நாட்டுப்பற்று எனும் ‘முகமூடி’ !! (கட்டுரை)

Read Time:13 Minute, 45 Second

பிரித்தானிய அறிஞர் சாமுவல் ஜோன்ஸன், “நாட்டுப்பற்று (patriotism) என்பது, அயோக்கியர்களின் கடைசிச் சரணாலயம்” என்று, 1775இல் தெரிவித்திருந்தார். இப்படிச் சொன்னதன் மூலம், உண்மையாகவும் நேர்மையாகவும் தன் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களை ஜோன்ஸன் குறை சொல்லவில்லை. மாறாக, நாட்டுப்பற்று எனும் முகமூடியைப் பயன்படுத்தும், ‘பசுத்தோல் போர்த்திய நரிகளையே’ அவர் கடிந்துகொண்டார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தான், தன்னுடைய குடும்பம், தன்னுடைய சுற்றம், தன்னுடைய சமூகம், தன்னுடைய இனம், தன்னுடைய மொழி, தன்னுடைய மதம், தன்னுடைய பண்பாடு, தன்னுடைய கலைகள், தன்னுடைய அடையாளம் என்று, தான் சார்ந்தவை சார்ந்த பிரக்ஞையும் ஈர்ப்பும் பெருமையும் காணப்படுவது இயல்பானதே. நாட்டுப்பற்றும் இதைப்போன்று, தான் சார்ந்த நாடு பற்றிய அடையாளப் பிரக்ஞையிலும் பெருமையிலும் வேர்கொண்ட ஒன்றாகும்.

மதங்கள் மீதான மக்களின் ஈர்ப்பு, மக்கள் மத்தியில், மதங்களின் செல்வாக்கை அதிகரித்தது. மக்கள் மதங்களுக்குத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்டமை, அந்த மதத்தின் ஆளும் கட்டமைப்புக்கு, அந்த மக்கள் மீதான பிடியை வழங்குகிறது. அந்த மதத்தவர், அந்த மதத்துக்கு வழங்கும் கேள்விக்கு அப்பாற்பட்ட விசுவாசம், அந்த மதத்தின் ஆளும் கட்டமைப்புக்குப் பெரும் பலமாக அமைகிறது.

அரசானது, மதத்தோடு பின்னிப்பிணைந்திருந்த காலத்தில், மதத்துக்குக் கிடைத்த விசுவாசத்தின் அனுகூலம், அரசுக்கும் மதத்துக்கும் இடையிலான ஒருங்கிணைவின் பயனால், அரசுக்கும் கிடைத்தது.

ஆனால், பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர், மதத்திலிருந்து விலகி, ‘சிவில்’ அரசு உருவானபோது, மதத்தைத் தாண்டி, மக்களின் அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் அரசு பெறவேண்டிய சூழல் உருவானது. இதன்போதுதான், ‘நாட்டுப்பற்று’ என்பதன் முக்கியத்துவம் மேலெழத் தொடங்கியது.

ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தவும் மதத்தைத் தாண்டி நாடு பற்றிய பிரக்ஞையையும் பற்றையும் ஸ்தாபிக்கவும் முன்னெடுக்கப்பட்ட நாட்டுப்பற்றானது, கேள்விக்கு அப்பாற்பட்ட விசுவாசம், சரணாகதி என்ற மதங்களின் தன்மைகளைக் கொண்டு கட்டமையத் தொடங்கியது. இதன் விளைவாக ‘நாட்டுப்பற்று’ என்பது, தாம் சாராதவர்கள் மீதான வெறுப்பாக உருவெடுக்கத் தொடங்கியது. ‘நீ பிறந்த நாட்டை நேசி’ என்று உருவாகிய நாட்டுப்பற்று, காலப்போக்கில் ‘உன்னுடைய நாட்டவர்கள் அல்லாதவர்களை வெறு’ என்றளவில் உருவாகிவிட்டது.

ஆனால், இந்தப் பிரச்சினை தன்னாட்டவர், அந்நியர் என்று இரண்டு பிரிவாகப் பார்த்து விடக்கூடிய ஒன்றல்ல; மாறாக, தன்னாட்டவர் யார் என்று வரையறுப்பதிலேயே பல பிரச்சினைகள் இருக்கின்றன.

இனம், மதம், மொழி என்று, ஒரு நாட்டவர்கள் வேறுபட்ட அடையாளங்களைக் கொண்டிருக்கையில், அந்நாட்டின் பெரும்பான்மை இன, மத, மொழி அடையாளத்தைக் கொண்ட மக்கள் கூட்டம், தம்மையே அந்த நாட்டுக்குரிய குடிகளாகவும், மற்றையோரை அந்நியர், வந்தேறு குடிகள் என்று வரைவிலக்கணப்படுத்தும் தன்மையும் காணப்படுகிறது.

