முத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்! (கட்டுரை)

Read Time:16 Minute, 53 Second

‘சிறிலங்கா’ கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான சுயவரலாற்றுப் படத்தில் (Biopic) விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான சர்சைக்கான எதிர்வினைகள் பல்வேறு வகையான அணுகுமுறைகளை அவதானிக்க முடிகிறது. ஒன்று இதன் அரசியல் பரிமாணத்தை முன்வைத்து விஜய் சேதுபதியிடம் வினயமாகக் கோரிக்கை வைக்கின்ற கருத்தில் அணுகுமுறை. அது அறிவார்ந்த நாகரீகத்தின் பாற்பட்டது. இந்த விவகாரத்தை துரோகி, வந்தேறி சொல்லாடல்களினாலும் மிரட்டல்களினாலும் உணர்ச்சிக்கூச்சலாக முன்வைக்கும் அணுகுமுறை இன்னொரு வகையிலானது. இரண்டாவது அணுகுமுறையே பெரும்போக்காக இருக்கின்றது. இவர்கள் பொதுவாக அனைத்துச் சர்ச்சைகளிலும் இப்படியாகவே இயங்கிவருகின்றனர்.

இவர்கள் தவிர, இன்னும் பல தரப்பினர் உள்ளனர். இத்தகைய அதிருப்தி வெளிப்பாடுகளைக் கிண்டல் செய்பவர்களும் உள்ளனர். இவர்கள் எதிர்வினையின் அடிப்படைப் பரிமாணத்தை விட்டுவிட்டு ஒரே பல்லவிகளை திரும்பத்திரும்ப பாடிக்கொண்டிருப்பவர்கள். பிரச்சினையின் அடிப்படையை மடைமாற்றுபவர்கள். மற்றுமோர் தரப்பினர் இத்தகையை எதிர்வினைகளைப் படைப்புச் சுதந்திரத்தில் கைவைப்பதாகக் கண்டனம் செய்கின்றனர்.

எந்தப்படத்தில் நடிப்பது நடிக்காமல் விடுவது என்பது நடிகனின் தேர்வுச் சுதந்திரம் சார்ந்தது. அதில் தலையிட எமருக்கும் உரிமை இல்லை என்று வாதங்ககளையும் காணக்கிடைக்கின்றது. திரைப்படம் வெளிவந்த பின்னர் அதனைக் கருத்தியல் தளத்தில் விமர்சிக்கலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு. இந்தத் திரைப்படம் தொடர்பான எதிர்வினையை விஜய் சேதுபதியின் சுதந்திரத்தில் தலையிடும் விடயமாக சுருக்க முடியாது. அப்படிச் சுருக்குவது கருப்பு வெள்ளை அணுகுமுறை. அதேவேளை அவரை மிரட்டும் பாணியிலான அறிக்கைகள், வற்புறுத்தல்கள், வசைவுகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

விஜய் சேதுபதியை நோக்கி வேண்டுகோள் விடுக்கப்படுவது ஏன்? இயக்குனர், தயாரிப்பு நிறுவனத்திற்கு இதில் பொறுப்பில்லையா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. தவிர விஜய் சேதுபதி இல்லாமல் வேறு மொழி நடிகர் யாரவது அல்லது ஹொலிவூட் நடிகர் யாரேனும் நடித்தால் இத்தகைய எதிர்ப்பினைத் தமிழர்கள் வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள் என்று கருத்துத் தெரிவிப்போரும் உள்ளனர். ஆனால் இங்கே முத்தையா முரளிதரன் அல்லாத, தமிழர் அல்லாத வேறு யாரோவொரு இவர் போன்ற பேரினவாத ஆதரவாளரோ, விஜய் சேதுபதி அல்லாத வேறு மொழி நடிகர் இதில் நடிப்பதாக இருந்திருந்தாலுமோ எதிர்வினைகளுக்கு ஒரு அரசியல் அடிப்படை உண்டு.

