By 27 December 2020 0 Comments

இதயத்துக்குத் தேவை எலெக்ட்ரிக் ஷாக்! ! (மருத்துவம்)

இதயம் திடீரென வேகமாகத் துடித்துப் படபடவென்று அடித்துக்கொள்ளும் அனுபவம் நம் எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும். கடுமையான காய்ச்சல் இருக்கும்போது, ஒரே மூச்சில் பல மாடிகளை ஏறும்போது, கோபத்தில் கொந்தளிக்கும்போது, கவலைப்படும்போது, உணர்ச்சிவசப்படும்போது, அதிவேகமாக ஓடும்போது, ஓடிவிட்டு நிற்கும்போது, பொய் பேசும்போது, கையும் களவுமாகப் பிடிபடும்போது, பரீட்சை ரிசல்ட் வரும்போது… இதயத்துடிப்பு எகிறும். படபடப்பு அதிகமாகும். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டை உருளும்.

இந்த படபடப்பில் சாதாரணமானது, ஆபத்தானது என்று இரண்டு வகை உண்டு. இங்கு சொன்னவை எல்லாமே முதல் வகையைச் சேர்ந்தது. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தாலே, இந்த படபடப்பு காணாமல் போய்விடும். இதற்கு டாக்டரிடம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், சிலருக்குச் சம்பந்தமில்லாமல் படபடப்பு வரும். ஓட வேண்டும் என்பதில்லை; மாடிப்படிகள் ஏற வேண்டும் என்பதில்லை. சும்மா உட்கார்ந்திருந்தாலே படபடப்பு வரும். உறங்கும்போதுகூட வரும். இதுதான் ஆபத்தான படபடப்பு.

‘‘டாக்டர்! திடீர் திடீரென்று பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு இதயம் எக்குத்தப்பாகத் துடிக்கிறது. அப்போது இதயம் எங்கே வெளியில் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. உங்களிடம் வந்து காண்பிப்பதற்குள் அந்தப் படபடப்பு நின்றுவிடுகிறது’’ என்பார்கள்.‘‘அந்தப் படபடப்பு வந்துட்டா ஒரு மைல் தூரம் ஓடிக் களைச்சுட்ட மாதிரி இருக்கு’’ என்பார்கள் சிலர். சமயங்களில் படபடப்பு வந்ததும் மயங்கி விழுந்துவிடுவார்கள் சிலர்.

இப்படி நேர்வதற்கு பெரும்பாலும் காரணமாக இருக்கும் நோய், ‘எஸ்.வி.டி’ (Supra Ventricular TachycardiaSVT). இந்த நோய் உள்ளவர்களின் இதயம் நிமிடத்துக்கு 140லிருந்து 220 தடவை வரை துடிக்கிறது. இந்த வேகமான துடிப்பின் காரணமாக, வழக்கமாக இயங்கும் நேரத்தைவிட மூன்றில் ஒரு பங்கு குறைவான நேரத்திற்குள் உடலிலிருந்து ரத்தத்தைப் பெற்று, சுத்திகரித்து, திரும்பவும் உடலுக்குள் அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு இதயம் தள்ளப்படுகிறது. எனவேதான் ரத்த அழுத்தம் குறைந்து மயங்கி விழுகிறார்கள்.

இந்த படபடப்பு ஏன் வருகிறது?

இதயத் துடிப்புக்கான மின்தூண்டல்கள் எஸ்.ஏ.நோடில் உருவாகி, ஏ.வி.நோடு வழியாக இதயத் தசைநார்களை அடைகிறது என்று போன வாரம் பார்த்தோம். எஸ்.ஏ.நோடில் உருவாகும் மின்தூண்டல்களை தசைநார்களுக்கு அனுப்புவதுதான் ஏ.வி.நோடின் முக்கிய வேலை என்றாலும், அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அனுப்பக்கூடாது என்பதையும் அது தெரிந்து வைத்திருக்கிறது. ஏ.வி.நோடில் உள்ள தசைநார்கள் இவற்றைக் கொஞ்சம் தாமதப்படுத்தியே மற்ற தசைகளுக்கு அனுப்புகின்றன.

