வரலாறு படைத்த‘திங் எக்ஸ்பிரஸ்!’!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 8 Second

செக்குடியரசில் நடந்த சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் 19 நாட்களில் அடுத்தடுத்து 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ஹிமா தாஸ்.

19 வயது ஹிமா தாஸ் அஸ்ஸாம் மாநிலம் நாகான் நகரில், திங் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா ஒரு விவசாயி. அப்பாவுடன் இணைந்து தங்கள் விவசாய நிலத்தில் ஏர் உழுவது, நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல் என விவசாய வேலைகளை செய்து வந்துள்ளார். துவக்கத்தில் கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்ட ஹிமா, பள்ளிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.

சரியான வாய்ப்புக் கிடைக்காமல் தவித்த ஹிமாவின் வேகத் திறன் மற்றும் அவரின் உடல் வாகை அறிந்த அவரது பயிற்சியாளர் தடகளப் போட்டிகளில் பங்கேற்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கால்பந்து விளையாட்டில் இருந்து தடகள ஓட்டத்திற்கு தனது பாதையை மாற்றி இருக்கிறார் ஹிமா. ஏற்கனவே கால்பந்து போட்டிகளில் பங்கேற்று ஓடி பயிற்சி எடுத்திருந்ததால், ஓட்டம் ஹிமாவுக்கு சுலபமாக வந்தது. முதலில் மாவட்ட அளவில் நிகழ்ந்த போட்டிகளில் பங்கேற்றவரின் வேகத்தைப் பார்த்த இவரின் பயிற்சியாளர், ஹிமாவுக்கான மொத்த செலவையும் தானே ஏற்று பயிற்சியினை வழங்கியிருக்கிறார்.

கடந்த ஆண்டு முதல் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார் ஹிமா தாஸ். தொடக்கத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் பங்கேற்றவர், 400 மீட்டரிலும் கவனம் செலுத்தியுள்ளார். 2018 ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த 400 மீ தடகளப் போட்டியில் கலந்துகொண்டு 6 வது இடத்தைப் பிடித்துள்ளார். 18 மாத கடுமையான பயிற்சிக்குப் பின், இந்த ஆண்டின் முதல் சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்ற ஹிமா தாஸ் 200மீ ஓட்டப் பந்தயத்தில், பந்தய தூரத்தை 23.65 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 23.97 விநாடியிலும், 3வது போட்டியில் 23.25 விநாடியிலும், 4 வது போட்டியில் 23.25 விநாடியிலும் எனத் தான் பங்கேற்ற 4 போட்டிகளிலும் தொடர் தங்கம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து பின்லாந்தில் நிகழ்ந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான 400மீ தடகளப் போட்டியிலும் 52.09 விநாடிகளில் கடந்து 5வது தங்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அஸ்ஸாம் மாநிலத்தின் ‘திங் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஹிமா தாஸ், சர்வதேசப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை அந்த மாநிலத்திற்கு பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில மக்களுக்கு தன் மாத வருமானத்தில் பாதியை கொடுக்கும் முடிவில் இருக்கிறார். ஹிமா தாஸ் குறித்து அவரது பயிற்சியாளர் கூறுகையில், ‘‘ஜகார்த்தா ஆசியப் போட்டியில் இவரை இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் ஹிமா உலகத் தடகளத்திலேயே தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்’’ எனத் தெரிவித்துள்ளார். 2020ல் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவிற்காகத் தங்கம் வெல்வதே ஹிமாவின் கனவாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மதுக்கடை மங்கை !! (மகளிர் பக்கம்)