13ஆம் திருத்தமும் தமிழரின் பரிதாப நிலையும் – கலாநிதி அமீரலி!! (கட்டுரை)

Read Time:17 Minute, 48 Second

சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா? அது ஒரு புறமிருக்க, இலங்கையின் இன்றைய அரசியற் சூழலில் அந்தத் திருத்தத்தின் ஆரம்ப கர்த்தாவான இந்தியாவுக்கும் அதனைச் செயற்படுத்த வேண்டிய இலங்கைக்குமிடையே வளர்கின்ற ராஜரீக, பொருளாதார உறவுகளுக்கு மத்தியில் இந்தத் திருத்தம் முற்றாக மறக்கப்பட்டு தமிழரைத் தவிக்க விடப்படும் ஓர் ஆபத்து எழுந்துள்ளதையே இக்கட்டுரை விபரிக்கின்றது.

1987ஆம் ஆண்டு இந்தியாவின் அழுத்தத்தின் மத்தியில் நுழைக்கப்பட்ட 13ஆவது திருத்தம் அமுலாக்கப்படுமானால் ஒற்றையாட்சி அமைப்பின்கீழ் மாகாண சபைகளினூடக அதிகாரம் பகிரப்பட்டு தமிழரின் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் கௌரவமானதுமான தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் முடிந்தபின்னர் பெரும்பான்மை இனத்துக்குள் வளர்ந்த பௌத்த சிங்கள பேராதிக்கவாதச் சக்திகள் அந்தத் திருத்தத்தை அமுல்படுத்துவதற்குச் சற்றேனும் சம்மதிக்கவில்லை. ஆகையால் அந்தச் சக்திகளின் அழுத்தத்தை மீறத் துணிவற்ற அரசாங்கங்களும் அதனை அமுல்படுத்த விரும்பாததில் ஆச்சரியமில்லை. அத்துடன் போருக்குப் பின்னர் ஆட்சிக்குவந்த ராஜபக்ச அரசு இந்தியாவை ஒதுக்கிவிட்டு சீனாவுடன் நெருங்கிய சினேகம்பூண்டு அதன்மூலம் பல பொருளாதார நன்மைகளை அடைந்த நிலையில் 13ஆம் திருத்தம் கவனிப்பாரற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

2015 இல் ராஜபக்ச அரசு கவிழ்ந்து நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டபோது தமிழ்த் தலைமைத்துவம் அவ்வரசாங்கத்துடன் கைகோர்த்து நின்று 13ஆம் திருத்தம் புத்தியிர்பெற்று அமுலாக்கப்படும் எனக் கனவு கண்டது. ஆனால் அந்த அரசாங்கமோ செயற்றிறனற்ற ஒன்றாகவும், உட்பூசல்கள் நிறைந்த ஒன்றாகவும் காணப்பட்டதால் அந்தக் கனவு நனவாகவே இல்லை. இந்த நிலையில் 2019 ஜனாதிபதித் தேர்தலும் 2020 பொதுத் தேர்தலும் பௌத்த சிங்கள பேராதிக்கவாதிகளின் பூரண ஒத்துழைப்புடன் ராஜபக்ச பரம்பரையை ஆட்சிபீடம் ஏற்றியுள்ளன.

இந்த அரசியல் மாற்றங்களின் மத்தியில் இரண்டு எதிர்பாராத சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நிகழ்ந்து இலங்கையையும் அவை பாதித்துள்ளன. ஓன்று கொவிட்-19 கொள்ளை நோய். மற்றது அதனால் விளைந்த உலகப் பொருளாதார மந்தம். இலங்கை கொள்ளை நோயை ஒருவாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வெற்றிகண்டாலும் பொருளாதார மந்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை விரைவில் விளக்குவோம்.

