By 4 September 2020 0 Comments

சிறுத்தைப் பொறி !! (கட்டுரை)

மனிதனுக்கு மாத்திரம் சொந்தமானது என்று பலராலும் நம்பப்படும் இந்தப் பூமியில், அனைத்து வகையான விலங்கினங்கள், தாவர இனங்கள், பூச்சி இனங்கள் போன்ற இதர உயிரினங்கள் அனைத்துக்கும் வாழ, சரி சமமான உரிமை உண்டு என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வலிமையான இனம், வலிமை குறைந்த இனம் என உதாசீனப்படுத்துவது, அதன் உரிமைகளை மறுப்பது, சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு, வீடு உள்ளிட்ட காட்டு விலங்குகளைத் துன்புறுத்துவது, கொலை செய்வது போன்றவற்றுக்கான தண்டனை குறித்து, இலங்கை அரசமைப்பின் சட்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு விலங்கின் உணவு, நீர், இருப்பிடம், உடற்பயிற்சியை மறுப்பதோ, தனிநபரின் விருப்பத்துக்கு ஏற்ப, நீண்டகாலம் அடைத்து வைப்பது, கட்டி வைப்பது தண்டனைக்குரியது. காட்டு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, காட்டு விலங்குகளை வளர்ப்பது, அவற்றைப் பொழுதுபோக்குப் பயன்பாட்டுக்காகப் பயிற்றுவிப்பது, விலங்குச் சண்டைக்கு ஏற்பாடு செய்வது, சிறைப்பிடித்தல், விஷமூட்டல், வேட்டையாடுதல் போன்ற அனைத்தும் இலங்கையில் தண்டனைக்குரிய குற்றங்களாகும். ஆனால், இலங்கையிலுள்ள பலரும், சட்டங்களைச் சரியான முறையில் அறிந்து வைத்திராமையும் அல்லது சட்டத்தை மதிக்காமையுமே, தற்போது மலையகத்தில் தொடர்ச்சியாக சிறுத்தைகள் உயிரிழந்து வருகின்றமைக்குப் பிரதான காரணமாகும் என்றால், அது மிகையாகாது.

காட்டு விலங்கு ஒன்றுக்குப் பொறி வைத்தல் என்பது, இலங்கை அரசமைப்பின் தாவர மற்றும் விலங்குகள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 30ஆம் பிரிவின் கீழ், தண்டனைக்குரிய ​குற்றமாகும். 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், 8 சிறுத்தைகள் இறந்துள்ளன. 2019ஆம் ஆண்டு முடியும் வரையான கடந்த ஐந்து ஆண்டுக் காலப்பகுதியில் மாத்திரம், சுமார் 32 சிறுத்தைகள் இறந்துள்ளனவென, தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஐந்து ஆண்டுகளுக்குள், ஹக்கல பகுதியிலேயே, மொத்தம் 17 சிறுத்தைகள், விஷ உணவு உட்கொண்டமையாலும் பன்றிப் பொறியில் சிக்கியும் இறந்துள்ளன.

சிறுத்தைகள் உயிரிழப்புக்கு மத்தியில், சமீபத்தில் கறுஞ்சிறுத்தையொன்றும் உயிரிழந்திருந்தது. கருஞ்சிறுத்தை இனம் என்பது, தனியான இனம் கிடையாது. இலங்கை, இந்திய நாடுகளில் குறைவாகக் காணப்படும் இந்தக் கருஞ்சிறுத்தையின் மரபணுவில் காணப்படும் மெலனின் அளவு அதிகமாக இருப்பதாலேயே, கரிய நிறத்துடன் காணப்படுகின்றன. இவை, அடர்ந்த இருண்ட காடுகளை அண்மித்த பகுதிகளிலே​யே வசித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், சில கருஞ்சிறுத்தைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தாலும், 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சிவனொளிபாதமலை மலைக்காடுகளில் உள்ள நல்லதண்ணி பகுதியின் தோட்டப்புறத்தில், கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனவிலங்கு கால்நடை வைத்தியர்களான மாலக்க அபேரத்ன, மனோஜ் அக்கலங்கவால் ஆகியோர் இணைந்து, தானியங்கி புகைப்படக் கருவி மூலம், இந்த சிறுத்தையை படம் பிடித்திருந்தனர். இந்தச் சிறுத்தை, வாழைமலை தோட்டப்பகுதியில் பொறியில் சிக்குண்ட பின்னர், இவர்கள் இருவராலுமே சிகிச்சையும் அளிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தது.

