மாகாண சபைகள் தேவையில்லை எனக் கூறும் உங்களிடம் தமிழர் பிரச்சினைக்கு உள்ள தீர்வு என்ன? (கட்டுரை)

Read Time:20 Minute, 32 Second

இலங்கை போன்ற சுயாதீன நாட்டுக்கு எவ்வாறு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும்.வட, கிழக்கை தனி இராஜ்ஜியமாக பிரித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே பாரிய அச்சுறுத்தலாக அமையும். ஆகவே, வட, கிழக்கு தனி இராஜ்ஜியமாக உருவெடுத்தால் தமிழ் நாடு பார்த்துக் கொண்டிருக்காது. தமிழ் நாடும் தனியாக்கப்படும் என்று தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, இலங்கை ஒற்றையாட்சியாக இருப்பது இந்தியாவிற்கும் நல்லதே. வட, கிழக்கு ஒன்றிணைக்கப்பட்டால் இலங்கை சீர்குலையும். வடக்கிற்கு சிங்கள மக்கள் செல்ல முடியாது போனால் தெற்கிலுள்ள தமிழ் மக்களுக்கு என்னவாகும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தினக்குரலுக்கு அளித்துள்ள நேர்காணலில் இந்தக் கேள்வியை அவர் எழுப்பினார். அவரது நேர்காணல்..

கேள்வி – மாகாண சபை மற்றும் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென நீங்கள் கூறுவதற்கு காரணம் என்ன?

பதில் – மாகாண சபை நீக்கப்பட வேண்டுமென்பது முற்றாக நீக்குவதல்ல. 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை நீக்கப்பட வேண்டுமென்பது நான் ஆரம்பத்திலிருந்து கூறுவதாகும். இராஜாங்க அமைச்சர் என்பதற்காக தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து விடுபட முடியாது.
13 ஆவது திருத்தமானது இந்தியாவினால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதாகும். தற்போது நான் இராஜாங்க அமைச்சர் என்பதால் மாகாண சபை குறித்து ஆராய்கின்றேன். எவ்வளவு நிதி செலவிடப்படுகின்றது, மாகாண சபையினால் நாட்டுக்கு நல்லதா, இதனால் மக்களுக்கு முறையான சேவை வழங்கப்படுகின்றதா என்பது ஆராய்ந்து அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன்.

கேள்வி – 13 ஆவது திருத்தத்தில் நீங்கள் இணங்கண்டுள்ள குறைபாடுகள் என்ன?

பதில்; – 13 ஆவது திருத்தமே எங்களுடைய நாட்டை ஒன்பது மாகாணங்களாக பிரிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. சிறிய நாட்டை பிரிப்பதற்கு அவசியமல்ல. அதனை மீறியும் பிரிக்கப்பட்டுள்ளதென்றால் அது இந்த நாட்டை சமஷ்டி ஆட்சிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த சமஷ்டி பொருத்தமானது.

கேள்வி ; சிறுபான்மை மக்களுக்கு ஒரளவேனும் 13 அவது திருத்தம் தீர்வை பெற்று கொடுப்பதாகக் கூறினாலும் அதில் கூறப்பட்டுள்ள எந்தவொரு அதிகாரமும் முழுமையாக வழங்கப்படாத நிலையில் அதனை நீக்குவதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்?

பதில்; – பெரும்பான்மை மக்களுக்கு இல்லாத பிரச்சினைகள் என்ன சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்றது. சிறுபான்மை மக்களுக்கு இல்லாத பிரச்சினைகள் பெரும்பான்மை மக்களுக்கே இருக்கின்றது. தமிழ் மக்களைத் தவிர சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வடக்கில் குடியேற முடியாது. அங்கு செல்ல எங்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, சிறுபான்மையின மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது பெரும்பான்மை மக்களுக்கும் இருக்க வேண்டும். பெரும்பான்மைக்கு இல்லாத எந்வொரு பிரச்சினையும் சிறுபான்மையின மக்களுக்கு இருப்பதாக அடையாளம் காண முடியவில்லை. இலங்கையானது அனைவரும் சகோதரத்துடன் இருக்க வேண்டிய நாடாகும். இங்குள்ள 50 வீதத்திற்கு அதிகமான சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையின மக்களுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லாது இருக்கின்றனர்.