இதனிடையே இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் மூலகாரணம் சீனாதான் என்று அமெரிக்கா ஆரம்பித்த பிரச்சாரம் இன்று மேற்கு நாடுகளையும் உள்வாங்கி சர்வதேச மட்டத்தில் சீன எதிர்ப்புப் பேரணியொன்றை உருவாக்கியுள்ளது. அந்த அணியின் ஒரு பிரதான அங்கத்துவ நாடாக ஆசியாவில் விளங்குவது இந்தியா. சர்வதேச ரீதியான இந்த நிகழ்வை மூன்றாவது நிகழ்வெனவும் கருதலாம். ஆனால் இதுவோ முதலிரண்டைப்போலன்றி பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

கடந்த நூற்றாண்டின் இறுதிக் கால்வாசியிலிருந்து எழுச்சிபெற்ற சீனா, பொருளாதாரத்திலும் படைபலத்திலும் படிப்படியாக வளர்ந்து, ஆசியப் பிராந்திய வல்லரசாக எழுச்சி பெற்றமை அமெரிக்காவின் ஏகாதிபத்திய வல்லரசுக்கு விழுந்த ஒரு பேரிடி. சீனாவின் “ஒரு பட்டை ஒரு பாதை” என்ற புதிய பொருளாதாரச் சூத்திரம் வரலாற்றுப் புகழ்மிக்க பட்டுப்பாதையின் மறுவடிவமாகி, அப்பாதை வழியாக ஆசியாவையும் ஆபிரிக்காவையும் பசுபிக் தீவுகளையும் கட்டியாண்டு, அதன் மூலம் அடுத்த உலக வல்லரசாக மாற நினைக்கும் சீனாவை எப்படியாவது தடுக்கவேண்டுமென்று அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சிக்கின்றது.

இலங்கையிலும் 2009க்குப் பின்னர் ராஜபக்சாக்களின் ஆதரவுடன் சீனா வலுவாகக் காலூன்றி இருப்பது கண்களுக்குட் தைத்த ஒரு முள்ளாக அமெரிக்காவை கரித்துக்கொண்டே இருக்கிறது. அதேசமயம், அடுத்தவீட்டு இந்திய மணமகனை ஒதுக்கிவிட்டு தூரத்து சீனாக் காதலனோடு இலங்கை தேனிலவு கொண்டாடி அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் அக்காதலனிடம் அடகுவைத்தது இந்திய ராஜதந்திரிகளின் சீற்றத்தை வளர்த்துள்ளமை கண்கூடு. எனவே இந்து சமுத்திரத்திலிருந்து சீனாவைத் துரத்த இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதை உலகமே அறியும்.

சீனாவுக்கெதிராக வளர்ந்துவரும் அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் ஒன்றுபட்ட பலமும், அதனைப் பொருட்படுத்த மறுப்பதால் சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களும், விரைந்து சரியும் உண்ணாட்டுப் பொருளாதாரமும், அச்சரிவால் தீவிரமடையும் மக்களின் கஷ்டங்களும் ஒன்று சேர்ந்து இலங்கையின் ராஜபக்ச ஆட்சியை அதன் சீன உறவை தற்போதிருக்கும் மட்டத்திலேயே வைத்துக்கொண்டு, இந்தியாவுடனான உறவை அதிகரிக்கச் செய்யத் தூண்டியுள்ளது. அந்த மாற்றத்தின் வெளிப்பாடே கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் அவசரமாக பிரதமர் மோடியைச் சந்திக்க விரைந்ததும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தில்லியிலுள்ள அவரது சகாவைத் திருப்திப்படுத்தவதற்காக தற்போது எடுக்கும் நடவடிக்கைகளுமாகும். இந்தியாவுடன் வளரும் இந்த உறவின் பின்னணியில் பதின்மூன்றாம் திருத்தத்தம்பற்றி மீண்டும் பேசப்படுகின்றது. இது தமிழினத்துக்குப் பலனளிக்குமா?

கடந்த வருடம் கோத்தாபய ராஜபக்ச இந்தியப் பிரதமரைச் சந்தித்தபோது அவர் 400 கோடி டொலர் நிதியுதவியை இந்தியாவிடம் பெற்றுக்கொண்டு, பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவாத உறுதியளித்ததையும், இலங்கை திரும்பியவுடன் அந்த உறுதியை காற்றில் பறக்கவிட்டதையும் யாவரும் அறிவர். இது மோடிக்கு ஏற்பட்ட ஓர் அவமானம்.

