சந்தேகங்களை களைவாரா ‘மாவை’? (கட்டுரை)

Read Time:12 Minute, 31 Second

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் செயன்முறையாக மாத்திரம் இருந்து விடக்கூடாது என்று, சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதையடுத்து, அவரை அவசர அவசரமாகச் சந்தித்த மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் தேவையையும் அதன் செயற்பாட்டு நோக்கங்களையும் குறித்து விளக்கமளித்து இருக்கின்றார்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமொன்றைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் மாவை சேனாதிராஜா முன்னெடுத்திருந்தார். அந்த முயற்சி மீது, ஆரம்பத்தில் இருந்து சந்தேகங்கள் இருந்தாலும், நினைவேந்தலுக்கு எதிரான தடையை, ஒற்றுமையாகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்தன.

ஆரம்பத்தில், அதில் ஆர்வம் கொண்டிராத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், பொது விடயம் என்கிற அடிப்படையில் பட்டும் படாமலும் தன்னை இணைத்துக் கொண்டது. நீதிமன்றத்தின் தடையுத்தரவுகளைத் தாண்டி, சாவகச்சேரியில் தமிழ்க் கட்சிகளால் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடிந்தது.

எனினும், தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான இந்த ஒற்றுமையும் ஒருங்கிணைந்த செயற்பாடும் தொடர்பிலான முன்னெடுப்பு என்பது, இதயபூர்வமானதா என்கிற கேள்வி பலரிடமும் இருக்கின்றது.

தமிழ்க் கட்சிகளின் ஒன்றுமை என்பது, கூட்டமைப்பைப் பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலாக இருந்துவிடக்கூடாது என்று, விக்னேஸ்வரன் குறிப்பிட்டதும், அதன் போக்கிலானதுதான்.

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தொடர்பான அணுகுமுறைகள் குறித்து, கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி ஆகிய தரப்புகளுக்கு எதிராகத் தற்போது, மேல் எழுந்துள்ள சில சந்தேகங்களைக் கவனிக்கலாம்.

1. பொதுத் தேர்தலில் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ள கூட்டமைப்பு, (குறிப்பாகத் தமிழரசுக் கட்சி), தன்னை மீளக் கட்டமைப்பதற்கான ஒரு யுக்தியாகத் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் கையிலெடுத்து இருக்கின்றது.

2. கூட்டமைப்புக்கு உள்ளேயே, வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில், தங்களை ஸ்திரப்படுத்துவதற்காகத் தோற்றுப்போனவர்கள் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை.

3. மாகாண சபைத் தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், கூட்டமைப்புக்குள் தோற்றுப்போனவர்கள் அடுத்த தேர்தலுக்காகத் தங்களைத் தயார்படுத்தி, பிரபலம் பெறுவதற்கான முயற்சி.

மேற்கண்ட மூன்று சந்தேகங்களையும், கூட்டமைப்பும் மாவை சேனாதிராஜாவும் முதலில் களைய வேண்டும். ஏனெனில், பொது நோக்கில் ஒருங்கிணைந்து செயற்படுவது என்று, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் போது, திறந்த உரையாடலும் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும்.

மாறாக, தேர்தலுக்கான திட்டங்கள் இருக்குமாயின், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். தமிழ்த் தேசிய கட்சிகளைப் பொது நோக்கங்களுக்காகக் கூட, மீண்டும் ஒருங்கிணைக்கும் கட்டங்களை இல்லாமல் செய்துவிடும். கண்ணுக்கு முன்னாலேயே, அதற்கான உதாரணங்கள் நிறைய உண்டு.

அதன் அண்மைய உதாரணமாக, தமிழ் மக்கள் பேரவையைக் குறிப்பிடலாம். மக்கள் இயக்கமாகத் தன்னை முன்மொழிந்து கொண்டு, விரைவாக எழுந்த பேரவை, ஒரு கட்டத்தில் விக்னேஸ்வரனுக்குக் கட்சியொன்றை ஆரம்பித்துக் கொடுக்கும் நிலைக்குள் சுருங்கியது.

அது, சிவில் அமைப்புகளையும் அதன் இணக்க சக்திகளையும் பொதுநோக்கில் இணைத்துச் செயற்படலாம் என்கிற நம்பிக்கையைத் தகர்த்தது. சிவில், சமூக அமைப்புகள், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அழுத்தக் குழுக்களாக நிலைபெற வேண்டும்; அதன் மூலம், தமிழ்த் தேசிய கட்சிகளை வழிப்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதைப் பேரவை நீர்த்துப் போகச் செய்தது. அப்படியான நிலையொன்றை நோக்கி, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை என்கிற செயற்பாடு சென்றுவிட முடியாது.

