By 28 August 2020 0 Comments

மகுடம் சூடிய திருநங்கை!! (மகளிர் பக்கம்)

ரயில்களில் கைதட்டி காசு வசூலித்து தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் திருநங்கைகளை கேலி பொருட்களாக மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கை தன்னை கேலி கிண்டல் செய்தவர்களை பொருட்படுத்தாமல் தனது திறமையால் படிப்படியாக உயர்ந்துள்ளார். இன்று பிரபல ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் நிறுவனமான சுவிக்கியில் முதன்மை தொழில்திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘‘எனது இந்த சாதனைக்கு பெற்றோரின் அரவணைப்பும் ஆதரவும் தான் முழு காரணம். ஆணாக பிறந்தாலும், என்னுள் பெண்மை தன்மை தலைதூக்கியது. என்னை பலர் கேலி கிண்டல் செய்தார்கள். ஒரு பக்கம் மனம் வலித்தாலும், என் முழு கவனத்தை படிப்பில் செலுத்தினேன். கல்லூரி முடித்ததும், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வானேன். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அங்கு எங்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கின்றனர்.

யாரும் எங்களின் நிலையை கண்டு கிண்டல் செய்வதில்லை. எங்களையும் சக மனிதர்கள் போல் மதித்தனர். இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு நான் முழுமையாக சம்யுக்தாவாக மாறினேன். பிறகு நான் கோவைக்கு திரும்பினேன். பெண்ணாக மாறிவிட்டேன் என்று என்னை நிராகரிக்காமல், என்னை பெண் பிள்ளையாகவே பாவிக்க ஆரம்பித்தனர். இந்தியா திரும்பிய நான் ‘டவுட் ஸ்டூடியோ’ என்ற பெயரில் ஆடை நிறுவனம் தொடங்கி திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறேன்.

இதன் மூலம் என் போன்ற திருநங்கை சகோதரிகள் கவுரவமாக வாழ்ந்து வருகிறார்கள்’’ என்றவர் இவர்கள் யாரும் பாலியல் மற்றும் பிச்சை தொழிலை விரும்பி செய்வதில்லை என்றார்.‘‘எங்களின் உடலால் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. எங்களை அவமானமாக தான் பார்க்கிறார்கள். அதனால் தான் பல திருநங்கைகள் அவர்களின் குடும்பத்தினால் நிராகரிக்கப்படுகிறார்கள். முறையான கல்வி இல்லை என்பதால், அதற்கு நிகரான வேலையும் கிடைப்பதில்லை.

வாழ வேண்டும் என்பதால் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். எல்லாவற்றையும் விட சமூகமும் எங்களை புறக்கணிக்கிறது. மேலை நாடுகளில் இது அப்படியே தலைகீழ். அங்கு எங்களை மூன்றாம் பாலினத்தவராக ஒருபோதும் பார்த்ததில்லை. சக தோழியாக பார்த்து வேலை தருகின்றனர். திருநங்கைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு மனோரீதியான ஆலோசனைகளை வழங்க அரசு முன்வர வேண்டும். திருநங்கைகளுக்கு படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கினால் வீட்டிற்கு பயந்து ஓடி, தடம் மாறுவது தடுக்கப்படும்’’ என்று தன் சமூகத்தின் மொத்த குமுறலை வெளியிட்டார். தற்போது உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் சம்யுக்தாவின் பிடித்த உணவு சாம்பார் சாதமாம்.Post a Comment

Protected by WP Anti Spam