பொறுப்புணர்வுடன் புள்ளடி இடுதல் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 51 Second

நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த, வாக்களிக்கும் தினத்தை நெருங்கி விட்டோம். தமிழர்களும் முஸ்லிம்களும் தமது கடந்தகால அனுபவங்களையும் நிறைவேற்றப்பட வேண்டிய அபிலாசைகளையும் அடிப்படையாகக் கொண்டு, தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கின்றோம்.

இந்தத் தேர்தலில், இரண்டு விடயங்கள் முக்கியமாகின்றன. சிறுபான்மைச் சமூகங்கள், தகுதியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது, முதலாவது விடயமாகும்.
எல்லாச் சமூகங்களையும் அரவணைத்துச் செயற்படக் கூடிய, ஸ்திரமான ஆட்சியொன்றை நிறுவுவது, இரண்டாவது விடயமாகும்.

ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பொது மக்களுக்குத் தெரியும். அதேபோல், முன்னர் பதவியில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக, போட்டியிடும் வேட்பாளர்களை அறியாதவர்களாகவும் நாம் இருக்க முடியாது. தமிழர்களும் முஸ்லிம்களும் கண்ணைமூடிக் கொண்டு இருந்து விட்டு, பின்னர், “எங்களுக்கு எல்லாமே இருட்டாக இருந்தது; அதனால் தடுமாறிவிட்டோம்” என்று, காரணம் சொல்லக் கூடாது.

தமிழ்ச் சமூகம், ஒரு பிரளயத்தைக் கடந்து வந்திருக்கின்றது. அதுபோலவே, தீர்வுத்திட்டம், சமஷ்டி போன்ற எவ்விதமான கோரிக்கைகளையும் முன்வைக்காத முஸ்லிம்கள், தேவையற்ற இனத்துவ, மதத்துவ நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இனவாதம் என்ற ஆயுதம், ஒவ்வொரு பருவகாலத்திலும் தேவைக்கேற்றாற்போல் கூர்தீட்டப்பட்டு, முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றது. யார் ஆட்சிக்கு வந்தாலும், இது நடக்கும் என்ற நிலையுள்ளது.
1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக, அறிமுகமான விகிதாசாரத் தேர்தல் முறைமை, சிறுபான்மைச் சமூகங்களுக்கு மட்டுமன்றி, சிறிய கட்சிகளுக்கும் பல வரப்பிரசாதங்களைக் கொண்டு வந்தது. விசேடமாக முஸ்லிம் சமூகம், இந்த முறைமையால் கணிசமான எம்.பிக்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது.

இப்படியான ஒரு சூழலில், நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்தே, நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்கின்றோம். எந்தப் பெரும்பான்மையினக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இப்போதிருக்கின்ற விகிதாசாரத் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்ற நிலை காணப்படுகின்றது.

ஆகவே, வாக்களிப்பைச் சிந்தித்தும் கவனமாகவும் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகளும் வேட்பாளர்களும் பேசிய விடயங்கள், வழங்கிய வாக்குறுதிகள், அவர்களது கடந்தகாலச் செயற்பாடுகள் பற்றிய புரிதலுடன், யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக, போலியாகக் கணக்குக் காட்டுகின்ற அரசியல்வாதிகளின் பிரசாரங்களை நம்பாமல், விகிதாசாரத் தேர்தல் முறைமை பற்றிய அடிப்படை அறிவுடன், தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தப் புள்ளடியிடுவதே நல்லது.

விகிதாசாரத் தேர்தல் முறைமையை, ‘ஒரு குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்களால் அளிக்கப்படும் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு, கட்சிகள், சுயேட்சைக் குழுக்களுக்கு விகிதாசார அடிப்படையில், ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்ற முறைமை’ என்று குறிப்பிடலாம்.

