By 17 August 2020 0 Comments

மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்… குமாரி சச்சு!! (மகளிர் பக்கம்)

ரோஜா மலரே ராஜகுமாரி’ என்று நாயகன் ஆனந்தன் நாயகியைப் பார்த்துப் பாடியபோது, அந்த நாயகி அசல் பன்னீர் ரோஜாவின் நறுமணமும் மென்மையும் கொண்டவராக, அழகும் இளமையும் ஒருங்கிணைந்த எழிலார்ந்த தேவதையாகவே நம் கண்களுக்குத் தோன்றினார். அதே படத்தில் ஏரியின் நடுவே உருவாக்கப்பட்ட செயற்கைத் தாமரை மலர்களின் மீது நின்று ஆடியவாறே ‘நீலப் பட்டாடை கட்டி..’ எனப் பாடி ஆடியபோதும் அந்த மனநிலையில் யாருக்கும் எந்த மாற்றமும் இல்லை.

கதாநாயகியாக அவர் நடிப்பது இதுதான் முதல் முறை என்றாலும், அதற்கும் முன்னதாக 1950களிலேயே குழந்தை நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட, அனைவராலும் கொண்டாடப்பட்ட குட்டி நட்சத்திரம் என்.எஸ்.சரஸ்வதி என்ற குமாரி சச்சு. இவருக்கு முன்னதாகவே பி.கே.சரஸ்வதி, சி.கே.சரஸ்வதி என பல சரஸ்வதிகளின் கடாட்சம் திரையுலகுக்கு இருந்ததால் இவர் சுருக்கமும் இனிமையுமாக சச்சு ஆனார். நம் சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து
கொண்டிருப்பவர்.

பாரீஸில் பிறந்த அழகு ரோஜா மலர் சச்சுவின் பெற்றோருக்குப் பூர்வீகம் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள (தற்போதைய வேலூர் மாவட்டம்) புதுப்பாடி கிராமம். அவரது தந்தையார் சி.ஆர்.சுந்தரேசன் சென்னையில் பிரபலமான வழக்கறிஞர். சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வர வசதியாகத் தன் வசிப்பிடத்தையும் மண்ணடியிலேயே அமைத்துக் கொண்டார். அப்போதைய நகர்ப்புறமும் அதுதானே. தாய் ஜெயா இல்லத்தரசி. அவருக்கு இசையில் நல்ல ஆர்வம் இருந்ததால் தன் குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதில் முனைப்பாக இருந்தார்.

இந்தத் தம்பதிகளுக்கு 5 பெண்கள், 4 ஆண் மக்கள் என மொத்தம் ஒன்பது குழந்தைகள். சச்சு அதில் ஆறாவது குழந்தை; பெண்களில் நான்காவது இடம். சச்சு பிறந்தது 1946ல் மண்ணடியில்தான். அதையே விளையாட்டாக பாரீஸில் பிறந்ததாகச் சொல்வாராம். (சென்னை பாரீஸ் கார்னர்) நிறைய குழந்தைகள் என்பதால் சச்சுவின் மூத்த சகோதரி லட்சுமியும் சச்சுவும் சென்னை, மயிலாப்பூரில் உள்ள அத்தைப் பாட்டி சுந்தராம்பாள் வீட்டில் வளர்ந்தார்கள். பி.எஸ். ஹைஸ்கூல் எதிரில் உள்ள வீட்டின் மாடியில் பாட்டியுடன் வாசம்.

ஒரு ஹால் மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டின் கீழ்ப்பகுதி நாட்டியப் பள்ளி நடத்துவதற்காக நட்டுவனார் கே.என். தண்டாயுதபாணி பிள்ளைக்கு வாடகைக்கு விடப்பட்டது. தன் மனைவியுடன் அவர் அங்கேயே குடியேறினார். வீட்டின் கீழே ஜதி சொல்லும் ஓசையும் சலங்கையொலியும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்ததால், ஆடாத காலும் ஆடும் அல்லவா? அப்படித்தான் அக்காள் லட்சுமி நாட்டியம் கற்கத் தொடங்கினார். அக்காளைப் பார்த்து தங்கை சரஸ்வதிக்கும் நாட்டியப் பித்து பிடித்தது. இவர்களின் பாட்டிக்கும் நாட்டியத்தின் மீது ஒரு காதல் இருந்ததால், எல்லோரின் நடன ஆசைக்கும் தந்தையின் ஒப்புதலுடன் வழி பிறந்தது.

