சர்வாதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்ட பெருந்தொற்று !! (கட்டுரை)

Read Time:14 Minute, 12 Second

அதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியலை, நிக்கோலோ மாக்கியாவலி என்ற இத்தாலிய அரசியல் சிந்தனையாளர் ‘இளவரசனுக்கு’ சொல்லிக்கொடுத்தார். ‘மனிதர்கள், தாம் அச்சம் கொள்பவர்களை விட, தாம் நேசிப்பவர்களை அவமதிக்கக் குறைவான தயக்கத்தையே காட்டுவார்கள். ஏனெனில், நேசம் என்பது கடப்பாட்டுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டதாகும். ஆயினும், சுயநலம் மனிதனின் தன்மையாதலால், சுயநலம் குறுக்கீடு செய்யும் போது, அந்தச் சங்கிலி தகர்ந்துவிடும். ஆனால், தண்டனை கிடைக்கும் என்ற அச்சம், எப்போதும் பலமாக இருக்கும்’ என்று, தன்னுடைய ‘இளவரசன்’ நூலில் குறிப்பிடுகிறார். அதிகார அரசியலின், சர்வாதிகாரிகளுக்கான பாலபாடம் இது.

ஜனநாயகத்தின், குறிப்பாக, தாராளவாத ஜனநாயகத்தின் முக்கிய கூறுகளானவை, அரசமைப்பு ரீதியான ஜனநாயகம், சட்டவாட்சி, அதிகாரப் பிரிவினை, தடைகளும் சமன்பாடுகளும், அடிப்படை மனித உரிமைகள், மக்கள் இறைமை, நீதி மறுசீராய்வு, சுயாதீன ஊடகத்துறை, சிவில் சமூகச் செயற்பாடு போன்றவை, சர்வாதிகாரத்தை விரும்பும் தலைமைகளுக்கு மிகக்கசப்பான விடயங்களாகும்.

கட்டமைப்பு ரீதியாக வேரூன்றி உள்ள, இந்தத் தாராளவாத ஜனநாயகக் கூறுகள், சர்வாதிகாரத்தின் மீதான, தனிநபரினதோ அமைப்பினதோ அதிகாரம் குவிவதை மட்டுப்பாடு செய்பவை ஆகும். ஆகவே, இன்னுமின்னும் அதிக அதிகாரத்தை வேண்டும் சர்வாதிகாரிகள், இந்த மட்டுப்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் களைவதற்கும் தகர்ப்பதற்கும், அவற்றைத் தந்திரமாக ஊடறுப்பதற்கே முயல்கிறார்கள்.

சாதாரண நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தகர்ப்பதும் மீறுவதும் தந்திரோபாயமாகவேனும் ஊடறுப்பதும் அவ்வளவு எளிதானதல்ல. அவற்றைச் செய்ய முயலும் போது, மக்களிடமிருந்து எதிர்வினைகள் உருவாகும். அத்துடன், ஏலவேயுள்ள ஜனநாயகக் கட்டமைப்பு, ஏற்படுத்தியுள்ள பாதுகாப்புகள் அதற்கு அனுமதிக்காது. இதனால்தான், அவசரகாலநிலை என்பது, சர்வாதிகாரிகளுக்கும் சர்வாதிகாரத்தை வேண்டும் ஆட்சியாளர்களுக்கும் இனிப்பானதொரு விடயம் ஆகும்.

அவசரகாலநிலை, அசாதாரண சூழலை ஏற்படுத்துகின்றன. அந்த அசாதாரண சூழலானது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். அந்த அச்சத்தின் விளைவாக, மக்கள் அரசாங்கத்திடம் இருந்து, அதிக பாதுகாப்பை வேண்டுவார்கள். அந்தப் பாதுகாப்புக்கு விலையாக, மக்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படும். அத்துடன், ஜனநாயகக் கட்டமைப்புகளும் நெகிழ்ச்சியுறச் செய்யப்பட்டு, ஆட்சியாளரிடம் நிறைவேற்று அதிகாரப் பலம் குவிக்கப்படும்.

இது, சாதாரண நிலைமைகளின் கீழ், ஆட்சியாளர் அனுபவிக்கும் அதிகாரத்திலும் பலமான அதிகாரத்தை, ஆட்சியாளர்களுக்கு வழங்குவதோடு, அதற்கான பொறுப்புக்கூறல், வகைசொல்லும் கடமை ஆகியவற்றையும் குறைக்கிறது. அதிக அதிகாரம், குறைந்த பொறுப்புக்கூறல் என்பவற்றைவிட, சர்வாதிகாரிகளுக்கும் சர்வாதிகாரத்தை வேண்டும் ஆட்சியாளர்களுக்கும் இனிப்பானது, வேறு என்னவாக இருக்க முடியும்?