இதற்கு என்ன காரணம்?

ஏதோ ஒரு கோளாறால் அளவுக்கு அதிகமான மின்தூண்டல்கள் வந்துவிட்டன என்று வைத்துக்கொள்வோம். அவற்றை அப்படியே அனுப்பினால் என்ன ஆகும்? இதயத்துடிப்பு ஏகத்துக்கு எகிறிவிடும். இதனால் இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, இதயத்திலிருந்து உடலுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவும் குறையும். உடல் இயக்கம் தடுமாறும். இதைத் தவிர்க்கவே இந்த மின்தூண்டல்களைக் கொஞ்சம் ஃபில்டர் செய்து அனுப்புகிறது ஏ.வி.நோடு.

எஸ்.வி.டி நோயாளிகளுக்கு நேரும் பிரச்னை என்னவென்றால், மின்தூண்டல்களை ஏ.வி.நோடு தாமதப்படுத்தி அனுப்புவதற்குள், மற்ற தசைநார்கள் அவசரப்பட்டு இவற்றை பைபாஸ் செய்துவிடுகின்றன. இதன் விளைவுதான், இதயப் படபடப்பு. பெரும்பாலானவர்களுக்கு திடீர் திடீரென்றுதான் இதயப் படபடப்பு ஏற்படும். படபடப்பு இருக்கும்போது பரிசோதித்தால்தான், நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு சிகிச்சை தர முடியும்.

அதற்காக படபடப்பு எப்போது வரும் என்று ஆஸ்பத்திரியிலேயே அவரைக் காத்திருக்க வைப்பதும் சாத்தியமில்லை! ‘‘படபடப்பு வரும்போது ஆஸ்பத்திரிக்கு வாருங்கள்’’ என்று சொல்வதும் சாத்தியமல்ல. காரணம், அவர் ஆஸ்பத்திரி வந்து சேர்வதற்குள் படபடப்பு நின்றுவிடும். இம்மாதிரியான நோயாளிகளுக்குக் கைகொடுக்க ஒரு கருவி உள்ளது. இதன் பெயர் ‘ஹோல்டர் மானிட்டர்’.

சுருக்கமாகச் சொன்னால், இதுவும் ஒரு இ.சி.ஜி. கருவிதான். இது 24 மணி நேரம்… ஏன், 48 மணி நேரம்கூட ஒருவரின் இதயத்துடிப்பைப் பதிவு செய்யும். இதை இடுப்பு பெல்ட்டில் கட்டி விடுவார்கள். மின்குமிழ்களை மார்பில் பொருத்துவார்கள். அவர் இயல்பாகப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது, இந்தக் கருவி தொடர்ந்து இ.சி.ஜி. வரைபடத்தைத் தயாரிக்கிறது. அப்போது அவருடைய இதயத்தில் மிக லேசாகவும், குறுகிய நேரத்திலும் திடீரென்றும் வந்து செல்கிற இதயப் படபடப்பை மட்டுமின்றி, ஆஞ்சைனா வலி, மாரடைப்பு போன்றவற்றைக்கூட தெரிந்துகொள்ளலாம் என்பதுதான் இதில் உள்ள விசேஷம்.

சரி, இதயத்துடிப்பு குறைந்திருந்தால் அதை பேஸ்மேக்கர் கொண்டு சரிப்படுத்தலாம். தறி கெட்டுத் துடிக்கும் இதயத்துக்கு எதைக் கொண்டு கடிவாளம் போடுவது? இதற்கும் இருக்கின்றன பல கடிவாளங்கள்… இதற்கு மாத்திரைகள் உண்டு! இவை இதயத்தின் ஏ.வி.நோடில் பைபாஸ் செய்யும் தசை நார்க்கற்றைகளின் கடத்தும் திறனைக் கட்டுப்படுத்துவதால், இதயப் படபடப்பு நின்றுபோகிறது. மாத்திரைகளால் பலனில்லை என்றால், வெராப்பாமில், அமியடரோன் போன்ற மருந்துகளை சிரை ரத்தக்குழாய் வழி செலுத்தினால், சில நிமிடங்களில் படபடப்பு நின்றுவிடும்.

