By 20 August 2020 0 Comments

தவறி விதைக்கப்பட்ட விதைகளை நல்ல விளைநிலங்களுக்கு எடுத்துச் செல்வோம்!! (கட்டுரை)

நாட்டார் பாடல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலொன்று வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. என்னுள்ளே நூலாசிரியருக்கு நன்றி கூறிக்கொண்டு, ஆர்வத்துடன் தாள்களை புரட்டி வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்த்துரை செய்தியுடன், எனக்கும் நூலுக்குமான தொடர்பினை துண்டித்து விட்டேன்.

“கல்வியறிவில்லா பாமர மக்களும் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் திழைத்து தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமே நாட்டார் பாடல்கள் ஆகும்” என்று ஆரம்பமாகும் வாழ்த்துரை எனக்கு என்னவோ அது வாழ்த்துரை போன்று தோன்றவில்லை. இவ்விடத்தில் நூலாசிரியரை நான் குறை கூறவில்லை. அவருடைய ஆர்வம் எம் எதிர்காலத் தலைமுறைக்கு சிறந்த ஆவணமாகும். ஆனால் வாழ்த்துரை ஆரம்பம் எதிர்காலம் தவறான வழிநடத்தலுடன் சென்று விடுமோ என்ற அச்சம் என்னுள்ளே தோன்றியது.

கல்வியறிவில்லா பாமர மக்கள் என்றால் யார்? என்று கேட்டுக் கொண்டு, அன்றே அதற்கு அர்த்தம் தேடுவதை முழு நேர வேலையாக்கிக் கொண்டேன். பாமரர் என்ற சொல்லுடன் தொடர்புபட்ட சொற்களை களஞ்சியப்படுத்தினேன். அவற்றுள் சில முட்டாள், அறிவிலான், மந்தையன், கனகதர், மலினமுகன், பிசாசு, முசு, கொடியவன், கொடியபிறவி, அடித்தட்டு, கீழ்மக்கள், இழிந்தோர், பட்டிக்காடு, நாட்டார் என்று பலவாறான பொருள் கண்டு வியப்படைந்தேன்.

கல்வியறிவு என்று எதை கூறுகின்றார்கள்? அதற்குள் ஆதிக்கம் செலுத்தும் அறிவுப்பண்பாடு எது? கல்வியறிவு இல்லாத பாமர அல்லது நாட்டுப்புற மக்கள் என்று யாரை அழைக்கின்றனர்? 19ம் நூற்றாண்டில் ஜரோப்பிய நாடுகளில் கழடம என்ற சொல் விவசாய மக்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அதன் ஆக்கத்திரிபு படிப்படியாக படிப்பறிவு இல்லாத மக்கள் எனும் தொனியுடன் ஜரோப்பிய நாடெங்கும் ஒலித்தது. காலப்போக்கில் அதன் ஆதிக்க செயல் விளைவு மேற்கண்ட பெயர்கள் திரிபுக்குக் காரணமாயிற்று.

உலகின் பல பாகங்களில் அதிகார மேலாண்மையால் பல இனக் குழுக்கள் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவ் இனக் குழுக்களின் சுயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. ஆதிக்க காலனியத்தின் வருகையோடு காலனிய மரபுகள், மரபுரிமைகள் பேணும் பண்பாடு அணிதிரண்டது. இதனால் கிராமிய அல்லது பழங்குடியினர் சிறுமைப்படுத்தப்படும் பண்பாடு தோற்றம் பெற்றது என்றேதான் கூற வேண்டும். இங்கு ஆதிக்க காலனியர் மேலைத்தேயவர்கள் மாத்திரமல்ல, பிராமணியமயமாக்கர்களும் ஒருவகை காலனியர்கள்தான். இவர்களின் வருகையினால் நலன்களுக்குக் குறைவில்லை எனினும் அவ் நலன்கள் பெறுகின்றவர்கள், அனுபவிக்கின்றவர்கள் யார் என்று பார்த்தால் அது நிச்சயமாக இவர்கள் உருவாக்கிய கைப்பொம்மைகள்தான்.