50களின் குட்டி நட்சத்திரம் உருவானார்தண்டபாணி பிள்ளை திரைப்படங்களிலும் பணியாற்ற ஆரம்பித்த பின், திரையுலகைச் சார்ந்தவர்களின் வருகை அடிக்கடி வந்து செல்லும் இடமாக அது மாறியது. அக்கா லட்சுமிக்கு அப்படித்தான் திரை வாய்ப்பு கிடைத்தது. மாடி வீட்டு லட்சுமி அவ்வாறுதான் மாடி லட்சுமியாக அறியப்பட்டு, அதுவே அவரின் அடையாளமாக பெயராகவும் மாறியது. நடனம் கற்பதற்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த தந்தையாருக்கு சினிமாவில் தன் பெண்கள் நடிப்பதில் துளியும் விருப்பமில்லை. ஆனால், அந்த மனநிலையை மாற்றியவர்கள் சச்சுவின் அம்மாவும் பாட்டியும்தான்.

முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் 1939ல் வெளியான ‘தியாக பூமி’ திரைப்படத்தில், அவரது அண்ணன் விஸ்வநாதனின் மகள் பேபி சரோஜா நடித்து அன்றைய சென்னை ராஜதானியையே கலக்கிக் கொண்டிருந்தார். விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களிலும் சரோஜாவின் படம் அச்சிடப்பட்டு, எங்கும் எதிலும் சரோஜா என்பதாக அந்தக் குழந்தையின் புகழ் பரவலாகி பட்டிதொட்டியெங்கும் பேபி சரோஜா பிரபலமானார். ஆனால், அவருக்குப் பின் குழந்தை நட்சத்திரங்களின் பற்றாக்குறை திரையுலகில் நிலவியது.

தங்கள் வீட்டுக் குழந்தைகள் திரையில் தோன்றுவதன் மூலம் அந்தப் பற்றாக்குறையைப் போக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதால் பாட்டி அதற்கு வித்திட்டார். இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் இயக்கத்தில் 1950ல் கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.ராஜகுமாரி இரட்டை வேடங்களில், இவர்களுடன் நாட்டியத் தாரகைகளான வைஜெயந்தி மாலா, குமாரி கமலா, லலிதா – பத்மினி என நட்சத்திரங்களின் ஒளி வீசிய ‘விஜயகுமாரி’ திரைப்படத்தில் மாடி லட்சுமியும் நாட்டியமாடினார்.

அக்காளின் மூலமும் தண்டாயுதபாணி பிள்ளையின் மூலமும் குழந்தை சச்சுவும் நன்கு அறியப்பட்டிருந்ததால் சச்சுவையும் திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்பினார்கள். அப்படித்தான் 1952ல் வெளியான ’ராணி’ படத்தின் வழியாக சச்சு தமிழ் சினிமாவுக்குள் குழந்தை நட்சத்திரமாக தன் 6 வயதில் அடியெடுத்து வைத்தார். எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர், பி.பானுமதி நடிப்பில் வெளியான அப்படத்தில் சிறு வயது பானுமதியாக சச்சு தோன்றினார். குழந்தையின் துறுதுறுப்பான அழகான துடிப்பான முகம், குண்டுக் கன்னங்கள், செயல்பாடுகள்.

நாட்டியத்திறன் எல்லாமும் சேர்ந்து அவரை திரையுலகுடன் இறுக்கமாகப் பிணைத்தன. ஒவ்வோர் பத்தாண்டு இடைவெளியிலும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். பேபி சரோஜாவுக்குப் பின் 50களின் குழந்தை நட்சத்திரமாக பேபி சச்சு பிரபலமானார்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று மீண்ட பின் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த படங்களில் ஒன்றுதான் 1952ன் ‘சியாமளா’. வழக்கத்துக்கு மாறாக கம்பீரமாக மீசை வைத்துக்கொண்டு இப்படத்தில் தோன்றினார் பாகவதர். இணையாக இளமை கொஞ்சும் எஸ்.வரலட்சுமி. அவரது சிறு வயதுத் தோற்றத்தில் சச்சு. ஆனால், இப்படம் பெரிதாக ஓடவில்லை. ஹரிதாஸ், சிவகவி படங்களைப் போல் சிறை மீண்டபின் வெளியான பாகவதரின் எந்தப் படமும் ஓடவில்லை.