விஜய் சேதுபதி தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர், மக்கள் செல்வாக்கும் நட்சத்திர அந்தஸ்துமுடைய ஒருவர். அவரை அணுகுவது இலகு. இந்ந விடயத்தின் பின்னணியையும் விளைவுகளையும் புரிந்துகொள்ளக்கூடியவர் என்ற வகையில் அவரிடம் வேண்டுகோள் விடுப்பதென்பது இயல்பு.

தவிர மற்றைய நடிகர்களுடன் ஒப்பிடும்போது, சமூக, அரசியல் சார்ந்து மக்கள் நலனை முன்னிறுத்திய காத்திரமான கருத்துகளை வெளிப்படுத்துகின்ற நடிகராக விஜய் சேதுபதி தன்னைப் பொதுவெளியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். சமகால நடிகர்களில் பிரகாஸ்ராஜ் மற்றும் விஐய் சேதுபதி ஆகிய இருவரினதும் சமூக-உலகப் பார்வை கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

முத்தையா முரளிதரன் ஒரு மாபெரும் விளையாட்டு வீரர், சாதனையாளர், உழைக்கும் மக்கள் சமூகத்திலிருந்து வந்தவர். ஒரு சாதனையாளராக அவரது வாழ்க்கை வரலாறு பதிவாகுவதை எதிர்ப்பது நியாயமில்லை என்ற வாதிடுவோரும் உள்ளனர். இதனை ஒரு சர்ச்சை ஆக்கும் அளவிற்கும் எதிர்க்க வேண்டிய அளவிற்கு பெறுமதியான விடயம் இல்லை. கடந்துபேக வேண்டியது என்று கருதுவோரும் உள்ளனர்.

முரளிதரனை மலையகத்தின் உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக, அவர்களது பிரதிநிதியாக முன்னிறுத்த முயல்வதெல்லாம் நகைப்பிற்குரியது. அம்மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக அவர் குரல்கொடுத்திருந்தால் சிறிலங்கா கிறிக்கெற் அணியில் அவர் இடம்பெற்றிருக்கவே முடியாது என்பதை அரசியல் அரிச்சுவடி மட்டும் தெரிந்தவர்கள்கூட நன்கறிவர். அவர் பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர். அதனை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டவரும் கூட. சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு. தனது முதன்மையான அடையாளம் ‘சிறிலங்கன்’ என்றும் கூறியுள்ளார். அப்படிச் சொல்வதற்கும் உணர்வதற்கும் சிங்கள பெருந்தேசிய வாதத்திற்கு ஒத்தூதுவதற்குமான உரிமை அவருக்கு உள்ளது. அது அவருடைய தெரிவு. அவருடைய சுதந்திரம்.

அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவது இங்கு பிரச்சினை இல்லை. அதில் அவரது அரசியல் சார்புகள், நிலைப்பாடுகள் பேசப்பட மாட்டாது என்பதுவும் இந்த எதிர்வினைகளுக்கான காரணங்களில் ஒன்று. விளையாட்டுத் துறையின் ஒரு ஆளுமையாக அவர் எப்படி உருவனார் என்பதைச் சுற்றியதான சித்தரிப்புகள் மட்டுமே இருக்கும் என்ற கருத்துகள் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து முன்னர் கூறப்பட்டன. அங்குதான் பிரச்சினையே உள்ளது.

கிறிக்கெற்றிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவர் சிறிலங்கா அரசியல் களத்தில், பேரினவாத அரசின் தீவிர ஆதரவாளராக இயங்கி வருகின்றார். அவருடைய அரசியல் செயற்பாட்டை நீக்கிவிட்டு அவர்பற்றிய வரலாற்றுப்படத்தினை எடுப்பதென்பதை எப்படி எடுத்துக்கொள்வது?. அவரை அரசியல் நீக்கம் செய்து நாயகனாக முன்னிறுத்துவதிலுள்ள தார்மீகச் சிக்கல் சார்ந்ததே தற்போதைய எதிர்ப்புகளின் அடிப்படை.