காலனிய செயலூக்கம் எம்மவரை பல வழிகளில் திசைதிருப்பியுள்ளது. நாம் கற்கும் பாடங்கள், உடுத்தும் உடைகள், பேசும் மொழி, உண்ணும் உணவு, எமது சிந்தனைகள் அனைத்துமே அவர்கள் உடையது ஆக்கப்பட்டுள்ளது. உடல் நமது உள்ளம் அவர்களது என்ற ஒரு நிலைப்பாட்டில்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். காலனிய வருகை மத்தியதர வகுப்பு உருவாக்கத்துடன் பண்பாட்டுக் கலப்புகள், கலப்படங்கள் என்று பல வித மாறுதல்களுடன் நாகரிக மெத்தனம் குடியமர்ந்தது. இதிலிருந்து நம் மரபுகளை பிரித்தறிய முடியாதளவிற்கு எம் புத்திகள் மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்றேதான் கூற வேண்டும். ஆதிக்க நாடுகளுக்கு சுதந்திர சடங்கு வைபவம் நிகழ்த்தி விட்டு, ஆண்டு தோறும் நினைவுச் சடங்கு செய்வதில் இருந்து அவர்களின் வெற்றிவாகை நம் நாடுகளில் குடியமர்ந்துள்ளமை தெளிவாகின்றது.

கிராமப்புற மக்களே ஒரு நாட்டின் தகவலறி சாதனங்களாகக் கொள்ளப்படுகின்றனர். இங்கிருந்துதான் நாகரிகம், பண்பாடு, வாய்மொழி வரலாறு, வசைபாடுதல், விடுகதைகள், பழமொழிகள், கலைகள்( ஆற்றுகைக் கலை, சமயற்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை), இலக்கியங்களின் ஊற்றுப் பெருக்கெடுக்கின்றது.

கிராமிய மக்கள் குழுமங்களிடையே மண்ணைக் குழைத்து, வனைந்து மட்பாண்டம் செய்பவர்கள், மண்ணைக் கொத்தி, ஏர் பூட்டி, உழுது விவசாயம் பார்ப்பவர்கள், ஏலேலோ பாட்டுப்பாடி மீன் பிடிக்கச் செல்பவர்கள், நூல் நூற்று நெசவு நெய்பவர்கள், வெறும் கல், உளி கொண்டு சிற்பம் செதுக்குபவர்கள், ஓலைகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்பவர்கள், சூழலில் கிடைக்கும் மூலிகைகள் கொண்டு மருத்துவம் பார்ப்பவர்கள், சூழ்நிலைக்கேற்ப தம் தொழில்களைச் செய்பவர்கள் என்று பல குழுக்கள் உளர். இவர்கள் தமக்கும் இயற்கைக்கும் இடையே நெருக்கமான உறவினைப் பேணி தம் தொழிற் துறைகளை செய்தவர்கள். அவர்களின் தொழில்களுக்கேற்ப சாதிகளாகப் பிரிந்து வேற்றுமை பாராட்டுபவர்களும் உளர். இது இன்னொரு முறையில் ஆராயப்பட வேண்டும். இத்தகைய அம்சங்களைக் கொண்டு விளங்கியவர்கள் மத்தியில், காலனியமயமாக்க செயற்பாட்டாளர்கள் செயல்வழி மூலமாக அவதூறு ̀பேசப்பட்டு, சட்டங்கள் வரையறைகள் கொண்டுவரப்பட்டு கிராமிய மக்களை படிப்படியாக படியவைத்துள்ளனர். அப்படிவுகள்தான் இன்று பாமரமயமாக்கப்பட்டுள்ளது என்பதில் ஜயமில்லை.

முன்னோர்களை இழிவானவர்கள் என்று பார்ப்பதற்கான பார்வை நமக்கு எங்கிருந்து அருளப்பட்டுள்ளது என்பதில் தெளிவானவர்களாக நாம் இருக்க வேண்டும். படித்தவன் முதலாளி, தொழிலில் நீண்ட கால அனுபவம் கொண்டவன் தொழிலாளி, உம்- பரம்பரையாக விவசாயம் செய்தவர்களுக்கு, விவசாயபீட பட்டம் பெற்றவன் முதவாளி. எங்கிருந்து வந்தது இந்தப்பண்பாடு? படிக்காவிட்டால் ஆண்களாக இருந்தால் மாடு மேய்க்க போ, அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் அல்லது தொழிலுக்குப் போ, பெண்களாக இருந்தால் வீட்டில் இருந்து சட்டிபானை கழுவு, சமையல் வேலைகளைப் பார், படிக்காவிட்டால் சோத்துக்கு மாறடிக்கப்போறா, என்பவை எல்லாம் நம்மத்தியில்; புழக்கத்தில் உள்ள கதையாடல்கள். இதற்கான பின்புலத்தை காலனியமயமாக்கம் செய்துள்ளது. பாலர் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகங்கள் வரை நமக்கு போதிக்கப்படும் பாடங்கள் நமக்கு எதை கற்றுத்தருகின்றன? என்பதுபற்றி சிந்திக்க வேண்டும். மேலைத்தேய கற்றல் முறைகளையும், மொழிகளையும் கட்சிதமாக பிடித்துக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் நிர்வாக நடவடிக்கைகள் நாலாபக்கமும் நடந்து கொண்டிருக்கின்றது. அதை விட்டு வெளியில் வந்தால் பிழைக்கத் தெரியாத ஒரு பண்பாட்டை நம் மத்தியில் காலனியம் நிலைக்க வைத்துள்ளது. எனவே சட்டங்கள் வரையறைகள் அனைத்தும் காலனியம் சார்பானதாக வினையாக்கப்பட்டுள்ளது. இதற்குள் அகப்படாதவர்கள் படிப்பறிவில்லாத நாடோடிகளாக்கப்பட்டுள்ளனர்.

