By 19 August 2020 0 Comments

தடைகளை தாண்டி வந்தேன்!! ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி!! (மகளிர் பக்கம்)

ஜூடோ ஜப்பானியத் தற்காப்புக் கலையாக மட்டுமல்லாமல், அந்நாட்டின் தேசிய விளையாட்டும் கூட. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இவ்விளையாட்டு, எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணிய வைப்பது, நகர முடியாமல் இருக்கப் பிடிப்பது, திணற வைத்துப் பணிய வைப்பது என பல்வேறு நுணுக்கங்களை கொண்டது.

இந்த விளையாட்டைப் போலவே தன் வாழ்வில், எந்த ஒரு எதிர்மறையான செயல்கள் அமைந்தாலும் அதில் போராடி வெற்றி கண்டிருப்பவர் பார்வையற்றவரான மகேஸ்வரி. மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று, சிறந்த வீராங்கனைக்கான பட்டமும் பெற்று, தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் உணர்வுப்பூர்வமாகக் கொண்ட சாதனை வீராங்கனையாக இன்று வலம் வருகிறார்.

“திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், வெள்ளிவாயல் சாவடி ஊராட்சி அடங்கிய ௭க்கல் காலணியில் வசித்து வருகிறேன். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்க்கை நடத்தி வரும் எனது பெற்றோர்கள் இருவரும் பிறவியிலேயே பார்வையற்றவர்கள். அப்பா, முருகன் சென்னை மின்சார ரயிலில் சிறிய வியாபாரம் செய்து வருகிறார். அம்மா சாமந்தியும் அவருக்கு உறுதுணையாக இருந்து என்னையும் தங்கை ராஜேஸ்வரியையும் படிக்க வைக்கின்றனர்.

திருவள்ளூரில், சிறுமலர் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின், கல்லூரி படிப்பிற்காகச் சென்னை வந்தேன். ராணி மேரி கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ வரலாறு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு ஜூடோ விளையாட்டு அறிமுகமானது. ‘Tamilnadu Blind Judo Accusation’ மூலம் பயிற்சி எடுத்தேன். எனது ஆர்வத்தினால் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன்” என்கிறார் மகேஸ்வரி.

தங்களது உலகம் இருளுக்குள் இருந்தாலும் அதில் ஓர் வெளிச்சத்தை, ஜூடோ என்ற விளையாட்டின் மூலம் அடைந்திருக்கிறார் மகேஸ்வரி. இவரது திறமையைக் கண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி சிறப்பு நிதியுதவி வழங்கியதோடு தொகுப்பு வீடு வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார். ‘‘சிறு வயதிலிருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததால், பள்ளியில் எல்லா போட்டிகளிலும் பங்கேற்பேன்.

இதுதான் ஜூடோ விளையாட்டில் பிரகாசிக்கக் காரணமாக இருந்தது” என்று கூறும் மகேஸ்வரி, 2017ஆம் ஆண்டு பயிற்சிக்காக பத்து நாட்கள் அரியானா சென்றுள்ளார். அங்கு நடந்த ஐந்தாவது தேசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார். இதில் தவறவிட்ட தங்கப் பதக்கத்தை அடுத்த ஆண்டே வென்றுள்ளார். இது குறித்துக் கூறும் மகேஸ்வரி,“முதலில் கலந்து கொண்டதில் இரண்டாம் இடம் பெற்றிருந்த போதும், முதலிடம் வர வேண்டும் என்கிற எண்ணம் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.

இதனால் அடுத்தாண்டுக்கான போட்டிக்காகக் கடுமையாக உழைத்தேன். அந்த ஓராண்டு உழைப்பு வீண் போகவில்லை. அந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதோடு, சிறப்பு விளையாட்டு வீராங்கனை என்ற பட்டமும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக அமைந்தது. அதே 2018 ஆம் ஆண்டு துருக்கி நாட்டிற்கு விமானத்தில் சென்றதும் என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருக்கிறது” என்றார்.

“குடும்பத்தினர் அனைவருக்கும் பார்வை இல்லாததால், யாரும் எங்களை மதிக்கமாட்டார்கள். ஆனால், 2018 ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்ற பின் ஊரே திருவிழா போல் திரண்டு வீட்டிற்கு வந்து பாராட்டு விழாவே நடத்தினார்கள். இதற்கு முன் எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட அவமானங்கள், சொற்கள்… என்று விரியும் மன உளைச்சல்கள் இந்த இடத்தில் சுக்குநூறாக உடைந்த அந்நேரம் பெருமையாக உணர்ந்தேன்” என்று கூறும் மகேஸ்வரி தற்போது “சமர்ப்பணம்” என்ற அமைப்பில் இணைந்து பல வேலைகள் செய்து வருகிறார்.

“இந்த அமைப்பின் மூலம் கணினி பயிற்சி அளித்து வருவதோடு, பார்வையற்ற பலருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இதில் பயிற்சி பெற்று நல்ல வேலைக்கு செல்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது. இதோடு, வருகிற போட்டிகளில் கலந்து கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்” என்கிறார் மகேஸ்வரி.

எந்த தடைகளையும் உடைத்தெறியத் தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்கிற மந்திரம் மட்டுமே முக்கியம். முயன்று பார்க்கும் போது உங்கள் இன்னல்கள் பஞ்சாய் பறக்காவிட்டாலும், ‘முயற்சி செய்யும் வரைதான் நாமெல்லாம் மனிதர்கள்’ என்ற வைரமுத்துவின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை உணர்வோம்.



Post a Comment

Protected by WP Anti Spam