அரசாங்கத்தின் அலட்சியமும் கொரோனாவின் மீள்பரவலும்!! (கட்டுரை)

Read Time:12 Minute, 10 Second

இலங்கை எப்போதுமே ஆச்சரியங்களால் நிறைந்த நாடு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலகம் பூராவும் சுகாதாரத்துறையினர் தலைமை தாங்கிக் கொண்டிருக்கையில், இலங்கையில் இராணுவம் தலைமையேற்றிருக்கின்றது.

சுகாதார அமைச்சரோ, மத அனுஷ்டானங்களை நடத்தி, பானையில் அடைக்கப்பட்ட புனித நீரை ஆற்றில் கொட்டுவதில் கவனமாக இருக்கிறார். பிரதமரோ, மத – மார்க்க நிறுவனங்களிடம் கொரோனா வைரஸுக்கு எதிரான பிரார்த்தனைகளை முன்னெடுக்குமாறு கோருகிறார். ஜனாதிபதியோ, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பொதுமக்களைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ்ஸுக்கு எதிரான நடவடிக்கைகளில், முதல் தரப்பாக இருக்க வேண்டிய வைத்தியர்களோ, இரண்டாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பிலான உண்மை நிலை தொடர்பில், அரச வைத்திய அதிகாரிகளே கேள்வியெழுப்பும் நிலை காணப்படுகின்றது.

பொதுத் தேர்தலில் வெற்றி கொண்ட ராஜபக்ஷ அரசாங்கம், தன்னுடைய அடுத்த வெற்றியாகக் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையை முழுவதுமாக மீட்டுவிட்டோம் என்றோர் அறிவிப்பை வெளியிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக, இலங்கையைப் பற்றியிருக்கிற இரண்டாவது கொரோனா அலை, முதல் அலையைக் காட்டிலும் வீரியமாகவும் விரைவாகவும் சமூகத்துக்குள் பரவிக் கொண்டிருக்கின்றது.

உண்மையிலேயே, தற்போது தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்கிற அச்சம் நிலவுகிறது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட மிக அபாயகரமான கட்டத்தை நோக்கி, நாடு நகர்ந்திருக்கின்றது. ஆனால், அரசாங்கமோ இன்னமும் இராணுவத்தை முன்னிறுத்திக் கொண்டு, கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை நடத்துவதில் குறியாக இருக்கிறது.

கொரோனா போன்றதொரு வைரஸ் தொற்றைக் கடப்பது என்பது, அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில், அதைச் சமூகப் பரவல் நிலையை அடையாது பார்த்துக் கொள்வதுதான் ஆபத்திலிருந்து மீள்வதற்கான வழி. ஆனால், சமூகப் பரவல் என்கிற நிலைக்குள் பல நாடுகளும் சென்றுவிட்டன. இலங்கையும் கூட அவ்வாறான கட்டத்துக்குள் சென்றுவிட்டதாகவே கொள்ள முடியும்.

பொதுத் தேர்தலை இலக்கு வைத்துக் கொண்டு, நாட்டை முழுவதுமாகத் திறந்துவிட்ட நிலை, கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த நிலைக்கு வித்திட்டிருக்கின்றது. கொரோனா வைரஸுக்கு எதிரான அனைத்து வகையான அறிவுறுத்தல்களையும் கடப்பாடுகளையும் அரசாங்கமும் அதன் நிர்வாகக் கட்டமைப்புகளுமே கூட, ஒரு கட்டத்தில் கடந்துநின்று, சாதாரண சூழலொன்று நிலவுவது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தின. அளவுக்கு அதிகமான அளவுக்குக் கூட்டங்களைக் கூட்டியது முதல், முகக் கவசம், சமூக இடைவெளியற்ற நாளாந்த நடவடிக்கை என்று அலட்சியப் போக்கொன்று நிலைப்படுத்தப்பட்டது. இன்றைக்கு அதுவும்தான், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை எங்கிருந்து எப்படி ஆரம்பித்தது என்று தெரியாது அனைத்துத் தரப்பினரும் குழப்பிப் போயிருப்பதற்குக் காரணமாகும்.

கொரோனா வைரஸ் என்பது, ஆயுத முனைப் போர் அல்ல. அது, கண்ணுக்குப் புலப்படாத வைரஸ். அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் துப்பாக்கியும் அதை வழிநடத்துகின்ற மூளையும் பெரியளவுக்கு உதவாது. அங்கு, சுகாதாரத்துறையினரும் வைத்தியர்களும் அதன் உண்மையான இணக்கத் தரப்புகளுக்கு மட்டுமே பொறுப்புக்கூறலுக்கேற்ற கடமை அமைகிறது. வேணுமென்றால், சுகாதாரத்துறையினருக்கான ஓர் ஆளணித்தரப்பாக இராணுவம் பயன்படலாம்.

ஆனால், இலங்கையில், ஆளணித் தரப்பாகப் பயன்பட வேண்டிய தரப்பு, கொரோனா வைரஸுக்கு எதிரான முதன்மைத் தரப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கான பொறுப்பை ராஜக்ஷக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். (இராணுவ) போர் வெற்றியை மூலதனமாக்கிக் கொண்டு, தேர்தல்களில் ராஜபக்ஷக்கள் வென்றிருக்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நாட்டின் நிர்வாக, வைத்திய நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதெல்லாம் அபத்தமான வாதம்.

