கிச்சன் டைரிஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:21 Minute, 0 Second

டயட்களில் பலவகையான டயட்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு ஃபிட்டாகும் டயட்கள் மிகக் குறைவுதான். நாம் இதுவரை பார்த்த டயட்களில் நமது சூழலுக்குப் பொருத்தமான டயட் என்றால் அது பேலஸ்டு டயட் எனப்படும் நமது பாரம்பரியமான உணவுமுறைதான். சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பொரியல், அவியல் என்று கலவையாகச் சாப்பிடும் இந்த டயட்தான் இந்தியா போன்ற மித வெப்ப மண்டல நாடு ஒன்றுக்குப் பொருத்தமானது. அடிப்படையான ஊட்டச்சத்துக்களான கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து, தாது உப்புக்கள், நுண்ணூட்டச்சத்துகள் என அனைத்தும் சரிவிகிதத்தில் அமைந்த டயட் இது.

நமது பாரம்பரிய சமச்சீர் டயட்டில் உணவைப் போலவே உடற்பயிற்சியும் அவசியம். தினசரி ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியாவது இருந்தால்தான் உடல் எடையை சீராகப் பராமரிக்க முடியும். மாற்று டயட்களில் சைவப் பிரியர்கள் நனிசைவ டயட்டான வீகன் டயட்டைப் பின்பற்றலாம். இவை இரண்டுமே எடைக்குறைப்பு என்பதைவிடவும் லைஃப் ஸ்டைல் டயட்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எடைக்குறைப்புக்கான டயட் மேற்கொள்பவர்கள் பேலியோ டயட், ஜி.எம்.டயட், லோ கார்போ டயட் போன்ற டயட்களை மேற்கொள்ளலாம். ஆனால், எல்லோருக்கும் எல்லா டயட்டும் செட் ஆகாது. மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின்பே இந்த டயட்டுகளில் இறங்க வேண்டும். ஒவ்வொருவரின் உடல்நிலை, வாழ்க்கைமுறைக்கும் ஏற்பத்தான் டயட்கள் செட்டாகும் என்பதால் கவனம்.

எக்ஸ்பர்ட் விசிட்

கொரோனாவுக்கு எதிரான உணவுகள்தான் இன்றைய முக்கிய தேவையாய் இருக்கிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கொரோனா வராமல் தடுக்க வேண்டியவர்கள் என அனைவருமே எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் பரிந்துரைத்துள்ள உணவுகள் இதோ…

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான் இந்நாட்களில் நாம் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயம். கொரோனா என்பது ஒருவகையான இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் என்பதால் நுரையீரல், சுவாசப்பாதையை மேம்படுத்தும் உணவுகள் உடலில் சேர்க்க வேண்டியது அவசியம்.கேரட், ஆப்ரிகாட் போன்ற பீட்டா கரோட்டின் உணவுகள்பீட்ட கரோட்டின்கள் வைட்டமின் ஏவாக மாற்றமடைபவை. அடிப்படையான நோய் எதிர்ப்பு சக்திக்கு இவை மிகவும் அவசியம். உடலில் நுழையும் ஆண்டிபாடி மற்றும் விஷப் பொருட்களுக்கு எதிராகப் போராடும் போர் வீரர்கள் இவை. கேரட், பீட்ரூட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மாங்காய், ஆப்ரிகாட், கீரைகள், ப்ரோகோலி போன்றவற்றில் இந்த பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. எனவே, இவற்றில் ஏதேனும் ஒன்று தினசரி எடுத்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய், சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி

வைட்டமின் சி சளிக்கு எதிராகப் போராடும் அடிப்படையான சத்து. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகளைத் தூண்டி, ரத்தத்தில் அதன் அளவைப் பராமரித்து, ரத்த வெள்ளை அணுக்களுக்கு என்ன மாதிரியான தடுப்பு அரண்களை உருவாக்க வேண்டும் என்ற தெளிவைத் தருவது இந்த வைட்டமின் சி சத்துதான். நெல்லிக்காய், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோகோலி, காலிஃபிளவர் ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. நெல்லிக்காயிலும் சிட்ரஸ் பழங்களிலும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. தினசரி 200 மி.கி அளவுக்கு வைட்டமி சி உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.