1953ன் படங்களாக ‘தேவதாஸ்’, ‘அவ்வையார்’ என இரண்டுமே பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்கள். தேவதாஸ் படத்தில் குட்டி சாவித்திரி; தேவதாஸுடன் சிறுவயது முதலே அன்பும் பாசமும் குறும்பும் கொப்பளிக்க அவர் பேசும் வசனங்கள் அத்தனை அழகும் நேர்த்தியும் நிறைந்தவை. அவ்வையார் படத்திலும் அவ்வாறே. 1954ல் வெளியான ‘சொர்க்க வாசல்’ சி.என்.அண்ணாதுரையின் வசனத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலி தேவி நடிப்பில், காசிலிங்கம் இயக்கத்தில் உருவானது.

1957ன் ‘மாயா பஜார்’ படத்தில் சிறு வயது வத்ஸலா (சாவித்திரி) நீர் நிறைந்திருக்கும் தடாகத்தின் ஓரம் அமர்ந்திருக்க, அவரது பிம்பம் நீரில் தென்படும். பின், நீரில் ஏற்பட்ட சலனம் சமநிலையை அடையும்போது சச்சு, சாவித்திரியாகி இருப்பார். அழகியல் ததும்பும் அற்புதமானதோர் காட்சியமைப்பு. தமிழ், தெலுங்கு என இரு பதிப்பிலும் அவரே நடித்தார். சச்சு நடித்த படங்களின் வரிசையில் 100 நாள் ஓடிய முதல் படம் இது.
1955ன் ‘காவேரி’ படத்தில் சந்தோஷம் கொள்ளாமே சாப்பாடும் இல்லாமே தாய்நாடு திண்டாட்டம் போடுதே’ என்று பத்மினி ஆடிப் பாடுவார். அவருடன் சச்சுவும் தோன்றி நடனமாடுவார்.

1960ல் ‘ராஜா தேசிங்கு’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் தம்பதியரின் மகளாகவும் எம்.ஜி.ஆரின் சகோதரியாகவும் நடித்தார். பதின்ம வயதின் ஆரம்ப நிலையில் இப்படத்தில் தோன்றினார். கோடீஸ்வரன் படத்தில் சிவாஜி கணேசன், பத்மினியுடன் நடிக்கும் வாய்ப்பு.
பானுமதி, பத்மினி, சாவித்திரி, அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, குசலகுமாரி, கே.பி.சுந்தராம்பாள் என அப்போதைய கதாநாயகிகள் அனைவருக்கும் ஜூனியராக நடித்திருக்கிறார். கதாநாயகிகளின் சிறு வயது தோற்றம் என்பதால் படத்தில் மிகக் குறைந்த நேரமே தோன்றக்கூடிய வாய்ப்பு என்றாலும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார்.

சிறு வயதிலேயே அவருக்கு அமைந்த படங்கள் அனைத்தும் திரையுலகின் மிகப் பெரிய நிறுவனங்கள், நடிப்புலக ஜாம்பவான்கள், மேதை இயக்குநர்கள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை மேதைகள், நாட்டிய மணிகள் என பெரும்புள்ளிகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களாகவும் நல்வாய்ப்பாகவும் சச்சுவுக்கு அமைந்தன.

தந்தையாரின் உடல்நலம் சீர்குலைந்ததைத் தொடர்ந்து, மிகப் பெரும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் சச்சுவின் தோள்களின் மீது விழுந்தது. திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், அவர் இழந்தது குழந்தைப் பருவத்துக்கே உரிய பள்ளிப்பருவத்தையும் கல்வியையும். அதனால், வீட்டில் ஆசிரியரை நியமித்துப் பாடம் கற்க வேண்டிய நிலை.

