By 7 October 2020 0 Comments

வெளிக் கிளம்பும் பூதங்கள்!! (கட்டுரை)

கிணறு வெட்டப்போய், பூதம் கிளம்பிய’ கதைபோல, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் எதிர்பாராத, ஆச்சரியமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அளிக்கப்படும் சாட்சியங்கள், இதற்குப் பின்னால் பெரியதொரு வலைப்பின்னலும் மறைகரமும் இருந்திருக்கின்றன என்ற சந்தேகத்தை, மேலும் வலுவடையச் செய்து கொண்டிருக்கின்றன.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மிகப் பாரதூரமானவை. இதனால் ஏற்பட்ட உயிர், உடமை இழப்புகளும் அதன் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட நம்பிக்கையீனமும் வரலாறு நெடுகிலும் கறைபோலப் படிந்திருக்கும் என்றே கூற வேண்டும்.

சர்வதேச பயங்கரவாத இயக்கங்கள் இலங்கைக்குள்ளும் வேரூன்றியுள்ளன என்பதை வெளிப்படுத்தியது மட்டுமன்றி, அதற்கு முஸ்லிம் பெயர்தாங்கி, முட்டாள் இயக்கமொன்றும் துணை போயிருக்கின்றது என்பதை, இச்சம்பவங்கள் உணர்த்தின.

இலங்கையில் வாழும் 20 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள், இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இந்தப் பழி, முஸ்லிம் சமூகத்தின் மீதே விழுந்தது. பயங்கரவாதிகள் குழு மேற்கொண்ட உயிரழிப்பு, நாட்டின் பேரினவாத சக்திகளின் நடவடிக்கைகளுக்குத் தூபமிட்டன.

இந்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு மேலதிகமாக, இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் பாதுகாப்புத் தரப்பினரும் கடைசித் தறுவாயில், ‘நடக்கக் கூடாத எதுவோ நடக்கப் போகின்றது’ என்பதை உணர்ந்து கொள்வதற்குப் போதுமான இரகசியத் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், அதைத் தடுப்பதற்குக் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அப்படியாயின், உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கப்படவில்லையா, அதை வேண்டுமென்றே யாரோ தடுத்திருந்தார்களா, போன்ற வினாக்கள், தாக்குதல் நடைபெற்று சில மணிநேரங்களிலேயே மக்கள் மனங்களில் ஏற்பட்டு விட்டன.

இலங்கை முஸ்லிம்கள், இந்தத் தாக்குதலை மனதால் கூட ஆதரிக்கவில்லை. என்றாலும், ஒரு சமூகம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தரப்பில் பராமுகம் சார்ந்த சிறியதொரு தவறு இடம்பெற்றிருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.

அதாவது, இப்போதுதான் இஸ்லாமிய மார்க்கத்தைக் கண்டுபிடித்தது போல, புதிதுபுதிதாகத் தீவிர மார்க்கப் பிரசாரங்களை மேற்கொள்ளும் மத இயக்கங்களும் ஜமாஅத்களும் புற்றீசல் போல முளைத்தன. முஸ்லிம் சமூகம், இந்த இயக்கங்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்காமலும், கட்டுப்படுத்தாமலும் தன்பாட்டில் இருந்த வேளையிலேயே, தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தினர், இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், இனமுரண்பாடு, இனவழிப்பு பற்றிய கசப்பான அனுபவங்களைக் கொண்டிருக்கின்றனர். 1915 ஜூலைக் கலவரம், 1970களில் ஏற்பட்ட இனவன்முறை, 1983 ஜூலைக் கலவரம் ஆகியவற்றால் மட்டுமல்ல, ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களாலும் இழப்புகளைச் சந்தித்திருக்கின்றார்கள். எனவே, பயங்கரவாதம், வன்முறைகளை முஸ்லிம்கள் அடியோடு வெறுக்கின்றனர்.

