அம்மை நோய்கள் அலர்ட்! (மருத்துவம்)

Read Time:12 Minute, 9 Second

கர்ப்ப காலத்தில் அம்மை நோய்கள் ஏற்பட்டுவிட்டால், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்தாகிவிடுமோ என பயப்படாத கர்ப்பிணிகள் இல்லை. பொது சுகாதாரத்தில் குறைபாடுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அம்மை நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பது கடினமாக உள்ளது. எனவே, கர்ப்பிணிகள்தான் சுய சுத்தம் காப்பதிலும், சுற்றுப்புற சுகாதாரம் பேணுவதிலும் அதிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு இந்த
நோய்களை வர விடாமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.

ருபெல்லா எனும் ஜெர்மன் தட்டம்மை: கர்ப்பிணிக்கு ஏற்படும் அம்மை நோய்களில் மிகவும் கவனிக்க வேண்டியது ருபெல்லா(Rubella) என அழைக்கப்படும் ஜெர்மன் தட்டம்மை. ருபெல்லா எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால், இந்த நோய் ஏற்படுகிறது. இக்கிருமிகள் நோயாளியின் மூக்குச்சளியில் வசிக்கும். மூக்கைச் சீந்தும்போதும், தும்மல், இருமல், மூச்சுக்காற்று போன்றவற்றின் வழியாகவும் இவை அடுத்தவர்களுக்குப் பரவும்.

என்ன அறிகுறிகள்?
நோயின் ஆரம்பத்தில் குறைந்த அளவில் காய்ச்சல் இருக்கும். பசிக்காது. வாந்தி, களைப்பு ஆகியவை ஏற்படும். காதுகளின் பின்புறம் வாடாமல்லி நிறத்தில் சிறு தடிப்புகளும் கொப்புளங்களும் தோன்றும். பின்னர் இவை நெற்றி, முகம், மார்பு, வயிறு எனப் பல பகுதிகளுக்குப் பரவும். கழுத்தில் நெறிகட்டுவதும், எலும்பு மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படுவதும் இந்த நோயை அடையாளம் காட்டும் முக்கியமான அறிகுறிகள். இந்த நோயால் கர்ப்பிணிக்கு ஆபத்து ஏற்படாது.

ரத்தப் பரிசோதனை
கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்படுமானால், காய்ச்சல் ஏற்பட்ட 10 நாட்களுக்குள் ஆர்.டி.பி.சி.ஆர்(RT – PCR for Viral RNA) பரிசோதனை செய்து இந்த நோய்க்கிருமிகளின் ஆர்.என்.ஏ(RNA) உள்ளதா என்பதைத் தெரிந்து, நோயை உறுதிசெய்கிறார்கள், மருத்துவர்கள். அதேபோல், கர்ப்பிணிக்கு இந்த நோய்க்குறிய தடுப்பூசி ஏற்கெனவே போடப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஐ.ஜி.எம் ஆன்டிபாடி(IgM antibody test) பரிசோதனை செய்கிறார்கள். கர்ப்ப காலத்தில் இது ஏற்படும்போது, கருவில் வளரும் குழந்தைக்கு இதன் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய ஃபீட்டல் பி.சி.ஆர்(Fetal PCR) பரிசோதனையை மேற்கொள்ளப்படுவது நடைமுறை.

சிசுவுக்கு என்ன பாதிப்பு?
ருபெல்லா நோய் கர்ப்பிணிக்கு ஏற்படும்போது சிசுவுக்குப் பலதரப்பட்ட பாதிப்புகள் வரிசைகட்டி வரப் பார்க்கும். முக்கியமாக, கர்ப்பத்தின் முதல் டிரைஸ்டரில் இந்த நோய் ஏற்படுமானால், சிசுவின் இதயத்தில் இடைச்சுவரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு(Septal defects), அதில் துளைகள் விழும். இதய வால்வுகளில் குறைபாடுகள் தோன்றும். கண்களையும் இது பாதிக்கும். அப்போது பிறவியிலேயே குழந்தைக்குக் கண்புரை நோய் ஏற்படும். விழித்திரை பாதிப்பு ஏற்படுவதும் வழக்கம். இவற்றின் விளைவால், குழந்தைக்குப் பிறவியிலேயே பார்வை குறைந்திருக்கும். இந்த நோய்காது நரம்புகளையும் தாக்கும். அப்போது காது கேட்காமல் போகும். மஞ்சள் காமாலை நோய், ரத்த சோகை நோய் ஆகியவையும் ஏற்படுவதுண்டு.

