தேவை ஒரு புதுப்பாதை!! (கட்டுரை)

Read Time:15 Minute, 37 Second

எழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலுகைகளைப் பெற்று வளம் பெறலாம் என்றபோக்கிலேயே தமது அரசியல் பாதையை வகுத்தனர். அதற்காக அவர்கள் தனிப்பட்ட அரசியல் கட்சிகளை ஆரம்பத்தில் உருவாக்காவிட்டாலும், கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் தமிழரைப்போன்று அவர்களும் ஓரிரு கட்சிகளை அமைத்து செயற்படத் தொடங்கினர். இதனால் இதுவரை தனித்தனியே நடந்து சென்ற முஸ்லிம்கள் இப்போது வாகனங்களில் பயணித்தனர். ஆனாலும் பாதை மாறவில்லை. இன்று அவர்களின் பாதையும் தடைப்பட்டு தமிழரைப்போன்று செய்வதறியாது நிற்கதியில் விடப்பட்டுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆபத்தை எதிர்நோக்கித் திக்கற்றுத் தவிக்கும் இரு இனங்களுமே ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவ முன்வராதிருப்பதே. இது வெறுப்பினாலா செருக்கினாலா அல்லது எதிரியின் பிரித்தாளும் தந்திரத்தினாலா என்று தெரியவில்லை.

இவ்விரு இனங்களின் எதிரி ஒன்றுதான். சிங்கள பௌத்த பேராதிக்கம் இருவரையுமே நசுக்கி அடிமைகளாக்க விளைகிறது. ‘இலங்கை மட்டுமே எங்களின் சொந்த வீடு. அதில் உங்களை வாடகைக்காக வேண்டுமானால் குடியிருக்க விடுவோம். ஆனால் வீட்டின் உரிமையாளர்களாகிய எங்களுக்கு நீங்கள் உபத்திரமாக வாழக்கூடாது’ என்ற பாணியிலேயே சிங்கள பௌத்த பேராதிக்கவாதிகள் சிறுபான்மை இனங்கள் இரண்டுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர்களின் கைகளிலேயே இன்று ஆட்சியும் சிக்கியுள்ளது.

பல உதாரணங்கள் மூலம் இப்பேராதிக்கவாதிகளின் சிறுபான்மையோருக்கு எதிரான செயற்பாட்டினை விளக்க முடியுமானாலும் அவற்றுள் இரண்டை மட்டும் இக்கட்டுரைக்காகப் பொறுக்கியெடுத்து அவற்றுள் ஒன்று தமிழினத்தையும் மற்றது முஸ்லிம்களையும் தனித்தனியே எவ்வாறு பாதித்துள்ளது என்பதை நிறுவலாம்.

முதலாவது, கடந்த வருடம் முல்லைத்தீவில் நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இந்துமக்களின் புனித தலத்தை மாசுபடுத்தி அவர்களின் மதநம்பிக்கையிற் சேற்றைவீசியதுபோல் ஒரு பௌத்த சிதையை எரித்தமையாகும். நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி இதைச் செய்தார்கள். ‘நாங்கள் நினைத்ததை எப்போதம் எங்கேயும் செய்வோம், அதைக் கேட்க நீங்கள் யார்’ என்பதுபோல் இல்லாயா இது?

அதேபோன்று இந்த வருடம் கொள்ளை நோயால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்ய எடுக்கப்பட்ட முடிவு. எந்தவித விஞ்ஞான ரீதியான ஆதாரமுமின்றி ஓர் அரசாங்க வைத்தியனின் அபிப்பிராயத்தைக் காரணங்காட்டி முஸ்லிம்களின் மத உணர்வுகளை உதாசீனஞ்செய்து எடுத்த முடிவே இது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் சிறுபான்மை இனங்களை அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியாக அடக்கியொடுக்கத் தயங்காதவர்களே இப்பேராதிக்கவாதிகள். அன்று நீராவியடிப் பிள்ளையார் விடயத்தில் முஸ்லிம்கள் மௌனமாய் இருந்தனர். இன்று முலிம்களின் மரண விடயத்தில் தமிழினம் மௌனம் சாதிக்கிறது.

நாட்டின் ஆட்சியை நூறுவீத சிங்கள பௌத்த ஆட்சியாக மறற்ற வேண்டுமென்ற பேராதிக்கவாதிகளின் நீண்டகாலக் கனவு கடந்தவருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நனவாகத் தொடங்கி இவ்வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலுடன் பூர்த்தியடைந்தது. அவர்களின் இன்றையப் பிரயத்தனம் எவ்வாறு இந்த ஆட்சியை நிரந்தரமானதாக்குவது என்பதே. அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிதான் அண்மையில் நடந்தேறிய அரசியல் யாப்பு மாற்றங்கள். அந்த மாற்றங்கள் நிறைவேறுவதற்கு இரு சிறுபான்மை இனங்களின் அங்கத்தவர்களிற் சிலரும் ஆதரவாக இருந்தனர் என்பதை உணரும்போது அவ்வாதரவாளர்களைத் தமது இனங்களை அழிக்கவந்த கோடரிக்காம்புகள் என்றழைப்பதிற் தவறுண்டா?