இறுதியாக, கண்டி, அம்பகஸ்தென்ன, தொலுவ பகுதியிலுள்ள தனியார்த் தோட்டமொன்றில், சிறுத்தையொன்று பொறியில் சிக்கி பலியாகியிருந்தது. இந்தச் சிறுத்தை, பொறியில் சிக்கியவுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், ஒன்றரை மணித்தியாலகத்தில் சம்பவ இடத்துக்கு வந்தபோதும், அந்தச் சிறுத்தை உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டது. வயிற்றில் பொறி சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட நுரையீரல் செயலிழப்பு, முச்சுத் திணறல், உயிர் அழுத்தம் ஏற்பட்டமையாலேயே, சிறுத்தை உயிரிழந்துள்ளது என, உயிரிழந்த சிறுத்தையைப் பிரேத பரிசோதனை மேற்கொண்ட டொக்டர் தாரக்க பிரசாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இலங்கையில் சிறுத்தைகள் இறப்பதற்கு, பொறி வைப்பதே பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இலங்கைச் சிறுத்தை என்பது, “பந்ரா பார்டஸ் கொட்டியா” என்று அழைக்கப்படுகின்றது. இது, இலங்கையை தாயகமாகக் கொண்ட சிறுத்தைத் துணையினமாகும். வனவிலங்கு வர்த்தகம், மனித – சிறுத்தை முரண்பாடு என்பவற்றால், இதன் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றமையால், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இச்சிறுத்தை இனத்தை அருகிய இனம் எனப் பட்டியலிட்டுள்ளது. சிறுத்தை இனம் என்பது, பாதுகாக்கப்படவேண்டிய இனம் என, வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இந்த நடவடிக்கைகள் எது​வுமே போதாது என்பதையே, கடந்த மாதங்களாக நடைபெற்று வரும் சிறுத்தை மரணங்கள் நிரூபித்து வருகின்றன. அத்துடன், எவ்வளவு செய்திகள் ​​வெளியாகி தண்டனைகள் வழங்கப்படாலும், மீண்டும் தொடர்ந்து நடைபெறுவதற்கான இந்தச் சிறுத்தை மரணங்கள், சட்டத்தின் பலவீனத்தால் நடைபெறுகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தங்களது விவசாயங்களை, பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கும் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை சிறுத்தைகளிடம் இருந்து பாதுகாப்பதற்குமாகவே, இந்த பொறி வைக்கப்படுகின்றது. பல பெருந்தோட்டங்கள் தற்போது காடுகளாகியுள்ள நிலையில், அல்லது காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தான் குறித்து வைத்துள்ள பகுதிகளில் வலம்வரும் சிறுத்தைகள், நாய் போன்ற வீட்டில் வளர்க்கும் பிராணிகளையே வேட்டையாடுகின்றன. இதனால், பிரதேசங்களில் வசிக்கும் எந்தவொரு மனிதருக்கும், இத்தனை காலமும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. மேலே குறிப்பிடப்பட்டன கருஞ்சிறுத்தையொன்று பிடிக்கப்பட்ட மஸ்கெலியாவின் வாழைமலை தோட்டத்தில், சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டமொன்றின் போது, 65 பொறிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை நீக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாகச் சிறுத்தைகள் உயிரிழந்து வருவதைத் தடுக்கும் முகமாக, வனவிலங்கு பாதுகாப்பாளர் டொக்டர் சுமித் பிலாபிட்டிய தலைமையில், மலையகத்திலுள்ள சில தோட்டங்களில், சிறுத்தைகள் தொடர்பான விழிப்புணர்வு, சிறுத்தைகள் தோட்டத்துக்குள் நுழைந்தால் என்ன செய்வது, பொறிகளைக் கண்டால் அவற்றை எவ்வாறு செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், இந்தச் செயற்றிட்டம் போதாது என்றும் மேலும் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே, சிறுத்தைகள் பொறியில் சிக்கி உயிரிழக்கும் நிலை கட்டுப்படுத்தப்படும் என, டொக்டர் பிலபிட்டிய தெரிவித்திருந்தார்.