இதுவரை 960 கோடி டொலருக்கு இந்தியாவிடம் இலங்கை கடன்பட்டுள்ளது. அண்மையில் மேலும் 400 கோடி டொலர் பெறுமதிக்கு இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் பணமாற்று ஒப்பந்தத்துக்கு இணங்கியுள்ளன. இன்னும் 1000 கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தம் பறற்றியும் பேச்சசுவார்த்தைகள் நடைபெறுகின்றன. மேலும் 15 கோடி டொலர் பண உதவியை பிரதமர் மோடி பௌத்த உறவினை இலங்கைக்கு வழங்கியுள்ளார். சில மாதங்களுக்குமுன் உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட குஷிநகர் விமான நிலையத்துக்கு முதன்முதலாக இலங்கைச் சுற்றுலாப் பயணிகளை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்வளவு தாராண்மையுடன் உதவிகளை அள்ளி வழங்கும் இந்தியப் பிரதமர் ஏன் மகிந்த ராஜபக்சவுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதுபற்றி அழுத்தம் கொடுக்கவில்லை? வழமைபோல பேச்சோடு பேச்சாக ஏதோ புத்திமதி கூறுவதுபோல் அந்தத் திருத்தம்பற்றி மகிந்தவுக்கு ஞாபகப்படுத்தினாரே தவிர, தமிழரின் பிரச்சினையில் உண்மையான சிரத்தை இருந்திருந்தால் பொருளாதார உதவியின் ஒரு நிபந்தனையாக 13ஆம் திருத்தம் அமுலாவதை பேச்சுவாhத்தiயில் நுழைத்திருக்கலாமல்லவா? அல்லது குறைந்தபட்சம் அதை அமுல்படுத்துவதற்கு ஒரு கால வரையறையையாவது விதித்திருக்கலாமல்லவா? இலங்கையின் வங்குறோத்து நிலையை அறிந்தும் ஏன் அந்த நிலையை அவர் தமிழினத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தவில்லை? இந்தத் தயக்கத்துக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஓன்று, மோடியைப் பொறுத்தவரை அவரது நாட்டின் நலனைவிட இலங்கைத் தமிழரின் பிரச்சினை முக்கியமல்ல. இந்தியாவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஒரு வரப்பிரசாதம்போல் கிடைத்துள்ளது. சீனாவுடனான இலங்கையின் உறவை முற்றாக வெட்டியெறிய முடியவில்லையாயினும் அதனை மேலும் வளரவிடாமற் தடுத்து, பொருளாதார உதவிகள் மூலம் இலங்கையின் சந்தையை இந்திய முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகத் திருப்பி, இலங்கையின் வளங்களையும் இந்திய வசப்படுத்த முடியுமாயின் இந்தியாவின் பிராந்தியப் பேரரசு நோக்கம் சாத்தியப்படுமல்லவா? ஆகவே இந்திய முதலாளி வர்க்கம் மோடியின் இந்த முயற்சிக்குப் புரண ஆதரவையும் நல்கும். இந்த நோக்கம் நிறைவேற ஏன் இலங்கைத் தமிழரின் பிரச்சினை ஒரு முட்டுக்கட்டையாக வேண்டும்?

இரண்டாவதாக, இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் தில்லியுடன் நேரடியாகப் பேசுவதில்லை. சென்னையினூடாகத்தான் தொடர்பு கொள்வர். அதாவது தென்னிந்திய அரசை தரகனாகக் கொண்டே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பர். ஆனால், கடந்த இந்தியத் தேர்தலில் தமிழ் நாட்டின் ஆதரவில்லாமலே மோடி, மத்திய அரசைக் கைப்பற்றியுள்ளார். எனவே சென்னையின் அழுத்தத்தைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் அவருக்கில்லை. ஆதலால் இலங்கைத் தமிழரின் பிரச்சினை மோடியின் பதவிக்கு எந்த ஆபத்தையும் கொடுக்கப் போவதில்லை.

