ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 55 Second


ஃபென்சிங்கில் பயன்படுத்தும் வாள் உயரமே இருக்கும் திதீக்‌ஷா பாலவெங்கட், தீவிர கவனத்துடன் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே சர்வதேச வாள் சண்டை போட்டியில், இந்தியாவிற்காக வெண்கலம் வென்று சாதித்த இந்த நம்பிக்கை நட்சத்திரம், அடுத்ததாக ஒலிம்பிக்கிலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில், தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த பெரிய வீராங்கனையின் வயது பத்து.

தூரத்தில் நின்று திதீக்‌ஷாவுக்கு கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்த அவரது அம்மா ஜெயஸ்ரீயிடம் பேசினோம். ‘‘திதீக்‌ஷா பள்ளி முடிந்து வீடு வந்ததும், மொபைலுடன்தான் அவளுக்கு பொழுதுபோகும். கேம்ஸ், கார்ட்டூன், விடியோ என்று எப்போதும் மொபைலும் கையுமாகத்தான் இருப்பாள். இது தவிர அவளுக்கு உடற்பயிற்சி, விளையாட்டு என்று எதுவும் இருந்ததில்லை. எப்போதும் ’ஸ்க்ரீனுக்கு’ முன்னால் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் நமக்கு தெரிந்ததுதான்.

அதனால் அவளை எப்படியாவது வெளியில் கொண்டுவர வேண்டும் என்ற முடிவில், ஒரு நாள் நேரு விளையாட்டு திடலுக்கு அழைத்து வந்தேன். இங்கு குழந்தைகளுக்கு பாக்ஸிங், வாள்வீச்சு, ஷட்டில், டென்னிஸ், நீச்சல் என்று பலவகை விளையாட்டுகளுக்கு முறையான பயிற்சி தருகிறார்கள். அவளுக்கு முதலில் அங்குள்ள விளையாட்டு குறித்து ஒரு எண்ணம் ஏற்பட வேண்டும் என்று தான் அழைத்து வந்தேன்.

பலர் பல்வேறு விளையாட்டுக்கான பயிற்சி எடுப்பதை பார்த்து ஒரு நிமிடம் திதீக்‌ஷா மலைத்து தான் போனாள். அன்று முழுதும் அவளின் மனதில் இந்த விளையாட்டுக்கள் தான் ஓடிக் கொண்டு இருந்தது’’ என்றவர் முதலில் அவளின் மொபைல் கவனத்தை திருப்ப வேண்டும் என்று தான் நினைத்துள்ளார்.

‘‘அங்கு விளையாட்டினை பார்த்த திதீக் ஷா முதலில் ஷட்டில் கற்றுக் கொள்ளப் போறேன்னு சொன்னா. எங்கள் உறவினர் குழந்தைகள் எல்லாரும் ஷட்டில் கற்றுக்கொள்கின்றனர். அந்த விளையாட்டிற்கு நிறைய பலம் வேண்டும். அதற்கேற்ற சத்தான உணவும், உடல் வலிமையும் வேண்டும். எங்களை பொறுத்தவரை திதீக்‌ஷாவிற்கு விளையாட்டு ஒரு உடற்பயிற்சி அளவிலிருந்தாலே போதும் என்றுதான் முதலில் நினைத்தோம்.

அந்த சமயத்தில் தான் அங்கு வாள் விளையாட்டுக்கான பயிற்சியும் அளிப்பது குறித்து கேள்விப்பட்டோம். இந்த விளையாட்டு திதீக்‌ஷாவிற்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால், உடனடியாக அதன் பயிற்சியாளர் நாகசுப்ரமணியம் அவர்களை சந்தித்து திதீக் ஷாவை வாள்வீச்சுப் பயிற்சியிலேயே சேர்த்தோம்” என்கிறார்.

