பருவகால பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 18 Second

வெயிலுக்கும் மழைக்கும் இடையில் வரக்கூடிய பனிக்காலத்தை நாம் அதிகம் எதிர்பார்த்திருப்போம். அதை எப்படி எதிர்பார்க்கிறோமோ அதேபோல் அந்த பனிக்காலத்தில் நம் சருமத்திற்கும், தலைமுடிக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் எதிர்பார்த்துதான் இருக்க வேண்டும். வயதானவர்கள் பலருக்கு முடி நரைத்து இருந்தாலும் இன்னமும் அடர்த்தியான முடி இருக்கத்தான் செய்கிறது.

ஏனென்றால் அந்த காலத்தில் இப்போது போல் அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசு இல்லை. சத்தான ரசாயனம் கலக்கப்படாத, பூச்சி கொல்லிகள் போடப்படாத இயற்கை உணவை சாப்பிட்டு வந்ததால் அவர்களுக்கு தலைமுடி, சருமம் மற்றும் உடல் முழுவதுமே ஆரோக்கியமாக இருந்தது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், வெளிப் பிரயோகம் செய்யும் பொருட்கள், மேலும் பருவமாற்றமும் சேர்ந்து தான் முடிக்கொட்டுதலுக்கும், சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.

இந்த பருவ மாற்றத்தினால் நம் தலை முடியில் மிகுதியான தூசு படிந்துவிடும். இது தொடரும்பொழுது நம் தலைமுடியின் முனையில் ஸ்ப்ளிட் எண்ட்ஸ் என்று சொல்லக்கூடிய வெடிப்பு வர ஆரம்பிக்கும். முடி அடர்த்தியாக இருப்பவர்களுக்கு இதுபோன்று ஏற்படும். முடியின் அடர்த்தி மிக குறைந்து காணப்படுபவர்களுக்கு ஏற்கனவே முடியின் வேர் வலுவிழந்து காணப்படும். அதில் மேலும் இந்த தூசு படிந்தால் தலையில் இருந்து செதில் போன்ற படிமங்கள் உருவாவதோடு தலை முடி உதிர ஆரம்பிக்கும்.

நம்மில் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை அன்றாட வாழ்வில் ஒன்றாக மாறிவிட்டது. அவரவருக்கு இருக்கும் கவலைகளில் முடிக்கொட்டுதல் மற்றும் சரும தொந்தரவுகள் தான் தலையாய கவலையாக உள்ளது என்று கூறினாலும் மிகையாகாது. இயற்கை நமக்கு அளித்த பொருட்கள் அனைத்தையும் எப்படி நம் அழகை பராமரிக்க பயன்படுத்துவது என்பதைப் பற்றி பட்டியல் இடுகிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

‘‘வெந்தய கீரை எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். அதை வாரம் இருமுறை சூப் ஆகவோ அல்லது பருப்பிலோ சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் தலைமுடிக்கும் அவ்வளவு நல்லது. அதே வெந்தய கீரையை நன்கு கழுவி, நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டிலே வைத்து சற்று நன்றாக சூடானவுடன் அத்துடன் நறுக்கி வைத்த வெந்தய கீரையை சேர்க்க வேண்டும்.

ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்க வேண்டும். வெந்தய கீரையில் உள்ள எசென்ஸ் எல்லாம் நல்லெண்ணெயோடு கலந்து நல்ல மணம் வீசும் ஆறிய பிறகு சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். வாரம் இருமுறை இந்த தைலத்தை மிதமான தீயில் சூடு செய்து தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு குளித்து வரலாம். இப்படி செய்து வருவதனால் தலைமுடிக்கு அது நல்ல கண்டிஷனராக வேலை செய்யும்.

இந்த தைலம் தூசு படிந்திருக்கும் தலைமுடியை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. பொடுகு தொல்லை இல்லாமல் பார்த்துக்கொள்ளும். முடி உதிர்தலும் குறையும். வெந்தயம் 50 கிராம், கொண்டைக் கடலை – 50 கிராம், பூந்திக் கோட்டை – 100 கிராம், பூலாங்கிழங்கு – 50 கிராம் இவற்றை வாங்கி நிழலில் நன்கு காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். இத்துடன் சீகைக்காய் சேர்த்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி பட்டு போல் ஆகிவிடும்.