கண்டால் விலகுங்கள்

சிறுத்தையொன்றை தேயிலைப் பகுதியிலோ காட்டுப் பகுதியிலோ எவராவது ஒருவர் இனங்கண்டால், அதை துரத்தவோ எதிர்க்கவோ எவரும் முயலக்கூடாது என்று பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, துரத்துவதன் மூலம் வந்த வழியே அவை சென்றுவிடும் என்றோ அல்லது அதனது இருப்பிடத்துக்கு சென்றுவிடும் என்றோ நினைப்பது மிகவும் தவறு. சிறுத்தைகள், இயற்கையாக மனிதர்களைத் தவிர்க்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், சிறுத்தையை எரிச்சலூட்டும் அல்லது அவற்றை சீண்டிவிடும் எந்தவொரு செயற்பாட்டையும் மனிதன் முன்னெடுக்காத வரைக்கும், சிறுத்தை, மனிதனைத் தவிர்த்தே இருக்கும். முக்கியமாக, சிறுத்தையொன்றைக் கண்டால், அது இருக்கும் இடத்துக்குச் செல்லாம், விலகியிருப்பதே சிறந்தது என்ற விழிப்புணர்வை, மலையகத்தில் ஏற்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

பொறி வைப்பதன் பாதிப்பு

பன்றிகளுக்கு என்று ஏற்கெனவே விவசாயிகளால் வைக்கப்பட்ட பொறிகள், தற்போது வீட்டுச் செல்லப் பிராணிகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சிறுத்தைகளுக்காகவும் வைக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றன. அநேகமாக, காட்டுப்பன்றிக்கு வைக்கும் இந்தப் பொறியில், சிறுத்தைகள் எளிதாகச் சிக்கிக்கொள்கின்றன. இந்தப் பொறி, சாதாரணமாக, விவசாயிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன், திறந்த சந்தையில் இதை சாதாரணமாகக் கொள்வனவு செய்யக்கூடியதாக உள்ளது. எனவே, இதைத் தயாரிப்பதற்கான கேபிளைக் கொள்வனவு செய்வதில் பல கட்டுப்பாடுகளை விதித்தால், சிலவேளை, பொறிகளை வீடுகளில் செய்வதைக் கட்டுப்படுத்த முடியும்.

இந்தப் பொறி வைத்தல் என்பதே, இலங்கையில் சட்டவிரோதமானது. இவ்வாறு பொறி வைக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டல் வேண்டும் என்பது, பல காலமாக காட்டு விலங்கு பாதுகாவலர்கள் உள்ளிட்ட சூழலியலாளர்களின் வேண்டுகோளாக இருந்து வருகின்றது. சிறுத்தைக்கு இரையாகும் விலங்குகள் காட்டில் கிடைக்காதபோதே, அவை, நாய்களைத் தேடி மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் ஊடுருவுகின்றன என்ற நிலை இருக்கும்போது, காட்டுக்குள் இருக்கும் மிருகங்களை வேட்டையாடுவதை மக்கள் தவிர்க்கும் பட்சத்தில், சிறுத்தைக்கு இரையாகும் காட்டு விலங்குகள் குறையாமல் இருக்க, நாய்கள் பலியாவது தடுக்கப்படும்.

வேலி அமைத்தல் சாத்தியமா?