அதிரடி அசம்பாவிதங்களையும் அதனால் விளையும் மக்களின் அச்ச உணர்வையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்கச் செய்யும் தந்திரோபாயம், வரலாற்றில் பல இடங்களில் காணமுடியும்.

20ஆம் நூற்றாண்டில், மிகப்பெரிய துயரங்களில் ஒன்றுக்கு வித்திட்ட ஹிட்லரின் ஆட்சியின், சர்வாதிகார அதிகாரக் குவிப்புக்கு, ‘றைக்ஸ்டாக்கில்’ (ஜேர்மனிய நாடாளுமன்றம்) ஏற்பட்ட தீ, தீர்மானம்மிக்க புள்ளியாக இருந்தது. அந்தத் தீ எனும் அசம்பாவிதம், ஜேர்மன் மக்களிடம் ஏற்படுத்திய அச்ச உணர்வை அறுவடைசெய்து, அதிகாரங்களைத் தன்னிடம் குவித்துக்கொண்ட ஹிட்லரின் கதையை, ஒவ்வோர் அசம்பாவிதத்தையும், ஓர் ஆட்சியாளன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டியதொன்றாகும்.

2019 டிசெம்பர் மாதமளவில், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோயானது, இன்று, ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இதன் மீதான அச்சம், இயல்பானது. ஏதாவது, மாயம் நிகழ்ந்தேனும், காப்பாற்றப்பட மாட்டோமா என்று, மக்கள் அங்கலாய்க்கும் சூழலில், இதைச் சமாளிக்க வேண்டிய பெரும் சவாலை, ஆட்சியாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இதைச் சில சர்வாதிகார ஆட்சியாளர்களும் சர்வாதிகாரத்தை வேண்டும் ஆட்சியாளர்களும் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி வருவதை, அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஸ்ரீ

சமகாலத் தேசியவாத – பெருந்திரள்வாத அரசியல் தலைவர்களைப் பட்டியலிட்டால், அதில் முன்னணியில் நிற்கும் ஒரு பெயர்தான் விக்டர் ஓபான். இவர், ஹங்கேரியின் பிரதமரும் ஃபிடெஸ் தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவருமாவார். 2020 மார்ச் மாதத்தில், தனக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள நாடாளுமன்றத்தைக் கொண்டு, வரையறையற்ற காலம்வரை, பிரதமர் பதவியில் நிலைத்து இருப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார். இதன் மூலம், சில சட்டங்களை நிறைவேற்றும் அல்லது, ஒத்திவைக்கும் அதிகாரம், உண்மை அற்றதென்று கருதப்படும் அல்லது, திரிபுபடுத்தப்பட்டதாகக் கருதப்படும் செய்திகளை வெளியிடுபவர்களுக்குச் சிறைத்தண்டனை, தேர்தல்களை வரையறையற்ற காலம் வரை ஒத்திவைக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

“இந்தச் சட்ட மூலங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோது, எதிர்க்கட்சிகள், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளைத் தடுக்கின்றன, இதன்மூலம், ஹங்கேரிய மக்களின் உயிர்களைப் பற்றி, எதிர்க்கட்சிகள் கவலைகொள்ளவில்லை” என்று கடுமையான பிரசாரம், விக்டர் ஓபான் தரப்பால் முன்வைக்கப்பட்டது. இன்று, விக்டர் ஓபானின் சர்வாதிகார ஆட்சிதான், ஹங்கேரியில் இடம்பெறுகிறது என்று சொன்னால், அது மிகையல்ல.

ஹங்கேரி மட்டும், கொரோனா வைரஸ் பரவலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தவில்லை, ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்க, அது கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துகிறது. துருக்கியிலும் இது நிகழ்கிறது.

எகிப்து, சவூதி, அல்ஜீரியா போன்ற நாடுகளில், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள் அவர்களது தடுப்புக்காவல் நீண்டுகொண்டே செல்கிறது. தாய்லாந்தில், கொவிட-19 நிமித்தம் நடைமுறையில் இருக்கும் அவசரகாலநிலை, அரசாங்கததுக்கு எதிரான, மக்கள் எழுச்சியை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், தமது அதிகார இரும்புக் கரத்தைப் பலப்படுத்த, கொரோனா வைரஸ் பரவுகையை, வசதியான சாட்டாகப் பயன்படுத்துவதைக் காணலாம்.

