இந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii (கட்டுரை)

Read Time:14 Minute, 24 Second

இலங்கை, இந்திய மீனவர்களிடையே, பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடி தொடர்பாக, நீண்டகாலமாக இருந்துவந்த மோதலை, இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவு, புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.

போர் முடிந்து ஒரு தசாப்தகாலம் முடிவடைந்துவிட்ட நிலையிலும், வடபுலத்து மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்கின்றன. இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமும் மீனையும் பிற வளங்களையும் சூறையாடுவதும் அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவும் தமிழ் அரசியல் தலைமைகளது மௌனமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்ற கொடிய உண்மையைச் சொல்லியாக வேண்டியுள்ளது.

கடந்த வாரம், இந்திய இழுவைப் படகுகளால் வடபுலத்து மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அதன் வரலாற்றுப் பின்புலத்தையும் அரசியல் காரணிகளையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்திய இழுவைப் படகுகள் ஏற்படுத்தியுள்ள சூழலியல் பிரச்சினைகளையும் பிராந்திய அரசியலையும் நோக்குவோம்.

இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகள் பல சூழலியல் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன. மீன்களின் பெருக்கமும் வளர்ச்சியும் ஆழ்கடலுக்கும் பரவைக் கடலுக்கும் இடைப்பட்ட கடலடித்தளமேடைப் பகுதியிலேயே நடக்கின்றன. இலங்கையின் கடலடித்தள மேடையின் பெரும்பகுதி, மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட 480 கிலோமீற்றர் நீளமும் 22 முதல் 60 கிலோமீற்றர்அகலமும் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதியில், இழுவைப் படகு மீன்பிடி மிகக் கேடானது.

இழுவைப் படகுமீன்பிடி என்பது, கடலின் அடிவரை உள்ள அனைத்தையும் வாரிஅள்ளி எடுப்பதாகும். இதை, அடியோடு அள்ளுதல் (Bottom trawling) என்று அழைப்பர். இம் மீன்பிடி முறையில், ஆறு முக்கிய அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன.

1. வலையை வீசி, கடலின் அடி வரையுள்ள அனைத்தையும் அள்ளுவதால், மீன்களின் வகை, வளர்ச்சி போன்ற எவையும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

2. கடலின் அடியோடு அள்ளும்போது, மீன்களுக்கான உணவாகவும் கடலடி உயிரியல் சமநிலையைப் பேண முக்கியமாகவும் உள்ள கடலடித் தாவரங்கள் அழிகின்றன. அவற்றின் அழிவு, கடலடி உயிரியல் சமநிலையைப் பாதிக்கிறது.

3. கடலின் அடியோடு அள்ளும் போது, மீன்களும் தாவரங்களும் மட்டுமன்றிப்பிற கடல்வாழ் உயிரினங்களும் சிக்குகின்றன. அவை மனிதப் பாவனைக்கு உதவாத,கடலடித்தள உயிரியல் நிலைப்புக்கு வேண்டிய நுண்ணுயிரிகளும் உயிரினங்களுமாகும். அவை பயனின்றி அழிகின்றன.

4. இழுவைப் படகு மீன்பிடியால் கடலடி பவளப்பாறைகளும் முருகைக் கற்களும் அழிகின்றன. முருகைக் கற்களின் அளவுக்கு மீறிய அழிவு, வடபகுதியில் மண்ணரிப்பு அதிகரிக்கவும் கடல் நீர் குடாநாட்டுக்குள் புகவும் வழிவகுக்கும்.

5. கடலின் அடியோடு அள்ளும் போது, மீன்களின் முட்டைகளும் குஞ்சுகளும் சிக்குகின்றன. இது, மீன்களின் இனப்பெருக்கத்தையும் விருத்தியையும் தடுக்கிறது. இச்செயற்பாடு, நீண்டகாலத்தில் அப்பகுதியை மீன்களற்ற பிரதேசமாக்கும்.

6. தேவையற்று வாரியள்ளப்படும் கடல் தாவரங்களும் இறந்த உயிரினங்களும் மீண்டும் கடலில் கொட்டப்படுகின்றன. இவையும் பாரிய சூழலியல் பாதிப்புக்குக் காரணமாகின்றன.

