By 26 August 2020 0 Comments

உணவுக்கும் நரம்புக்கும் உள்ள தொடர்பு!! (மருத்துவம்)

‘உணவே மருந்து’ என்பது திருமூலர் வாக்கு. நம் தமிழர் மரபில் உணவு அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவினியாக கருதப்பட்டு வருகிறது. இயற்கை உணவு முறையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதன் மூலம் உடல்நலத்தை பேணி பாதுகாக்க முடியும் என்றும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்துள்ளனர்.

இந்தியாவைப் பொருத்தவரையில் சமையல் முறைகள் மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். ஆனால், அடிப்படையில் அந்தந்த பகுதி பருவநிலைக்கேற்ப இயற்கை சார்ந்தே உணவுப்பழக்கங்கள் இருக்கும். ஆனால் இன்றோ சைனீஸ், இத்தாலி என வெளிநாட்டு உணவகங்கள் பெருகி உள்ளன.

சத்துக்காக அன்றிச் சுவைக்காக உண்ணும் இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் நோய்களுக்கான ஆதாரமாக மாறிவிட்டது. அதுமட்டுமல்லாமல், நீண்டநாள் வைத்து பயன்படுத்தக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடனடி தேவைக்காக விரைவு உணவுகள் பெரும்பாலான உபயோகத்தில் உள்ளன. உணவே மருந்து என்ற நிலைமாறி ‘மருந்தே உணவு’ என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இதற்கு முக்கியமான காரணம் உணவுக்கும் நரம்புகளுக்கும் ஆன தொடர்பு. முதலில் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்…

நமது உடல் செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமான வைட்டமின்களில் மிக முக்கியமானது B12. அதாவது, சிவப்பு ரத்த செல்களை உருவாக்குதல், நரம்பு மண்டலத்தில் நரம்புகளைச் சுற்றி இருக்கும் உறையை(Layer) உருவாக்குதல், டி.என்.ஏ உருவாக்கம், உடலுக்கு ஆற்றல் அளித்தல் என்ற உடலின் பல செயல்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளது இந்த B12 ஊட்டச்சத்து.

வயது வந்த நபர் ஒருவர், ஒரு நாளைக்கு 3 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் B12 ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் B12 பெரும்பாலும் மீன், முட்டை, கோழி, ஆடு, பால் மற்றும் பால் தயாரிப்புகள் ஆகியவற்றிலேயே உள்ளன. தாவர உணவுகளை மட்டும் உட்கொள்ளும் தூய சைவ உணவு பழக்கம் உடையவர்கள், குறிப்பாக வீகன் டயட் என்று சொல்லக்கூடிய பால் சார்ந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு அதிகமாக காணப்படுகிறது.

‘எனக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கால்களில் எரிச்சலான உணர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்களில் சுருக்கென்று குத்துவதைப் போன்று உணர்வு தென்பட்டது. ஓரிரு மாதங்களில் கால்கள் சுத்தமாக மரத்துப் போய்விட்டது. நடந்தால் மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முகம் கழுவும்போது கண்ணை மூடினால் நிலை தடுமாற்றம் ஏற்படுகிறது.

கடந்த இரு மாதங்களாக என்னால் நடக்கவும் முடியவில்லை. என் கால்கள் இறுக்கமாக உள்ளன. காலை எங்கே வைக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்று சமீபத்தில் ஒரு பெண்மணி அடுக்கடுக்காக தன் பிரச்னைகளைக் கூறினார். அவருக்கு முழு உடல் பரிசோதனை
மற்றும் அவரது ரத்தத்தை பரிசோதித்ததில், அவருக்கு பி12 வைட்டமின் சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருவருக்கு சராசரியாக ரத்தத்தில் 250 முதல் 900 mg/ml வரை இருக்க வேண்டிய பி12 அளவு அவருக்கு 160 mg/ml அளவுதான் இருந்தது. அவரது சைவ உணவு முறை இதற்கான முக்கிய காரணம். முதலில் கால்களில் உள்ள உணர்ச்சி நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதால் எரிச்சல், குத்தல், மரமரப்பு ஆகியவை ஏற்பட்டன. பின்பு முதுகு தண்டுவடத்தில் தொந்தரவு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியவில்லை. கால் பாதம் எங்கு வைக்கிறோம் என்ற உணர்வுகளும் இல்லாமல் போனது.