சிகிச்சையும் தடுப்புமுறையும்
அலோபதி மருத்துவத்தில் இதற்கெனத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. நோயாளியைத் தனிமைப்படுத்த வேண்டும். திரவ ஆகாரங்களை அதிகப்படுத்த வேண்டும். அத்தோடு 4 வாரங்கள் ஓய்வு எடுத்தாலே நோய் குணமாகிவிடும். ஆனால், கருவில் வளரும் சிசுவுக்கு ஏற்படும் கடுமையான
பாதிப்புகளைத் தடுக்க வழியில்லை.

அப்போது சிசு குறைப்பிரசவம் ஆவதற்கும், கருச்சிதைவு ஏற்படுவதற்கும், இறந்தே பிறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளன. எனவே, முதல் டிரைமெஸ்டரில் இந்த நோய் ஏற்பட்டால், பெரும்பாலும் கருவைக் கலைத்துவிடுவது நல்லது எனும் ஆலோசனையைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிக்கு இந்த நோய்க்குறிய தடுப்பணுக்கள் ரத்தத்தில் காணப்பட்டால், இந்த ஆலோசனையை வழங்குவதில்லை.

தடுப்பூசி உள்ளதா?
ருபெல்லாவைத் தடுக்க தடுப்பூசி உள்ளது. குழந்தைக்குப் போடப்படும் எம்எம்ஆர் தடுப்பூசி(MMR vaccine) இதற்கானது தான். சமீபத்தில் எம்.ஆர்(MR)என்ற பெயரில் குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டதும் இந்த நோயைத் தடுக்கத்தான். இந்தப் பருவத்தில் போடத் தவறியவர்கள் அல்லது ஏற்கனவே எம்.எம்.ஆர் அல்லது எம்ஆர் தடுப்பூசியைப் போட்ட பின்னரும், இதற்கான தடுப்பணுக்களைக் குறைவாகக் கொண்டவர்கள் 11 வயதிலிருந்து 13 வயதுக்குள் எம்.எம்.ஆர். தடுப்பூசியை மறுபடியும் போட்டுக் கொள்ளலாம்.

அப்போதும் இதைப் போட மறந்தவர்கள் திருமணமானதும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இதைப் போட்ட பின்னர் 3 மாதங்கள் கழித்தே கர்ப்பத்துக்குத் தயாராக வேண்டும். அதுவரை தற்காலிக கருத்தடை வழிகளைப் பயன்படுத்த வேண்டும். அப்படியும் இந்த 3 மாதங்களில் கர்ப்பம் தரித்துவிட்டால், கருவைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒன்றே ஒன்று, கர்ப்ப காலத்தில் மட்டும் இந்தத் தடுப்பூசியைப் போடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீசில்ஸ்(Measles)
மீசில்ஸ்(Measles) எனும் தட்டம்மை இதுவும் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஓர் அம்மைநோய்தான். பெரும்பாலும் குழந்தைகளையே இது பாதிக்கும். இது கர்ப்பிணியை பாதித்தால், கருக்குழந்தைக்குத்தான் அதிக ஆபத்து ஏற்படும். கருச்சிதைவு, குறைப்பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, குறைந்த எடையுடன் பிறப்பது, சிறிய தலையுடன் பிறப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. கர்ப்பிணியின் நுரையீரல், மூளை போன்ற உறுப்புகளுக்கு இக்கிருமிகள் பரவினால், முறையே நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களும் தாக்கும்.