இலங்கை நாடாளுமன்றம், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் 196 எம்.பிக்கள் 22 மாவட்டங்களில் இருந்து நேரடியாகவும் 29 பேர் தேசிய பட்டியல் மூலமாகவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகின்றனர். விகிதாசார அடிப்படையில் கட்சிகள் பெற்ற வாக்குகள், இந்த விடயத்தில் அடிப்படையாக அமைகின்றன.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை, தேர்தல் ஆணைக்குழு நிர்ணயம் செய்வதற்கான சட்ட ஏற்பாட்டை, அரசமைப்பின் 98(8) உறுப்புரை கொண்டுள்ளது. அதேபோன்று, அரசமைப்பின் 15 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்திய 99 (அ) உறுப்புரை, தேசிய பட்டியல் பற்றிக் குறித்துரைத்துள்ளது.

வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், வாக்கெண்ணும் மத்திய நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகும். அரசமைப்பின் 99 (அ) உறுப்புரைக்கு அமைவாக, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளோ, சுயேட்சைக் குழுக்களோ தகுதியற்றதாக ஆக்கப்படும்.

அதாவது, அதன்பிறகான எம்.பி ஆசனக் கணிப்பீட்டு நடைமுறைக்கு, இவற்றின் வாக்குகள் கணக்கிலெடுக்கப்படாது. இந்த வெட்டுப்புள்ளியை, 12 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கச் செய்தவர், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்பது, இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

மீதமிருக்கின்ற செல்லுபடியான வாக்குகளில், அதிக வாக்குகளைக் கொண்ட கட்சிக்கோ, சுயேட்சைக் குழுவுக்கோ முதலிலேயே ஒரு ‘போனஸ்’ ஆசனம் ஒதுக்கப்பட்டு விடும். அதன்பிறகு, ஆசன ஒதுக்கீடு இடம்பெறும். ஆசன ஒதுக்கீட்டுச் செயன்முறை, பெரும்பாலும் இரண்டு சுற்றுகளில் மேற்கொள்ளப்படும்.

அவ்வாறு, ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சியில் போட்டியிட்ட எந்த வேட்பாளருக்கு, எம்.பி பதவி கிடைக்கின்றது என்பது, அரசமைப்பின் 14ஆவது திருத்தம் அறிமுகம் செய்த, விருப்பு வாக்கு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும்.

வாக்குகளை எண்ணும் நடவடிக்கையின் முதற்சுற்றின் போது, குறிப்பிட்ட மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகள், ஒரு போனஸ் ஆசனம் நீங்கலான ஆசனங்களின் எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு, முதற்சுற்றில் ஒரு எம்.பியைப் பெறுவதற்கு அவசியமான ஆகக் குறைந்த வாக்குகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். கணிதத்தில் ‘ஈவு’ (quotient) பெறுமானம் என இதைக் கூறுவர்.

இதையடுத்து, குறிப்பிட்ட ஒரு கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்குகளை, மேற்படி ஈவுப் பெறுமானத்தால் வகுப்பதன் மூலம், முதலாவது சுற்றில், அக்கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை கிடைக்கும். ஈவுப் பெறுமானத்தை விடக் குறைவான வாக்குகளை எடுத்த கட்சிக்கு, முதற்சுற்றில் ஆசனங்கள் கிடைக்காது.

முதற்சுற்றில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பின்னரும், ஆசனங்கள் எஞ்சியிருக்குமாயின், இரண்டாவது சுற்றில் அவை ஒதுக்கீடு செய்யப்படும். முதலாவது சுற்றில், ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் மீதமாக இருக்கின்ற வாக்குகளும், எம்.பிக்களைப் பெறாத கட்சியின் மொத்த வாக்குகளுக்கும் இரண்டாவது சுற்றில் கவனத்தில் எடுக்கப்படும்.

இப்போது அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள கட்சிகளுக்கு, அவர்களது வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல், இறங்குவரிசையில் தலா ஒவ்வோர் ஆசனங்கள் ஒதுக்கப்படும். இதற்கமைய, ஏற்கெனவே ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கோ, பெறாத கட்சிக்கோ இரண்டவது சுற்றில் ஆசனம் கிடைக்கலாம்.