தண்டுவடத்தில் உணர்வு நரம்புகள் சிறுசிறு குழுக்களாக பிரிந்திருக்கும். தொடு உணர்வு, அழுத்த உணர்வு ஆகியவற்றை கடத்தும் நரம்புகள் ஒரு குழுவாகவும் வலி, வெப்பம், குளிர் ஆகிய உணர்வுகளைக் கடத்தும் நரம்புகள் ஒரு குழுவாகவும், நம் கை எங்கே உள்ளது, நமது கால் மடங்கி உள்ளதா, தலை திரும்பி உள்ளதா என்று உடலின் அசைவுகளை கடத்தும் நரம்புகள் ஒரு குழுவாகவும் தண்டுவடத்தில் அமைந்திருக்கும். இந்த நரம்புக் குழுக்கள் நமது கை மற்றும் கால்களில் இருந்து உணர்வுகளை உள்வாங்கி தண்டுவடம் வழியாக மேலெழும்பி மூளை வரை செல்லக்கூடியன.

B12 வைட்டமின் சத்து குறைபாட்டினால் இந்த நரம்பு குழுக்களில் பாதிப்பு ஏற்பட்டு உணர்வுகள் அற்றுப் போய்விடுகிறது. நடக்க முடியாமலும் போகிறது. இதனை முறையாக கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொண்டால் பூரணமாகக் குணப்படுத்த முடியும். தாமிரம் அல்லது செப்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நெடுங்காலமாக நம் முன்னோர்கள் கூறி வந்த நம்பிக்கையாகும். பானை வடிவத்தில் உள்ள செப்பு பாத்திரத்தில் நம் தாத்தா, பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிரம் நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டது, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது, மூளை நரம்புகளுக்கும் மற்றும் கை, கால்களில் உள்ள நரம்புகளின் செயல்திறனுக்கும் உதவுகிறது.

வயிற்றின் செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்தசோகை உண்டாவதை தடுப்பதற்கும் தாமிரம் முக்கிய பங்காற்றுகிறது. இவை அனைத்தும் அறிவியல் சார்ந்த உண்மைகள். உணவு பற்றாக்குறையினால் தாமிரச்சத்து குறைபாடு ஏற்படுவது என்பது அரிதான ஒன்று. ஏனெனில், பல்வேறு உணவு வகைகளில் தாமிரச்சத்து மிகுந்து காணப்படுகிறது. குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், செரிமான குறைபாடு உள்ளவர்களுக்கு தாமிரச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தாமிரச்சத்து குறைபாடு ஏற்பட்டால் ரத்தசோகை உண்டாகலாம்.

கை, கால்களில் உள்ள உணர்வு நரம்புகளிலும், தண்டுவடத்திலும் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாமல், நடக்க முடியாமல் போகலாம். கால்களில் மதமதப்பு, எரிச்சல், குத்தல் போன்ற உணர்வு மாறுபாடுகளும் ஏற்படலாம். சரியான சிகிச்சைகளின் மூலம் இதனை குணப்படுத்த முடியும். மற்றொரு முக்கிய ஊட்டச்சத்தான வைட்டமின் E முட்டை, செக்கில் ஆட்டிய எண்ணெய், பாதாம், சோயா, அவகேடா போன்ற உணவுகளில் அதிகமாக காணப்படும்.

வைட்டமின் E பற்றாக்குறையினால் சிறுமூளையில் உள்ள நியூரான்களில் பாதிப்பு ஏற்பட்டு நிற்பதில் தடுமாற்றம், நடப்பதில் தடுமாற்றம், ஒரு செயலைச் செய்யும்போது கைகளில் நடுக்கம், பேச்சு குழறுதல், கால்களில் உணர்வின்மை ஆகியவை ஏற்படலாம். வைட்டமின் E மாத்திரையாகவும், சிரப்பாகவும் கிடைக்கிறது. இந்த சத்து குறைபாடு உள்ளவர்கள் அதனை சப்ளிமென்டாக எடுத்துக் கொண்டால் சிறுமூளை மற்றும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பினை சீராக்க முடியும்.

கருத்தரித்து இரண்டு மாதங்கள் ஆன ஒரு பெண் சமீபத்தில் சிகிச்சைக்கு வந்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு இதுதான் முதல் கர்ப்பம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி அளவுக்கதிகமாக அவருக்கு இருந்தது. எது சாப்பிட்டாலும் வாந்தி வந்தது. இதனால் அவருக்கு உடலில் சோர்வு ஏற்பட்டு, திடீரென்று ஒரு நாள் அவர் மனநிலை பிறழ்ந்தவர் போல் பேச ஆரம்பித்துவிட்டார்.

அவரது நடையில் தடுமாற்றம் ஏற்பட்டு, அவருக்கு பார்வை இரண்டிரண்டாக தெரிந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில் அதிகமான வாந்தியினால் அவருக்கு வைட்டமின் B1 சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. அதனால்தான் அவர் புத்தி மாறாட்டம் உள்ளவர் போல் பேசுகிறார் என்பது தெரிய வந்தது.