நாயகியாக அறிமுகமானாலும் தொடர முடியாதவர் பால பருவத்தைக் கடந்து இள மங்கையாக வடிவெடுத்த பின்னர் நாயகியாகும் வாய்ப்பும் ஏ.வி.எம் நிறுவனத்தின் மூலம் தேடி வந்தது. இப்போது அவர் குமாரி சச்சு. மன்னராட்சிக் காலத்திலும் மக்களாட்சியின் மகத்துவம் பேசும், புரட்சிக்காக மக்களை ஒருங்கிணைக்கும் புரட்சிக்காரர்களைக் கதை நாயகர்களாக்கிய படம் அது.

அசோகனும் ஆனந்தனும் இரண்டு நாயகர்கள்; ஈ.வி.சரோஜாவும் சச்சுவும் நாயகிகள். புரட்சியாளன் எப்படியும் தன்னுயிரை இழக்க வேண்டியவன் என்பதால் அசோகனுக்கு ஜோடியில்லை. பின்னர் புரட்சிக்காரனாக உருவாகும் ஆனந்தனுக்கு இரு நாயகியர்; அதிலும் ஒருத்தி ஒருதலைக் காதல் கொண்டவள். அதனால் நாயகன் ஆனந்தனின் ஒரே நாயகியாக சச்சு மட்டுமே. இன்றைக்கு ‘சூப்பர் கெமிஸ்ட்ரி’ என்று சொல்லத்தக்க ஜோடிகளின் முன்னோடிகள் ஆனந்தனும் சச்சுவும் என்றால் மிகையில்லை.

இந்தப் படம் வெற்றி பெற்ற பின்னர் நாயகியாக ‘அன்னை’ படத்தில் நடித்தார். ஆனால், அவரைக்காட்டிலும் திறமையான பானுமதியும் சௌகார் ஜானகியும் என இரு நாயகிகள் அவரை ஓவர்டேக் செய்தார்கள். கதைப்போக்கின்படி அவர்களே பிரதானமான பாத்திரங்கள் எனும்போது, சச்சு அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு ஜோடியாக இளமையான ஹரநாத்.

காரில் சென்னை மாநகர வீதிகளில் இருவரும் உலா வந்தவாறே பாடும் ‘அழகிய மிதிலை நகரினிலே’ பாடல் அவ்வளவு ஹிட். இப்போதும் பழைய கடற்கரைச் சாலை, சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய ரயில்வே தலைமையகம் இவற்றையெல்லாம் பார்க்கும்போது அந்த நாளை நோக்கி மனம் இறக்கை கட்டிக் கொள்ளும். வசதியான ஒரு வீட்டில் அவர்களின் உதவியால் கல்லூரியில் படிக்கும் மாணவியாக, அதே நேரம் மிகப் பொறுப்புணர்வு மிக்க பெண்ணாகவும் அவரது நடிப்பு மிக இயல்பாக இருக்கும்.

மொட்டை மாடியில் புறாக்களுடன் கொஞ்சியவாறே சச்சு பாடுவதான ‘ஓ… பக்..பக்..பக்..பக்.. பக்கும் பக்கும் மாடப்புறா’ அந்தக் கால இளசுகளின் மனதைக் கொள்ளையிட வைத்த பாடல். சந்திரபாபுவின் ஒருதலைக் காதலும், சச்சுவைப் பின்தொடர்தலும் கூட மிக ரசமானவை. ‘அன்னை இல்லம்’ படத்தில் அமைதியே உருவான சீதாவாக நாயகி தேவிகாவின் தங்கையாகத் தோன்றுவார். முத்துராமனைக் காதலித்துப் படத்தின் இறுதியில் கைப்பிடிப்பார்.

