ராஜபக்‌ஷக்களின் நாள்கள் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 19 Second


இன்றைய தினம் ராஜபக்‌ஷக்களுக்குரியது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியோடு மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர்கள், இன்று வெளியாகவுள்ள பொதுத் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

போர் வெற்றிவாதத்தை முன்னிறுத்தி, தேர்தல் வெற்றிகளைக் கணிசமாகக் கண்டிருக்கிற ராஜபக்‌ஷக்களுக்கு, இன்றைய நாளும் வெற்றிச் செய்திகளையே வழங்கப்போகின்றது. அது, ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்குள் அறுதிப் பெரும்பான்மையை, அவர்களுக்கு இலகுவாக உறுதிசெய்யும்.

ராஜபக்‌ஷக்கள் என்றைக்குமே, ஓர் ஆட்சிக்காலத்துக்கான ஏற்பாடுகளோடு, தேர்தல்களை எதிர்கொள்வதில்லை. இரண்டு, மூன்று தொடர் ஆட்சிக்காலங்களைக் குறிவைத்துக் கொண்டே, ஒவ்வொரு தேர்தல்களையும் எதிர்கொள்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலையும், நேற்றைய பொதுத் தேர்தலையும் கூட, அவர்கள் அப்படியான நோக்கங்களோடுதான் எதிர்கொண்டிருக்கிறார்கள். ‘ராஜபக்‌ஷ’ குடும்பத்தைக் காலங்களுக்கும் ஆட்சியாளர்களாக முன்னிறுத்தும் ஏற்பாடுகள் சார்ந்து, நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் எந்தவித கேள்விகளுக்கும் அப்பாலான நிலையை உருவாக்கிப் பேணுவதே, அவர்களின் ஒற்றை நிலைப்பாடு.

மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும், அதையே செய்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், அவர் தோற்கடிக்கப்பட்டாலும், சில வருடங்களுக்குள்ளேயே அதிலிருந்து மீண்டெழுந்துவிட்டார். தெளிவான திட்டமிடல்களோடும், வெற்றிவாத மனநிலையோடும் மஹிந்த ராஜபக்‌ஷ மாத்திரமல்ல, ராஜபக்‌ஷக்கள் அனைவரும் இணைந்தே முன்னெடுக்கிறார்கள்.

2015இல், ராஜபக்‌ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதும், நல்லாட்சி அரசாங்கம் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, மீண்டும் ராஜபக்‌ஷக்கள் ஆட்சி பீடமேறினாலும் சர்வ அதிகாரங்களுடன் இருந்துவிடக் கூடாது என்கிற எண்ணப்பாட்டின் போக்கில், மாற்றங்களைச் செய்திருந்தது. அதுதான், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும், பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யாமல், பொதுத் தேர்தல் வெற்றிக்காக ராஜபக்‌ஷக்களைக் காத்திருக்க வைத்தது.

இன்று அவர்களுக்குக் கிடைக்கும் வெற்றியும் எதிர்க்கட்சிகள் பாரியளவில் பிளவடைந்து கண்டிருக்கின்ற தோல்வியும், நாட்டை மீண்டும் ஏதேச்சதிகார கட்டங்களை நோக்கித் தள்ளும் ஏற்பாடுகளைக் காட்டப்போகின்றன.

ஏனெனில், இன்றைய ராஜபக்‌ஷக்களின் வெற்றி, மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியாகவே இருக்கப் போகின்றது. அப்படியான நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, பெற்றுக்கொள்வது ஒன்றும் ராஜபக்‌ஷக்களுக்கு சிக்கலான காரியம் அல்ல.

அதுவும், பஷில் ராஜபக்‌ஷ என்கிற ஒருவர், ஆட்சியிலுள்ள கட்சியின் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் வரிசையில் இருப்பவர்கள், இலகுவாக ஆட்சியில் பங்காளிகளாகி விடுவார்கள்.

அப்படியான நிலையில், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அமைந்த நாடாளுமன்றம் சந்தித்த அசம்பாவிதங்களை, புதிய நாடாளுமன்றம் சந்திக்கும் கட்டம் உருவாகியிருக்கின்றது. ஏனெனில், புதிய நாடாளுமன்றத்துக்குள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பேரங்களின் மூலம், சில மாதங்களுக்குள் ராஜபக்‌ஷக்கள் எட்டிக்கொண்டுவிடுவார்கள்.

அதன்பின்னரான நாள்களில், 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதோடு, குடும்ப ஆட்சிக்கான அழுத்தத்தை அவர்கள் பதிவு செய்யத் தொடங்குவார்கள். அது, நாமல் ராஜபக்‌ஷவின் பிள்ளையையும் ஆட்சிப் பீடமேற்றும் எண்ணப்பாடுகள் சார்ந்ததான எண்ணங்களைக் கொண்டது.
அவ்வாறான நிலையில், புதிய நாடாளுமன்றத்துக்குள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கப் போகின்ற சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ராஜபக்‌ஷக்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான் ஜனநாயகத்துக்கான கட்டங்களை எதிர்பார்த்திருப்பவர்களின் கேள்வி.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி, புதிய நாடாளுமன்றத்துக்குள் என்ன வகையிலான வகிபாகத்தை எடுத்துக் கொள்ளப் போகின்றது என்கிற கேள்வி, தேர்தல் காலங்களிலேயே இருந்து வந்திருக்கின்றது. ஏனெனில், ஐக்கிய தேசிய கட்சி, மைத்திரிபால சிறிசேனவின் கைகளில் சென்று சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலையை, இன்றைக்கு எட்டிவிட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில், இரு கட்சிகளும் தேய்ந்து அழிந்து போய்விடக்கூடிய வாய்ப்புகளே, தற்போது வரையில் காணப்படுகின்றன.