முட்டை, கோழி உள்ளிட்ட அசைவங்கள், வெண்ணெய் ஆகியவற்றில் உள்ள வைட்டமின் டி

வைட்டமின் டி என்ற அடிப்படையான சத்து சூரிய ஒளியில் இருந்து மட்டுமே கிடைக்கும். அதனை வேறு எந்த உணவிலும் பெற இயலாது. ஆனாலும், வைட்டமின் டி யின் வேறு ஒருவகை சில உணவுகளில் நிறைந்திருக்கிறது. பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றைக் கொல்லும் சிறப்பு நோய்தொற்றுக்கு எதிரான ஏஜெண்ட் ஒன்றை வைட்டமின் டி தருகிறது. ரத்த வெள்ளை அணுக்களைத் தூண்டி, டி2 லிம்போசைட்களை சீரமைக்கிறது. இதுதான் பாக்டீரியா, வைரஸ் போன்றவை உடலில் பரவாமல் தடுக்கிறது. சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காதவர்கள், மீன், முட்டை, பால், சீஸ், காளான் ஆகியவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பீன்ஸ், நட்ஸ், பருப்புகள், கடல் உணவுகளில் உள்ள துத்தநாகம்

துத்தநாகம் எனும் ஜிங்க் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும் தாதுச்சத்து. சளிப்பிடிப்பதை இயன்றவரை ஜிங்க் சத்து ஒத்திவைக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பீன்ஸ், டோபு, கீரைகள், பருப்புகள், கடல் உணவுகள் ஆகியவற்றில் துத்தநாகம் நிறைந்துள்ளது. தினசரி உணவில் இதுவும் இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஃபுட் சயின்ஸ்

உணவுச் சேர்மானங்கள் (Food Additives) என்ற துறை இன்று மிகவும் விஞ்ஞானப்பூர்வமாக வளர்ந்திருக்கிறது. உணவைப் பாதுகாக்கவும், பதப்படுத்தவும், சுவையை மேம்படுத்தவும், தோற்றத்தை மெருகேற்றவும் இன்று பலவகையான சேர்மானங்கள் உணவுப் பொருட்களில் கலக்கப்படுவதைப் பற்றி இந்தத் துறை ஆராய்கிறது. புளிக்கச் செய்தல், உப்பிடுதல், பதப்படுத்துதல், கந்தக டை ஆக்ஸைடைச் சேர்த்து இனிப்புச் சுவையைத் தக்கவைத்தல், வைன் தயாரித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.

அடிட்டிவ்ஸ்களை உணவுப் பொருட்களில் சேர்ப்பதைக் கட்டுப்படுத்தவும், கணகாணிக்கவும், அடையாளம் காணவும் ‘E’ என்ற குறியீடும் அதைத் தொடர்ந்து எண்ணும் தரப்படுகிறது. இதில் E என்பது ஐரோப்பாவைக் குறிப்பது. கோடெக்ஸ் எலிமென்டாரியஸ் கமிஷன் எனும் நிறுவனத்தின் தர அளவுகளின்படி இந்த குறியீடு அமைந்திருக்கும்.

ஒவ்வொரு அடிட்டிவ்ஸுக்கும் ஒவ்வொரு எண் தரப்பட்டிருக்கும். சில நாடுகளில் இந்த E என்ற எழுத்து இல்லாமலே அடிட்டிவ்ஸ் எண் மட்டும் இருக்கும். உதாரணமாக அசிட்டிக் அமிலத்தின் எண் 260. இது ஐரோப்பாவில் E260 என்று அச்சிடப்பட்டிருக்கும். ஐரோப்பாவில் அல்கானின் என்ற பொருளுக்கு அனுமதி இல்லை. இதன் குறியீட்டு எண் 103. பிறநாடுகளில் இந்த எண் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும். இந்த அடிட்டிவ்ஸ்களில் பல வகை உள்ளன.

அமிலப் பொருட்கள் (Acidulents), அமிலக் கட்டுப்படுத்திகள் (Acidity Regulators), ஆன்டிகேக்கிங் ஏஜெண்ட்ஸ் உட்பட இதில் பலவகை உள்ளன. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.இந்தியாவில் விவசாயம் எப்போது தொடங்கியதோ கிட்டதட்ட அப்போதே நெல் உற்பத்தியும் தொடங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் நெல் உற்பத்தி தொடங்கிய பிறகே இந்திய விவசாயத்தின் தொழில்நுட்பங்களில் பெரும் பாய்ச்சல்கள் நிகழ்ந்தன. விவசாயம் எனும் இயற்கையோடு விளையாடும் இந்த சூதாட்டத்தின் நுட்பமான சூத்திரங்களை நம் முன்னோர் கற்றுக்கொண்டதும் நெல் உற்பத்தியின் வழியாகத்தான்.

விவசாயத்துறையின் தொழில்நுட்ப முன்னேற்றம் விளைச்சலை அதிகரித்து, உபரியைப் பெருக்கியது என்றால் பெருகிய உபரி, அதிகமான ஓய்வு நேரத்தை வழங்கி, தொழில்நுட்பத்தை மேலும் வளர்க்க காலத்தைக் கொடுத்தது. அப்படி உபரியாகப் பெருகிய காலத்தைக் கொண்டே உணவின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த நாம் பண்பாட்டையும், கலைகளையும் வளர்த்து சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த முடிந்தது. இப்படி நெல் என்பது நமது இந்திய வாழ்வின் அடிப்படைகளையே உருவாக்கிய பெரும் பயிராக இருக்கிறது.