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், மீன் என்பது இயற்கை வளமாகும். அது இல்லாமல்போகக் கூடியது. கடலையும் இயற்கையையும் பாதுகாப்பதன் மூலமே, மீனை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் வளமாகப் பேணலாம். மீன்வளத்தின் உருவாக்கம், கடலின் ஆழம்,கடலடித் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடல் நீரோட்டம்,கடலின் வெப்ப தட்ப நிலை போன்ற பல காரணிகளில் தங்கியுள்ளது.

கடல்வள ஆய்வுகளைப் பொறுத்தவரையில், கடலில் பிடிக்கக்கூடிய மொத்த மீன்களில் 75% மட்டுமே பிடிக்கலாம். எஞ்சியதில் 75% முட்டையிட்டு இனப்பெருக்கத்தைப் பேணக்கூடிய பெண் மீன்களாக இருத்தல் வேண்டும். இச்சமநிலையைப் பேணின் மட்டுமே, மீன்வளம் தொடர்ச்சியாகக் கிடைக்கும் வளமாக இருக்கும். மீன்பிடியின் அளவை, சந்தை நிலைமைகள் தீர்மானிக்க முடியாது. கிடைக்கக்கூடிய மீன்களின் அளவே, சந்தையைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழ்வது அரிது.

இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு மாநில அரசாங்கமும் இந்திய, இலங்கை மீனவர் முரண்பாட்டின் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர். ஒரு நாட்டின் கப்பல்கள், இன்னொரு நாட்டின் ஆட்புல எல்லைக்குள் மீன்பிடித்தால், அதைத் தடுப்பது அந்நாட்டின் அடிப்படைப் பொறுப்பாகும்.

ஆனால், இந்திய மத்திய அரசாங்கம் வருடத்துக்கு 65 நாள்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறது. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையோ, இழுவைப் படகுகளால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதையோ கவனிக்க, இந்தியா தயாராக இல்லை.

மாறாக, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடைமுறை ஒழுங்கு தேவை எனவும் அவ்வாறான ஒழுங்கின் மூலம், இரு தரப்பினரும் அரசியல் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் எனவும் இரு தரப்பினரும் மீன் பிடிக்கும் உரிமையுடன் கூடிய மீன் வளங்களைக் கூட்டு முகாமைத்துவத்தின் கீழ்ப் பகிர வேண்டும் எனவும் இந்தியத் தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன், பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகளையும் மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் கைது செய்தனர். மறுநாள், மாதகல் மீனவர்களும் இதேவகையில், இந்திய இழுவைப் படகுகளையும் மீனவர்களையும் கைது செய்தனர். மறுநாள், உயர்மட்ட இந்திய இராஜதந்திர அழுத்தத்தின் மூலம் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாதென இலங்கை அதிகாரிகள், இந்திய மீனவர்களை எச்சரித்தனர்.

இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு அரசாங்கங்களும் இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை, இச் சம்பவங்கள் விளக்குகின்றன. இலங்கை மீனவர்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டிய கடற்படையினர், எதுவும் செய்யவியலாது தவிக்கின்றனர். அவர்கள், “எங்கள் கைகள், அதிகார மய்யத்தின் உயர்பீடத்தால் கட்டப்பட்டுள்ளன” என்கிறார்கள்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண கூலித் தொழிலாளர்களே ஆவர். அவர்களை வேலைக்கமர்த்தி வேலைவாங்கும் முதலாளிகளில், இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களும் அடங்குவர். கடல் எல்லையைத்தாண்டி மீன்வளத்தைக் வாரிஅள்ளிக் கொண்டுவருமாறு, சாதாரண மீனவர்கள், முதலாளிகளால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அத்துமீறி மீன்பிடிப்போரைப் பற்றிப் பேசும்போது, அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் அவர்களுக்குப் பின்னால் உள்ள தமிழகத்தின் பெருமுதலாளிகளையும் வெவ்வேறாகக் கவனிக்க வேண்டும். அதைச் செய்யாமையாலேயே பிரச்சினை தீராதுள்ளது.