இது நடந்து முடிந்த ஒரு கதை. அதைப்பற்றி ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. அதனை மறந்துவிட்டு இரு இனங்களும் தாம் இதுவரை பயணித்த பாதைகள் வழியே தொடர்ந்தும் பயணிப்பது பயனற்றது என்பதை உணர்ந்து ஒரு புதிய பாதையை நாடவேண்டும். அந்தப்பாதை எது?

அதை விபரிப்பதற்குமுன் இரண்டு அடிப்படை உண்மைகளை தமிழரும் முஸ்லிம்களும் உணரல் வேண்டும். ஒன்று, இரு இனங்களும் எப்படித்தான் தனியாகவோ கூட்டாகவோ கத்திக் கூச்சல்போட்டாலும் பெரும்பான்மை இனத்தின் ஆதரவில்லாமல் எந்த உரிமையையும் பெறமுடியாது. நாட்டுக்கு வெளியே எவ்வளவுதான் சிறுபான்மையோருக்குச் சாதகமான ஆதரவு திரண்டாலும் அந்த ஆதரவு ஒரு துணைக் கரமாக இயங்கலாமே ஒழிய அதுவே தனித்து நின்று எதையும் இவர்களுக்காகப் பெற்றுக் கொடுக்க முடியாது. தமிழீழப் போராட்டம் இந்த உண்மையை இரத்தத்தால் எழுதி வைத்துள்ளது.

மற்றது, சிங்கள பௌத்த மக்கள் அனைவருமே போராதிக்கவாதிகளல்லர். அதனை முஸ்லிம்கள் உணர்ந்த அளவுக்கு தமிழினம் இன்னும் உணரவில்லை. அதற்குக் காரணம் மொழி வேறுபாடு. தமிழிலே பேசி, தமிழிலே எழுதி உறவாடக்டகூடிய சிங்கள பௌத்தர்களும் சிங்களத்திலே பேசியும் எழுதியும் உறவாடக்கூடிய தமிழர்களும் மிகமிகச் சொற்பம். ஆனால் முஸ்லிம்களிடையே அந்தப் பிரச்சினை குறைவு. அதற்கான காரணங்களை இங்கே விளக்கத் தேவையில்லை. என்றாலும் இந்த வேறுபாட்டை ஒரு துரும்பாகப் பாவித்தே பேராதிக்கவாதிகள் சிறுபான்மை இனங்களை அதிலும் குறிப்பாகத் தமிழினத்தை பௌத்த சிங்களவர்களின் எதிரியெனச் சித்தரித்துள்ளனர். அதேபோன்றே தமிழினத்தின் தலைவர்களும் சிங்கள மக்களைப்பற்றிய உண்மைகளை மறைத்து தமிழ் மக்களிடையே அரசியல் செல்வாக்குத் தேடியுள்ளனர். இது ஒரு கசப்பான வரலாறு.

அது ஒரு புறமிருக்க, பௌத்த பேராதிக்கவாதமும் அதன் சித்தாந்திகளும் அவர்களின் அரசியற் பொம்மைகளும் எவ்வாறு நாட்டைக் குட்டிச்சுவராக்கி அதன் செல்வங்களைச் சூறையாடுகிறார்கள் என்பதை சிங்கள மக்களின் பல புத்திஜீவிகளும், நிர்வாக அனுபவசாலிகளும், மக்கள் இயக்கங்களும் இப்போது உணர்ந்துள்ளனர். இன்று நடைபெறும் ஏதேச்சதிகார இராணுவ ஆட்சியால் வறுமை வளர்ந்து, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்து, இன ஒற்றுமை சீரழிந்து, அமைதியும் இழக்கப்பட்டு, நாடே மீண்டும் அன்னியர் கைகளிற் சிக்குகின்ற ஓர் ஆபத்தையும் எதிர்நோக்குவதை அவர்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர். இன்றுள்ள எதிர்க்கட்சிகளுக்கும் அதனை மாற்றும் வல்லமை இல்லை என்பதையும் அந்தக் கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பேராதிக்கவாதிகளின் தயவினை நாடத் தயங்கமாட்டார்கள் என்பதையும் அறிவர்.