ஆனால், இதில் ஓர் ஆபத்தும் இருக்கிறது. இதயம் துடிப்பது அளவுக்கு அதிகமாகக் குறைந்து போனால், உயிருக்கே ஆபத்தும் நேரலாம்! எனவே இந்த மருந்துகளை, மருத்துவமனையில் ‘இன்டன்சிவ் கேர் யூனிட்’டில் தகுந்த கண்காணிப்பில் மட்டுமே தர வேண்டும். சிலருக்கு இந்த மருந்துகளைக் கொடுத்தாலும் படபடப்பு நிற்பதில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம். இவர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் தருவதுதான் ஒரே வழி.

இதற்கு உதவக் காத்திருக்கிறது டிஃபிபிரிலேட்டர் (Defibrillator) கருவி. இதை மார்பின் மீது அழுத்தமாக வைத்துப் பொத்தானை அழுத்தினால், குறைந்த அளவில் மின்சாரத்தைப் பாய்ச்சி, இதயத்துக்கு ஷாக் கொடுக்கும். இதன் பலனால், இதயத்துடிப்பு சில நிமிடங்களில் கட்டுக்குள் வந்துவிடும்; படபடப்பு குறைந்துவிடும். பெரும்பாலான நோயாளிகளுக்கு ஒரு தடவை இந்த மாதிரி ஷாக் கொடுத்தாலே போதும், பிறகு படபடப்பு வருவதில்லை. என்றாலும், ஒரு சிலருக்கு இந்தப் படபடப்பு அடிக்கடி வரும்.

இது உயிருக்கு ஆபத்தானது. இது வரும்போது உடனடியாகக் கண்டுபிடித்து, தாமதிக்காமல் சிகிச்சை தரவேண்டும். இப்படி இவர்களுக்கு எந்த நேரத்திலும் உதவக்கூடிய ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் பெயர் ஐ.சி.டி. (Implantable Cardioverter Defibrillator ICD). பேஸ்மேக்கர் போலத்தான் இதுவும். படபடப்பை அறியும் ஹோல்டர் மானிட்டர், மின்சார ஷாக் தரும் டிஃபிபிரிலேட்டர் என்ற இரண்டும் இணைந்த ஒரு மினியேச்சர் கருவி இது. இதயத்துக்கு அருகில், சருமத்துக்கு அடியில், இதன் ஜெனரேட்டர் பகுதியைப் பொருத்திக்கொள்ளலாம்.

மின்வயர்களை இதயத்துக்குள் பொருத்திவிட வேண்டும். இது படபடப்பு ஏற்பட்டதும் அதை உடனே கண்டுணர்ந்து, சரியான அளவில் ஷாக் கொடுத்து, இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்தி, உயிரைக் காப்பாற்றுகிறது. இதயநோய்க்கு சர்ஜரி செய்யும் எல்லா மருத்துவமனைகளிலும் இந்த வசதி இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை, சுமார் 4 லட்சம். வெளிநாடுகளில் இந்தச் சிகிச்சைக்கான செலவு இதைவிட இரண்டு மடங்கு அதிகம் என்பதால், இந்தியாவில் இதைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலிருந்து நோயாளிகள் படையெடுக்கிறார்கள்.

என் உறவினருக்கு இதயத்தில் அடைப்பு இருக்கலாம் என சந்தேகப்பட்டு ஆஞ்சியோகிராம் செய்யச் சொன்னார்கள். வசதி இல்லாததால் அதைச் செய்யவில்லை. மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இதனால் ஆபத்து ஏதேனும் வருமா?
எம்.என்.இப்ராஹிம், சென்னை91.