அத்துடன், இலங்கையில் வாழும் ஏனைய சாதாரண தமிழ், சிங்கள மக்களைப் போலவே, முஸ்லிம்களுக்கும் ஆட்சிக் கனவோ, இஸ்லாமிய தனிநாடோ, அமைதியற்ற தேசமோ ஒருபோதும் தேவைப்படவில்லை. மூளைச் சலவை செய்யப்பட்ட ‘சிலது’களை தவிர, மற்றெல்லா முஸ்லிம்களும் அமைதியான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள்.

சரி! அதையும் தாண்டி, முஸ்லிம்கள் ஒரு தாக்குதலை மேற்கொள்வதென்றால், முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்கள், வன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட வேளைகளில் இறங்கியிருக்கலாம். ஆயினும், அப்படிச் செய்யவில்லை.மாறாக, தேவாலயங்களில் ஆராதனைக்காகக் குழுமியிருந்த அப்பாவி பக்தர்களிடையே தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைக்கும் மிலேச்சத்தனத்தைச் செய்வதற்கு, எந்தவொரு முகாந்திரமும் கிடையாது.

இலங்கையில் பல தசாப்தங்களாக முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளோ மோதல்களோ இல்லை. மார்க்க அடிப்படையில் பார்த்தாலும் கூட, மிகவும் நெருக்கமான சமயங்களாகவே இஸ்லாமும் கிறிஸ்தவமும் நோக்கப்படுகின்றன. எனவே, முஸ்லிம்கள் மட்டுமன்றி எந்தச் சமூகத்தைச் சேர்ந்த குழுக்களும், சம்பந்தமே இல்லாமல் இன்னுமொரு சமூகத்தைக் குறிவைக்க மாட்டாது.

அத்துடன், சிங்கள கிறிஸ்தவர்கள் அதிகளவில் வருகைதராத, ஆனால், தமிழ் கிறிஸ்தவர்கள் பெருமளவில் வருகைதருகின்ற தேவாலயங்களிலேயே தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, நட்சத்திர ஹோட்டல்களும் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம்.

சஹ்ரான் தலைமையிலான குழுவினர் தீவிர மதப் பிரசாரங்களில் ஈடுபட்டனர் என்பது வெள்ளிடைமலை. அப்பாவி மக்களைக் கொன்றொழித்ததை ‘ஜிகாத்’ (புனித யுத்தம்) என்றோ, அந்தக் காட்டுமிராண்டிக் குழுவினரைத் தியாகிகள் என்றோ வகைப்படுத்த யாரும் முயற்சிக்கக் கூடாது. அதேநேரம், இந்தத் தாக்குதலை முஸ்லிம் பெயர்களை உடையவர்களே மேற்கொண்டனர் என்பதும் அது இஸ்லாமிய, மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட செயல் என்பதையும் யாரும் மறுக்க இயலாது.

ஆனால், இந்தக் குழுவினர், இந்தத் தாக்குதலைத் தாமாகவே மேற்கொண்டார்கள் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. பின்னர், இதன் பின்னணியில் ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கம் இருந்திருக்கின்றது என்று கருதப்பட்டது. ஆனபோதிலும், இதற்குப் பின்னால் உள்நாட்டு, பிராந்திய அரசியல் சக்திகளோ, மறைமுக நிகழ்ச்சி நிரல்களோ வினையூக்கிகளாக இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. அதற்குக் காரணங்களும் உள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அளித்த பொறுப்புக்கூறல் இல்லாத பதில்கள், இத்தாக்குதல் பற்றி பாதுகாப்புத் தரப்பு, முன்கூட்டியே அறிந்திருந்தும் தடுக்காமல் விடப்பட்டமை, சஹ்ரான் குழுவினருடன், முன்னொரு காலத்தில் ஆட்சியாளர்கள் தொடர்பைப் பேணினார்கள் என்ற தகவல்கள் கசிந்தமை, கடந்த அரசாங்கம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையை நிறைவு செய்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமை போன்ற நடவடிக்கைகள், இதற்குப் பின்னால் இருந்த மர்மங்களை விலக விடவில்லை.