ஆதலால், இப்போது ஆட்சியிலிருப்போரையும் எதிரணியிலிருப்போரையும் ஒருங்கே ஒதுக்கிவிட்டு, ஜனநாயகப் பண்புகளைத் தழுவி, தேசத்தின் பல்லின அமைப்பைக் கட்டிக்காத்து, இன மதவாதங்களை உதறித்தள்ளி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து மக்களின் வறுமையைப் போக்கும் ஒரு செயற்திட்டத்தை வகுத்து அதனை நடைமுறைப் படுத்தும் வழிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் புதிதாக ஓர் அரசியல் யாப்பு அமைக்கப்படல் வேண்டுமென்ற குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

அவ்வாறான யாப்பு என்னென்ன அமிசங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கருத்திற்கொண்டு அவற்றை யாப்பு வல்லுனர்களின் பார்வைக்குச் சமர்ப்பித்துள்ளனர். சுருங்கக் கூறின் இலங்கையின் ஜனநாயகக் குரலாக அவர்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் வரவேற்கப்பட வேண்டிய ஓர் அமிசம் என்னவெனில் தனியே ஆட்சியாளர்களைப்பற்றியும் அவர்களது ஆட்சி முறையைப்பற்றியும் சதா கண்டித்துக்கொண்டே இருக்காமல் தேசப்பற்றுடன் சகலருக்கும் நலனளிக்கும் மாற்றுச் செயற் திட்டமொன்றை வகுத்து அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற எடுக்கும் முயற்சியாகும். இந்த முயற்சியில் மூவினங்களையும் உள்ளடக்கிய திறமைசாலிகளின் வட்டமொன்று நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து செயற்படத் தொடங்கியுள்ளனர்.

இது ஒரு புதுப்பாதை. பெரும்பான்மை இனத்துக்குள்ளிருந்து திறக்கப்படும் இப்பாதை எல்லா இனங்களும் ஒருமித்துப் பயணிக்கக்கூடிய ஒரு பொதுப்பாதை. அப்பாதையை வகுப்பது ஒரு குடும்பமோ குலமோ வர்க்கமோ அல்ல. மாறாக பல இனங்களையும் உள்ளடக்கிய திறமைசாலிகளின் ஒரு கூட்டு. எனவேதான் அதனை வரவேற்பது சிறுபான்மை மக்களின் எதிர்காலச் சபீட்சத்துக்கு நல்லது. இது சம்பந்தமாக இன்னுமொரு குறிப்பையும் முன்வைக்க வேண்டியுள்ளது.

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இதுவரை உருவாகிய தலைமைத்தவங்கள் இனத்தையும் குலத்தையும் மதத்தையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியே மக்களாதரவைத் தேட முயன்றன. அவற்றைத் தவிர்த்து, தனியே பொருளாதாரக் காரணிகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட ஓரிரு அரசியல் தலைமைகளை இரு சிறுபான்மை இனங்களும் உதறித் தள்ளின. ஆனால் மேலே சுட்டிக்காட்டப்பட்ட திறமைசாலிகளின் கூட்டு அல்லது வட்டம் ஒரு புதிய தலைமைத்துவம் பிறப்பதற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதாக அமைகின்றதே ஒழிய அது தலைமைத்துவத்தை நாடவில்லை.

எனவேதான் சிறுபான்மை இனங்களின் ஆண் பெண் புத்திஜீவிகளும் சமூகநல ஆர்வலர்களும் சேவை நாட்டம் கொண்டவர்களும் படைப்பாளிகளும் அவ்வட்டத்திற் சேர்வது நன்மை பயக்கும். அந்த வட்டத்தின் மடியிலிருந்துதான் ஒரு புதிய அரசியல் தலைமைத்துவம் பிறக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, கசப்பான கடந்தகால அனுபவங்களால் பெரும்பான்மையினரின் மத்தியிலிருந்து எழுகின்ற ஒவ்வொரு முயற்சியையும் சிறுபான்மை இனங்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது சகஜமாகிவிட்டது. இந்த நிலை மாறவேண்டும்.

ஜனநாயகம் மீண்டும் இலங்கையில் மலரவேண்டும் என்ற நோக்கில் பல செயற்குழுக்கள் அல்லது செயலணிகள் இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைகளிடம் மாற்றுத் திட்டமொன்று இல்லாவிட்டாலும் அவைகளை இனங்கண்டு, அவற்றுள் ஏதாவதொன்றுடன் சிறுபான்மை இனத்தவரின் புத்திஜீவிகள் இணைந்து செயற்படவேண்டியது அவசியம். இதனால் இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கை வளர்வது சாத்தியப்படும். அந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் மாற்றுத் திட்டத்தடன் ஒரு செயலணி முன்வரத் தொடங்கும்போது அதன் கரங்களைப் பலப்படுத்துவது இலகுவாயிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகப்பரு தொல்லை!! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸ் அடிமை!! (அவ்வப்போது கிளாமர்)