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்காக, அவசர அவசரமாகத் தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன என்று சொன்னாலும், அதில் இணைக்கப்பட்டவர்கள், இணைக்கப்படா -தவர்கள் சார்ந்து, ஆரம்பத்திலேயே சந்தேகமும் எழுந்துவிட்டது.

அத்தோடு, அந்த ஒருங்கிணைவு என்கிற நிலைப்பாட்டை, யாழ்ப்பாணத்துக்குள் மாத்திரம் சுருக்கிக் கொண்டமையானது, ஒருவித அசூசையான நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்து வெளியில் ஏற்படுத்தியது.

வன்னியிலோ, கிழக்கிலோ தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற நிலைப்பாடு கவனம் பெறவில்லை; அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. அது, கிட்டத்தட்ட யாழ்ப்பாணத் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே பேசி, முடிவெடுத்துச் செயற்படும் விடயமாக வெளித் தெரிந்தது.

தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளை இணைக்க முடிந்த மாவை சேனாதிராஜாவால், கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பெரியளவில் ஒன்றிணைக்க முடியவில்லை. அது ஒரு கட்டத்தில், தோற்றுப்போனவர்கள் மாத்திரம் சேர்ந்திருக்கும் கூட்டாகவே பார்க்கப்பட்டது. அது, மக்களிடம் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

மாகாண சபைத் தேர்தல்கள், அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அப்படியான நிலையில், பொதுத் தேர்தலில் தோற்றவர்கள், மாகாண சபைத் தேர்தலில் ஆசனங்களைப் பெற்று, வெற்றிபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்குள் அந்த நிலை காணப்படுகின்றது.

பொதுத் தேர்தலில் மிகமோசமான வேட்பாளர் தெரிவு மூலம், மக்களிடம் தோற்றுப்போன தலைவர்கள், மீண்டும் அவ்வாறான வேட்பாளர் தெரிவொன்றை மாகாண சபை நோக்கியும் நகர்த்துவது போல தெரிகின்றது. அதன்போக்கிலான நடவடிக்கையாக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, அதில் பங்கெடுக்கும் சிலர் முன்னெடுக்கிறார்கள்.

ஆரம்பக் கட்டச் சந்திப்புகளில், தங்களுக்கிடையிலான உரையாடல்களில் மாகாண சபைத் தேர்தல் வெற்றி- தோல்வி குறித்து உரையாடிய சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படியான நிலையில், இந்தக் கூட்டு முயற்சிகளில் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

முதலில், தேர்தல் இலக்கோடு இருக்கின்ற நபர்களை, இவ்வாறான பொதுநோக்கு முயற்சிகளில் முன்னிறுத்துவதைத் தவிர்த்துவிடுவது அவசியமானது. அதைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் கட்சிகளை ஒருங்கிணைக்க முன்நின்றவராகவும் இருக்கும் மாவை சேனாதிராஜா செய்ய வேண்டும். அதுதான், ஏனைய கட்சிகளிடம் காணப்படுகின்ற சந்தேகங்களைக் களைவதற்கான முதல் வழி.

மாறாக, அந்தத் தலைவர்களைச் சந்திப்பதாலோ, தொலைபேசியில் உரையாடுவதாலோ பலன் ஏற்பட்டுவிடாது. அத்தோடு, சொந்தக் கட்சிக்குள் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை எனும் செயற்பாட்டைக் கையாள்வதை தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கைவிட வேண்டும்.

ஒரு செயற்பாட்டை, பொது நோக்கில் முன்னெடுக்கும் போது, சுயநல சிந்தனைகளைத் துறந்துவிட்டு முன்வர வேண்டும். அதுதான், அந்தச் செயற்பாட்டை ஆக்கபூர்வமாக அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்கு உதவும். ராஜபக்‌ஷர்கள் என்கிற ‘சர்வாதிகார சிந்தனையாளர்கள்’ ஆட்சியில் ஏறியிருக்கின்ற நிலையில், அவர்களை எதிர்கொள்ளுதல் என்பது, தவிர்க்க முடியாதது.

அப்படியான நிலையில், எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினராகக் காணப்படும் தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் சக்திகளும் ஒருங்கிணைந்து செயற்படுதல் என்பது, மிகவும் அவசியமானது. அதன்போக்கில், தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைவு முக்கியமானது.

ஆனால், அந்த ஒருங்கிணைவு என்பது, சந்தேகங்கள் களையப்பட்டு, திறந்த மனதுடனான முயற்சியாக நிலைபெற வேண்டும். மாவையும் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அதற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வில்லிக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்திருந்தால் என்ன தவறு? (வீடியோ)
Next post ஸ்டாலின் எந்த சட்டை போட வேண்டும் என சொல்வதற்கு ரூ.380 கோடியா? (வீடியோ)