கேள்வி – 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்படாதுள்ளதே?

பதில் – அவை கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவை மத்திய அரசிடமே இருக்க வேண்டும். 13 ஆவது திருத்தத்தில் கூறியிருந்தாலும் அவை சட்டமாக்கப்படவில்லை. சட்டமாக்குவதற்கும் நாங்கள் விரும்பவில்லை.

வடக்கில் சிங்கள மக்களுக்கு வாழ்வதற்கு உரிமை இல்லையென விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 75 வருடங்களுக்கு மேலாக கொழும்பில் சிங்களவர்களுடனே வாழ்ந்த அவர் வடக்கிற்கு சென்ற பின்னர் வடக்கில் சிங்களவர்கள் வாழ்வதற்கு உரிமையில்லையெனக் கூறுகின்றார். வட, கிழக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிங்களவர்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாமெனக் கூறுகின்றார். ஆனால், அவரின் பிள்ளைகள் இருவரும் சிங்களவர்களையே மணம் முடித்துள்ளனர்.

அதேபோன்று, வடக்கில் பௌத்த விகாரைகளை அகற்ற வேண்டுமென பேரணி செல்கின்ற அவரைப் போன்றவருக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால் பேராபத்தாகும். நாட்டில் சிங்கள, தமிழ் மக்களை சகோதரத்துடன் பார்க்கும் தலைவர்களே எமக்கு தேவை. மேலும், இனத்தின் அடிப்படையில் மாகாணங்களை பிரிக்க முடியாது.

கேள்வி – வட, கிழக்கில் சிங்கள மக்களும் குடியேறுவதற்கு இடமளிக்க வேண்டுமென்றா கூறுகின்றீர்கள்?

பதில் – நிச்சயமாக. வடக்கிலிருந்த சிங்கள மக்களுக்கு என்னவாயிற்று. 25,000 சிங்கள குடும்பங்களும் 15,000 முஸ்லிம் குடும்பங்களும் வடக்கில் இருந்தனரே. ஆனால், தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனரே.

கேள்வி – அவ்வாறாயின் 13 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் சிங்கள மக்களும் வடக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுமென்றா கூறுகின்றீர்கள்?

பதில் – ஆம். தமிழ் மக்களுக்கு தெய்வேந்திர முனையில் குடியேற முடியுமென்றால் சிங்கள மக்களுக்கு வடக்கில் குடியேற இடமளிக்கப்பட வேண்டும்.

கேள்வி – 13 ஐ நீக்காது பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு தீர்வு காண முடியாதா?

பதில் – பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. சாதாரண தமிழ் மக்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் இல்லை. மாறாக, பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கே இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றனர்.

முதல் பாராளுமன்ற அமர்வில் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தேவையற்ற உரையாகும். சுய ஆட்சி பற்றி பேசியதன் ஊடாக தமிழ் மக்களை தூண்டிவிட முயற்சிக்கின்றார். ஆனால், சிறுபான்மை மக்களுக்கு சுய ஆட்சி தேவையில்லை.

விக்னேஸ்வரன், கஜேந்திர பொன்னம்பலம் போன்றோருக்கு தமிழ் மக்களின் சுய ஆட்சி பற்றி பேசுவதற்கு என்ன உரிமையுள்ளது. 3 இலட்ச தமிழ் மக்களை தங்களின் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்திய எல்.ரீ.ரீ.யினர் அவர்களிடத்திலிருந்து தப்பித்து இராணுவத்தினர் பக்கம் வந்தவர்களை சுட்டு கொன்ற போது விக்னேஸ்வரன் எங்கிருந்தார். அவர்களை கொல்ல வேண்டாமெனக் கூற விக்கி வந்தாரா? 4 இலட்சத்திற்கு அதிக கண்ணிவெடிகளை அகற்றி, தமிழ் மக்களுக்கு மீண்டும் குடியேற வாய்ப்பளித்த போது எங்களுக்கு உதவ கஜேந்திரன் பொன்னம்பலம் வந்தாரா? 2 இலட்ச மக்களை மீண்டும் குடியேற்றிய போது எங்களுக்க உதவ விக்னேஸ்வரன் வந்தாரா? எங்களுடைய நிதியில் வீடுகள் கட்டும் போது உதவ கஜேந்திரன் வந்தாரா?