ஆஞ்சியோகிராம் செய்து பார்த்துவிட்டால், இதயத் தமனியில் எந்த இடத்தில் எத்தனை அடைப்பு எவ்வளவு சதவீதம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். அதற்கேற்ப சிகிச்சை பெறலாம். மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறையும். தோராயமாக மாத்திரை சாப்பிடும்போது, இந்த ஆபத்து நேரக்கூடும். என்றாலும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் இந்த ஆபத்தையும் தடுக்கலாம்; அல்லது தள்ளிப் போடலாம். முக்கியமாக, இதயத்துக்குச் சுமை தருகிற வேலைகளைச் செய்யக்கூடாது. மன அழுத்தம் இருக்கக்கூடாது. கொழுப்பு உணவுகள் ஆகாது. புகை, மது தவிர்க்க வேண்டும். தினம் காலையில் வாக்கிங் அவசியம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ‘வலியில்லாத மாரடைப்பு’ (Silent Heart Attack) வருவது நரம்பு பாதிப்பினாலா? நரம்பு பாதிப்பு இருப்பதை முன்கூட்டியே எப்படித் தெரிந்துகொள்வது? ராஜா செந்தில்நாதன், சென்னை16.

மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி வரும். அதை நமக்கு உணர்த்துவது தானியங்கு நரம்புகள் (Autonomic Nerves). ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு இந்த நரம்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதால், நெஞ்சில் வலி தெரிவதில்லை. இதை இ.சி.ஜி.யில் தெரிந்துகொள்ள முடியும். அதைவிட சுலபமான வழி இது: நோயாளியைப் படுக்க வைத்தும், நிற்கவைத்தும் ரத்த அழுத்தம் அளக்க வேண்டும்.

இதில் நிற்கும்போது சிஸ்டாலிக் அழுத்தம் 30 மி.மீ வரை குறைந்தால் நரம்பு பாதிப்பு இருப்பது உறுதி. இன்னும் தெளிவான முடிவு தேவை என்றால், ANSiscope என்று ஒரு பரிசோதனைக் கருவி உள்ளது. இ.சி.ஜி. எடுப்பதைப் போன்று மார்பில் பொத்தான்களைப் பதித்து, ஒரு வரைபடம் எடுத்து, இதய நரம்பு பாதிப்பைத் துல்லியமாகக் கணிக்கின்ற சோதனை இது.

இந்தப் பரிசோதனைகளுக்கு உள்ளாக விரும்பாதவர்கள், சில அறிகுறிகளை கவனித்தும் ஓரளவுக்கு இதய நரம்பு பாதிப்பைத் தெரிந்து கொள்ளலாம். பாதிப்பின் ஆரம்பத்தில் இதயத் துடிப்பு அதிகமாகும் அல்லது ஒழுங்கற்று துடிக்கும். ரத்த அழுத்தம் குறையும். படுக்கையிலிருந்து எழுந்து நிற்கும்போது கண்ணை மறைப்பதைப் போல் குறுமயக்கம் ஏற்படும்.

இதய படபடப்புக்கு இதர காரணங்கள்

சில நோய்களும் நம் வாழ்க்கைமுறையும் இதய படபடப்புக்குக் காரணமாகின்றன. அவை: மாரடைப்பு, இதய வால்வுக் கோளாறுகள், பிறவி இதயநோய்கள், இதயத்தசை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு கோளாறுகள், ரத்தசோகை, ரத்த அயனிகளின் அளவு மாறுவது, உடல்பருமன், மிகை மது, அதிக அளவில் காபி குடிப்பது, பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் கட்டம். காரணங்களுக்கு சிகிச்சை எடுத்தால், பிரச்னை தீரும்!Post a Comment

Protected by WP Anti Spam