முள்ளிவாய்க்காலில் புலிகள் மட்டும் அழிக்கப்படவில்லை. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சரணடைந்தவர்கள் கோரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள், பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள். இத்தகைய மானிடத்திற்கெதிரான கொடூரங்களுடன் போர் நிறைவுக்கு வந்தததைத் தன் வாழ்நாளில் மிக முக்கிய நாள் என்றார். காணமற் போனவர்கள் தொடர்பான போராட்டத்தின் ஒரு அங்கமாக (2013 முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாண விஜயத்தின்போது) காணமற்போனோரின் தாய்மார் கமரூன் முன்பு நடத்திய போராட்டத்தை எள்ளி நகையாடியவர் முரளி. ராஜபக்ச சகோதரர்களின் தேர்தல் வெற்றிக்கான பிரச்சாரங்களில் நேரடியாக ஈடுபட்டார்.

ஒரு நபர் பற்றிய வரலாற்றுப் படம் என்பது அந்நபர் பற்றிய முழுமையான தரிசனத்தைக் கொடுக்க வேண்டும். அவர் மீதான விமர்சனங்கள், அவருடைய சார்புநிலைகள் குறித்த காட்சிகளையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் முரளிதரன் போன்ற உயிர்வாழும் ஒரு பிரபலம் பற்றிய படம் அப்படியாக உருவாக்கப்படும் வாய்ப்புகள் குறைவு. பணமும், புகழும், அதிகார சக்திகளின் ஆதரவுமுடைய ஒருவர் தனது எதிர்கால அரசியல், வணிக முதலீடுகளுக்குக் குந்தகமான விமர்சனங்களுடன் தன் பற்றிய படம் வெளிவருவதை அனுமதிக்கின்ற வாய்ப்புகள் அரிது. மட்டுமல்லாமல் அவர் சார்ந்திருக்கின்ற பேரினவாதமும் அதனை அனுமதிக்கப்போவதில்லை.

முத்தையா முரளிதரன் சுயவரலாற்றுப் படம் சார்ந்த சிக்கலில் அவர் ஒரு விளையாட்டுச் சாதனையாளராக மட்டும் இருந்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. இங்கு பிரச்சனை அரசியல். அந்த அரசியல் என்பது அவர் சார்ந்த ஒடுக்கப்பட்ட மலையக மக்களுக்குச் சார்பான அரசியலும் இல்லை. அரசியல் உரிமை மறுக்கப்பட்ட, இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழ் மக்களுக்குச் சார்பானதும் இல்லை. அவருடைய அரசியல் ஈழத் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் மக்களை ஒடுக்குகின்ற பௌத்த சிங்கள பெருந்தேசிய வாதத்திற்கு முழுமையான முண்டுகொடுப்பினைச் செய்கின்ற, அதன் சர்வாதிகார, இன ஒடுக்குக்குமுறைப் போக்கினை நியாயப்படுத்துகின்ற அரசியல். அரசு, இனவாதம், இராணுவம் என அதன் பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத நிறுவனத்தைப் பாதுகாக்கும் கருத்தியலை 2009இன் பின் அவர் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கிறார். அனைத்துலக மட்டத்தில் இனப்படுகொலை அரசை நியாயப்படுத்தி வருகிறார் போன்றவற்றிற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் அவர் நிற்காததுகூடப் பரவாயில்லை. விளையாட்டு வீரராக அரசியலில் நிலைப்பாடு எடுக்காமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் ஒடுக்குமுறையாளர்களின் மேலாதிக்கக் கருத்தினை வழிமொழியும் நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்ற ஒரு நபர் என்ற அடிப்படையில் அவர் தொடர்பான இந்தத் திரைப்படத்திற்கு எதிர்வினைகள் எழுவதிலுள்ள தார்மீக நியாயங்கள் புறந்தள்ளக்கூடியவை அல்ல. ஆனால் இந்தச் சர்ச்சையை எதிர்கொள்வதில் தமிழ்ச்சூழலில் பெரும் அணுகுமுறைக் குறைபாடுகள் உள்ளன.
தமிழகம், ஈழம், புலம்பெயர் தேசங்களில் என மூன்று தளங்களிலிருந்தும் ஒரு விடயத்தினை அதன் முழுமையான பரிமாணத்தை முன்வைத்து எதிர்வினைகள் ஆற்றப்படுவது மிக அரிது. அததற்குரிய பெறுமதியுடன், கருத்தியல் தளத்தில் நின்று அணுகுபவர்கள் மிகக் குறைவு. அரைவேட்காட்டுத்தனமாகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் கொச்சைப்படுத்தல்களாகவும் சேறுபூசுதல்களாகவும் அணுகுபவர்களே அதிகம். சமூக வலைத்தளங்களில் அத்தகைய குப்பைகளே நிரம்பிக் கிடக்கின்றன. இவர்களால் தமிழர் நலனுக்கும் பயனில்லை. விமர்சனக் கலாச்சாரத்தின் ஆரோக்கியத்திற்கும் பயனில்லை.

