By 28 November 2020 0 Comments

கூந்தல பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

‘கா  ர் கூந்தல் பெண்ணழகு’ என்கிற பாடல் வரியைப் போல் கருமையும், அடர்த்தியுமான கூந்தல் மீது காதல் கொள்ளாத பெண்கள் இல்லை. நமது வாழ்வியல் மாற்றத்தால் நாம் எதிர்கொண்டு வரும் பல பிரச்னைகளில் முடி உதிர்வும் முக்கியமானதொரு பிரச்னை. தலை சீவும்போது கொத்தாய் முடிகள் கையோடு வருவதைப் பார்க்கும்போது கவலை வந்து குடிகொள்ளும். தலைமுடி போய்விட்டால் அழகே போய் விட்டது என்றெண்ணி தன்னம்பிக்கையை இழக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

இப்படியொரு சூழலின் பின்னே ஷாம்பூ, கண்டிஷனர் ஆகிய பொருட்களின் விற்பனை வழியே பல கோடி ரூபாய் வணிகம் நடந்து வருகிறது. ஆனால் நமது பாரம்பரிய முறையைக் கையாள்வது மட்டுமே முடி உதிர்வுக்குத் தீர்வாக இருக்கும் என்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை. இயற்கை முறையில் முடி உதிர்வு, இளநரை, கூந்தல் அடர்த்தி, கூந்தல் வெடிப்பு (split ends) ஆகியவற்றுக்கான தீர்வுகள் குறித்துக் கேட்டேன்…

‘‘இயக்குநீரின் (ஹார்மோன்) சமநிலையின்மைதான் முடி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதனை சமநிலைப்படுத்துவதன் மூலம்தான் நாம் இதற்கான தீர்வை அடைய முடியும். நமது முந்தைய தலைமுறைகளில் இந்தப் பிரச்னை பெரிய அளவில் இல்லை. ஏனென்றால் அப்போது தலை மற்றும் காலின் ரத்தக்குழாய்கள் சுருங்கி விரிவடையும்படியாக வேலை செய்தார்கள். கடினமான உடல் உழைப்பு இருந்தது. ஆகவே இயக்குநீர் சமன்பாட்டில் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்கவில்லை.

இன்றைக்கோ பெரிய அளவிலான உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவேதான் நம் முந்தைய தலைமுறை சந்தித்திராத பல உடல் நலப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இன்றைக்கு முடி உதிர்வு மற்றும் பராமரிப்புக்கென பல விதமான ஷாம்பூகள் மற்றும் எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த ரசாயனங்கள் பொடுகு, அரிப்பு மற்றும் சொரியாஸிஸ் போன்ற பல பிரச்னைகளையே ஏற்படுத்தும் என்பதால் நாம் நமது பாரம்பரியமான இயற்கை வழியை கையாள்வதே சிறந்தது.

நம் உடலில் உள்ள வெப்பம் தலை, தோள்பட்டை மற்றும் கண்கள் வழியாகத்தான் வெளியேறும். கண்களின் வழியே வெப்பத்தை வெளியேற்றி அதனைக் குளிர்ச்சியாக்குவதன் மூலம் முடி உதிர்விலிருந்து விடுதலையடையலாம். அரேபியர்களைப் போல் ஒரு கிண்ண நீரில் கண்ணைத் திறந்து, மூடி கண்களின் வழியாக வெப்பத்தை வெளியேற்றலாம். ஆற்றில் குளிக்கும்போது அப்படியாக வெப்பம் வெளியேறுகிறது. அதனால்தான் கண்கள் சிவக்கின்றன. கண்கள் குளிர்ச்சியடையும்போது உச்சந்தலை குளிர்ச்சியாகும்.

அன்றைக்கு வேப்பெண்ணெய் தடவினார்கள். அதன் கசப்பு வாடைக்காகவே இன்றைக்கு பலரும் அதைப் பயன்படுத்துவதில்லை. தலைமுடியின் வேர்களுக்குச் செல்லும்படி வேப்பெண்ணெய் தடவி, சீயக்காய் தூள் கொண்டு குளித்து வர முடி உதிர்வு நின்று போகும். தினமும் தடவும் வாய்ப்பிருந்தால் மிகவும் நல்லது. அப்படி இல்லாத போது வாரத்துக்கு இரண்டு முறையாவது தடவ வேண்டும். செடி வளர நல்ல தண்ணீர் வேண்டும் என்பதைப் போல் முடி வளர நல்ல ரத்தம் வேண்டும்.