சிறுத்தைப் பிரச்சினை அதிகமாக உள்ள பகுதிகளில் காட்டுக்கும் தேயிலைத் தோட்டத்துக்கும் இடையில் வேலி அமைக்கும் செயற்றிட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில காட்டு விலங்குகளை, சொந்தத் தேவைக்காக இறைச்சியாக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும், சில இடங்களில் பொறி வைக்கப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க, காட்டு விலங்குகளிடம் இருந்து விவசாயத்தையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்ளவும் பொறிகள் வைக்கப்படுகின்றன. ஆனால், காட்டு விலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களில் தேயிலை உள்ளடங்குவதில்லை. தேயிலைத் தோட்டத்துக்குள் இருக்கும் மரக்கறி தோட்டங்களையும் அதன் அருகில் இருக்கும் கிராமங்களை பாதுகாக்கவுமே பொறிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த வேலிகள் அமைப்பதன் மூலம், பொறிகள் வைக்கப்படும் அளவு குறைக்கப்படும் என்று, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

கடந்தகால சிறுத்தை உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் வனவிலங்குப் பாதுகாப்புத்துறை பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.சூரிய பண்டாரவுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சூரிய பண்டார, மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு நேரம் தேவை என்று கூறியிருந்தார்.

2020ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதிகளில், ஹம்பாந்தோட்டை, இராவணன் எல்லை, நுவரெலியா மாவட்டத்துக்குட்ட கந்தப்பளை, புஸ்ஸலாவ, லுணுங்கம்வெஹெர தேசிய பூங்கா, ​அங்கமெதில்லா, யட்டியாந்தோட்ட, கிண்ணியா, மஸ்கெலியா போன்ற பல பகுதிகளில், பல பொறிகள் மீட்கப்பட்டிருந்தன. பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளின் போது, ஒரு சிறுத்தை பொறியில் சிக்கினால், 1992 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கோரப்பட்டிருந்தது. அத்துடன், இது தொடர்பான அலைபேசி செயலியொன்றும் சமீபத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஒவ்வொரு பகுதிகளிலும், சிறுத்தை மீட்பு அவசர குழுவொன்றும் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், இவை அனைத்தையும் மீறி, மேலும் சிறுத்தைகள் உயிரிழப்பதற்கு, மக்களின் அசமந்தப் போக்கே காரணம் எனலாம். சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக, மக்கள் மத்தியில் பல விழிப்புணர்வுகள் எடுக்கப்பட்டாலும் இந்த விழிப்புணர்வுக்கு ஏற்ற வகையில், மக்கள் மாறவில்லை என்றால், எதுவுமே மாறப்போவதில்லை. மலையகத்தின் பல பகுதிகளில், பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், பொறிகளை வைப்பதில் மக்கள் இன்னும் செயற்பட்டே வருகின்றமை அவதானிக்க முடிகின்றது.

சிறுத்தைத் தோலுக்கு கேள்வி இருப்பதால், தோலைப் பெறுவதற்காகப் பெருந்தொகையான சிறுத்தைகள் இதற்கு முன்னர் வேட்டையாடப்பட்டு வந்தன. அத்துடன், வெளியில் தெரியாமல், இன்னும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. காடழித்தல், காட்டுக்குத் தீ வைத்தல் போன்ற மனிதச் செயற்பாடுகள் காரணமாகவும் சிறுத்தைகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்பட்டு வருகின்றன. இதனால், இலங்கைச் சிறுத்தைகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், இலங்கைச் சிறுத்தையை அருகிய இனமாகப் பிரகடனம் செய்துள்ளது. காட்டுயிர் பாதுகாப்பு நம்பிக்கை அமைப்பும், இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக இலங்கைச் சிறுத்தைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. எனினும், இத்தனை செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், மனிதம் திருந்தவில்லை என்றால், எதிலும் பயன் கிடைக்கப்போவதில்லை என்பதை புரிந்துகொண்டால் நல்லது.Post a Comment

Protected by WP Anti Spam