தமிழ் சினிமாவின் முதல் அறிவியல் கற்பனைக் கதையாக விண்வெளி, பறக்கும் தட்டு என்றெல்லாம் கதையும் காட்சிப்படுத்தலுமாக நகர்ந்த ‘கலை அரசி’ யில் நாயகன் எம்.ஜி.ஆருக்குத் தங்கை. படத்தின் ஆரம்பத்திலேயே டைட்டில் பாடலுடன் தங்கை சச்சு மாட்டு வண்டி ஓட்டி வர, அண்ணன் எம்.ஜி.ஆர் பின்னால் அமர்ந்து பாடிக்கொண்டு வருவார். கதைப்போக்கில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் சிக்கிக் கொள்ள, அண்ணன் எம்.ஜி.ஆர். வந்து காப்பாற்றுவார்.

‘அவன் பித்தனா?’ படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் சச்சு பாடி ஆடும் பாடல் ஒன்று அப்போது. மிகப் பிரபலம் ‘கிழக்கு வெளுத்ததடி; கீழ் வானம் சிவந்ததடி’. இப்போதும் முரசு தொலைக்காட்சியின் அறிமுகப் பாடலாக அது வெளியாகும்போது தவிர்க்க முடியாமல் சச்சுவும் தோன்றுவார். இந்தப் படத்திலும் முதன்மை நாயகியாக விஜயகுமாரியே இருந்தார்.

கவர்ச்சிகரமான நகைச்சுவை நாயகி30கள் 40கள் 50களில் நடிக்க வந்த மூத்த நடிகைகள் பலரும் நாயகிகளாக உச்சத்தில் இருக்க அவர்களை விட இளமைத் துள்ளலும் அழகும் திறமையும் ஒருங்கே ஒன்றிணைந்த சச்சு நாயகியான பின்னர் அவரால் ஏன் அதைத் தொடர முடியவில்லை என்பது பெரும் கேள்விக்குறிதான். கதாநாயகர்கள் எல்லாம் மிக மூத்தவர்களாக இருந்தபோது கதாநாயகிகளும் அவ்வாறே இருந்தார்கள். இளமையான கதாநாயகர்களுக்குப் பஞ்சம் இருந்தது. 60களில் இளமையான நாயகியர் பலர் அறிமுகமானபோதும் நாயகர்கள் மட்டும் மாறாமல் இருந்தார்கள்.

அப்படி அறிமுகமான ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் எல்லோரும் இரண்டாம் கட்ட நாயகர்களாகவே இருந்தார்கள். இரண்டாவது நாயகி வேடங்களே சச்சுவுக்குக் கிடைத்து வந்த நிலையில், நகைச்சுவை நடிகையாக அவர் மாறியது வலி தரும் ஒரு முடிவுதான் என்றாலும் மிகத் தீர்க்கமான முடிவு. நாயகியாக மிஞ்சிப் போனால் ஒரு பத்தாண்டுகள் நிலைக்கலாம். அப்போது நகைச்சுவை நடிகைகள் பலர் இருந்தாலும் மனோரமாவே முதன்மையான இடத்தில் இருந்தார். அவர் மட்டுமல்ல, ரமா பிரபாவும் அப்போது அவருடன் போட்டியில் இருந்தார். 60, 70களில் மூவரின் நகைச்சுவையும் கொடிகட்டிப் பறந்தது.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நகைச்சுவை நடிகையாக மாறி அசத்தினாலும், காஞ்சனா, ராஜ என இரு நாயகிகளுடன் மூன்றாவது நாயகியாகவே அவரும் இருந்தார். இந்தப் படத்தில் சச்சுவின் நடிப்பின் உச்சம் என்றால், அது ‘மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டும்’ பாடலுக்கு அவர் ஆடும் வெஸ்டர்ன் நடனம்தான்.

மீனலோசனியாக படத்திலும் ஓஹோ ப்ரொடக்‌ஷன் நடிகையாக மாறும் உத்வேகத்துடன் அந்தக் காட்சியை அவ்வளவு பிரமாதப்படுத்தியிருப்பார். வயதான வேடத்தில் இருக்கும் முத்துராமன் சச்சுவைப் பார்த்ததும் சற்றே முகம் சுளித்து, ‘என்ன டிரெஸ் எல்லாம் ஒரு மாதிரி..?’ என்று இழுப்பார். சச்சு அணிந்திருக்கும் ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் நம் பார்வையில் மோசமானதாகத் தெரியாது. ஆனால், அக்காலகட்டத்து ஆண்களின் பெண்ணின் உடை குறித்த பார்வை அவ்வாறாகத்தான் இருந்தது என்பதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