தலைமுடி பிரச்சனைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வாக இருக்கும். தலைமுடிக்கு ஏற்படும் அதே பிரச்சனை தான் சருமத்திற்கும் ஏற்படும். சருமம் வறண்டு போகும்போது தான் நிறைய பிரச்சனைகளே ஆரம்பமாகும். அந்த வறட்சியை எடுக்கும் வகையில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய பழச்சாறுகள் குடிக்க வேண்டும். வாழைத்தண்டு, பூசணிக்காய், தர்பூசணி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் தோல் வறட்சி நீங்கி நல்ல வனப்புடன் இருக்கும்.

இயற்கையாகவே தண்ணீர் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளும்போது தோல் அதன் தன்மையை இழக்காமல் இருக்கும். தர்பூசணியை சின்ன சின்ன வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்து வரலாம். அது நம் கண்களுக்கு குளிர்ச்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையத்தையும் சரி செய்யும்.

அதேபோல் ரோஜாப் பூ இதழை நிழலில் நன்கு உலர்த்தி அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். நமக்குத் தேவையான அளவு நன்கு காய்ச்சிய பாலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இந்த ரோஜா இதழ் பொடியை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டுக் கொள்ளலாம். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனால் முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்கி, மிகவும் மிருதுவாகிவிடும். இதேபோன்ற வறட்சி கால் பாதங்களுக்கு ஏற்படும். அதற்கும் இதையே பின்பற்றலாம்.

வெண்ணையோ, பாலோ எடுத்து தினமும் காலையில் கால்களுக்கு தடவி வரலாம் அல்லது வெண்ணை மற்றும் பால் இரண்டையும் சம அளவில் எடுத்து, நன்கு கலந்து கால் விரல்களுக்கு தடவி வரலாம். இதனால் கால் பாதமும், கால் நகங்களும் மிருதுவாகி பொலிவாக இருக்கும். பத்து நிமிடங்கள் நன்கு கால் பாதங்களுக்கு மசாஜ் செய்த பிறகு சுடுநீரில் எலுமிச்சையை பிழிந்து விட்டு, அதில் கால் பாதங்களை அரை மணிநேரம் வைத்திருந்தால் கால்களுக்கு நல்ல ரிலாக்சேஷன் கிடைக்கும். மேலும் கால்களில் உள்ள கருமை மறையும்.

வறண்ட கூந்தல் மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் ரசாயனம் கலந்த லோஷன் மற்றும் எண்ணெய் போன்றவற்றை தடவாமல் வீட்டிலேயே இயற்கை பொருட்களை வைத்து எண்ணெய் தயாரிக்கலாம். நல்லெண்ணெய் கால் லிட்டர், பாதாம் பருப்பு – 50 கிராம், பிஸ்தா -50 கிராம், கசகசா – 25 கிராம் இவை மூன்றையும் ஒன்றிரண்டாக அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு தடவி பின் குளித்து வந்தால் தோல் வறண்டு போகாமல் இருக்கும்.

அதேபோல், மாய்ச்சரைசர் போல் சில எண்ணெய்களை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். மரிக்கொழுந்தை சுத்தம் செய்து, நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று கப் மரிக்கொழுந்தை, ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு தைலம் பதத்திற்கு காய்ச்சி இறக்க வேண்டும். ஆறியபின் அதில் வெட்டிவேரை சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும்போது இந்த தைலம் கெட்டுப்போகாமல் இருக்கும்.

குளித்த பிறகு தினமும் இந்த எண்ணெயை தடவி வந்தால், உடல் முழுவதும் வறண்டு போகாமல் இருக்கும். இரவு குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் குளித்த பின் இந்த தைலத்தை தடவி வந்தால் நாள் முழுக்க தோல் வழவழப்புடன் மென்மையாக இருக்கும். மரிக்கொழுந்து நம் தோல் மற்றும் முடி இரண்டிற்குமே நல்ல தீர்வை கொடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் அடிமை (sexual addiction)!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)