‘‘வாள்வீச்சு அல்லது வாள் சண்டை ஒரு இத்தாலிய விளையாட்டு. ஒலிம்பிக் தோன்றிய காலத்திலிருந்தே, வாள்வீச்சு அதில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. 1896ல் முதல் முறையாக ஒலிம்பிக் விளையாட்டின் போது, ஆறு விளையாட்டுகள் அதில் இடம் பெற்றிருந்தன. அதில் ஃபென்சிங் எனப்படும் வாள் வீச்சும் இருந்தது. இதில் உடல் வலிமைக்கு நிகராய் புத்திக்கூர்மையும் வேண்டும். இந்தியாவில் ஃபென்சிங் சில வருடங்களாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது’’ என்று வாள்வீச்சு வரலாற்றை பற்றி விவரித்த திதீக் ஷா அது குறித்து பேசத்
துவங்கினார்.

“முதல்ல எனக்கு இந்த விளையாட்டுல ஆர்வமே இல்ல. ஸ்கூல் முடிச்சு வந்ததுமே ரொம்ப சோர்வா இருக்கும். நிறைய நாட்கள் பயிற்சிக்கு லீவ் போடுவேன். ஆனா ஒரு நாள், கோச் என்கிட்ட நீ ரொம்ப நல்லா விளையாடுற. ஆனா சரியா பயிற்சி எடுக்குறது இல்ல. நீ தினமும் வந்தா உன்ன போட்டிக்கு எல்லாம் கூட்டிட்டு போறேன். நிறைய மெடல் வாங்கலாம்னு சொன்னாரு. என்கூட பயிற்சி எடுக்குறவங்க எல்லாரும் நிறைய மெடல் வாங்கினதா சொல்வாங்க. அதனால் எனக்கும் மெடல் வாங்கணும்னு ஆசை வந்து தினமும் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

அப்போ ஒரு நாள் என்னையும் அம்மாவையும் வரச் சொல்லி, சர்வதேச வாள்வீச்சு போட்டி தாய்லாந்துல நடக்குது, திதீக்‌ஷாவ கலந்துக்க வைங்கனு சொன்னாரு. போட்டிக்கு கொஞ்ச நாட்கள்தான் இருக்கு, அதனால் நிறைய பயிற்சி பண்ணணும்னு சொன்னாரு. அம்மாவும் ஓ.கே சொல்லிட்டாங்க. நானும் கடுமையா பயிற்சி எடுத்தேன். ஆனா சரியா போட்டிக்கு ஒரு வாரம் முன்னாடி எனக்கு வைரல் ஜுரம் வந்துருச்சு.

என்னை மருத்துவமனையில அட்மிட் பண்ணிட்டாங்க. எப்படி இருந்தாலும், போட்டியில் கண்டிப்பா பங்கு பெறணும்ன்னு மட்டும் என் மனதில் ஆழமா பதிந்திருந்தது. அதனால உடம்பு சீக்கிரம் சரியாக மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டேன். போட்டிக்கு ஒரு நாள் முன்னாடி நான் டிஸ்சார்ஜ் ஆனேன். உடல் கொஞ்சம் சோர்வா இருந்தது.

அதனால் வீட்டுல அம்மாவும் அப்பாவும்போட்டியில் மட்டும் கலந்துக்கோஅடுத்த முறை மெடல் வாங்கலாம்னு சொன்னாங்க. அங்க போனதும் எல்லாரும் விளையாடுறத பாத்து, அவங்க மெடல் ஜெயிக்குறது பார்த்து, எனக்கு ஆசையா இருந்துச்சு. போட்டியில் பங்கு பெற்றேன். உடல் நிலை காரணமா என்னால முழு எஃபர்ட் கொடுக்க முடியல. நானும் கொஞ்சம் கவனமில்லாம விளையாடினேன். வெள்ளிப் பதக்கம் கிடைச்சிருக்கும். வெண்கலம் தான் கிடைச்சது. இனி எந்த போட்டியாக இருந்தாலும் கவனம் சிதறாமல் விளையாடணும்ன்னு புரிந்துகொண்டேன்’’ என்கிறார் கொஞ்சம் வருத்தமாக.