கொரோனா வைரஸ் பரவுகை, ஓர் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினை. இதை, விஞ்ஞானத்தின் மூலமும் மருத்துவர்களினதும் சுகாதாரப் பணியாளர்களினதும் சேவைகளின் வாயிலாக, சிவில் முறைமையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய ஒரு சவாலாகும்.

இத்தகைய பிரச்சினைக்குள், ஒரு நாட்டின் இராணுவத்தைக் கொண்டு வருவதென்பது அவசியமற்றது. பெருந்தொற்று நோய் முகாமைத்துவப் பணிகளில், அவசியமுள்ள சில ஏற்பாட்டியல், ஆளணித் தேவைகளுக்கு இராணுவத்தின் உதவியைப் பெறுவது என்பது வேறு, ஆனால், ஒட்டுமொத்த பெருந்தொற்று நோய் முகாமைத்துவப் பணியை, இராணுவத்திடம் கையளிப்பது என்பது வேறு. முதலாவது, அவசியத் தன்மையின் பாற்பட்டது. இரண்டாவது, இராணுவ ஆட்சியைச் சாதாரண மயப்படுத்துவதன் பாற்பட்டது.

மறுபுறத்தில், பெருந்தொற்று முகாமைத்துவம் என்ற பெயரில், அடிப்படை மனித உரிமைகளை மட்டுப்படுத்துவதும், விமர்சகர்களைச் சிறைபிடிப்பதும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் ஆகும். அவசரகாலநிலை என்பது, ஜனநாயகத்தின் அடிப்படைகளை மறுப்பதற்கான வாய்ப்பல்ல; அது, அவ்வாறு பயன்படுத்தப்பட ஜனநாயகம் அனுமதிக்கக்கூடாது.

இது, ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில், பெருந்தொற்று நோய் முகாமைத்துவம் என்ற பெயரில், மக்களை அச்சம் கொள்ளவைத்து, அடக்கியாளும் சட்ட ஒழுங்குகளை, ஆட்சியாளர்கள் முன்வைப்பது தொடர்பிலும், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

ஏலவே, சிறைக்கூடங்கள் நிரம்பி வழியும் ஒருநாட்டில், முகக்கவசம் அணியாதவர்களுக்குச் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், ஓர் அரசாங்கம் இயங்க விளையுமானால், அதன் நோக்கம், பெருந்தொற்று நோயை முகாமை செய்வது மட்டுமல்ல, என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், “இதுபோன்ற கட்டுப்பாடுகளின்றி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, “முடியும்” என்று நியூசிலாந்தும் அதன் பிரதமர் ஜசின்டா ஆடனும் பதில் சொல்கிறார்கள்.

ஒரு நாட்டை, இன்னொரு நாட்டுடன் ஒப்பிடுவது, மிக இலகுவான காரியமல்ல. சனத்தொகை முதல், பொருளாதாரம், அபிவிருத்தி, சனப் பரம்பல், உள்ளக முரண்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் எனப் பல்வேறு காரணிகள் அவற்றுக்கிடையில் வேறுபட்டிருக்கும்.

ஆனால், சில அடிப்படைகள் அனைவருக்கும், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை. கட்டாயம் அவசரகால நடவடிக்கைகள் மூலம், இராணுவத்தின் இரும்புக்கரம் கொண்டுதான் பெருந்தொற்றை முகாமைத்துவம் செய்ய முடியும் என்பது ஒரு போலி. கட்டுக்கோப்பான ஆட்சிக்கு இராணுவ ஆட்சிதான் பொருத்தமானது என்பது எவ்வளவு பெரிய பொய்யோ, அதைப்போன்ற பொய்தான் இது.

எனவேதான், இத்தகைய சவால்மிகு காலகட்டத்தில் மக்கள் விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகிறது. மக்களில் பொதிந்துள்ள இறைமையும் ஜனநாயக அதிகாரங்களும் ஒருமுறை பறிபோய்விட்டால், அதனை மீளப் பெற்றுக்கொள்ளவதற்கு மக்கள் பெருந்த இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதுதான் உலக வரலாறு எமக்குச் சொல்லித்தரும் பாடம்.

ஆகவே இருப்பதை இழக்காது இருப்பதே புத்திசாலித்தனமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முரளியின் முகத்திரையை கிழித்த இளைஞன்!! (வீடியோ)
Next post உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)