‘வீரத்திருமகன்’ படத்தில் தன்னை நாயகியாக அறிமுகப்படுத்திய ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடம் சச்சு தனக்கு ஆபாசமான உடைகள் எதையும் அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்த துணிச்சல்காரரும் கூட. ஆனால், அதே சச்சு அதைவிட மோசமான, மிகக் குறைந்த உடைகளை அணிந்து நடித்து கவர்ச்சிகரமான நகைச்சுவை நடிகையாகவும் பின்னாட்களில் அறியப்பட்டார். 70களில் வெளியான பல திரைப்படங்களில் சச்சுவைப் பார்க்கும்போது அதை நன்கு உணர முடியும்.

‘சிவந்த மண்’ படத்திலும் புரட்சிக்காரர்களுக்கு உதவக்கூடிய இரவு விடுதிப் பெண்ணாக நடித்திருப்பார். இதிலும் அவருக்கு ஒரு வெஸ்டர்ன் நடனம் உண்டு. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ‘முத்தமிடும் நேரம் இப்போ’ பாடல், என்ன ஒரு துள்ளல் நடனமும் இசையும் என்று தோன்றும்.
எப்போது கேட்டாலும் ஆடத் தோன்றும் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்கும் பாடலும் நடனமும் அது என்றால் மிகையில்லை. மெக்ஸிகன் இசை பாணியில் அந்தப் பாடலுக்கு இசை அமைத்ததாக எம்.எஸ்.

விஸ்வநாதன் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். நகைச்சுவையுடன் நின்று விடாமல், குணச்சித்திர நடிகையாகவும் ‘பூவா தலையா’, ‘மனசுக்குள் மத்தாப்பூ, ‘அவதாரம்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் சச்சுவுக்கு சி.ஐ.டி. போலீஸ் வேடம்.

உச்சக்கட்ட காட்சியில் வில்லன் கூட்டத்தாரை துப்பாக்கியில் சுட்டு வீழ்த்தி, எம்.ஜி,ஆரை காப்பாற்றுவதாகக் காட்சியமைப்பு. இதைப் பார்த்த செஞ்சி பகுதியிலுள்ள நரிக்குறவர் சமுதாய மக்கள், சென்னையிலுள்ள சச்சுவின் வீட்டுக்கே வந்து விட்டார்கள். ‘எங்கள் அண்ணனைக் காப்பாற்றியதற்கு நன்றி’ என்று சொல்லிக் காலில் விழுந்து வணங்கி பல பரிசுகளையும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள்.

நாடகத்துறையையும் சச்சு விட்டு வைக்கவில்லை. 1970ல் நடிகர் டி.எஸ் பாலையாவின் முயற்சியால் முதன்முதலாக ‘நீரோட்டம்’ என்ற மேடை நாடகத்தில் நாயகியாக அறிமுகமானார். பழம்பெரும் நடிகையான எஸ்.டி.சுப்புலட்சுமியும் இந்த நாடகத்தில் நடித்திருக்கிறார். சச்சு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதும் தொடர்ச்சியாக நாடகங்களிலும் கவனம் செலுத்தத் தவறவில்லை. ‘மெழுகு பொம்மைகள்’, ‘தோப்பில் தென்னைமரம்’, ‘சக்கரம் சுழல்கிறது’, ‘முதியோர் இல்லம்’ என பல நாடகங்களில் பலமுறை மேடையேற்றம் கண்டிருக்கிறார். ‘தேவியர் இருவர்’ நாடகத்திலோ இரட்டை வேடம். இவ்வளவு திறமைகளைப் பெற்றிருந்தும் தமிழ்த் திரையுலகு அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது.

