By 31 August 2020 0 Comments

வராத தண்ணீருக்காக காத்திருக்கும் நாசிவன்தீவு கிராம மக்கள்!! (கட்டுரை)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நாசிவன்தீவு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையால் வருடம் முழுவதும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக காணப்படுவது குடிநீர். அந்த குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு தவம் இருக்க வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கே எட்டு கிலோமீற்றர் தொலைவில் கிழக்கே கடலும் தெற்கு வாழைச்சேனை ஆறும் மேற்கு மயிலம்கரைச்சை ஆறும் வடக்கு வட்டவான் ஆற்றினாலும் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட கிராமமே நாசிவன்தீவு கிராமமாகும்.

இக் கிராமம் யுத்தம் மற்றும் சுனாமியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமமாகும். இக்கிராமத்தில் 435 குடும்பங்களில் 1302 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 320 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், 877 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இங்கு தென்னை, பனை மற்றும் கண்டல் தாவரங்கள் அமைந்த ஒரு அழகிய தீவாகும். இக் கிராமத்திற்கான பிரதான போக்குவரத்து மார்க்கம் நீர் வழியாகும். இங்கு பெரும்பாலான மக்கள் மீன் பிடித் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.

வறட்சி காலங்களில் அனைத்து கிணறுகளிலும் நீர் வற்றிக் காணப்படுவதுடன், அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கிணற்று நீரையே அந்த பிரதேச மக்கள் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறைந்த அளவு நீரே காணப்படுகின்றது. சில கிணற்று நீர்களில் உவர்ப்புத் தன்மை காணப்படுவதுடன், சில கிணறுகளின் நீரின் நிறம் சிவப்பு நிறமாகவும் காணப்படுகின்றது.

இக்கிராமத்தில் மே மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. மற்றைய காலத்தில் மழைபெய்தால் பயிர்களுக்கு நீர் கிடைக்கின்றது. ஆனால் குடிப்பதற்கு நீர் கிடைப்பது அரிதாகவே காணப்படுகின்றது.

நாசிவன்தீவு கிராமத்தை அண்டியுள்ள வாழைச்சேனை துறைமுகம் காணப்படுகின்றது. இக்கிராம மக்களின் குடிநீர் முற்றுமுழுதாக உவர் நீராக மாறிக் காணப்படுகின்றது. இதனை பருகுவதில் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை பிரதேச சபையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பௌசர் மூலம் நீர் வழங்குகின்றனர். அது இக்கிராமத்தில் உள்ள அனைவருக்கும் போதுமானதாக இல்லை. பாடசாலை செல்லும் மாணவர்களின் சீருடையை கழுவும் போது சில சீருடை குறுகிய காலத்தில் கிழிந்து விடுவதாகவும், சில சீருடைகள் காவி நிறத்தில் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் வீதம் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் எங்கள் பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரை எப்போது தான் நிரத்தரமாக பெற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்று தங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் பிறந்த காலம் தொட்டு உவர் நீரையே பருகி வருகின்றோம். எங்கள் பிள்ளைகளாவது எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்.
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நாசீவந்தீவு கிராம மக்களுக்கு ஏன் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அரசியல்வாதிகள் முதலில் எங்கு அவசியமாக தண்ணீர் தேவைப்படுகின்றதோ அந்த இடத்திற்கு முதலில் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்வர வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.

நாசிவந்தீவு கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை முற்றுமுழுதாக தீர்ப்பதற்கு குழாய் குடிநீர் திட்டத்தை இக்கிராமத்திற்கும் வழங்கினால் மாத்திரம் மக்களுக்கு நன்மை பயக்கும். இல்லாவிடில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட சமூகமாக இன்னும் திகழக் கூடிய நிலைமை காணப்படும்.

எனவே தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்), மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கனாள கோ.கருணாகரன், இரா.சாணக்கியன், ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு அரசியல்வாதிகள் துரிதகதியில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை கொள்கின்றோம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாசிவந்தீவு கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? அல்லது எப்போது கிடைக்கும்? அல்லது மக்களின் கண்ணீரில் இருந்து தான் தண்ணீர் வருமா?Post a Comment

Protected by WP Anti Spam