நவீன மயமாக்கம் என்ற பெயரில் நம் அடையாளங்கள் பறிக்கப்பட்டுள்ளன. நவீனமயமாக்கம் எப்போதும் தொழிற்துறை, வசதிவாய்ப்புக்கள் சார்ந்தே அமைக்கப்படுகின்றது. இதனால் நம் பாரம்பரிய விடயங்கள் தரம் குறைக்கப்பட்டு ஏனையவை தரமாகதாக்கப்படுகின்றது. ஊர்களில் உள்ள அண்ணாவிமார்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களால் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்க முடியாது என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். இவ்வாதாட்டத்தின் பின்புலம்தான் எம் அறிவுப்பண்பாடா? இன்று வகுப்பு மட்டங்கள் உயர்வு, பட்டங்கள் பெறுதல் எல்லாமே பரீட்சையை மையப்படுத்தியே இருக்கின்றது. இதனால் மாணவர்கள் வறையறுக்கப்பட்ட பாடப்புத்தகங்களை மட்டும் படித்து விட்டு இலகுவாக சித்தி அடைந்து விடுகின்றனர். சித்தியடையாதவன் நிலை என்ன? நாங்கள் படிப்பாளிகள் என்று சொல்வதற்கான படிப்பு நமக்கு எதைத் தந்திருக்கின்றது? பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நமக்கு எதைப் போதிக்கின்றார்கள்? நமது குறிக்கோள், தூரநோக்கு எதை நோக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது? கண்டதும் கற்று பண்டிதராகுங்கள் என்பது நம் முன்னோர் கூற்று, ஆனால் தந்ததைக் கற்று கிணற்றுத் தவளை ஆகும் செயற்பாடுதான் இன்று நிலைகண்டுள்ளது.

எங்களுடைய அறியாமைகளினால் நாங்களே நமது பாரம்பரிய செயல்களை இழிவுபடுத்திவிட்டு, எங்களைச் சேர்ந்தவர்களை பாமரர், படிக்காதவர் என்று கூறுவது வருந்தத்தக்கது. தங்களையும் காயப்படுத்தாமல் தங்கள் தொழில்களுக்கும் களங்கம் ஏற்படாமல் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் பாமரர் என்றால், தங்களையும் காயப்படுத்தி தம் தொழில்களிலும் களங்கத்தை வருவித்துக் கொண்டு வாழ்பவர்கள்தான் படித்தவர்களா? இவர்களுக்கிடையில் இருக்கும் வித்தியாசம் இதுவாகக் கூட இருக்கலாம். இலகுவாகக் கிடைப்பதை பொருட்படுத்தாமல் பல போராட்டங்கள், தடைகளுக்குப் பின் கிடைப்பதுதான் சிறந்தது என்ற மனோபாவம் கூட காலனியனின் ஒருவகை சுத்துமாத்து வேலை என்றேதான் கூற வேண்டும்.

பொதுவாக பார்க்கின்ற போது செம்மையானவை அறிவுப்பண்பாடு கட்டமைத்தவையாகவும், செம்மையற்றவை பாமரத்தன்மை ஆக்கப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது. நம் எதிர்காலம் சரியான வழிநடத்தலுடன் செல்ல வேண்டும். நம் உரிமைகள் முறையாக நமக்கு கிடைக்க வேண்டும். காலனிய செயற்பாட்டின் விளைவாக நமக்கு தரப்பட்ட அறிவுப் பண்பாட்டில் இருந்து கொண்டு நாங்கள்தான் அறிவாழிகள் ஏனையவர்கள் அறிவற்றவர்கள் என்று சிறுமைப்படுத்தும் மனோபாவத்தை விடுத்து, அடக்கு முறைகளுக்கு எதிராக அதிகாரத்தை கையில் எடுப்பவர்களை நம் மத்தியில் இருந்து வெளிக்கொணர்வோம். தவறி விதைக்கப்பட்ட விதைகளை நல்ல விளைநிலத்துக்கு எடுத்துச் செல்லும் எதிர்காலத்தை உருவாக்குவோம்.Post a Comment

Protected by WP Anti Spam