அது, ராஜபக்ஷக்களிடம் ஏன் வருகிறது என்கிற கேள்வி எழுகின்றது. இராணுவம் பெற்ற போர் வெற்றிகளையெல்லாம், ராஜபக்ஷக்கள் தாங்கள் பெற்ற வெற்றியாகச் சுவீகரித்துக் கொண்ட பின்னர், மீண்டும் மீண்டும் தமக்கான வெற்றிகளைப் பெறுவதற்கான கருவியாக, இராணுவத்தினரைப் பயன்படுத்துகிறார்கள். அதன்மூலம், எதிர்காலத் தேர்தல் வெற்றிகளுக்கான அத்திவாரத்தைப் போடுகிறார்கள்.

ஆனால், ராஜபக்ஷக்கள் நாட்டிலுள்ள மக்களை மறந்துவிட்டார்கள். மக்களின் உயிர் மீதான மதிப்பை மறந்துவிட்டார்கள். வாழ்வாதார சிக்கல்களை மறந்துவிட்டார்கள். கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, இராணுவம் தலைமை தாங்கும் காலம் வரையில், அதுதான் நிலைமை.

இன்னொரு பக்கம், கொரோனா வைரஸ் தொற்றுக்கான முழுப்பொறுப்பையும் மக்கள் மீது போடும் கட்டத்துக்கு ஜனாதிபதி வந்திருக்கிறார். அவர், என்றைக்குமே இராணுவ ஒழுங்கில் நம்பிக்கை கொண்டவர். இராணுவத்தை வழிநடத்துவது போல, நாட்டையும் வழிநடத்திவிடலாம் என்று நினைக்கிறார். அதுதான், சாதாரண மக்களின் நிலையிலிருந்து விடயங்களை அணுகாது, இராணுவக் கட்டமைப்பின் போக்கில் சிந்திக்கிறார். பொது மக்கள் மீது, கொரோனா வைரஸ் பரவலுக்கான குற்றச்சாட்டை முன்வைப்பதும் அந்த அடிப்படையில்தான்.

கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக, கடலில் மூழ்குவதற்கும் தயார் என்று சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்துக்குள் அறிவிக்கிறார். புனித நீரை ஆற்றில் கொட்டுவதால், கொரோனாவை ஒழிக்க முடியுமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினால், அவர், தான் கடலில் மூழ்குவது பற்றிப் பேசுகிறார். அவரிடம், விஞ்ஞான ரீதியான பதில்களைப் பெற முடியாது இருக்கின்றது. மருத்துவத் துறைக்குச் சவால் விட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு வைரஸ் தொற்றுக்கு எதிராக, விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறையொன்றே வெற்றிக்கான வழி.

உலகம் அதன் போக்கில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில், புனித நீரை ஆற்றில் ஊற்றும் செயற்பாடுகள், இந்தியாவில், பசுவின் சிறுநீரைப் பருகுவதால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீளலாம் என்று பரப்பப்படும் வதந்திகள் போன்றதான செயற்பாடாகும். இந்தப் பத்தியாளர், யாரினதும் மத – மார்க்க நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கத்தோடு, மேற்கண்ட கேள்வியை எழுப்பவில்லை.

மாறாக, மருத்துவத்துறையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு வைரஸுக்கு எதிரான நடவடிக்கை என்பது, மூட நம்பிக்கைகளுக்குள் முடங்கிவிடக்கூடாது என்ற அடிப்படையிலாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், ‘பொது முடக்கம்’ குறிப்பிட்டளவான வெற்றியைப் பெற்றுத்தான் வந்திருக்கின்றது. ஆனால், பொது முடக்கம் என்பது பொதுவான ஒரு நடவடிக்கையான சில நாள்களைத் தாண்டி நீள முடியாது. அது, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கி நாட்டை நிர்கதியாக்கிவிடும். அதை எதிர்கொள்ளும் சக்தி, கடன்களால் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை போன்றதொரு நாட்டிடம் கொஞ்சமும் இருக்காது.

அப்படியான கட்டத்தில், பொதுமக்கள் மீதான கடப்பாடு என்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனான வாழ்வும் சமூக இடைவெளியும் தேவையற்ற பயணத் தவிர்ப்பும் ஆகியவை சார்ந்திருக்கின்றன. அவற்றைச் சிரமேற்றுச் செயற்படுவதுதான் நம் முன்னுள்ள ஒரே தெரிவு. அரசாங்கத்தின் செயற்றிறன் குறைபாட்டை மாத்திரம் குறை சொல்லிக் கொண்டிருப்பதால், கொரோனா வைரஸை வென்றுவிட முடியாது.

மாறாக, சமூகப் பொறுப்புள்ள பிரஜையாகவும் நாம் மாறிச் செயற்பட வேண்டும். ‘தனித்திரு விழித்திரு’ என்பதுபோல, சமூக இடைவெளியோடு கருமங்களைக் கவனமாக ஆற்றுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடம்பு சொல்வதை கேட்காமல் போகாதீங்க!! (வீடியோ)
Next post தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன? (கட்டுரை)