இந்தியா முழுதும் பல்லாயிரம் வகையான நெற்பயிர்கள் காலங்காலமாக இருந்தன. இன்று நாம் நவீன ஒட்டு ரகங்களை உருவாக்குகிறோம். உண்மையில் ஒட்டு ரகங்கள் பற்றிய அறிதல் நம் இந்திய விவசாயிகளுக்குப் பல நூற்றாண்டுகளாகவே இருந்துவருகிறது. இந்தியா என்று பொதுவாகச் சொன்னாலும் இந்நிலம் ஒரே தன்மையானது அல்ல. வளம் பெருக்கும் டெல்டா பிரதேசங்களும் உள்ளன.

மழையே இல்லாத பாலைவனமும் உள்ளன. உப்பு நீர் சூழ்ந்த நெய்தல் நிலங்களும் உள்ளன. பனிப் பொழியும் மலைச் சிகரங்களும் உள்ளன. மழையே நிற்காத ஈர நிலங்களும் உள்ளன. பருவ மழைக்கு வானம் பார்க்கும் பூமிகளும் உள்ளன. இப்படி, பல்வேறு நில அமைப்புகளைக் கொண்டதால்தான் நம் தேசத்தை துணைக் கண்டம் என்கிறோம். ஒரே மாதிரியான சீதோஷ்ணம் கொண்ட நிலப்பகுதிகளில் கூட சுமார் இருபது முதல் முப்பது கிலோ மீட்டர்களில் நிலத்தின், மண்ணின் அமைப்பு மாறுபட்டிருப்பதைக் காண முடிகிறது. இதனால்தான், இந்த நிலத்தில் பல்லாயிரம் பாரம்பரிய நெற்கள் உருவாகின. அவற்றில் பலதையும் நம் முன்னோர் தம்முடைய மகத்தான விவசாய அறிவால் உருவாக்கினார்கள்.

இந்தியாவின் உணவுப் பொருட்கள் உற்பத்தி கதைச் சுருக்கம்

இந்தியா சுதந்திரம் அடையும் வரைகூட நம்மிடம் அந்தப் பாரம்பரிய நெல் ரகங்களில் பலதும் புழக்கத்தில் இருந்தன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டிய நம் நெருக்கடி நம்மை குறுவைப் பயிர் நோக்கியும் வீரிய நவீன ஒட்டு ரகங்கள் நோக்கியும் நகரச் செய்தன. புதிய புதிய நவீன ஒட்டு ரகங்கள் சந்தைக்கு வந்துகொண்டேயிருந்தன.

விளைச்சல் அமோகமாக இருந்ததால் விவசாயிகள் தங்கள் கைவசம் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு இந்த நவீன ரகங்கள் பின் திரும்பியதுதான் நம் வரமும் சாபமுமாக இன்று உருவெடுத்திருக்கிறது. தற்போது, உணவு உற்பத்தியில் முன்பைவிட பல மடங்கு உயர்ந்து தன்னிறைவடைந்திருக்கிறோம். நம்முடைய பகிர்மானங்களில்தான் இன்று சிக்கல் உள்ளதே அன்றியும் உற்பத்தியில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், மண் வளத்தை முழுமையாகக் கெடுத்து வைத்திருக்கிறோம். நீராதாரங்களை நிறைய சிதைத்திருக்கிறோம்.

நவீன ரக நெற்கள் வேதியல் உரங்கள், பூச்சிகொல்லிகள் ஆகியவற்றின் தயவுடன் விளைச்சலைப் பெருக்கும் பண்பு கொண்டவையே அன்றியும் அவற்றால் தன்னிச்சையாக எதன் துணையுமின்றி அமோக விளைச்சலைக் கொடுக்க முடியாது. இதன் பின்புதான் மிகப் பெரிய வணிக சூழ்ச்சி உள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களைக் கைவிட்டு விட்டதாலும் பாரம்பரிய விவசாய முறையை மறந்துவிட்டதாலும் இன்று அந்த தொழில்நுட்ப அறிவையும் இழந்துவிட்டோம். நெற்களையும் இழந்துவிட்டோம்.