ரத்தம் கெட்டுப் போனால் முடி தொடர்பான பிரச்னைகள் தானாகவே வரும். நம் உடலில் ஓடக்கூடிய ரத்தம் கார நிலையில் இருக்க வேண்டும். அது அமில நிலைக்கு வருவது உடல் இயக்கத்துக்கு எதிரானது. ரத்தத்தில் உள்ள காரத்தன்மையை விட அமிலத்தன்மை அதிகரிக்கும்படியாக நமது உணவுப்பழக்கம் மாறியிருக்கிறது. ஆகவே உணவுப் பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். உண்ணுகிற உணவில் 80 விழுக்காடு காரம், 20 விழுக்காடு அமில நிலை இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக 80 விழுக்காடு அமில நிலையும், 20 விழுக்காடு கார நிலையும் உள்ள உணவைத்தான் நாம் இப்போது எடுத்துக் கொள்கிறோம்.

அமில – கார நிலை மாற்றம் உடலை பாதிப்பதால்தான் முடி உதிர்வு ஏற்படுகிறது. பெருந்தாது உப்புகள் மற்றும் சிறிய தாது உப்புகள் என மொத்தம் 16 வகையான தாது உப்புகள் முடி வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. இவற்றை நாம் உணவிலிருந்து மட்டுமல்லாமல் வேறு வழிகளிலும் பெற முடியும். மண்ணில் உள்ள தாதுப் பொருட்களை உடல் எடுத்துக் கொள்வதற்காகத்தான் முன்னோர்கள் ‘மண் குளியல்’ மேற்கொண்டனர். வாய்ப்பிருந்தால் நாமும் அதைப் பின்பற்றலாம். ‘அருகால் ஆகாதது அகிலத்தில் எதுவுமில்லை’ என்று சொல்வார்கள். அறுகம்புல்லில் நடப்பது மற்றும் கண் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடல் அதன் பச்சயத்தை இழுத்துக்கொண்டு குளிர்ச்சியாகி விடும். அதன் விளைவாக இயக்குநீர் சுரப்பு சீராக இருக்கும்.

வீட்டிலேயே செய்யும் மருத்துவ முறைகள்

1. மருதாணி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் போட வேண்டும். அது கொதித்து அடங்கிய பின் அதை எடுத்து விட்டு இன்னொரு கைப்பிடி மருதாணி இலைகளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். இப்படியாக மூன்று கைப்பிடி மருதாணி இலைகளை கொதிக்க விட்டு இறுதியாக மூன்று கைப்பிடி மருதாணி இலைகளையும் ஒன்றாகப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை ஆற வைத்து மருதாணி இலைகளை அகற்றி விட்டு, எண்ணெயை தடவி வந்தால் முடி உதிர்வு நிற்கும்.

2. சின்ன வெங்காயம், சீரகம், கருவேப்பிலை, கடுகு, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து. தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து அப்படியே பயன்படுத்தலாம். இதன் மூலம் முடி உதிர்வு நிற்பதோடு முடியின் கருமை மாறாமல் இருக்கும்.

3. கற்றாழையின் தோலை நீக்கி விட்டு சோற்றை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் வாரத்துக்கு இரண்டு முறை கற்றாழை சாப்பிட்டு வந்தோமேயானால் முடி உதிர்வு நிற்பதோடு கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படாது.

4. வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து முளைகட்டிய பின், அதனை காய வைத்து பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். இயற்கை வழியிலான நமது வாழ்வியலை மாற்றிக் கொள்வதற்கான முன்னெடுப்புகளே இது போன்ற பிரச்னைகளுக்கான முழுமுதற் தீர்வாக இருக்கும்’’ என்கிறார் காசிப்பிச்சை.Post a Comment

Protected by WP Anti Spam