அப்போது கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு. ஆர்டிபிசிஆர்(RT – PCR for Viral RNA) பரிசோதனை செய்தும், ஐஜிஎம் ஆன்டிபாடி(IgM antibody test)பரிசோதனை மூலமும் இந்த நோயை உறுதிப்படுத்தலாம். இந்த நோய்க்கென தனிச்சிகிச்சை எதுவும் இல்லை. ஜெர்மன் தட்டம்மைக்குக் கூறப்பட்ட உணவுமுறை இதற்கும் பொருந்தும். குழந்தைப் பருவத்தில் தட்டம்மை தடுப்பூசி(Measles vaccine) அல்லது எம்எம்ஆர் தடுப்பூசி போட்டிருந்தால், இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு குறைந்துவிடும்.

சின்னம்மை(Chicken pox)
இந்த நோய் வேரிசெல்லா ஜாஸ்டர்(Varicella zoster)எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. நோயாளி இருமும் போதும், தும்மும்போதும் வெளிப்படும் மூக்குச்சளியின் மூலம் கிருமிகள் அடுத்தவர்களுக்குப் பரவுகிறது. காய்ச்சல் மற்றும் கடுமையான உடல்வலியைத் தொடர்ந்து, மூன்றாம் நாளில் உடலில் தடிப்புகள் தோன்றும். அவை அம்மைக் கொப்புளங்களாக மாறி, இந்த நோயை அடையாளம் காட்டிவிடும்.

குறிப்பாக, மார்பு, வயிறு, முதுகு, அக்குள் பகுதிகளில் அம்மைக்கொப்புளங்கள் அதிகமாகவும், மிக நெருக்கமாகவும் காணப்படும். மற்ற பகுதிகளில் இவை பரவலாகவே காணப்படும். இவற்றில் சீழ் பிடித்த பிறகு, காய்ந்து, பொருக்குகளாக மாறி உதிரும். அந்த இடங்களில் தழும்புகள் ஏற்படும். வேரி செல்லா பிசிஆர் பரிசோதனை செய்தும், எலிசா ஐஜிஜி மற்றும் ஐஜிஎம் ஆன்டிபாடி(ELISAIgG and IgM antibody test) பரிசோதனை மூலமும் இந்த நோயை உறுதிப்படுத்தலாம்.

பாதிப்புகள் என்ன?
கர்ப்பிணிக்கு இந்த நோயின் பாதிப்பு காரணமாக நிமோனியா, மூளைக்காய்ச்சல், இதயத்தசை அழற்சி, செப்டிசீமியா போன்ற நோய்கள் ஏற்படுமானால், கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். குழந்தைக்குப் பிறவிக் கண்புரை நோய், சிறியதலை, வளர்ச்சி குறைந்த கால்கள் போன்ற பிறவி ஊனங்கள் ஏற்படலாம். அதே நேரத்தில் கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குப் பிறகு சின்னம்மை ஏற்படுமானால், கர்ப்பிணிக்கோ, கருக்குழந்தைக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பயப்படத் தேவையில்லை.

சிகிச்சை என்ன?
சின்னம்மை தடிப்புகள் ஏற்பட்ட 24 மணிநேரத்துக்குள் கர்ப்பிணிக்கு ஏசைக்ளோவிர் மாத்திரையைக் கொடுக்கத் தொடங்கினால், நோய் விரைவில் கட்டுப்படும். உடல் வலி குறையும். ஆனால், இந்த மாத்திரை கருக்குழந்தைக்கு ஏற்படுகிற பிறவி ஊனங்களைக் கட்டுப்படுத்தாது.

தடுப்பூசி உள்ளதா?
சின்னம்மைக்குத் தடுப்பூசி உள்ளது. ஆனால், அதை பெண்கள் திருமணத்துக்கு முன்பே போட்டுக்கொள்ள வேண்டும். கர்ப்பமான பிறகு இதைப் போடக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post காமாலை கவலை!! (மருத்துவம்)