இதில் நடித்தால் விஜய் சேதுபதியின் திரைப்பட எதிர்காலம் மண்கவ்வும் என்ற ரீதியில் பொங்குபவர்களின் கருத்துகள் அபத்தமானவை. இதற்கு அவ்வப்போது ரஜனியின் சமூக விரோதக் கருத்துகளுக்கு எழுகின்ற எதிர்ப்புகளும் ரஜனியின் திரைப்டங்களின் வியாபாரமும் நல்ல உதாரணம். கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் போராட்டங்களை சமூக விரோதமாகச் சித்தரித்து, காவல்துறை அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டுமென்று கூறிய கருத்துகளைத் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பின. காலா படத்தைப் புறக்கணிக்கவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆயினும் நடைமுறையில் அது எவ்விதத் தாக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. இது ரஜனியின் அண்மைய உதாரணம். முன்னரும் பல தடவைகள் ரஜனியின் சமூக அரசியல் உளறல்களுக்கு எதிர்ப்புக் கிளம்புவதும் பின்னர் அந்த எதிர்ப்புகள் புஸ்வாணமாகிப் போவதும் பழகிப்போன அநுபவங்கள். தவிர லைக்கா தயாரிப்பு நிறுவனச் சர்ச்கைகளும் இவ்வாறானவையே.

சினிமா என்பது முற்றிலும் வியாபாரத்தை மையமாகக் கொண்டது. இலாப நட்டக் கணக்குகளே திரைத்துறையின் அசைவுகளைத் தீர்மானிப்பவை. வன்முறையும், பெண்களுக்கெதிரான போக்குகளும், அதிகாரத்திற்குச் சாமரம் வீசுவதும் பெரும்பாலான தமிழ்ச் சினிமாவின் போக்கு.

முரளிதரனின் அடையாளம் என்பது கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமல்ல. விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னான அவரது அரசியலும் அவரது அடையாளம். அது பேரினவாதத்திற்கு ஒத்தூதும் அரசியல். அவரது அரசியலை நீக்கம் செய்துவிட்டு விளையாட்டு வீரனாக மட்டுமே சித்தரிப்பது முழுமையான கலையாகாது.

படம் வெளிவருகின்றது – வெளிவரவில்லை, விஜய் சேதுபதி நடிக்கிறார்- நடிக்கவில்லை. விஜய் சேதுபதி இல்லாமல் வேறு யாராவது நடித்து படம் வெளிவருகின்றது போன்ற அனைத்துச் சாத்தியங்களுக்கும் அப்பால் பிரக்ஞைபூர்வபான கருத்தியல் சார்ந்த எதிர்வினைகள், அதிருப்திவெளிப்பாடுகள், வேண்டுகோள்களுக்கு குறைந்தபட்சம் குறியீட்டுப் பெறுமதி உள்ளது. அந்த குறியீட்டுப் பெறுமதி அரசியல் பரிமாணத்திலிருந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி!! (வீடியோ)
Next post உடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு!! (மருத்துவம்)