கூடிய சீக்கிரம் இன்னொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து குழந்தைய அதுல அரங்கேற வைத்து, யூனிசெப் விருது வாங்கித் தருவேன்னு அவர் நம்பிக்கையோட சொல்லியிருக்கார்’’ என்றார் ரம்யா. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள ரவீணா யோகா மட்டுமில்லாமல் கையெழுத்து போட்டி, பேச்சுப்போட்டி, டான்ஸ், ஓவியம் என ஆல்ரவுண்டராக திகழ்கிறாள். பள்ளியில் நடைபெறும் மாணவர்களுக்கான போட்டிகளில் பரிசு, ஷீல்டு, விருது என எதையும் ரவீணா தப்பவிட்டதே இல்லை. அக்காவை பார்த்து யோகாவில் தம்பி சாய்யும் இப்போது ஆர்வம் செலுத்தத் தொடங்கி உள்ளான். கைவசம் உள்ள திறமைகள் போதாது என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு விளையாடும் சறுக்கு விளையாட்டிலும் (ஸ்கேட்டிங்) ரவீணா துடிதுடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறாள். வளரட்டும்!Post a Comment

Protected by WP Anti Spam