இந்நிலையிலேயே, புதிய அரசாங்கம் இதுபற்றி விசாரிப்பதற்காக இன்னுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தது. இந்த ஆணைக்குழு, விசாரணையை ஆரம்பித்த போது, முன்னைய ஆணைக்குழு நடத்திய விசாரணையைப் போலவே, முஸ்லிம் அரசியல்வாதிகளே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டனர்.

ரிஷாட் பதியுதீன், மீண்டுமொரு சுற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ரவூப் ஹக்கீமும் வாக்குமூலம் அளித்தார். இப்போது, ஏ.எல்.எம். அதாவுல்லாவையும் சம்பந்தப்படுத்தி, பொலிஸ் உயரதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்திருக்கின்றார். முஸ்லிம்களில் பலரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக, முஸ்லிம்களை நோக்கியதாக மய்யங் கொண்டிருந்த குற்றச்சாட்டுகள் இன்னும் விலகிச் செல்லவில்லை. ஆனாலும், இதையெல்லாம் தாண்டி, பல புதிய, ஆச்சரியமான தகவல்கள், அண்மைக்கால விசாரணைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்ல முடியும்.

தற்கொலைக் குண்டுதாரிகளுள் ஒருவரின் மனைவியான ‘சாரா’ எனப்படும் புளஸ்தினியை, வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதம்மாற்றி, தற்கொலைக் குண்டுதாரியாக ஆக்கிவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இறந்த உடல்களுடன் ‘சாரா’வின் மரபணு ஒத்துப் போகவில்லை. மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் இறக்கவில்லை என்பதும், இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதற்கு உதவிய பொலிஸ் அதிகாரிகளும் கைதாகியுள்ளனர்.

சாரா, வெளிநாட்டுப் புலனாய்வாளராக இருந்திருக்கலாம் என்று, அரசாங்கத் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சாராவின் செயற்பாடுகள், ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னரே, இத்தாக்குதல் பற்றி இந்தியா அறிந்திருந்தமை உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில், இதற்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்தியொன்று இயங்கி இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இத்தாக்குதல் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ‘தவறாக’ நடந்துள்ளார் எனும் பாங்கில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர போன்ற அதிகாரிகளின் சாட்சியங்கள் நம்ப முடியாத சங்கதிகளை வெளிக் கொணர்கின்றன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில், மைத்திரிபால குற்றவாளியாகக் காணப்படுமிடத்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற மைத்திரியும் ரணிலும் கூறுகின்ற சாட்சியங்கள், பெரிய பூதங்களைக் கூட வெளிக்கிளம்பச் செய்யலாம்.

எதுஎப்படியோ, இந்தத் தாக்குதலை மேற்கொண்டது முஸ்லிம் பெயருடைய கும்பலொன்று என்றாலும், இதுவிடயத்தில் முஸ்லிம் சமூகம் தவறிழைக்கவில்லை என்பது, ஓரளவுக்குப் புலனாகத் தொடங்கியிருக்கின்றது. இதற்குப் பின்னால், பல உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் இயங்கியிருக்கலாம்; உள்நாட்டில், பொறுப்பான பதவிகளில் இருந்த பலர், பொறுப்பில்லாமல் நடந்திருக்கலாம் என்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது.

இலங்கைவாழ் மக்கள் அனைவரும் இன, மத பேதங்கள் கடந்து, ஒற்றுமையாகவும் இனநல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கே விரும்புகின்றனர். சாதாரண மக்களிடையே குரோத நோக்கங்களோ, மறைமுக நிகழ்ச்சி நிரல்களோ இல்லை. எனவே, இதைச் சீர்கெடுக்கும் விதத்தில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், உண்மையான தகவல்கள் வெளிக் கொணரப்படுவதுடன், இந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.Post a Comment

Protected by WP Anti Spam