நண்பர்கள் அழைக்க, அங்கிருந்து பாதியிலேயே ஓடிச்சென்ற திதீக்‌ஷாவை அடுத்து, அவர் அம்மாவே மீண்டும் தொடர்ந்தார். “அந்த போட்டியில் மொத்தம் 18 நாடுகள் கலந்துகொண்டன. ஹாங்காங், மலேசியா முதல் இரண்டு இடத்தை பிடித்தது. வந்திருந்த போட்டியாளர்கள் எல்லோருமே சிறு வயதிலிருந்தே பயிற்சி எடுத்தவர்கள். திதீக்‌ஷா பயிற்சி எடுக்க ஆரம்பித்து ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை. மேலும் உடல்நிலையும் சரியில்லை.

அவள் போட்டியில் தைரியமாக கலந்துகொண்டதே எங்களுக்கு பெரிய விஷயமாக இருந்தது. வெண்கலம் வென்றவுடன் நாங்க ரொம்வே சந்தோஷப்பட்டோம். ஆனால் இவளோ, வெள்ளி ஜெயிக்க முடியலையே என்று ரொம்பவும் வருந்தி அழுதாள். குழந்தைகள் எப்போதும் சண்டைபோட்டு அடம்பிடித்து அழுவது சாதாரணம்தான். ஆனால் முதல் முறையாக தீவிர முயற்சிக்குப்பின், வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் விளையாடி, அது நடக்கவில்லை என்ற போது அவள் அழுதது எங்களை பாதித்தது. அப்போதுதான் அவளுக்கு வாள் வீச்சிலிருந்த ஆர்வம் புரிந்தது’’ என்றார் திதீக்‌ஷாவின் அம்மாவைத் தொடர்ந்தார் பயிற்சியாளர் நாகசுப்ரமணியம்.

“இந்த விளையாட்டில் நல்ல புத்திக்கூர்மையும், கைகளில் வலிமையும் இருக்க வேண்டும். திதீக்‌ஷாவிற்கு தைரியமாக, சுயமாக முடிவெடுக்க கூடிய திறன் இருக்கும். அது விளையாட்டில் மிகவும் முக்கியம். அந்த திறன், துணிச்சலாக சில யுக்திகளை கையாண்டு எதிராளியை வெல்ல உதவும். ஃபென்சிங் அருமையான விளையாட்டு, ஆனால் இந்தியாவில் அதற்கு சரியான விழிப்புணர்வு கிடையாது. வாள்வீச்சு என்றதும் ஏதோ பாகுபலி படத்தில் வரும் சண்டை காட்சிகளை நினைத்துக் கொள்கின்றனர்.

கிரிக்கெட், கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த விளையாட்டுக்கு கொடுப்பதில்லை. தனியாளாக பாக்ஸிங், ஃபென்சிங் விளையாடுபவர்கள் இந்தியாவிற்கு ஜெயிக்கும் போது நமக்கு பெருமை தானே. ஆனால் அதற்கான விழிப்புணர்வு மற்றும் நிதி ஒதுக்கப்படுவதில்லை. எல்லா விளையாட்டும் முக்கியம் தான்.

ஒவ்வொரு விளையாட்டிற்கு ஏற்ப நிதியுதவி கிடைத்தாலே எல்லா விளையாட்டிலும் இந்தியர்கள் முதன்மையில் இருப்பர். நம் இந்தியர்களை போன்று உடல் அமைப்பில் வலிமையானவர்கள் வேறு யாருமில்லை. நம் நாட்டில்தான், அனைத்துவிதமான பருவங்களும் நமக்கு சாதகமாய் உள்ளன. அதனால் இங்கு அனைத்துவிதமான விளையாட்டு பயிற்சிகளும் செய்யலாம்” என்கிறார் பயிற்சியாளர் நாகசுப்ரமணியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்… பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்!! (மகளிர் பக்கம்)
Next post என்னோட நிலமை யாருக்கும் வரக்கூடாது!! (வீடியோ)