By 15 August 2020 0 Comments

பிரசவத்துக்கு பின் வரும் ‘மனநல பிறழ்வு’!! (மருத்துவம்)

மனைவி, இரண்டாவது பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கிறாள். முதல் பிரசவ சமயத்தில் சற்று விட்டேத்தியாக குழந்தையைக் கவனிக்க மறுப்பது, எல்லோரிடமும் எடுத்தெறிந்து பேசுவது என்று கொஞ்ச நாள் மனநலம் பாதிக்கப்பட்டது போலிருந்தாள். பிறகு, தானாகவே சரியாகிவிட்டாள். தற்போது பிரசவ நாட்கள் நெருங்கும் இந்த தருணத்தில், ‘இந்த முறையும் இயல்பு மாறிவிடுவாளோ…’என்று கவலையாக இருக்கிறது. இதற்காக முன்னெச்சரிக்கையாக நான் என்ன செய்ய வேண்டும்?”

”பிரசவத்தை சரியாக எதிர்கொள்வதற்காக பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் சிலவற்றின் எதிர்வினையால் உடல் மற்றும் மனநலத்தில் சிலருக்கு பாதிப்புகள் உண்டாவது இயல்பான விஷயமே. மனநலத்தைப் பொறுத்தவரை பிரசவத்துக்கு முந்தைய பாதிப்பை ‘ஆன்டிநேடல் சைக்கோஸிஸ்’ (Antenatal Psychosis) என்றும், பிரசவத்தை அடுத்து வரும் மனநல பிறழ்வை ‘போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ்’ (Postpartum Psychosis) என்றும் அழைப்பார்கள். இரண்டில் அதிகம் பேருக்கு ஏற்படுவது பிரசவத்துக்குப் பிந்தைய ‘போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ்’தான். உங்கள் மனைவியின் பிரச்னையும், அதுபோலத்தான் இருக்கிறது.

குழந்தை பராமரிப்பு, பாலூட்டல் போன்றவற்றில் ஒரு தாய்க்கான அக்கறையின்றி இருப்பது, எல்லோரிடமும் விரோதம் காட்டுவது, ‘இது என் குழந்தையே இல்லை’ என்பது, ‘ஆஸ்பத்திரியில் குழந்தையை மாற்றிவிட்டார்கள்’என்று தகராறு செய்வது, யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது புதுப் பழிபோடுவது… இப்படியான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் இறங்கலாம். பிரசவித்த நாளில் துவங்கி ஆறு மாதம் வரை இம்மாதிரி பாதிப்புகள் நீடிக்கலாம். இதற்கான சிகிச்சை… குடும்பத்தாரின் அணுகுமுறை, அரவணைப்பு, அன்பு உள்ளிட்டவைதான்.

முதலில் மனைவியை பரிவுடன் புரிந்து கொள்வதையும், பராமரிப்பதையும் மேற்கொள்ளலாம். அவரது செயல்களை விமர்சிப்பது, குறை காண்பது கூடாது. சுட்டிக்காட்டுவதையும் நயமாக சொல்லலாம். சில வீடுகளில் பால் பாகுபாடு பார்த்து, ‘பெண் குழந்தை பிறந்தால் போச்சு’ என்று மூடநம்பிக்கையான பேச்சுக்களை எழுப்புவார்கள். இந்த நெருக்கடியும் பிரவசத்தை ஒட்டிய மனநலன் பாதிப்பாகலாம். சிலசமயம் குழந்தையேகூட இந்த வெறுப்புக்கு இலக்காகலாம் என்பதால், நம்பிக்கை வரும் வரை தாயை நம்பி குழந்தையைத் தனியே விடக்கூடாது.

இப்பாதிப்பு ஒரு சில வாரங்களில் சரியாகவில்லை என்றாலோ, வீட்டை விட்டு ஓடுவது, தனக்கோ குழந்தைக்கோ ஊறு செய்வது போன்றவை தென்பட்டாலோ… உடனடி மனநல மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம். சம்பந்தப்பட்டவர் ‘சைக்கோஸிஸ்’ பாதிப்பில் இருக்கும்போது, சுற்றி உள்ளவர்கள் அவரை புரிந்து கொள்ளாமல் ‘பேய் பிடித்துவிட்டது’ என்பது போலவெல்லாம் பேச ஆரம்பித்தால், தானாகவே சரியாகவிட வேண்டிய பாதிப்பு இன்னும் மூர்க்கமாகிவிடும் என்பதால், கவனம் தேவை.

உங்கள் மனைவிக்கு முதல் டெலிவரி சமயத்தில் இந்த ‘சைக்கோஸிஸ்’ பாதிப்பு தலைகாட்டியிருப்பதால், தற்போது இரண்டாவது பிரசவத்துக்கு முன்பிருந்தே மனநல நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. கருவுற்ற பெண்கள் அனைவருக்குமே பிரசவத்துக்கு முன்போ, பின்போ தங்களுக்கு ‘சைக்கோஸிஸ்’ வர வாய்ப்பு உண்டு என்ற விழிப்பு உணர்வு இருப்பின், அதுவே பின்னாளில் வரவிருக்கும் இதுபோன்ற பாதிப்பைக் குறைத்துவிடும்!”Post a Comment

Protected by WP Anti Spam