அதுமட்டுமன்றி, ஈவுப் பெறுமானத்தை விடக் குறைந்த வாக்குகளைப் பெற்ற கட்சியின் வாக்குகளே, இரண்டாவது சுற்றில் அதிக வாக்குகளாகக் காணப்படுமிடத்து,அந்த அணிக்கும் ஓர் ஆசனம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த அடிப்படை அறிவுடன், சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை அளிப்பது, ஆரோக்கியமானதாக இருக்கும். மேற்குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு அமைவாக, வாக்குகளை எண்ணுவதும், முடிவுகளை அறிவிப்பதும் ஆணைக் குழுவினதும் நியமன அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.

இவ்வாறிருக்க, நீதியானதும் சுதந்திரமானதுமான வாக்கெடுப்பு நடைபெறுமா என்பது குறித்து, பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் முடிந்த கையோடு, நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அனுமானங்களும் வெளியிடப்படுகின்றன. மக்கள் அதுபற்றியெல்லாம் குழம்பத் தேவையில்லை; மக்களின் பொறுப்பு, பொருத்தமான கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் சரியான விதத்தில் வாக்களிப்பதே ஆகும்.

சிறுபான்மை மக்களில் ஒரு பகுதியினர், வாக்குகளின் பெறுமதியை உணர்வதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் அறியாமை மட்டுமன்றி, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மீது வெறுப்புற்றிருப்பதும் இன்னுமொரு காரணம் எனலாம். ஆயினும், ஒவ்வொரு வாக்கின் பெறுமதியையும் தமிழர்கள், முஸ்லிம்கள் மாத்திரமன்றி, சிங்கள மக்களும் புரிந்து கொண்டு, பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்.

இம்முறை, அநேகமான தேர்தல் மாவட்டங்களின் வாக்குச் சீட்டுகள் நீளமானவையாகவும் சில மாவட்டங்களில் இரு நிரல்களைக் கொண்டவையாகவும் இருக்கும். அதிகமான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதால் இந்நிலை காணப்படுகிறது. திடீரென வாக்கெடுப்பு நிலைத்துக்குள் சென்று, கையில் வாக்குச் சீட்டைப் பெறுகின்ற போது, இது குழப்பத்தையோ பதற்றத்தையோ ஏற்படுத்தலாம். எனவே, இதுபற்றித் தெளிவுடன் இருப்பதோடு, பாமர மக்களுக்கும் வாக்களிப்பு முறை பற்றி, ஏனையவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

n முதலில், மேலிருந்து கீழாகக் காணப்படும் கட்சிகள், அவற்றின் சின்னங்களைப் பார்த்து, நீங்கள் விரும்புகின்ற கட்சிக்கு நேரெதிரே அருகில் உள்ள கூட்டில், சரியாகப் புள்ளடியிட வேண்டும்.
n சரியான நபர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு, விருப்பு வாக்கு அவசியமானதாகும். அந்த அடிப்படையில், சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்ட பிறகு, உங்களது விருப்பத்துக்குரிய ஒன்றோ, இரண்டோ, மூன்றோ வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடியிட வேண்டும்.

உலகின் பல நாடுகளில், இந்த வாக்குரிமைக்காக மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, சிறுபான்மைச் சமூகங்கள், தமக்குக் கிடைத்த வாக்குரிமையைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

வாக்களிப்பு என்பது, நமது உரிமை மட்டுமல்ல, அது ஒரு கடமையாகவும் அமைகின்றது. மக்களை ஏமாற்றிய ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஜனநாயக வழிமுறையில் பாடம் புகட்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதையும் வாக்களிப்பு முடியும் வரை மறந்து விட வேண்டாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)
Next post லெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.!! (வீடியோ)