இன்று நவீன ரக நெற்களை நாடுவதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அந்த நெற்களோ கட்டற்ற வேதியல் உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் நம் மண்ணில் நிரப்பக் கட்டாயப்படுத்துகின்றன. வருடம்தோறும் இந்த வேதியல் உரங்கள், பூச்சிகொல்லிகளின் பயன்பாட்டு விகிதமும், விலையும்தான் ஏறிக்கொண்டு போகின்றதே தவிரவும் விளைச்சலில் பெரிய அதே விகிதத்துக்கு ஏற்றங்கள் இல்லை என்பதே இந்த முறை எவ்வளவு கேடானது என்பதையும், யாரின் நலனுக்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒருபுறம் இந்த நவீன ரக நெற்கள், சிந்தடிக் உரங்கள், வேதியல் பூச்சிக்கொல்லிகளின் படையெடுப்பு என்றால் மறுபுறம் நவீன மரபணு மாற்றப் பயிர்களும் வந்துவிட்டன. பி.டி பயிர் எனப்படும் இத்தகைய நவீன ரகங்கள் விவசாயத்துக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மானுட குலத்துக்குமே விரோதமானது என்று சமூக ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசோ இந்தக் குரல்களை எல்லாம் சட்டையே செய்யாமல் முழு மூச்சாய் நம் விவசாயிகள் தலையில் இதைக் கட்டுவதையே தன் வாழ்நாள் கடனாக நம்பிக்கொண்டிருக்கிறது. நம் அரசே நம்மைக் கைவிடுமா என்று விவசாயிகளும் அரசு சொல்வதைக் கேட்டு நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தனை செய்தது போதாது என்று பின்னாடியே இன்று கார்ப்பரேட் கைகளில் விவசாயத்தைக் கொண்டுபோய் சேர்க்கும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். பெரிய பெரிய பகாசுர நிறுவனங்கள் இன்று களத்தில் இறங்கி, விவசாயிகளை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். மறுபுறம், விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கானவர்களை அந்தத் தொழிலில் இருந்து மெல்ல வெளியேற்றி தொழில்துறை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறது அரசு.

இதற்கு எல்லாம் தீர்வு இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது. நமக்குத் தேவையானது எல்லாம் மக்களின் விவசாயிகளின் நலனை நிஜமாகவே நேசிக்கும் அரசுதான். அரசு நினைத்தால் மிகச் சில வருடங்களிலேயே விவசாயம் என்பதை ஆக்கப்பூர்வமான ஒரு தொழிலாக மாற்ற முடியும். மேலும், அபரிமிதமாக நம்மிடம் உள்ள மனித வளத்தையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

ஃபுட் மித்ஸ்

குறைவாகச் சாப்பிட்டால் எடை அதிகரிக்காது என்ற ஃபுட் மித்ஸ் ஒன்று உள்ளது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் வீடு அடங்கல் என்றும், வீட்டிலிருந்து வேலை என்றும் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பின்றி இருப்பதால், எடை அதிகரித்துவிடும் என்ற பயத்தில் மிகக் குறைவாகச் சாப்பிடுகிறார்கள். இது தவறான பழக்கம். வழக்கத்தைவிடக் குறைவாகச் சாப்பிடுவது, நாம் நினைப்பதற்கு மாறாக எடை அதிகரிப்பையும் உருவாக்கக்கூடும். குறைவாகச் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கிறது. இதனால், ஹார்மோன் கோளாறுகள் ஏற்பட்டு, எடை எகிறானாலும் ஆச்சர்யமில்லை. எனவே, வழக்கமான, சத்தான உணவுகளை உண்டுவிட்டு, வீட்டிலேயே செய்ய சாத்தியமான யோகா முதலிய பயிற்சிகள் செய்வதுதான் ஆரோக்கியத்துக்கான சிறப்பான வழி.

உணவு விதி#51

நிலத்துக்கேற்ற உணவே நல்லது. இது ஒரு முக்கியமான விதி. ரோமில் ரோமானியனாய் இரு என்பார்கள். நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் சீதோஷ்ணம், ஆரோக்கியச் சூழல், வாழ்க்கைமுறை ஆகியவற்றுக்கு ஏற்ப நம் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நவீன மனித சமூகம் வேலை நிமித்தம் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டியதாகவும் அங்கேயே தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்க வேண்டியதாகவும் இருக்கிறது. இப்படியான நாம் பிறந்து வளர்ந்து சூழலில் பழகிய உணவுகளையேதான் எடுத்துக்கொள்வேன் என்று அடம்பிடிப்பது நிச்சயம் ஆரோக்கியம் அல்ல. அந்தந்த ஊரின் உணவில்தான் அந்த நிலப்பகுதிகளுக்கு ஏற்ற ஆரோக்கியத்தைத் தரும் உள்ளடக்கங்கள் இயல்பாகவே அமைந்திருக்கும். எனவே, இயற்கையை அனுசரித்து வாழ வேண்டியது ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமத்துவமின்மையின் முக்காடுகளை கலைந்திடுவேன்! (மகளிர் பக்கம்)
Next post அண்ணா பொண்ணு என் நிறம்மா !! (வீடியோ)