பாடசாலை மாணவர்களை போராட்டங்களுக்கு விடுதலை புலிகள் அழைத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிபர்கள் கொலை செய்யப்பட்ட போது சி.வி எங்கிருந்தார். ஆனால், இவற்றை நிறுத்தி, தமிழ் மக்களின் இன்ப, துன்பங்களை கவனித்தது நாங்களே. வடக்கில் இரத்த வங்கியில் இரத்தம் முடிந்த போது இராணுவத்தினரே இரத்த தானம் செய்தனர். விக்னேஸ்வரன், கஜேந்திரன் வழங்கினார்களா? இல்லை. ஆகவே, தமிழ் மக்கள் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

கேள்வி – அரசியல் தீர்வு மற்றும் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென்றுதானே குற்றஞ்சாட்டப்படுகின்றது?

பதில் – ஏன் தீர்வில்லையெனக் கூறுகின்றீர்கள். யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அதிக அபிவிருத்தித்திட்டங்களை நாங்களே முன்னெடுத்துள்ளோம். கொழும்பை விட வடக்கின் வளர்ச்சி வேகம் அதிகரித்திருந்தது. வடக்கிற்கு மாகாண சபைகளை பெற்று கொடுத்தோம். அவ்வாறே மாகாண சபையை பெற்றுக் கொடுத்தும் சி.வி. விக்னேஸ்வரன் மாகாண சபைகளுக்கு அனுப்பிய நிதியை மக்களுக்காக பயன்படுத்தாது மீண்டும் திருப்பியனுப்பினார். அரசு தொடர்பில் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இவ்வாறன விடயங்களை அவர் செய்தார்.

கேள்வி – மாகாண சபை நீக்க வேண்டுமாயின் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அரச தரப்பினர் கூறுகின்ற நிலையில் உங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு சாத்தியப்படும்?

பதில் – மாகாண சபை முற்றாக நீக்கப்பட வேண்டுமென நான் கூறமாட்டேன். மாறாக, மாகாண சபை தேவையா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மாகாண சபை இருப்பதற்கு நான் அன்றிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்தேன்.

கேள்வி – 13 ஐ நீக்கினால் இந்தியா எமக்கு அழுத்தம் கொடுக்குமல்லவா?

புதில் – இலங்கை போன்ற சுயாதீன நாட்டுக்கு எவ்வாறு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும். இந்தியாவுடன் நாங்கள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாதமையினால் இதனை சுமுகமாக தீர்க்க முடியும்.

வட, கிழக்கை தனி இராஜ்ஜியமாக பிரித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே பாரிய அச்சுறுத்தலாக அமையும். இந்தியாவின் பாதுகாப்பானது இலங்கையின் தங்கியுள்ளதென இந்தியாவிலுள்ள சிரேஷ்ட வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணன் கூறியுள்ளார். ஆகவே, வட, கிழக்கு தனி இராஜ்ஜியமாக உருவெடுத்தால் தமிழ் நாடு பார்த்துக் கொண்டிருக்காது. தமிழ் நாடும் தனியாக்கப்படும்.

இலங்கை ஒற்றையாட்சியாக இருப்பது இந்தியாவிற்கும் நல்லதே. வட, கிழக்கு ஒன்றிணைக்கப்பட்டால் இலங்கை சீர்குலையும். வடக்கிற்கு சிங்கள மக்கள் செல்ல முடியாது போனால் தெற்கிலுள்ள தமிழ் மக்களுக்கு என்னவாகும். அது இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கேள்வி – மாகாண சபை நீக்குவது குறித்து நீங்கள் கருத்து தெரிவித்துள்ளது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய தூதரகம் அழைப்புவிடுத்துள்ளதாககக் கூறப்படுகின்றதே?

புதில் – இல்லை. இல்லை. மாகாண சபை நீக்குவது குறித்து பேசுவதற்கல்ல. நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளமையினால் சாதாரணமாக அழைத்துள்ளார்.

கேள்வி – மாகாண சபைகளே வட, கிழக்கு உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் வாழும் பிரதேசங்களில் முதலைமைச்சரை தெரிவு செய்யும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதனை நீக்கினால் தமிழர்களுக்கு பாரிய பாதிப்பாக அமையாதா?