ஆகவே, இங்கு அந்தப் பெரும்பான்மையைப் பொறுத்தவரையில், நாட்டுப்பற்று என்பது, வெறும் மண் சார்ந்தது மட்டுமல்ல; அது, அவர்களது பெரும்பான்மை இன, மத, மொழி உள்ளிட்ட அடையாளங்களையும் உள்ளடக்கியதாகிறது. நாட்டுப்பற்று என்பதன் அர்த்தம், இங்கு குறுகியதாகிறது. மேலும், நாட்டுப்பற்று என்பது, ‘பற்று’ என்ற எல்லைத்தாண்டி, மற்றவர் மீதான வெறுப்பு என்பதையும் முன்னிறுத்தத் தொடங்குகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், ‘நாட்டுப்பற்று’ என்பது ‘இனவெறி’ (racism), மற்றைய நாட்டவர் மீதான வெறுப்பு (xenophobia) ஆக உருவெடுத்துவிடுகிறது. கொலனித்துவக் காலகட்டத்தில், அந்நிய ஆதிக்கம் மீதான எதிர்ப்பு, நாட்டுப்பற்றாக உருவானமை உண்மை. அது, அந்நிய கொலனித்துவ மேலாதிக்கம் என்ற சூழமைவு சார்ந்தது. அங்கு அவர்கள் வௌிநாட்டவர்கள், அந்நியர்கள் என்ற காரணத்தால் எதிர்க்கப்படவில்லை; மாறாக, எம்மை அடக்குமுறைக்கு உள்ளாக்கியமையால் எதிர்க்கப்பட்டார்கள். இந்தப் புரிதல் அவசியமானது.

20ஆம் நூற்றாண்டு கண்ட, மிகப்பெரும் மனித அவலத்துக்குப் பின்னால், ‘நாட்டுப்பற்று’ என்ற சொல்லும் இருந்திருக்கிறது. 20ஆம் நூற்றாண்டு கண்ட, மிகப்பெரிய மனித அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உலகம் கைகோர்த்த போது, இனவெறிக்கு எதிரான பெரும் எழுச்சியும் விழிப்புணர்வும், உலகெங்கும் ஏற்படத் தொடங்கியது.

ஆகவே, இனவாதத்தையும் இன வெறியையும் நேரடியாக முன்னெடுப்பதில், இனவாத சக்திகள் பெரும் சவாலைச் சந்திக்கத் தொடங்கினார்கள். இந்த இடத்தில்தான் ‘நாட்டுப்பற்று’ என்ற வசதியான ‘முகமூடி’, அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. இனவெறியும் மற்றைய நாட்டவர் மீதான வெறுப்பும், ‘நாட்டுப்பற்று’ என்ற பதாகையினுள் தஞ்சம் புகுந்துகொண்டன. அவ்வாறு, நாட்டுப்பற்றுக்குள் தஞ்சம் புகுந்துகொண்ட இனவெறி, நாட்டுப்பற்று என்பதன் அர்த்தத்தையே, மாற்றி அமைத்துவிட்டது.

ஓர் அரசு, தன்னாட்டின் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடும் அத்தனை கொடுமைகளுக்கும் ‘நாட்டுப்பற்று’ என்பதைப் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்த விளைகிறது. போர்க்குற்றவாளிகள், நாட்டுப்பற்றின் பெயரால் போற்றிப் பாதுகாகக்கப்படுகிறார்கள்.

‘நாட்டுப்பற்று’ என்பது, மேலாதிக்கத்தின் அரணாகவும் ஆயுதமாகவும் ஆகிவிட்டது. கண்மூடித்தனமான விசுவாசத்தையும் ஆதரவையும் வேண்டும் ‘நாட்டுப்பற்று’, அதை வழங்காதவர்களைத் ‘துரோகி’களாக முத்திரை குத்துகிறது. ஒன்றில், நீங்கள் நாட்டுப்பற்றாளர்கள்; அல்லது, நீங்கள் துரோகிகள் என்ற இரண்டு போலியான தெரிவுகள், கிட்டத்தட்ட மிரட்டலாகவே வௌிப்படுகின்றன.

ஆகவே, நாட்டுப்பற்றாளர் அல்லது, துரோகிப் பட்டம் வழங்கும் ஆதிக்க சக்திகளை எதிர்ப்பது மட்டுமல்ல, கேள்வி கேட்பது கூட, இயலாத ஒன்றாகிவிடுகிறது. கேள்வி கேட்பவர்கள், துரோகிகளாக வர்ணிக்கப்படுவார்கள். அவர்கள் மீதான வெறுப்பு, திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்துவிடப்படும்.

மதங்கள், கடவுள் மீதும் கடவுளின் முகவர்கள் மீதும், வழங்கக் கோரும் மட்டுப்பாடற்ற விசுவாசத்தையும் முற்றான சரணாகதியையும், இங்கு அரசும் அரசின் முகவர்களான ஆட்சியாளர்களும் நாட்டுப்பற்றின் பெயரில் எதிர்பார்க்கிறார்கள்.