திரையுலகத் தோழியின் மாறா நட்பு ‘மாயா பஜார்’ படத்தில் நடிகை சந்தியாவுடன் நடித்தவர் அவருடைய மகள் ஜெயலலிதாவுடன் 1966ல் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் கல்லூரித் தோழியாக நடித்தார். பின்னர் தொடர்ந்து 16 படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ‘சுமதி என் சுந்தரி’ பட்த்தில் இருவரும் நடித்திருந்தாலும், சச்சுவைக் குறிப்பிட்டு ‘சச்சாயி’ என்ற ஒரு பாடலும் இடம் பெற்றது. இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகளும் இருந்தன. அதுவே அவர்களிடம் நல்ல நட்பு உருவாகவும் வழிவகுத்தது. 1980ல் ஜெயலலிதா திரையுலகை விட்டு விலகியபோதும், சச்சு தொடர்ந்தார். ஜெயலலிதா முதல்வரானார். இந்த நட்பின் நீட்சியே 2011ல் இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் பொறுப்பு
சச்சுவுக்கு அளிக்கப்பட்டது.

தற்போதைய நகைச்சுவை நடிகர்கள் அனைவரிலும் நீண்ட கால திரையுலக அனுபவம் கொண்டவர் சச்சு. ஆயிரம் படங்கள் கண்ட பத்ம
மனோரமா கூட சச்சுக்குப் பின் நடிக்க வந்தவரே. 6 வயதில் திரையுலகில் நுழைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்து இதோ 67 ஆண்டுகள் ஆகி விட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.

எம்.ஆர்.ராதா, பாலையா, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என அனைத்து நகைச்சுவை நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 2000 ஆம் ஆண்டுக்குப் பின் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிஸியானார். இப்போதும் அவ்வப்போது சில படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரம் என ஏதோ ஒருவிதத்தில் நடிப்பு அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விருது,
எம்.ஜி.ஆர். விருது என விருதுகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

நடிகை சச்சு நடித்த தமிழ்த் திரைப்படங்கள்ராணி, சியாமளா, தேவதாஸ், அவ்வையார், சொர்க்கவாசல், காவேரி, மாயா பஜார், மருமகள், எதிர்பாராதது, ராஜா தேசிங்கு, கோடீஸ்வரன், வீரத்திருமகன், மரகதம், அன்னை, அன்னை இல்லம், கலையரசி, காதலிக்க நேரமில்லை, தேன் மழை, மோட்டார் சுந்தரம் பிள்ளை. கலாட்டா கல்யாணம், கல்லும் கனியாகும், பாமா விஜயம், ஜீவனாம்சம், நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், தேன் மழை, ஊட்டி வரை உறவு, சொர்க்கம், துணைவன், சிவந்த மண், பூவா தலையா, நிறைகுடம், தேனும் பாலும், அன்பளிப்பு, தங்கைக்காக, சுமதி என் சுந்தரி, உத்தரவின்றி உள்ளே வா,

இரு கோடுகள், பிள்ளையோ பிள்ளை, திக்குத் தெரியாத காட்டில், எங்கிருந்தோ வந்தாள், டெல்லி மாப்பிள்ளை, நல்ல பெண்மணி, கை நிறைய காசு, என் அண்ணன், பெண் தெய்வம், திருமலைதெய்வம், திருமாங்கல்யம், அத்தையா மாமியா, உரிமைக்குரல், முயலுக்கு மூணு கால், அவன்தான் மனிதன், மீனவ நண்பன், தீபம், சிட்டுக்குருவி, இவள் ஒரு சீதை, தர்ம யுத்தம், எல்லாம் உன் கைராசி, சுஜாதா, தெய்வ சங்கல்பம், தாய் பிறந்தாள், ஊருக்கு ஒரு பிள்ளை, சொல்லத் துடிக்குது மனசு,

மனசுக்குள் மத்தாப்பூ, நாங்கள், அவதாரம், டாட்டா பிர்லா, பிரியங்கா, ஊமை விழிகள், உனக்காக எல்லாம் உனக்காக, பிரிய சகி, ஜெர்ரி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சாது மிரண்டால், ஐந்தாம் படை, ஆட்ட நாயகன், கௌரவர்கள், தில்லுமுல்லு, நையாண்டி, இரும்புக்குதிரை, கெத்து, அவன் அவள், கொடி, கடவுள் இருக்கான் குமாரு, சென்னை 600028 II, பேரழகி, அயோக்யா, ஜாக்பாட்.Post a Comment

Protected by WP Anti Spam