சராசரியாக ஒருவருக்கு தினமும் 1.2mg (தையமின்) வைட்டமின் B1 தேவைப்படுகிறது. அதுவே, கர்ப்பகாலத்தின் போதும், பாலூட்டும் பெண்களுக்கும் B1 வைட்டமின்(தையமின்) தேவையானது அதிகமாகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து வாந்தி ஏற்படுமாயின் B1 வைட்டமின் சத்து குறைபாடு இன்னும் அதிகமாகிறது. இதனால் குழப்பம், நடையில் தடுமாற்றம். கண்விழி அசைவதில் குறைபாடு ஆகியவை ஏற்படுகிறது. இதனை வெர்னிக்கிஸ் என்செபலோபதி(Wernicke’s encephalopathy) என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடுகிறோம். இதனை கண்டறிந்து B1 வைட்டமினை உடனடியாக உடலில் செலுத்தினால் அவரை முழுமையாக குணப்படுத்த முடியும்.

சர்க்கரை நோயை அடுத்து பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைவது, மதுவினால் கால் நரம்புகளில் ஏற்படும் கோளாறே. 12.5% முதல் 48.5% வரை ஆல்கஹால் குடிப்பவர்களுக்கு இவ்வாறு கால்களில் தொந்தரவு ஏற்படுகிறது. கால்களில் எரிச்சல், வலி மிக அதிகமாக இருக்கும். தொந்தரவு சற்று அதிகமானால் நடையில் தடுமாற்றம் ஏற்படும். இவர்கள் மது குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டு, கால் நரம்புகளுக்கு என பிரத்தியேகமாக மருந்துகள் எடுத்துக் கொள்வது அவசியம்.

கடந்த 10 வருடமாக மதுப்பழக்கம் கொண்ட ஆட்டோ டிரைவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவரது நண்பரின் வீட்டு விசேஷத்தில் ஒரு நாள் அளவுக்கதிகமாக குடிக்கிறார். மறுநாள் முதல் அவரால் நிதானமாக இருக்க முடியவில்லை; குழப்பமாக பேச ஆரம்பிக்கிறார்; தான் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வுகள் குறைந்து போகிறது.

அவரது உறவினர்களையோ அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. நேராக நடக்க முடியவில்லை, நிற்க முடியவில்லை, ஒருவரின் உதவியோடே தடுமாற்றமாக நடக்க முடிகிறது, வார்த்தைகள் சரி வர பேச முடியவில்லை குழறுகிறது. கண்களால் சரி வர பார்க்க இயலவில்லை, இரண்டிரண்டாக தெரிகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

டாக்டர்கள் அவரை பரிசோதித்த பின்பு சில ரத்த ஆய்வுகள் செய்தனர். ஆய்வில் குடியினால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அவருக்கு வைட்டமின் B1 சத்து குறைபாடு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மூளை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ததில் மூளையின் முக்கிய பகுதிகளான சிந்திக்கும் திறன், நினைவாற்றல், கண்விழி நகர்வதற்கான மூளையில் இருக்கும் பகுதி ஆகியவற்றில் வைட்டமின் B1 குறைபாட்டினால் மாறுதல்கள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மருத்துவரீதியாக முன்பு கூறியபடி இதனை வெர்னிகீஸ் என்கபளோபதி என்று கூறுவோம். சரியான மருத்துவத்தின் மூலம் இந்த தொந்தரவிலிருந்து மீண்டு வர முடியும். சிகிச்சை அளிக்காவிடில் அடுத்தபடியாக சைகோசிஸ்(கோர்சகாவ்ஸ்) என்று சொல்லக்கூடிய மீண்டு வர முடியாத மனநோய்க்குத் தள்ளப்படுவர்.

சராசரி மக்களை விட மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதால் உணவு செரிக்கும் திறன் குறைந்துபோகிறது. இதனால் உணவில் இருக்கும் சத்துக்களை நமது வயிறு, குடல் வழியாக உள்ளிழுக்கும் தன்மை குறைந்துவிடுகிறது(Malabsorption). சராசரியாக மனிதருக்கு, அதாவது தினமும் 2000 கலோரி சாப்பிடுபவர்களுக்கு 0.66mg வைட்டமின் B1(தயமின்) தேவைப்படுகிறது.

உலக சுகாதார மையம் தினமும் ஒரு மில்லிகிராம் அளவாவது B1 வைட்டமின் (தயமின்) நமது உணவில் உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. முளை கட்டிய பயிறு, தானியங்கள், கோதுமை, நட்ஸுகள், கீரை வகைகள், மீன் மஸ்ரூம், வாழைப்பழம், உலர்ந்த திராட்சை ஆகியவற்றில் வைட்டமின் பி1 அதிகமாக உள்ளது.

எனவே, உடல்நலத்துக்குப் பொருந்திய உணவு எது? பொருந்தா உணவு எது? என ஆராய்ந்து, தெளிந்து உணவு முறையை வகுத்துக் கொண்டால் உடலுக்கு ஊறுசெய்யும் நோய்கள் நம்மை அண்டாது.Post a Comment

Protected by WP Anti Spam