நாட்டுப்பற்றின் அடிப்படையான அடையாளப் பிரக்ஞையை தக்கவைப்பதிலும், மெருகேற்றுவதிலும் ஆதிக்கசக்திகள் எப்போதும் கண்ணும் கருத்துமாகச் செயற்படும். தமது அடையாளத்தின் உயர்வை, எப்போதும் மீளுரைத்துக் கொண்டே இருப்பார்கள்.

‘கோவிட்-19’ நோயின் பெருந்தொற்றுக்கு நிவாரணமாக, ‘இனிப்புப் பாணி’ சுதேசிய மருந்தாக முன்வைக்கப்படுவதுபோல, சுதேசிய மருந்துகளைத் தயாரியுங்கள் என்று ஆட்சியாளர்கள் கட்டளையிடுவதைப்போல, ஒரு போலிப் பெருமையை மட்டும் முன்னிறுத்திய நாட்டுப்பற்று, எப்போதும் முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

இந்தப் போலிகளை மறுப்பதில், மக்களுக்கு இரண்டு விதமான தயக்கங்கள் இருக்கலாம். முதலாவது, உள்ளக ரீதியாகத் தாம், தமது பெருமை என்று நம்புகின்றவற்றையும் நம்பவைக்கப்பட்டு உள்ளவற்றையும் விட்டுக்கொடுக்க மனம் விரும்பாமை.

இரண்டாவது, வௌியக ரீதியாக, துரோகி என்ற பட்டத்தையும் மற்றவர்களிடம் இருந்தான விமர்சனங்களையும் பெற்றுக்கொள்ள விரும்பாமை. ஆகவே, தர்க்கம், விஞ்ஞானம் என்பவற்றை எல்லாம் தாண்டி, போலிப் பழம்பெருமைகளை உயர்த்திப்பிடித்த வண்ணம், ‘நாட்டுப்பற்றாளர்கள்’ வாழக்கற்றுக் கொள்கிறார்கள்.

நாட்டுப்பற்று என்பது, உண்மையில் ஒருவர் தன்னாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் கொண்ட பற்று என்று அர்த்தப்படுமானால், அதற்குள் வெறுப்புக்கு இடமிருக்க முடியாது. அவர்களுடைய நாட்டில் வாழ்கிற ஒரு பகுதி மக்களை வெறுத்துக்கொண்டும், அவர்கள் மீது இனவெறியைக் கக்கிக்கொண்டும் நாட்டுப்பற்றாளர் என்று தம்மைத் தாமே அழைத்துக்கொள்ள முடியாது. இனவெறி கக்குபவர்கள் இனவெறியர்கள்; நாட்டுப்பற்றாளர் என்ற முகமூடிக்குள், அவர்கள் இனவெறி முகத்தை மறைத்துவிட முடியாது.

நாட்டுப்பற்று என்பது, இனவெறிக்கும் வெறுப்புக்குமான, கௌரவமான முகமல்ல. நாட்டுப்பற்று என்பது, ஆள்பவர்களிடமான சரணாகதி நிலையல்ல. ஆட்சியாளர்களை ஆதரிப்பவர்களை, ‘நாட்டுப்பற்றாளர்’கள் என்றும், எதிர்ப்பவர்களைத் துரோகிகள் என்றும் குத்தப்படும் முத்திரைகளைத் தாண்டி, உலகம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது.

நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து, தன்னாட்டு மக்களையே கொன்றொழித்து, ஊழலில் திளைத்திருக்கும், இரத்தக் கறைகள் படித்த கரங்களைக் கொண்ட ஆட்சியாளர்கள், எவ்வாறு நாட்டுப்பற்றாளர் ஆவார்கள் என்று, தௌிவாகச் சிந்திக்கும் ஒரு தலைமுறை உருவாகத் தொடங்கியிருக்கிறது.

இந்தத் தலைமுறை, முன்னைய தலைமுறையிலும் அதிகமாக, ‘மனிதம்’ பற்றிச் சிந்திக்கிறது; ‘இயற்கை’ பற்றிச் சிந்திக்கிறது; ‘எதிர்காலம்’ பற்றிச் சிந்திக்கிறது. நிச்சயமாக வெறுப்பை விளைவிக்கும் இந்தப் போலி ‘நாட்டுப்பற்று’ என்ற முகமூடியை, வெகுவிரைவில் இந்தத் தலைமுறை தூக்கி எறியும் என்ற எதிர்பார்ப்பு, துளிர் விடத் தொடங்கியிருக்கிறது.

ஒஸ்கார் வைல்ட் கூறியிருப்பதுபோல், “நாட்டுப்பற்று என்பது, கொடூரமானவர்களின் விழுமியமாகும்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை? (அவ்வப்போது கிளாமர்)
Next post ஒரு டாக்டர் ஆக்டரான கதை!! ( மருத்துவம்)