இந்த இரண்டு காரணங்களினாலும் 13ஆம் திருத்தம் அமுலாக்கப்படுவதை இந்தியா வரவேற்குமே ஒழிய அதனைக் கட்டாயப்படுத்தி தனக்குக் கிடைக்கும் பிராந்திய ஆதிக்க வாய்ப்புகளை இழக்க விரும்பாது. இதனாலேதான் இலங்கைத் தமிழரின் நிலை வளருகின்ற இந்திய-இலங்கை உறவால் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதைவிடவும் மோசமான நிலையில் முஸ்லிம்களின் நிலை உள்ளது. மகிந்த அரசு எடுக்கும் சில நடவடிக்கைகள் முஸ்லிம் இனத்தைப் பாதித்து மோடியை திருப்திபண்ணுவதாக அமைகின்றன. உதாரணமாக, பசுமாடு அறுப்பதற்குத் தடை, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தை நீக்குதல், மதரசாக் கல்விக்கு முட்டுக்கட்டை போடுதல் என்பனவெல்லாம் என்பனவெல்லாம் மோடிக்கும் அவரின் இந்துத்துவ வாதிகளுக்கும் மதுரகானமாக அமைவன. சுருக்கமாகக் கூறின் கோத்தாபய-மகிந்த ஆட்சி ஒரு அரசில் அதிகாரத் தந்திரத்தின் அடிப்படையில் நடைபெறுவதை உணரலாம். அதாவது வடக்கிலும் கிழக்கிலும் தமிழரை நசுக்கநசுக்க தெற்கிலே அரசுக்கு ஆதரவு பெருகும், முஸ்லிம்களை நசுக்கநசுக்க மோடியின் தயாளம் பெருகும். தமிழர்களுக்காவது அவர்களின் துயரத்தை உலகறியச் செய்வதற்கு புகலிடம் புகுந்த தமிழினம் மேற்கு நாடுகளிலிருந்து அயராது உழைக்கின்றது. முஸ்லிம்களுக்கு அதுதானும் இல்லை. இஸ்லாமிய சகோதரத்துவம், முஸ்லிம்கள் ஒரே உம்மத்துகள் என்பதெல்லாம் வெறும் கற்பனையேயன்றி நிஜமில்லை.

ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை. இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் செல்கின்றது. மூடி என்ற சர்வதேச பொருளாதாரக் கண்காணிப்புத் தாபனம் இரண்டொரு நாட்களின் முன்னர் வெளியிட்ட அதன் அறிக்கையில் இலங்கையின் பொருளாதாரத் தரத்தை மூன்று படிகாளாற் குறைத்தள்ளது. தாங்கொணாத கடன் பழு, ஏற்றுமதிகளின் வீழ்ச்சி, அரசாங்க நிதிநிலையிலும் சென்மதி நிலுவையிலும் ஒரே சமயத்தில் அதிகரிக்கும் பற்றாக்குறைகள், நாணய மதிப்பிறக்கம், வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு, விரிவடையும் வருமான ஏற்றத்தாழ்வு, வறுமையின் கொடுமை என்றவாறு பொரளாதாரப் பிணிகள் நாட்டைப் பீடித்துள்ளன. விரைவில் நாடாளுமன்றத்திற் சமர்ப்பிக்கப்படப்போகும் வரவுசெலவுத் திட்டம் எதிர்வரப்போகும் கஷ்டங்களுக்குக் கட்டியம் கூறுவதுபோல் அமையலாம்.

இந்தியாவின் தயாளமும் மற்றவர்களின் உதவிகளும் சொற்ப காலத்துக்குச் சுகத்தைத் தரலாம். ஆனால் அனைத்து மக்களின் ஒத்துழைப்பின்றி நாட்டுக்கு நிரந்தர சுபீட்சமில்லை. சிலரை எக்காலமும் ஏமாற்றலாம், எல்லாரையும் சிலகாலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லாரையும் எக்காலமும் ஏமாற்ற முடியாது. பௌத்த சிங்கள மக்கள் இதனை விரைவில் உணர்வர். அவ்வாறு அவர்கள் உணரும்போது “ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ?”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழா, தோழா தோள் கொடு! (மகளிர் பக்கம்)
Next post சாப்பிட்டு காசு தராம கம்பி நீட்டலாம் -ன்னு பாக்கறயா வெட்டிடுவன்!! (வீடியோ)