சஜித் பிரேமதாஸவிடம் ஐக்கிய தேசிய கட்சி முழுமையாகக் கையளிக்கப்பட்டால் அன்றி, அதை இனி மீட்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அது, புதிய நாடாளுமன்றத்துக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், தெரிவாகப் போகும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ராஜபக்‌ஷக்களை நோக்கி ஓட வைத்துவிடும். என்றைக்குமே ஆட்சியமைக்க முடியாத நிலையை எட்டிவிட்ட கட்சிகளில் இருப்பதை, தென் இலங்கை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.

புதிய நாடாளுமன்றத்துக்குள் சில காலத்துக்குள்ளேயே, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுவிடப் போகும் ராஜபக்‌ஷக்களை எதிர்கொள்ளும் பொறுப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கே இருக்கப் போகின்றது.

அது, சிலவேளை, ராஜபக்‌ஷக்கள் 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரான ஆட்சிக் காலத்தில், எப்படி எதிர்க்கட்சிகளைக் கையாண்டார்கள் என்பது போன்றதொரு நிலையை, ஏற்படுத்தும் அளவுக்கும், அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களை எதிர்க்கட்சிகளிடம் வழங்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஜனநாயகக் கட்டமைப்பையும் விழுமியங்களையும் பாதுகாப்பதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை அளவுக்கான வெற்றி என்பது, எப்போதுமே அச்சுறுத்தலாக இருந்திருக்கின்றது. எந்தக் கட்சியிடம் அவ்வாறானதொரு வெற்றி இருந்தாலும், அந்தக் கட்சி, அதை, துஷ்பிரயோகப்படுத்திய வரலாறுகளே இருக்கின்றன.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஜே.ஆர். ஜெயவர்தன பெற்றுக்கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி, நாட்டில் சர்வ அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தி, ஒன்றை மனிதரின் கீழ், ஆட்சியைக் கொண்டு வந்தது.

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷ பெற்றுக்கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை, ஜனநாயகக் கட்டமைப்பின் அனைத்துக் கட்டங்களிலும் தலையீடுகளைச் செய்து சிதைத்தது.

நீதிக் கட்டமைப்புக்குள் நுழைந்து, பிரதம நீதியரசரைப் பதவி நீக்கும் அளவுக்கும் நடந்து கொள்ள வைத்தது. மாறாக, பெரிய நன்மைகளை நாட்டுக்கோ மக்களுக்கோ வழங்கவில்லை. நாட்டில் புரையோடிப்போயுள்ள இனமுரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு செய்துவிடலாம். ஆனால், அதற்கான அர்ப்பணிப்பை எந்தவோர் ஆட்சியாளரும் செய்து கொண்டதில்லை.

தங்களின் ஆட்சியைத் தோற்கடித்துவிட முடியாதவாறு, எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்தே, சிந்தித்து வைக்கிறார்கள். இலங்கை என்கிற அழகிய தீவின் தொடர்த் தோல்விகளுக்கு, இதுவும்கூடக் காரணமாக இருந்திருக்கின்றன.

இன்றைக்கு சஜித்தும் இரா. சம்பந்தனும் அநுர குமார திஸாநாயக்கவும் நாடாளுமன்றத்துக்குள் பொது இணக்கப்பாட்டின் போக்கில், இணைந்து செயற்படுவதும் நாடாளுமன்றத்துக்கு வெளியில் சிவில் கட்டமைப்புக்களுக்கு ஊடாக, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுமே, அவர்களின் ஒரே தெரிவாக இருக்க முடியும்.

தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்ற வேளையிலேயே, ராஜபக்‌ஷக்களிள் அடுத்து ஐந்து வருட ஆட்சிக்காலமும் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது தொடர்பில், அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கான கருத்துகளை இந்தப் பத்தியாளர் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார் என்கிற எண்ணம் வாசகர்களிடம் எழலாம்; அது நியாயமானதும்கூட!

ஆனால், ராஜபக்‌ஷக்களின் கடந்த காலங்கள், பாரதுரமான மனித உரிமை மீறல்களையும் ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல்களையும் செய்திருக்கின்றன.

அப்படியான நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளை, அதன் போக்கில் எதிர்கொள்ளத் தயாராவது என்பது, தவிர்க்க முடியாதது.

இது, ராஜபக்‌ஷக்களின் நாள்கள், அவர்களின் அனைத்து எண்ணங்களும் நிறைவேற்றப்படப்போகும் நாள்கள். அதனை எதிர்கொள்ளவதைத் தவிர, மக்களுக்கு வேறு மார்க்கங்கள் ஏதும் இல்லை.

ஏனெனில், தென் இலங்கை மக்களின் ஏகோபித்த தெரிவாக, அவர்கள் ஆட்சிக்கு வருந்திருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரீனாஸ் வென்யூ 600 திருமணங்கள், 100 திரைப்படங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post குறைப்பிரசவமில்லா குழந்தை வேண்டும்!! (மருத்துவம்)