பல வருடங்களாக, இலங்கை அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலும் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துள்ளன. ஆனால், இந்திய அரசாங்கத்தினதும் இந்தியப் பெருமுதலாளிகளினதும் கடும் போக்கு, தீர்வை எட்டத் தடையாகிறது.

மறுபுறம், தமிழ் மக்களையும் அவர்களில் பகுதியினரான வடபகுதி மீனவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் மௌனம் காக்கின்றன. பலவற்றைப் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாண சபை, மீனவர் பிரச்சினை பற்றி, எதுவும் பேசவில்லை.

அதேவேளை, இலங்கை, இந்திய அரசாங்கங்கள், இருதரப்பு மீனவர்களினது பிரச்சினைகளையும் மோதல்களையும் அத்துமீறல்களையும் வைத்து, தத்தமது அரசியல் இலாபங்களைப் பெறுகின்றன. தமிழ்நாட்டுக் கட்சிகள் சில, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையில் குளிர்காய்ந்து கொண்டு, மீன் முதலாளிகளின் பக்கம் நிற்பதுடன், தமது வாக்கு வங்கிகளுக்கு ஏற்றவாறும் நடந்து கொள்கின்றனர்.

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையில் இந்தியாவின் பிராந்திய நலன், இந்தியப் பெருமுதலாளிகளின் நலன், இலங்கை அரசாங்கத்தின் இயலாமை என்பன பின்னிப்பிணைந்துள்ளன. மொத்தத்தில், இந்திய, இலங்கை அரசாங்கங்கள் கடல்வளத்தைப் பாதுகாப்பது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை.

இவ்விடயத்தில் இந்தியா, பிராந்திய அதிகாரத்தை நிறுவ முனைகிறது. இலங்கைக்கோ, தேர்தலில் பாதிப்பைச் செலுத்தக்கூடிய விடயமல்ல; சில மீனவர்கள் பாதிக்கப்படுவதற்காக இந்தியாவைப் பகைப்பது சரியல்ல என்பதே, அதன் நிலைப்பாடாகும்.

பிரச்சினைப்படுவதும் மோதுவதும் இரு புறத்திலும் தமிழ் மீனவர்கள் என்பதால், இலங்கை அரசாங்கம் இம் மீனவர் பிரச்சினையில் அதிக ஆர்வம் காட்டாதிருப்பதும் அவதானிக்கக் கூடியதாகும்.

தமிழக மீனவத் தொழிலாளர்களும் வடபகுதி மீனவத் தொழிலாளர்களும் தமிழர்கள் என்பதற்கு அப்பால், வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாவர். அவர்களைப் பகடைக்காய்களாக்கும் போக்கு, இரு புறமும் உள்ளதையிட்டு அவதானமாக இருத்தல் வேண்டும். அதேவேளை, இந்திய மேலாதிக்கத்தின் கரங்கள், எம்மீது படிவதை அனுமதியாது, அவற்றுக்கு எதிராகவும் அணிதிரள வேண்டும்.

இப்பிரச்சினையை இரண்டு அரசாங்கங்களோ தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளோ தீர்க்கக்கூடியதல்ல என்பதை உணர்ந்திருக்கிறோம். ஏனெனில், இவர்களில் எவருக்கும் இப்பிரச்சினைக்குத் தீர்வு தேடும் அக்கறையில்லை.

வடபகுதி மீனவர்கள் முதலில் குழுவாதங்களைத் தவிர்த்து, ஒன்றுதிரளல் தவிர்க்க இயலாதது. “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்பவர்கள், முதலில் வடபுலத்து மீனவர்களின் பிரச்சினையில் இந்தியாவின் நடத்தையை நோக்க வேண்டும். “இந்தியாவை நம்பவேண்டும்” என்று கதை சொல்பவர்களின் நிலை யாதெனில், ‘பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!! (மகளிர் பக்கம்)
Next post பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்? (அவ்வப்போது கிளாமர்)