பதில் – இல்லை. தற்போது மாகாண சபைகள் குறித்து நாங்கள் ஆராய்ந்து கொண்டிப்பதால் இது குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அது குறித்து பின்னர் ஆராய முடியும்.

கேள்வி – மாகாண சபை தேவையில்லையெனக் கூறும் நீங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வைக்கும் மாற்று வழியென்ன?

பதில் – மாற்று வழியென்பதற்கு அப்பால், மாகாண சபைகள் வருவதற்கு முன்னர் நாடு முன்னேறமடையவில்லையா? அல்லது கடந்த 2,3 வருடங்கள் மாகாண சபைகள் இல்லாது நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளதா இல்லையே. இவற்றையே மாற்று வழிகளாக பார்க்க வேண்டும்.அத்தோடு, உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவது மாகாண சபைகளை விட சிறந்தது.

கேள்வி – மாகாண சபைகளை நீக்குவது குறித்து நீங்கள் கூறிய கருத்து அரசாங்கத்திற்குள்ளே மாறுபட்ட கருத்துகள் இருக்கின்ற நிலையில் 13 ஐ நீக்க முடியுமா?

பதில் – யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் முன்வைக்கும் அறிக்கைக்கு அமைய அரசாங்கமே முடிவெடுக்கும். முறையான காரணங்களை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்தால் அதனை நாங்கள் ஏற்று கொள்வோம்.

கேள்வி – 13 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் சர்வதேசத்தை நாடுவோமென தமிழ் தரப்பு கூறியுள்ளதே?

பதில் – வடக்கில் முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருந்த போது 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மக்களுக்கு என்ன செய்துள்ளார்? எங்களுடைய பௌத்த தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்ட போது அவர் பார்த்துக் கொண்டிருந்தார். பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு இடமளிக்கவில்லை. கொழும்பில் எத்தனை கோவில்கள் அமைக்கப்படுகின்றது. எந்த இடத்திலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே, வடக்கில் பௌத்திற்கு இடமளிக்காத ஒருவருக்கு எவ்வாறு நாங்கள் சுய ஆட்சியை வழங்க முடியும்.

இராணுவத்தில் நான் இருந்தமையினால் விடுதலை புலிகள் சாதாரண மக்களுக்கு செய்த கொடுமைகளை நான் அறிவேன். பிள்ளைகள் கடத்தப்பட்ட போது நாங்களே தடுத்து நிறுத்தினோம். வடக்கிலிருந்த வர்த்தகர்கள் விடுதலை புலிகளுக்கு வரி செலுத்த நேரிட்டது. அ வ்வாறு செலுத்த தவறும் போது பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தனர். ஆகவே, விடுதலை புலிகளுக்கு மக்கள் எப்போதும் ஆதரவில்லை.

ஆனால், விக்னேஸ்வரன் மீண்டும் வடக்கில் விடுதலை புலிகளை உருவாக்குவதற்கே முயற்சிக்கின்றார். வடக்கில் சிங்கள மக்களுக்கு குடியேற இடமளிக்காது, அங்குள்ள பௌத்த விகாரகளை அகற்ற வேண்டுமென விக்னேஸ்வரன் பேரணி சென்றாலும் கொழும்பிலுள்ள மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு இந்த நாடு பௌத்த நாடாக இருப்பதே காரணம். இதன் காரணமாகவே நாங்கள் இலங்கையொரு பௌத்த நாடு என கூறுகின்றோம்.

இவ்வாறு வேறொரு இனத்துக்கு அல்லது மதத்திற்கு எதிராக செல்வார்களாயின் அவர்கள் கழுத்தறுக்கப்படுவார்கள். ஆனால், இலங்கை பௌத்த நாடு என்பதாலேயே கொழும்பிலுள்ளவர்கள் ஒற்றுமையாக வாழ முடியுமென அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இதேவேளை, நான் எதிர்வரும் வாரங்களில் வடக்கிற்கு சென்று மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதுடன், அவர்களுக்கான தீர்வையும் பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படத்தை மிஞ்சும் கொடூர சைக்கோ வின் உண்மை நிகழ்வு!! (வீடியோ)
Next post விவசாயி நினைத்தால் எதையும் உருவாக்கலாம்!! (மகளிர் பக்கம்)